சீனப் புரட்சி இன்னும் தொடர்கிறதா?

பதில்: “இல்லை ” என்பதே.

ஒவ்வொரு புரட்சிக்கும் ஒரு எதிர்ப்புரட்சி உண்டு, அந்த நேரத்தில் அதனை இடதுசாரியிடமிருந்து வலதுசாரி கைப்பற்றுகிறது. புதிய கண்டுபிடிப்பாளர்கள், பழமைவாதிகளிடம் தோற்கிறார்கள், புரட்சி மறுநிர்மாணத்துக்கு வழி விடுகிறது. சீனாவில் எதிர்ப்புரட்சி 1978-ல் பதினோறாவது மத்தியக் குழுவின் மூன்றாவது கட்டத்தில் நிகழ்ந்தது. அதில் டெங் சியாவோ பிங்கும் லியூ கோஷ்டியில் தப்பித்த மற்றவர்களும் ஆதிக்கம் செலுத்திக் கொள்கைகளை மாற்றி “சீர்திருத்தத்தைத்” துவங்கினர். இது உழைக்கும் வர்க்க அதிகாரத்திலிருந்து முதலாளித்துவ அதிகாரத்துக்கும், உழைக்கும் வர்க்க அரசியலிலிருந்து முதலாளித்துவ அரசியலுக்கும், சோசலிசப் பாதையிலிருந்து முதலாளித்துவப் பாதைக்கும் மாறுவதை அடையாளப்படுத்தியது. அந்தக் கட்டத்தில் சீனா தனது வண்ணத்தை மாற்றிக் கொண்டது. அப்போதிலிருந்து புதிய தலைவர்கள் சீன மக்கள் முப்பது ஆண்டுகளாக கடும் முயற்சியால் கட்டிய சோசலிசக் கட்டுமானத்தையும், சோசலிசப் பொருளாதார அடிப்படையையும் கலைக்கத் துவங்கினார்கள்.

ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் அதிகாரத்தில்தானே இருந்ததென நீங்கள் கேட்கலாம்.

உண்மைதான். ஆனால் 1949-ல் சோசலிசத்தைக் கட்டுவதற்காக முன்வந்த அதே கட்சியல்ல அது. மேலும் குறிப்பாகக் கூறினால், 1949-ல் சோசலிசத்தைக் கட்ட முன்வந்த அதே தலைவர்களால் கட்சி தலைமை தாங்கப்படவில்லை.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஒரே தலைமையுடன் இருந்ததில்லை. ஜனநாயகப் புரட்சியானது அனைத்து முற்போக்கு சக்திகளையும் இணைத்தது – ஏராளமான விவசாயிகளையும், தொழிலாளர்களையும் இணைத்தது மட்டுமல்ல, பல தேசிய முதலாளிகள் (கோமின்டாங்கில் ஆதிக்கம் செலுத்திய அதிகாரிகளுடனோ, நிலப்பிரபுக்களுடனோ தொடர்பற்ற முதலாளிகள்) பெரும்பாலான அறிவுஜீவிகள், பூர்ஷ்வாக்கள் பக்கம் அதிகம் சாய்ந்தோரையும் கூட இணைத்தது. இந்தக் குழுக்களும், வர்க்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக அணி திரண்டனர். அவர்களில் பலர் தனி நபர்கள் என்ற முறையில் கட்சியில் இணைந்தனர். தீவிரமான நிலையிலிருந்த தேசப்போரைத் தொடர்ந்த உள்நாட்டுப் போர்க் காலத்தில், சீனாவிலிருந்து ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டவும், கிராமப்புறத்தில் நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றவுமான கேள்விகளில் மாவோவால் ஒரு ஒத்தக் கருத்தை எட்ட முடிந்தது. ஆனால் பணிகள் வெற்றி பெற்றதும், ஒத்தக் கருத்தானது அந்த வெற்றி தகரும் வாய்ப்பை உருவாக்கியது.

எங்கு வழி தவறியது என்பதைப் புரிந்து கொள்ள சிறிது வரலாற்றைப் பார்க்க வேண்டியுள்ளது.

