கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொதுசுகாதாரம் என்பது அதிகம் பேசுபொருளான ஒன்றாக இருந்தது. குறிப்பாக பொதுசுகாதாரத்தை முற்றும் முழுதும் தனியார்வசம் ஒப்படைத்த அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடியபோது பொதுசுகாதாரத்தை முறையாக பேணிக் காத்து வந்த கியூபா,வியட்நாம், வெனிசுலா போன்ற நாடுகள் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் கொரோனாவை சிறப்பாக கையாண்டதோடு ஏனைய நாடுகளுக்கும் தங்கள் உதவிக்கரங்களையும் நீட்டின.

பொது சுகாதாரத்திற்கு அதிமுக்கியத்துவம் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில், பிப்-1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை முன்மொழிந்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்காக பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட 137 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார். நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு ஒருபுறம் என்றால் “மக்களுக்கான மானியங்களை வெட்டு” என்ற உலக வங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் மிரட்டல் மறுபுறமிருக்க, எல்லாவற்றையும் மீறி எப்படி இந்த எண்களை சாத்தியப்படுத்தினார்கள் என்று பார்ப்போம்.

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !

♦ பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !

இந்த பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.71,269 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆயுஷ் மற்றும் சுகாதார ஆராய்ச்சிக்கு அரசு ஒதுக்கிய தொகை ரூ.5,633 கோடியையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் ரூ.76,902 கோடி ஆகும். மொத்த பட்ஜெட்டில் இது வெறும் 2.21 சதவீதம் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு மொத்தம் 2.27 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது; இதே (2020-21) நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடாக 2.47சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை ஒப்பிடும் போது கடந்த ஆண்டை விட மொத்த பட்ஜெட் தொகையிலிருந்து 0.26 சதவீதம் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என்பதுதான் எதார்த்தம். ஆனாலும் எப்படி இந்த 137% அதிகரிப்பை மோடி அரசால் கொண்டு வர முடிந்தது ?

உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழலில் அதற்கு தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்வது என்பது தவிர்க்க முடியாதது. அதற்கு ஒதுக்கப்பட்ட தொகையான ரூ.35,000 கோடியையும் சேர்த்துத்தான் இந்த 137% அதிகரிப்பை பெருமை பீற்றிக் கொள்கிறது.

அதுமட்டுமல்ல, குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றுதலுக்கான நிதி ஒதுக்கீட்டை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ. 60,030 கோடி. மேலும் இத்துறைக்கான நிதிக் கமிசன் ஒதுக்கீடு என ரூ. 36,022 கோடியை ஒதுக்கியுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.திடீரென நான்கு மடங்கு அதிக நிதி இத்துறைக்கு ஒதுக்கியிருப்பது, இத்துறையை முழுமையாக தனியாரிடம் ஒப்படைத்து அவர்களிடமிருந்து அதிக பணத்தில் இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள மோடி அரசு முடிவெடுத்துள்ளதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குடிநீருக்கும் கழிவுநீரகற்றுக்கும் ஒதுக்கப்பட்ட இந்த 1 இலட்சம் கோடியையும் சேர்த்துத்தான் மோடி அரசின் 137% அதிகரிப்பு.

பொதுவாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகைதான் மக்களுக்கு மருத்துவம் என்ற அளவில் ஒதுக்கப்படும் தொகையாகும். அதுபோக ஊட்டச்சத்துக்காக ஒதுக்கப்படும் தொகையும் மக்களின் சுகாதார வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் தொகையாக எடுத்துக் கொள்ளப்படும். அந்தத் தொகையை குறைத்துள்ளது மோடி அரசு. கடந்த நிதியாண்டில் ரூ. 3700 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு இந்த நிதியாண்டில் ரூ. 2700 கோடியாக குறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு போட்டியாக இந்தியா உள்ள நிலையில், இத்துறையில் கைவைத்துள்ளது, பெரும் ஆபத்தானது.

அதே போல, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு சென்ற ஆண்டு 2020-21 பட்ஜெட்டில் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.2,900 கோடி ஆகும். இப்போதைய ஒதுக்கீடும் அதே ரூ.2900 கோடி தான். எவ்வித கூடுதல் ஒதுக்கீடும் இல்லை.

பிரதமர் ஸ்வஸ்திய சுரக்சா யோஜனா திட்டத்திற்கு கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.7,517 கோடி ஆகும். தற்போதைய பட்ஜெட் மதிப்பீடு ரூ.7000 கோடி மட்டுமே. இந்த வகையில் அடிப்படையான சுகாதார / மருத்துவ வசதிகளுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது மோடி அரசு.

பட்ஜெட்டிற்கு முன் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2017 தேசிய சுகாதாரக் கொள்கையை மேற்கோள்காட்டி, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1 சதவீதம் முதல் 2.5-3சதவீதம் வரை சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

ஆனால், தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெறும் 0.34 சதவீதம் மட்டுமே. தற்போது அவர்கள் காட்டியுள்ள பெரும் தொகையெல்லாம், அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் வெறும் ஜூம்லாதான்.

அதுமட்டுமல்ல, 15வது நிதி கமிஷன், 2021-22 நிதியாண்டில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில், ஜிடிபியின் அளவில் 1.92 சதவீதமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. இது தேசிய சுகாதாரக் கொள்கை 2017 சுட்டிக்காட்டியதைவிட குறைவானது எனினும், இந்த இலக்கைக்கூட இந்த நிதிநிலை அறிக்கை எட்டவில்லை என்பதே உண்மை.

உலகமய தாரளமயத்திற்கு பின் பட்ஜெட்டில் அரசுகளின் செலவீனம் என்பது குறைக்கப்பட்டு கொண்டேதான் வந்துள்ளது. அவர்கள் மொழியில் இதை சொல்வதென்றால் மினிமம் கவர்மெண்ட் மேக்சிமம் கவர்னன்ஸ். அரசின் வேலை ஆலை நடத்துவதோ, சாலை போடுவதோ அல்ல! இவற்றையெல்லாம் தனியார்வசம் விட்டுவிட்டு, அவற்றை மேற்பார்வையிடுவதே அரசின் வேலையாம்.

இந்தப் பட்டியலில் இப்போது மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றையும் சேர்த்துள்ளார்கள். அதன் விளைவாகத்தான் விவசாய இடுபொருட்களுக்கான மானியம் தொடங்கி, உணவுப்பாதுகாப்பு உட்பட எல்லாவற்றிற்குமான மானியங்கள் சுருங்கிக்கொண்டே வருகிறது. இதற்கு சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடும், விதிவிலக்கல்ல.


மூர்த்தி
செய்தி ஆதாரம் : Scroll, The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க