கொரோனா ஊரடங்கு காலத்தில் மார்ச் மாதம் முதல் ஏறத்தாழ 10 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.  இந்நிலையில் சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளில் 71% பேர் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக நகர்ப்புற ஏழைகளுக்கான தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த வெனிசா பீட்டர் நடத்திய ஆய்வு கூறுகிறது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி, உழைக்கும் அடித்தட்டு மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டிருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

சென்னையில் மட்டும் சாலையோரம் வசிப்பவர்கள் 100 பேரின் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 47 குழந்தைகள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிப்பவர்களாகவும், 46 குழந்தைகள், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தவர்களாகவும், 7 குழந்தைகள், 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்களாகவும் உள்ளனர். இதில் 86% பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 27% குழந்தைகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் படித்து வந்துள்ளனர்.

படிக்க :
♦ எனது படிப்பு குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறது ! தற்கொலைதான் ஒரே போக்கிடம் !
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !

ஊரடங்கு காலத்தில் நடத்தப்பட்டு வந்த இணைய வழிக் கல்வியை (Online Education) தொடர ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் 25% பேரும், ஸ்மார்ட் போன் பயன்படுத்த தெரியாத காரணத்தால் 1% பேரும், பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தாத காரணத்தால் 36% பேரும், கல்வி கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் 6% பேரும், படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலைமையின் காரணமாக 3% பேரும் என மொத்தமாக 71% மாணவர்கள் கல்வியைத தொடர முடியவில்லை.

வறுமை, வேலையின்மை போன்ற காரணங்களாலும் கல்வி இடைநிற்றல் அதிகரித்துள்ளது. திருவல்லிகேணியில் வசிக்கும் பெயிண்டர் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர், மாதத்திற்கு நான்கு நாள்கள் மட்டுமே வேலையிருப்பதாலும், ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க பணமில்லாததாலும் 7-வது படிக்கும் தன் மகளின் படிப்பை இடைநிறுத்தி, படிக்க வைக்கப் போவதில்லை என்று முடிவு செய்து விட்டார்.

கடந்த நவம்பர் மாதத்தில் கல்லூரி படிப்பை தொடர ஆன்லைன் வகுப்புக்கு போதுமான இணைய வசதி இல்லாமலும், இணைய டேட்டாவுக்கு கூடுதலாக செலவு செய்ய வசதியில்லாமலும் நவம்பர் 3 அன்று டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் படித்த ஐஸ்வர்யா எனும் மாணவி தற்கொலை செய்து கொண்டது நினைவு இருக்கலாம்.

தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைக்கு பிறகு கல்வி வியாபாரமாக மாற்றப்படுவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இலவசமாகக் கிடைக்கக் கூடிய அடிப்படைக் கல்விகூட, பேரிடர் காலங்களில் பணம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்ற நிலை உருவாகியுள்ளது.

சமீபத்தில் மயிலாடுதுறையில் பழைய பேப்பர், இரும்புக் கடையில் 6-ம் பகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான 2,000 கிலோ எடையுள்ள 3,134 இலவச பாடப்புத்தகங்கள் எடைக்குப் போடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய இலவச புத்தகங்களை விற்ற மாவட்ட கல்வி அலுவலக ஆய்வாளர் மேகநாதன் மற்றும் இரும்புக் கடை உரிமையாளர் பெருமாள் சாமி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரோனா ஊரடங்கு தனியார் இணையக் கல்வி தளங்களின் வளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கை பயன்படுத்திக் கொண்டு இணைய வழிக் கல்வி முறையை புதிய கல்வி முறையாக்க மோடி அரசு திட்டமிடுகிறது.

ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தில், அதிலும் அதன் தலைநகரான சென்னையில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த நிலை என்றால் இந்தியா முழுவதும் பிற மாநிலங்களின் ஏழை மாணவர்களின் கல்வி இடைநிற்றலைப் பற்றி புரிந்து கொள்ளமுடியும்.

ஆன்லைன் கல்வி முறையை பயன்படுத்தி மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூச்சமில்லாமல் கூறிக் கொண்டே ஏழை, கிராமப்புற மாணவர்களை கல்வியிலிருந்தே துரத்தியடிக்கிறது மோடி அரசு. இது ஏதோ கொரோனா காலத்தில் மட்டும் நடக்கும் விசயமாகக் கடந்து சென்றுவிட முடியாது. இந்த ஆன்லைன் கல்வி நடைமுறையைத்தான் இந்தியா முழுவதும் அமல்படுத்தத் துடிக்கிறது புதிய (தேசிய) கல்விக் கொள்கை. இக்கொள்கை எதிர்கால இந்தியாவை ஞானசூன்யமாக உருவாக்கவல்லது என்பதற்கு கொரோனா கால கல்வி நிலைமையே சான்று !


மேகலை

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க