ஆந்திரா : கொரோனா காலத்தில் கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் – கல்வி தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசு !

10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 34 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேட்கும்போதே நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ஆனால், ஆந்திர அரசு இதை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறது.

0
ந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 6 இலட்சம் மாணவ மாணவிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவுகள் வந்தபோது 4 இலட்சம் மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். 2 இலட்சம் மாணவ மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.
இதில், மன உளைச்சலுக்கு ஆளான 34 மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கேட்கும்போதே நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ஆனால், ஆந்திர அரசு இதை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறது. அவர்களின் கூற்றுப்படியே கொரோனா காலகட்டமாதலால் இந்த பிரச்சினை நடந்துள்ளது. அடுத்து தேர்ச்சியடையாதவர்களுக்காக மீண்டும் மறுதேர்வு வைப்போம்என என பேசி சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்.
படிக்க :
♦ மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை : காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை !
♦ மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் துணைவேந்தர் குமார் !
கொரோனா காலகட்டத்தில் எந்த இலட்சணத்தில் அரசுப் பள்ளிகளை நடத்தியது என்பது அவர்களுக்குத் தெரியாதா? பெரிய அளவுக்கு மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டிருப்பது தெரியாதா? தெரிந்தும் மாணவர்களுக்கு பழைய முறையிலேயே பயிற்சி இல்லாமல் காலத்தை நீடிக்காமல் தேர்வு வைக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? துளியும் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாத போக்கு இது.
ஜெகன்மோகன் ரெட்டி அரசு தனியார் பள்ளிகளை தங்கள் கைப்பாவைகளாக வைத்துக்கொண்டு ஆந்திராவில் நடத்திய மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள். “ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரில் பிரம்மர்ஷி பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மிஸ்பா படிப்பில் டாப்பராக இருப்பார். ஆனால் மிஸ்பா படிப்பில் டாப்பராக இருப்பதால் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் மகள் அனைத்து தேர்விலும் இரண்டாம் இடத்திற்கு சென்றார். இதனால் மிஸ்பாவை பள்ளியை விட்டு நீக்க முடிவு செய்து தலைமை ஆசிரியர் ரமேஷ் மூலம் டி.சி கொடுக்க வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மிஸ்பாவை வேறு பள்ளியிலும் சேர விடாமல் தடுத்து வந்துள்ளனர்இதனால், அந்த மாணவி மிஸ்பா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சிக்காரர்களின் பிள்ளைகள் படிக்க தனியார் பள்ளிகள் வேண்டும். அவர்களிடம் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தால் மேற்கண்ட சம்பவத்தை நிறைவேற்றி இருப்பார்கள். இவர்கள்தான் தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையை தடுக்க போகிறார்களா? இவர்கள்தான் கல்வியை விற்பதற்காக அல்லாமல் பாதுகாக்க போகிற யோக்கிய சிகாமணிகலா?
கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் அதிகமான அளவு தேர்ச்சி பெற்றுதான் வந்துள்ளார்கள். 2019-ல் 94.88%, 2018-ல் 94.48%, 2017-ல் 91.92% , 2016-ல் 94.52% மற்றும் 2015-ல் 91.41% என்ற அளவுகளின் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி அடிப்படை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு கண்கூடான உதாரணமாக இருக்கிறது.
இதையெல்லாம் சரி செய்ய வக்கற்ற அரசுதான் இன்று படுகொலைகளை நடத்தியுள்ளது. இதை மாணவர்களும் ஆசிரியர்களும் முற்போக்கு சக்திகளும் களத்தில் இறங்கி அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. நம்மையும் சாதாரணமாக கடந்து செல்ல சொல்கிறார்கள்? அனுமதிக்கப் போகிறோமா?

ரவி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க