மாவோ சீனப் புரட்சியின் முதல் கட்டத்தை ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை ஒழித்து பல்வேறு தேசிய பூர்ஷ்வாக்களின் அதிகாரத்தைக் கொண்டு வந்த பழைய ஜனநாய்கப் புரட்சிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக புதிய ஜனநாயகம் என்றழைத்தார். இருபதாம் நூற்றாண்டில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவின் குறைவான வளர்ச்சி பெற்ற நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு ஜனநாயகமோ, சோசலிசமோ, முதலாளித்துவமோ, பாட்டாளி வர்க்கமோ, எந்தப் புரட்சியையும் சகித்துக் கொள்ளாததால் ‘புதிய’ என்பது தேவையென மாவோ கூறினார். சீனாவின் தேசிய முதலாளிகள் ஏகாதிபத்திய விரோதிகளாக இருந்தாலும், மிகவும் பலவீனமாகவும், ஊசலாட்டக்காரர்களாகவும், மக்கள் எழுச்சிமீது பயம் கொண்டவர்களாகவும் இருந்ததை வரலாறு காட்டுகிறது. அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் வலுவுடைய விவசாயிகளுக்கு ஆயுதமளிப்பதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அது மக்களைத் திரட்டக்கூட பயந்தது.

எனவே, உள்ளீடாக புரட்சிகரத் தலைமை தவறுதலாக தானாகவே கம்யூனிஸ்ட் கட்சியிடம் எழுந்தது. சர்வதேச அளவில் அப்போது சோசலிசத்தைக் கட்ட முயன்ற சோவியத் யூனியன் மற்றும் உலகத் தொழிலாளர் இயக்கத்தின் இடதுசாரிப் பிரிவு ஆகியவற்றின் ஆதரவை மட்டுமே பெற்றது. இந்த இணைப்புடன், சீனாவில் ஏகாதிபத்தியத் தலையீட்டைத் தகர்த்தெறிவதும், உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தைக் தூக்கியெறிவதும் முதலாளித்துவத்துக்கு வழிவகுக்கவே செய்யாது. வெற்றியுடன் பாட்டாளி வர்க்கம்தான் அதிகாரத்துக்கு வருமே தவிர முதலாளித்துவமல்ல. கம்யூனிஸ்ட் தலைமையின் கீழ் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் முற்போக்கு அறிவுஜீவிகளின் கூட்டுடன் சோசலிசத்தைத்தான் கட்டுவார்கள், முதலாளித்துவத்தையல்ல. மேலும் இத்தகைய ஒரு எதிர்காலம்தான் வெற்றிக்குத் தேவையான கோடிக்கணக்கானோரின் தியாகத்தை ஊக்குவிக்கும். ஒரு முதலாளிக்குப் பதில் இன்னொருவரையும், நிலப்பிரபுக்களுக்குப் பதில் முதலாளிகளையும் அமர்த்தும் நோக்கத்துடனான எந்த நீண்ட போராட்டத்திலும் சீன மக்கள் தம்மை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்.

நிகழ்ச்சிகள் நிகழத் துவங்கியதும், ஏறத்தாழ அனைத்து கம்யூனிஸ்டுகளும் இந்தக் கொள்கைக்கு உதட்டளவில் சேவை செய்தாலும், லியூ ஷாவோ -சியையும், டெங் சியாவோ பிங்கையும் சுற்றியிருந்த பெரிய மூத்த தலைவர்கள் பலரும் அதனுடன் உண்மையில் ஒத்துப் போகவில்லை. இந்தக் குழுவினர் நீண்டகால “புதிய ஜனநாயகக்” கலப்புப் பொருளாதாரத்தை ஆதரித்தனர். அப்போது அரசு, கூட்டுறவு, கூட்டு முயற்சிகளுடன் சேர்ந்து தனியார் முதலாளித்துவத்தின் வேகமான வளர்ச்சியை ஊக்கப்படுத்த அனைத்தும் செய்யப்படும். அதே சமயம் விவசாயிகள் தாம் புதிதாகப் பெற்ற தனியார் நிலத்தில் தமது கலப்பைகளுடன் தனி உழவர்களாக அமர்ந்து விடுவார்கள். ஒவ்வொருவருமே அவர்களது இலாபத்துக்கும், நஷ்டத்துக்கும் பொறுப்பாவர்.

படிக்க:
பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்
விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை

“எப்பொழுது ஒவ்வொரு விவசாயியிடமும் ஒரு கழுதை, ஒரு வண்டி, ஒரு கலப்பை இருக்குமோ அப்போதுதான் சோசலிசம் பற்றி பேசும் காலமாக இருக்கும்” என்று லியூ ஷாவோ-சி கூறினார்.

