23/10/2021
‘கலா உத்சவ்’ என்ற பெயரில் இடைநிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்காக மத்திய கல்வி அமைச்சகம் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் மாநில அரசின் உதவியுடன் கலை, இசை, இலக்கியம் உள்ளிட்ட சில போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தமிழக பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளின் அறிவிப்பை தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அக்டோபர் 21-ம் தேதியன்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது தமிழக அரசு.
இந்த போட்டியின் சாராம்சம் என்னவென்றால், குறிப்பாக இசைத்துறையில், ஹிந்துஸ்தானி / கர்நாடிக் இசையை பாட வேண்டும்; நாட்டுப்புற இசை என்பதில் ஏதேனும் ஒரு வட்டாரம் சார்ந்த பாடல்; அது தமிழகத்தின் தொன்மையான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய பாடலாக இல்லாமலும் இருக்கலாம். இசைக் கருவி என்ற வகையில் அதிலும் ஹிந்துஸ்தானி அல்லது கர்நாடிக் இசைக் கருவிகள் தான் இடம்பெற வேண்டும் போன்ற விதிமுறைகளை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
படிக்க :
♦ RSS வஞ்சகம் : சமஸ்கிருதத்துக்கு 644 கோடி தமிழுக்கு 23 கோடி !
♦ தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
இதேபோல் தான் ‘காண் கலை’ (Visual Art) என்ற பெயரில் சிற்பத்தைப் பற்றியான போட்டி உள்ளது. இது மதம் சார்ந்த போட்டி அல்லவா? உள்ளூர் தொன்மையான பொம்மைகள் பற்றியான போட்டி என்று இப்படி ஒன்பது பிரிவுகளில் போட்டிகளை நடத்துகிறார்கள். இதில், பார்ப்பன கும்பலின் பிள்ளைகளே அதிகம் பங்கேற்பதற்கான வாய்ப்புள்ள போட்டிகளே பெரும் பகுதியானதாக உள்ளது.
தமிழ் மொழி இசையில் இருந்து திருடப்பட்டதுதான் கர்நாடிக் இசை என்பது வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. எனவே, தமிழக மாணவர்களுக்கு தமிழ் மொழியின் வரலாற்றையும், மரபையும், தமிழ் மக்களின் உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு சார்ந்த போட்டிகளை நடத்துவதுதான் தமிழ்நாட்டிற்கான போட்டிகளாக இருக்க முடியும்.
ஆனால், ‘கலா உத்சவ்’ என்ற பெயரில் பார்ப்பன கும்பலின் நலனுக்காவும், அவர்களின் வீட்டுப் பிள்ளைகளின் திறனை வெளிப்படுத்துவதற்கான ஓர் வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் தான் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது!
“இது பெரியார் பிறந்த மண்!”, “இது சமூகநீதி ஆட்சி!” என்று வாய்ச்சவடால் அடித்துக்கொண்டு புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வு போன்றவற்றை மறைமுகமாக அமுல்படுத்தி வருவதுபோலவே, தற்போது இந்த ‘கலா உத்சவ்’ என்ற போட்டிகளையும் அனுமதித்துள்ளது திமுக அரசு.
இதேபோன்று பள்ளிகளுக்கு வெளியே உள்ள மாணவர்களை ஒருங்கிணைக்க ‘மக்கள் பள்ளி’ என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. இந்த திட்டத்திற்கு பல்வேறு தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து வருகிறது. தன்னார்வலர்கள் என்ற போர்வையில் இந்த கொரோனா காலத்தில், தொடர்ச்சியாக பல்வேறு வழிமுறைகளில் பள்ளிகளில் ஊடுருவ திட்டமிட்டு வேலை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக காவி கும்பல். இந்த தன்னார்வலர்கள் தான் ‘மக்கள் பள்ளி’ திட்டத்திலும் ஊடுருவப் போகிறார்கள்.
இப்படி, புதிய கல்விக் கொள்கையையும், சமஸ்கிருத – இந்தித் திணிப்பையும் அதிமுக ஆட்சியை போலவே, திமுக-வும் தற்போது துரிதமாக அமுல்படுத்தி வருகிறது. எனவே, ‘கலா உத்சவ்’ போட்டிகளை உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும், ‘மக்கள் பள்ளி’ எனும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
♣ கலா உத்சவ் போட்டிகளையும், மக்கள் பள்ளி திட்டத்தையும் உடனே ரத்துசெய்!
♣ பள்ளி, கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக காவிக்கும்பல் ஊடுருவ திட்டமிடாதே!
♣ காவிக் கும்பலுக்கு துணை போகும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
இவண்,
இர.துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
94448 36642.