“பல்தேசிய இன அடையாளங்களை அழிக்கவே, மோடி அரசு சமஸ்கிருத கலாச்சாரத் திணிப்பு” என்ற முழக்கத்தின் கீழ் 28-06-2016 காலை 10.00 மணியளவில் கரூர் தந்தி அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தோழர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். “இந்து மத பார்ப்பன பாசிச பண்பாட்டிற்கு எதிராக தமிழகம் முழுவதும் பு.மா.இ.மு மற்றும் தோழமை அமைப்புகள் போராடி வருகின்றன. தில்லை நடராஜர் கோவில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடும் போராட்டம், ஸ்ரீரங்கம் கருவறை நுழைவு போராட்டம், ஆலயத் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் என தொடர்ந்து பார்ப்பனியத்திற்கு எதிராகவும் இந்தி சமஸ்கிருத வேத கலாச்சாரத்திற்கு எதிராகவும் களத்தில் போராடும் புரட்சிகர அமைப்பில் இணைந்து போராட முன்வாருங்கள்” என்று தலைமையுரை ஆற்றினார்.
அடுத்து பேசிய தோழர் அபிநயா, “சென்னை ஐ.ஐ.டி-இல் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை, ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ரோகித் வெமுலா தற்கொலை, ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கன்னையாகுமார் மீது தேசத் துரோக வழக்கு என்ற எல்லா வகையிலும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி இந்து மதவெறி கும்பலின் மோடி அரசு ஒட்டு மொத்த இந்தியாவையே காவி மயமாக்க முயற்சித்து வருகிறது. பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியாவில் ஒரே இனம், ஒரே தேசம், ஒரே மொழி என்று இந்து, இந்தி, இந்தியா என்ற பார்ப்பனிய தாரக மந்திரத்தை கல்வியிலும் திணிக்க முயற்சித்து வருகிறது. இதனைத் தகர்த்து எறிய இளைஞர்களும் மாணவர்களும் புரட்சிகர அமைப்பில் இணைந்து பார்ப்பனியத்திற்கு எதிராக போராடுவதைத் தவிர வழியில்லை” என்று உரையாற்றினார்.
சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம் தோழர் ராமசாமி, “வருகிற கல்வியாண்டு (2016-17) முதல் சமஸ்கிருதத்தை 3-வது மொழியாக கற்பிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி உத்தரவிட்டுள்ளார். கல்வித் துறையில் காட்ஸ் ஒப்பந்ததை நிறைவேற்றுவதையும், இந்துத்துவ கருத்துக்களை புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டம் 2015 சமஸ்கிருதத்தை தனிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்று கூறுகிறது. சமஸ்கிருத திணிப்பின் மூலம் பல்தேசிய இனங்களில் இன, மொழி, பண்பாடு, கலாச்சார அடையாளங்களை அழித்து ஒற்றை மொழி, ஒற்றை கலாச்சாரம், ஒற்றை தேசம் என்று இந்துத்துவா கொள்கைகளை நிறுவத் துடிக்கின்றன ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சங்க பரிவார அமைப்புகள். இதனை கருவறுக்க பெரியாரின் கொள்கைகளை நெஞ்சிலேந்தி இளைஞர்களும், மாணவர்களும், உழைக்கும் மக்களும் வீதியில் இறங்கி போராடி, மதவாத கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டிய நேரம்” என்று உரையாற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இறுதியாக, தோழர் சுரேந்தர் நன்றி தெரிவித்தார்.
தகவல்
இரா.பாக்கியராஜ்,
மாவட்ட செயலாளர், கரூர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்
செல் – 98941 66350
மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து 29-06-2016 ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்
மத்தியில் பா.ஜ.க அரசு ஆட்சிப்பொறுப்பு ஏற்றதிலிருந்து கல்விக்கூடங்களில் இந்துத்வா கருத்துக்களை புகுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை அனைவரும் அறிவோம். தற்போது இந்த கல்வியாண்டு முதல் மத்திய அரசின் CBSE பள்ளிகளில் சமஸ்கிருதம் மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்க வேண்டுமென்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத்திட்டத்திலும் கல்வியை காவிமயமாக்கும் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இது பிறமொழிகளையும், இன, பண்பாட்டு அடையாளங்களையும் அழிப்பதோடு கல்வியை காவிமயமாக்கும் சூழ்ச்சி. இதனை கண்டித்து 29-06-2015 காலை 11.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர் தலைவர்கள், ஆய்வாளர்கள் பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
ராஜா,
சென்னைக்கிளை செயலர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை – 9445112675.