லக வங்கி, யுனெஸ்கோ மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றால் வெளியிடப்பட்ட “உலகளாவிய கல்வி நெருக்கடி நிலை : மீட்சிக்கான பாதை” என்ற அறிக்கை, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் கற்றல் குறைபாட்டுக்கு ஆளான குழந்தைகளின் விகிதம் – தொற்றுநோய்க்கு முன்பே 53 சதவீதமாக இருந்தது – தற்போது 70 சதவீதமாக அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது என்று  கூறுகிறது.
கோவிட்-19 காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதன் விளைவாக நிகழ்தலைமுறை மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை இழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்கள் தங்களது வாழ்நாள் வருவாயில் 17 டிரில்லியன் டாலர் அல்லது இன்றைய உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீத்தை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
கொரோனா நெருக்கடி உலகம் முழுவதும் கல்வி கற்றலை நிறுத்தியிருக்கிறது. இப்போது 21 மாதங்களுக்கு பிறகு மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மற்ற குழந்தைகள் பள்ளிக்கு வரமுடியாத நிலைக்கு மாறியுள்ளனர். பல குழந்தைகளின் கற்றல் இழப்பு தார்மீகரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. கற்றல் இழப்பால் வறுமைக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
இந்தத் தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அவர்களது குடும்பங்கள் மற்றும் உலகப் பொருளாதாரங்களின் எதிர்கால உற்பத்தி வருவாய் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் பெரும் அழிவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறது அறிக்கை.
பள்ளி மூடல்கள் குறிப்பிடத்தக்க கற்றல் இழப்புகளை விளைவித்துள்ளன என்பது இப்போது உண்மையான தரவுகளால் உறுதிப்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பிரேசில், பாகிஸ்தான், கிராமப்புற இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளின் கற்றல் செயல்பாட்டில் கணிதம் மற்றும் வாசிப்பில் கணிசமான இழப்புகளைக் சந்தித்துள்ளது என்று பிராந்திய சான்றுகள் புலப்படுத்துகின்றன.
படிக்க :
காவிக் கல்வி : பெண்ணடிமைத்தனத்தை பரப்பும் சி.பி.எஸ்.ஈ !
இல்லம் தேடிவரும் கல்வி : கல்வியில் நடத்தப்படும் ‘கரசேவை’ !
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் தொலைதூரக் கற்றலை (ஆன்லைன் கல்வி) பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, கற்றலுக்கான தொழில்நுட்பங்களின் பற்றாக்குறை, மின்சார இணைப்பு, இணையம், தேவையான சாதனங்களின் பற்றாக்குறை மற்றும் பாலின பாகுபாடுகளே இதற்கு காரணமாக உள்ளது.
பழைய மாணவர்களைக் காட்டிலும் கற்றல் இழப்பால் அதிகமாக இளைய தலைமுறை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, முன்பள்ளி வயது குழந்தைகள் அல்லது மாணவர்கள் முக்கிய கற்றல் மற்றும் வளர்ச்சி நிலைகளில் தொலைதூரக் கற்றலுக்கான (ஆன்லைன் கல்வி) வசதிகளை குறைவாக கொண்டிருக்கின்றனர்.
“கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதன் விளைவாக 1.6 பில்லியன் மாணவர்கள் பெறவேண்டிய கல்வி சீர்குலைந்துள்ளது. பாலினப் பிரிவினை அதிகரித்துள்ளது. சில நாடுகளில் பெண் குழந்தைகளிடையே அதிக கற்றல் இழப்புகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள், பாலின அடிப்படையிலான வன்முறைகள், சிறுவயது திருமணங்கள் மற்றும் கருவுருதல் போன்றவற்றை எதிர்கொள்ளும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினைகளை தடுக்க மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும். மேலும், கற்றல் மீட்சியை துரிதப்படுத்த வேண்டும்” என்று யுனிசெஃப் கல்வி இயக்குனர் ராபர்ட் ஜென்கின்ஸ் கூறினார்.
இன்றுவரை அரசாங்கங்களின் பட்ஜெட் தொகையில் மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே கல்விக்காக நிதி ஒதுக்கி வருகின்றனர் என்று அறிக்கை கூறுகிறது. எனவே, உடனடி கற்றல் மீட்புக்கு அதிக நிதி தேவைப்படும். உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் மாணவர்களுக்கு தொலைதூரக் கற்றல் (ஆன்லைன் கல்வி) வாய்ப்புகளுக்கான முயற்சிகள், அதன் தரம் குறைவு மற்றும் தொழிற்நுட்ப ரீதியான ஏற்றத்தாழ்வு இருந்தாலும் இந்த கல்வி முறை மாணவர்களுக்கு மிகவும் சிறிய அளவு மாற்றாக இருந்தது. ஆனால், 200 மில்லியனுக்கும் அதிகமான கற்பவர்கள் (மாணவர்கள்) குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் பள்ளி மூடலின்போது தொலைத்தூரக் கற்றலைப் (ஆன்லைன் கல்வி) பயன்படுத்தத் தயாராக இருக்கவில்லை.
பள்ளிகளை மீண்டும் திறப்பதென்பது, கற்றல் இழப்புகளைத் தடுப்பதற்கும் மாற்றியமைப்பதற்கும் உலகளவில் முதன்மையானதாக இருக்க வேண்டும். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் முந்தைய தலைமுறையினரின் அதே திறன்களைப் பெறுவதையாவது உறுதிசெய்யும் நோக்கத்துடன் கற்றல் மீட்புத் திட்டங்களை அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும். பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்தல் ; அறிவுறுத்தல் நேரத்தை நீட்டித்தல் மற்றும் கற்றலின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது என்று அறிக்கை கூறுகிறது.
மேற்கண்ட அறிக்கையின் கருத்துக்கள் மூலம் நம் நாட்டில் தற்போதைய கல்வி கற்கும் தலைமுறையினர் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதை உணரமுடிகிறது. கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் கற்றல் திறனை விரைந்து மேம்படுத்தும் அக்கறை ஒன்றிய – மாநில் அரசுகளுக்கு துளியும் இல்லை. தனியார்மய கொள்கையை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள், குலக்கல்வியை அடிப்படையாக கொண்ட புதிய கல்விக் கொள்கையை திணிக்கும் நடவடிக்கைகளையே செவ்வனே செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் மாணவர்களை கல்வியில் இருந்து துரத்தியடிக்கும் நிலையே மேலும் தீவிரமடையும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
வினவு செய்திப் பிரிவு
சந்துரு
செய்தி ஆதாரம் : Worldbank.org

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க