16 மாதங்களுக்கு முன்பு வரை இந்தியாவில் ஏறத்தாழ 250 மில்லியன் குழந்தைகள் நேரடியாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். இப்போதும் 170 நாடுகளில் பள்ளிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செயல்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. இது நம்ப முடியாத ஒன்றாக கூட இருக்கலாம். ஆனாலும் உண்மை.

பெரும்பான்மையான நாடுகளில் கொரோனா பெரும் தொற்று காலத்திலும் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டன; குறிப்பிட்ட சில காலகட்டங்களைத் தவிர.

இந்தியாவின் கொள்கை வகுப்பவர்கள், இந்தியாவில் உள்ள பள்ளிகளை மீண்டும் குழந்தைகளுக்காக  திறப்பதைப் பற்றி விரைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. இந்தப் பெரும் தொற்றானது பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆன்லைன் வகுப்பிற்குள் தள்ளிவிட்டிருக்கிறது. எப்படியாகினும் இணையவழி வகுப்பானது ஒருபோதும் பள்ளியில் கற்பிக்கும் முறைக்கு கிஞ்சித்தும் ஈடாகாது என்பதே உண்மை.

படிக்க :
♦ நீட் தேர்வு : தமிழக அரசை நம்பி இருப்பது தீர்வல்ல ! போராட்டமே தீர்வு !
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE

மிகவும் பின்தங்கியோரை பெரும்பான்மையாக கொண்டுள்ள இந்தியாவில், அவர்களின் குழந்தைகள், தங்கள் பெற்றோரிடம் ஆன்லைனில் படிப்பதற்கு தேவையான  பொருட்களை கேட்க நிர்பந்திருக்கிறது இச்சூழல். எப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்து ஆன்லைன் கல்வி முறையை அளித்தாலும் அது பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் முறையான ஊடாடும் முறை மூலம் (Intraction) கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவனுக்கு கூட கற்றுக் கொடுக்கும் தெளிவான மொழி உச்சரிப்பு, சமூக அறிவு, உடல் மற்றும் மன ரீதியான வலிமை ஆகியவற்றுக்கு ஈடாகாது.

ஏற்கெனவே, பொருத்தமற்ற கல்வி முறையை கொண்டுள்ள இந்தியப் பள்ளிகள்,  பெருந்தொற்று காலத்தில் பெருமளவு கடைப்பிடிக்கப்பட்ட இணையவழிக் கல்வி முறையால் மென்மேலும் குழந்தைகளிடமிருந்து விலகிப்போனது.

இந்தியாவில் அறிவிக்கப்பட்ட அன்லாக் டவுன் திட்டமானது, சுற்றுலாத் துறையையும் பொருளாதார நடவடிக்கைகளையும் உடனே மேற்கொள்ள கட்டாயப்படுத்துகிறது. பள்ளிகளை உடனே திறந்து மாணவர்களுக்கு கல்வி அளிப்பது குறித்த அறிவிப்பு ஏதுமில்லை. ஒருமாத கல்வி இடைவெளியானது இருமாத கற்பித்தலை இழந்ததற்கு சமமாகும். அப்படியானால் இந்தியாவில் உள்ள குழந்தைகள் ஏற்கனவே 32 மாதங்கள் கற்றலை இழந்துள்ளன. ஒருவேளை இவ்வாண்டு மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டாலும், கடந்த மற்றும் இந்த கல்வி ஆண்டானது மாணவர்களுக்கு பெரும் நட்டமாகவே இருக்கும். Covid-19 மூன்றாவது அலையானது பள்ளிக் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற கருத்தின் காரணத்தால் ஏற்பட்ட உச்சபட்ச பயமானது பள்ளிகள் திறப்பது பற்றி பேசும்போது அனைவருக்கும் தொற்றிக் கொள்கிறது.

கொள்கை வகுப்பாளர்களாலும் பெற்றோர்களாலும் உருவாக்கப்பட்ட இந்தத் தவறான கூற்றானது, மீண்டும் பள்ளிகளைத் தொடங்குவது பற்றிய வாதத்தையே தடுத்து நிறுத்தி விட்டது எனலாம். அடுத்தடுத்து வரக்கூடிய இந்தத் தொற்று அலைகளால் குழந்தைகளுக்கு மட்டும் கூடுதலான பாதிப்பு ஏற்படும் என்பது தவறானது. 18 வயதுக்கு மேற்பட்டோரை காட்டிலும் அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எவ்விதமான அறிவியல்பூர்வமான சான்றுகளும் இதுவரை இல்லை என்பதே உண்மை.

SARS-COV2 ஏற்பிகள் குழந்தைகளின் நுரையீரலில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. எனவே நோயின் ஆபத்தானது குழந்தைகளுக்கு அதிகம் என்பது இது ஏற்புடையது அல்ல. அமெரிக்காவில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தியதிலிருந்து, குழந்தைகளை பெருந்தொற்று தீவிரமாக பாதிக்கும் என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை. குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கும் வகையில் புதிய வகையிலான ஆபத்து எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் கவனத்தில் கொண்டு பரிசீலிப்பதற்காக மூன்று வகையான அறிவியல் சான்றுகள் உள்ளன.