இவ்வாறாக கட்சி இரு கோஷ்டிகளாக, ஒவ்வொன்றும் தனது நிகழ்ச்சி நிரலுடன், உடைந்தது. நிகழ்வுப் போக்கில் எந்தக் கோஷ்டி, எந்த நிகழ்ச்சி நிரல் வெற்றி பெறுமென்பதை நிர்ணயிக்க நீண்ட போர் துவங்கியது. அனைத்து முனைகளிலும் சோசலிச மாற்றங்களை எதிர்கொண்ட முதலாளித்துவ சக்திகள் எதிர்த்தன, இழுத்தடித்தன, கொள்கையைத் திரித்தன, விஷயங்கள் நடப்பதைத் தாமதப்படுத்த முயற்சிகளை திசை திருப்பின. இது வேலை செய்யவில்லை என்றாலும், அவர்கள் கூட்டுமுறைகளையும், மக்கள் இயக்கங்களையும் வெறித்தனமான எல்லைகளுக்கு இட்டுச் சென்றனர். அவற்றை மிகவும் அவமதித்து பலவீனப்படுத்தி அவை உள்ளிருந்தே ஆபத்தை எதிர்நோக்குமாறு செய்தனர். ஒரு தொடர் வடிவமான வலதுசாரித் தடையுடன் மாறி மாறி வந்த இடது தீவிரவாதத் தகர்ப்பும் புதிய உற்பத்தி உறவுகளையோ, எந்தப் புதிய சமூக வடிவமைப்பையோ, அல்லது எந்தப் புதிய கோட்பாட்டையோ உறுதிப்படுத்த – சோசலிசத்தைக் கட்டுபவர்களுக்கு மிகவும் கஷ்டமான நிலையை உண்டாக்கியது. 1949க்குப் பிறகு முப்பதாண்டுகளுக்கு சோசலிசத்தை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், உறுதிப்படுத்தவும் முயன்றவர்கள் பெரும்பாலான சமயங்களில் அதனைத் தடுக்கவும், காட்டிக் கொடுக்கவும், தகர்க்கவும் முயன்ற முதலாளித்துவ மாற்றை முன் வைத்தவர்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

இந்தக் காலம் முழுவதும் சோசலிசத்தைக் கட்டியவர்கள் செய்த பல தவறுகளை எதிர்ப்பாளர்கள் கையிலெடுத்துக் கொண்டு அவர்களை சங்கடப்படுத்தவும் வியப்பிலாழ்த்தவும் செய்தனர். இங்கு வலியுறுத்திக் கூறப்பட வேண்டியது என்னவென்றால், மாவோவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எந்த நேரத்திலும் எளிதாக முயற்சிகள் எடுக்கவும், அவற்றை ஆழப்படுத்தி உறுதிப்படுத்தவும், தவறுகளிலிருந்து கற்கவும், முன்னேறவும் சுதந்திரம் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அடியிலும் அவர்கள் பழக்கவழக்கம், பாரம்பரியம் ஆகியவற்றின் தடையை மட்டுமல்ல, பெரிய, வலுவான கட்சிக் கோஷ்டியின் உறுதியான எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருந்தது. “வர்க்கப் போராட்டத்தை எப்போதும் மறக்காதீர்கள்” என்பது மாவோவின் வெற்றுக் கோஷமல்ல. அடிப்படைக் கொள்கை மீது சமூக வர்க்கங்களின் கடுமையான மோதல் இந்தக் காலகட்டம் முழுவதும் பரவியிருந்தது. இன்று வரை அந்தப் போராட்டம் தொடர்கிறது.

மாவோ உயிரோடு இருந்தவரை சோசலிச சக்திகளும், சோசலிச முயற்சியும்தான் பெரும்பாலான சமயங்களில் மேலோங்கியிருந்தன. மாவோவின் இறப்புக்குப் பிறகு ஊழிக்காலம் ஏற்பட்டது. சக்திகளின் சமன்பாடு எதிர்ப்பாளர்கள் பக்கம் சாய்ந்தது. டெங் ஒரு இராணுவக் கலகத்தை நிகழ்த்தி மாவோவின் வாரிசான ஹுவா குவாஃபெங்கைக் கவிழ்த்தார். பிறகு பெரும் பின்னேற்றத்துக்குத் தலைமை தாங்கினார். (பக்கம் : 161 – 165)

நூல் : சீனா: ஒரு முடிவுறாத போர்
ஆசிரியர் : வில்லியம் ஹின்டன்

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்
5/1எ. இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம், சென்னை – 600 089.
கைபேசி: 9841775112

பக்கங்கள்: 212
விலை: ரூ. 150.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க