கொரோனா சூழலிலும் தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்கு தடையேற்படாமல் இருக்க மத்திய அரசு அனுமதித்துள்ள இணையவழிக் கல்வி முறை (Online Education) இந்தியாவின் பெருவாரியான மாணவர்களுக்கு சாத்தியமற்றதாக இருக்கிறது. இந்த ஆன்லைன் வழிக் கல்விமுறை பல மாணவர்களின் உயிரையும் காவு வாங்கி வருகிறது. பெருவாரியான ஏழை மாணவர்களை கல்வியில் இருந்து விரட்டியடிக்கிறது.

நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் பள்ளி, கல்லூரிகளை கடந்த மார்ச் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக மூட உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. பள்ளி, கல்லூரிகள் திறக்காமல் போனால், தனியார் பள்ளி கல்லூரிகள் கல்லா கட்ட முடியாது எனும் சூழலில், கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கல்வி முறையில் மாணவர்களுக்கு கல்வி வழங்கலாம் என்று அறிவித்தது மோடி அரசு.

பஞ்சத்தால் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் நமது நாட்டில், கொரோனா தொற்று பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், ஏழைகளுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாக்கனி தான். இந்தியாவில் வெறும் 24% வீடுகளில் மட்டுமே திறன்பேசிகளைக் (Smart Phone) கொண்டதாகவும், அதிலும் 11.5% வீடுகளில் மட்டுமே கணினியும், இணைய இணைப்பும் இருப்பதாகவும் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில் இணைய வழிக் கல்வி என்பது நடுத்தர மற்றும் உயர்தட்டுப் பிரிவினரின் குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருக்கிறது.

படிக்க :
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !
♦ கருவறை தீண்டாமையை ஒழிக்குமா அதிமுக அரசு ? | வா. ரங்கநாதன்

ஆன்லைன் கல்வி பெற சாத்தியமற்ற மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து எவ்வித அக்கறையும் காட்டாத மோடி அரசு, ஆன்லைன் கல்வியை அனுமதித்தது.

அப்படி ஆன்லைன் கல்வியில் படிக்க சாத்தியமான மாணவர்களுக்கும் கூட, இந்த வகுப்புகளில் தொடர்ச்சியாக அமர்ந்திருந்து கவனிப்பது என்பது உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாணவர்களை கவனச் சிதறல் இன்றி கைப்பேசித் திரையை நோக்கச் செய்வதே பெரும் சவாலாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும் பள்ளியைப் போன்றதொரு மாணவர்களின் ஊக்கமான பங்களிப்பு ஆன்லைன் வகுப்பில் சாத்தியமற்றதாக இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் அதிகமான நேரம் கைப்பேசித் திரையைப் பார்க்க நேரிடுவது மட்டுமின்றி, இணையவழி வீட்டுப் பாடத்தை செய்வதற்கும் கைப்பேசித் திரையில் நேரம் செலவழிக்கின்றனர். இது மாணவர்களின் உடல்நிலையில் தலைவலி, கண் பாதிப்புகள், முதுகுவலி உள்ளிட்ட உபவிளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் எவ்விதமான உடல் இயக்கங்களும் இல்லாத சூழலும், சக மாணவர்களுடன் பேசுவது போன்ற சமூக உறவுகள் இல்லாத சூழலும் மாணவர்களின் மனநிலையை அதிகமாக பாதிக்கிறது.

மாணவர்களின் உளவியல் சிக்கல் குறித்து பிசினஸ் இன்சைடர் இந்தியா இணையதளத்திடம் பேசிய கீதா தலால் எனும் உளவியல் மருத்துவர், பள்ளிக்குச் செல்லும் நிலைமைகளில் மாணவர்கள் உடல்ரீதியான இயக்கத்தில் இருப்பார்கள். அங்கு நிலைமை தட்டையானதாக இருக்காது. வீட்டில் இருந்து கற்கும் சூழலில், சமூக கருத்துப் பரிமாற்றம் இல்லாத நிலையில் மாணவர்களின் உடல்நலத்தை அது கண்டிப்பாக பாதிக்கும். இடைவெளியில் நண்பர்களைப் பார்ப்பது, பேசிவது, விளையாடுவது ஆகியவை ஆன்லைன் வகுப்புகளில் சாத்தியமில்லை என்கிறார்.

ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ள மாணவர்களின் நிலைமை இதுவென்றால், அப்படி ஒரு வாய்ப்பு அமையப் பெறாத மாணவர்களின் நிலைமை இதை விட மோசமானதாக இருக்கிறது. ஆன்லைன் கல்வி பெறுவதற்கான வசதியற்ற மாணவர்கள், உடன் பயிலும் மாணவர்களைப் பார்த்து ஏக்கமுற்றும், பாடங்களை இழக்கின்றோமே என்ற பயத்திலும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வது இன்று வரை தொடர்கிறது.

கோவிட் சூழலில் இந்தியாவில் மட்டும் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 2.4 கோடி பேருக்கு அடுத்த ஆண்டு கல்வி பயிலும் வாய்ப்பு இருக்காது என்கிறது ஐக்கியநாடுகளின் ஆய்வறிக்கை. பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.

அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 90 லட்சம் பேருக்கும் மேலானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் பெறும் வசதி வாய்ப்புகள் இல்லாத சூழலே நிலவுகிறது. மின்சாரம், திறன்பேசி, கணிணி, இணையம் என ஏழை மக்களுக்குக் கிடைக்கப் பெறாத பலவும் அவசியப்படும் ஆன்லைன் கல்வி முறை என்பது கல்வியிலிருந்து ஏழை எளிய மாணவர்களை அடித்துத் துரத்தி கல்வியை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக் காடாக்கும் வேலையையே நிகழ்த்தியிருக்கிறது.

படிக்க :
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
♦ நூல் அறிமுகம் : சீனா: ஒரு முடிவுறாத போர் | வில்லியம் ஹின்டன்

ஏழ்மை காரணமாக தமிழகம் மற்றும் இந்தியாவெங்கும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் மனமுடைந்து பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆன்லைனில் படிக்க வாய்ப்பு கிடைத்த மாணவர்களிலும் புதிய வகையான இந்தக் கல்வி முறைக்குள் தன்னை தகவமைத்துக் கொள்ள சிரமப்படும் மாணவர்களும் ஆதரவற்ற கையறு நிலையில் தற்கொலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் கல்வி முறையின் ஒரு முன்னோட்டமாகவே இதனை நாம் கருத வேண்டும். ஏழைகளின் அவல நிலையே இயல்பானதாக மாற்றுவதற்கான இந்த நடைமுறையை முறியடிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.

சரண்

செய்தி ஆதாரம் : பிசினஸ் இன்சைடர்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க