ஒன்று, பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதற்காக அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பள்ளிகளைத் திறப்பதற்கு தடுப்பூசி கட்டாயம் போடப்பட்டு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதை சர்வதேச மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் எந்த நாடும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தொடங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு தடுப்பூசி போடத் தொடங்கினாலும் அதற்கு பல மாதங்கள் ஆகும்.

இரண்டாவதாக, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவது நல்ல யோசனையாக இருந்தாலும் அதனை கட்டாயப்படுத்தக் கூடாது.

மூன்றாவதாக, எட்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு முதலில் பள்ளிகளை திறக்க வேண்டும். ஏனெனில் இவ்வயதுடையவர்களுக்கு நோய்த் தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.

9 முதல் 12-ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு அதிக கவனத்துடனும் கூடுதல் முன்னேற்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள் கட்டாயமாக உச்சபட்ச கவனம் கொடுத்து மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான பருண்மையான திட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்க வேண்டும்.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை கையாள்வதற்கும் மாற்றி அமைப்பதற்கும் மாநிலங்களுக்கு எல்லா வகையான உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும்.

சர்வதேசச் சான்றுகளுடன் களநிபுணர்கள் மற்றும் தொற்றுநோய்கள் நிபுணர்களைக் கொண்ட குழுவால் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடைமுறை கொள்கைகள், வழிகாட்டி நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும். நோய்த் தொற்றினை எதிர்கொள்ள தேவையான காற்று வசதி, இடவசதி போன்றவைகளைக் கொண்ட உறுதியான பள்ளிக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பள்ளியானது நிழலுடன் கூடிய திறந்த வெளியில் நடத்தப்பட வேண்டும்.

பள்ளி சுகாதார சேவைகளை மேம்படுத்துவது, பள்ளிக் குழந்தைகளுக்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்வது, தொற்று காலத்திற்குப் பொருத்தமான பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு கற்பிக்கும் படி பெற்றோர்களுக்கு வலியுறுத்துவது போன்ற ஒருங்கிணைந்த செயல்களை மேற்கொள்ள வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தொற்று நோய் பாதுகாப்பு வழிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அவசியத்தை பயிற்றுவிக்க வேண்டும்.

படிக்க :
♦ தமிழகத்தில் அதிகரித்து வரும் தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை !
♦ PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !

குறைவான எண்ணிக்கையில், சுழற்சி முறையில் – மாற்று நாட்கள், வாரம் மூன்று நாட்கள், வாரம் இரு நாட்களில் – போதிய நாட்கள் போதிய இடைவெளியுடன் பகுதிகளாக (Shift) வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளிக்கு வரும் குழந்தைகளின் விகிதத்தில் மாறுபாடு ஏற்படும் போது அது தொடர்பாக பெற்றோர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

இப்போது உள்ள ஹைபிரிட் பள்ளியறை மற்றும் ஆன்லைன் கல்விமுறை தொடருமானால் பெற்றோர்களுக்கு தெரிவு செய்ய வேறு எதுவும் வழியே இல்லை.

தொடர்ச்சியான உறுதியான நடவடிக்கைகள் மூலம் பெற்றோர்களின் தேவையற்ற பயத்தை ஒழித்துக்கட்ட வேண்டியது நம்முடைய கடமையாகும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் யார் என்று ஆராயப்பட்டு அவர்களின் தேவைகள் உளப்பூர்வமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

மிகவும் அதிகப்படியான அளவில் குழந்தைகளை பாதுகாக்க எடுத்த – எடுக்கும் முயற்சியானது, குழந்தைகளிடமிருந்து கல்வியையும் கற்பித்தலையும் இழக்கவே செய்துள்ளது.

உடல்ரீதியாக, மனரீதியாக, சமூகரீதியாக, உணர்வுபூர்வமாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு பள்ளிகள் திறப்பது என்பது அத்தியாவசியம்.

அறிவியல் அணுகுமுறை, அறிவியல் சான்றுகள் போன்றவை குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு செல்வதற்கான திட்டங்களை மேம்படுத்தி கற்பித்தலுக்கான பாதையை திறந்து இழந்த காலத்தை ஈடுசெய்யும்.

ஆம், இந்தியாவில் மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான காலம் இது !

(குறிப்பு : IT’S TIME TO CONSIDER REOPENING SCHOOLS என்ற தலைப்பில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியான ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கம். இக்கட்டுரையாளர் Till we win : indias fight against the covid 19 pandemic என்ற புத்தகத்தை மற்றொருவருடன் இணைந்து  எழுதியவர் ஆவார்.)


கட்டுரையாளர் : மருத்துவர் சந்திரகாந்த் லகாரியா, பொது மருத்துவர் மற்றும் தொற்றுநோய் இயல் நிபுணர்
தமிழாக்கம் : மருது
முகநூலில் : Revolutionary Students Youth Front – Rsyf

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க