பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் !
(கட்சி விதிகளைப் பற்றிய முதல் பத்திக்கு உரியவை)

‘பிரிக்க முடியாத ஒரே ரசியா’ என்று மக்கள் துணிச்சலாகப் பறைசாற்றிய காலம் போய்விட்டது. நீண்டகாலத்துக்கு முன்பே ரசியாவானது பாட்டாளிகளும் முதலாளிகளும் என்று இரு எதிரெதிரான வர்க்கங்களாகப் பிளவுபட்டு விட்டதால் ‘பிரிக்கமுடியாத ஒரே ரசியா’ என்று ஒன்றுமில்லை என்பது ஒரு குழந்தைக்குக்கூட தெரியும். தற்போது இந்த இரு வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டத்தை அச்சாகக் கொண்டே நமது சமகால வாழ்வு சுழல்கிறது என்பது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமும் இல்லை.

இருந்தபோதிலும், நம்மால் சமீப காலம் வரை இவை அனைத்தையும் காண்பது கடினமானதாக இருந்தது. தனிப்பட்ட குழுக்கள் மட்டும், நாட்டின் பல பாகங்களிலும் உள்ள தனிப்பட்ட நகரங்களில் போராடியதால், நாம் இதுவரை போராட்ட அரங்கில் தனிப்பட்ட குழுக்களை மட்டும் சந்தித்தோம். எனவேதான் நம்மால் சமீப காலம் வரை இக்காரணத்தினால் இதைக் காண்பது கடினமாக உள்ளது. மேலும் வர்க்கங்களாகப் பாட்டாளிகளும் முதலாளிகளும் உள்ளதை அவ்வளவு எளிதாக உற்றுப்பார்த்து அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் தற்போதோ நகரங்களும் கிராமங்களும், பாட்டாளிகளின் பல்வேறு குழுக்களும் கைகோர்த்து உள்ளார்கள், கூட்டுப் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வேலை நிறுத்தங்களும் வெடித்து வெளிப்பட்டுள்ளதோடு – நமக்கு முன்பாக இரு ரசியாக்களின், – முதலாளித்துவ ரசியாவுக்கும் பாட்டாளிகளின் ரசியாவுக்கும் இடையிலான போராட்டத்தின் சிறப்பான காட்சி வெளிப்பட்டுள்ளது. போராட்ட அரங்கில் இரு பெரிய இராணுவங்களும் – முதலாளிகளின் இராணுவமும், பாட்டாளிகளின் இராணுவங்களும் – நுழைந்து இருக்கின்றன, நமது சமூக வாழ்வு முழுவதையும் இந்த இரு இராணுவங்களுக்கும் இடையிலான போராட்டம் தழுவியுள்ளது.

தலைவர்களின்றி ஒரு இராணுவம் செயல்பட முடியாது என்ற காரணத்தாலும், ஒவ்வொரு இராணுவத்துக்கும் ஒரு முன்னணிப்படை அதன் முன்பு அணிவகுத்துச் சென்று அதன் பாதையை ஒளியூட்ட வேண்டும் என்ற காரணத்தாலும், இந்த இரு இராணுவங்களுக்கும் ஏற்புடைய தலைவர்களின் குழுக்கள், அதாவது வழக்கமாக அழைக்கப்படும் வகையில் ஏற்புடைய கட்சிகள் தோன்ற வேண்டும் என்பதில் ஐயத்துக்கிடமில்லை.

படிக்க:
தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

இவ்வாறு படத்தில் பின்வருமாறு காட்சி வெளிப்படுகிறது; ஒரு புறத்தில் முதலாளிகளின் இராணுவம் தாராளவாதக் கட்சி தலைமையில் உள்ளது; மறுபுறத்தில் சமூக-ஜனநாயகக் கட்சிய தலைமை தாங்கப்படும் பாட்டாளிகளின் இராணுவம் உள்ளது. ஒவ்வொரு இராணுவமும் தனது வர்க்கப் போராட்டத்தில் சொந்தக் கட்சியால் வழிநடத்தப்படுகிறது. (1)

இவை அனைத்தையும் நாம் பாட்டாளி வர்க்கத்தையும். பாட்டாளி வர்க்கக் கட்சியையும் ஒப்பிடும் தேவைக்காக குறிப்பிடுகிறோம். இவ்வாறு கட்சியின் பொதுவான தனிச்சிறப்புகளை விரிவாகத் தெளிவுபடுத்துகிறோம்.

மேலே சொன்னதில் இருந்து பாட்டாளி வர்க்கக் கட்சியானது தலைவர்களின் போராட்டக்குழுவாக இருப்பது போதிய அளவிற்கு தெளிவாயிருக்கும். தலைவர்களின் போராட்டக்குழுவாக விளங்கும் பாட்டாளி வர்க்கக் கட்சியானது முதலாவதாக, முக்கியத்துவம் வாய்ந்த வகையில் பாட்டாளி வர்க்கத்தினரைவிட உறுப்பினர் எண்ணிக்கையில் மிகவும் குறைவானது, இரண்டாவதாக, பாட்டாளி வர்க்கத்தைவிட அனுபவத்திலும், புரிதலிலும் மேம்பட்டு இருக்க வேண்டும், மூன்றாவதாக, அது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக இருக்க வேண்டும்.

முதலாளித்துவ அமைப்புமுறை நிலவும் வரை, தவிர்க்க முடியாதவாறு மக்களிடம் வறுமையும், பின்தங்கிய நிலையும் நிலைபெற்று, பாட்டாளிவர்க்கம் முழுதும் தேவைப்படும் அளவிற்கு வர்க்க உணர்வு பெற முடியாது என்பது எமது கருத்தாகும். எனவே இதன் விளைவாக வர்க்க உணர்வு பெற்ற தலைவர்களின் குழு பாட்டாளி வர்க்கப் படைக்கு சோசலிச உணர்ச்சிப் பெறுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தெட்டத்தெளிவாக விளங்கும் என்பதால் இதற்கு சான்று தேவையில்லை என்பது எமது கருத்தாகும். போராடும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு தலைமையளிக்க புறப்பட்டுள்ள ஒரு கட்சியானது தனி நபர்களின் கதம்பக்கூட்டாக இல்லாமல், மத்தியத்துவப்பட்ட அமைப்பாக கட்டுக்கோப்பாக இருப்பதன் வாயிலாக அதன் செயல்பாடுகள் ஒரு தனித் திட்டத்திற்கேற்ப இருக்க முடியும் என்பது தெளிவாகும். இவையே நமது கட்சியின் பொதுவான தோற்றம் குறித்த விளக்கமாகும்.

இவற்றை மனத்தில் பதித்துக் கொண்டு நாம் முக்கியமான பிரச்சனைக்கு செல்ல வேண்டும்: நாம் ஒரு கட்சி உறுப்பினர் என்று யாரை அழைக்க முடியும்? இப்பிரச்சனையைத் துல்லியமாகக் கையாளும் வகையில் கட்சி விதிகளின் முதல் பத்தி உள்ளதே, அதுதான் தற்போதைய கட்டுரையின் பொருளாகும். எனவே, இதில் உள்ள கருத்து வேறுபாட்டினைப் பற்றி ஆராய்வோம்.

இரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர் என்று நாம் பின்பு யாரை அழைக்க முடியும் – அதாவது கட்சி உறுப்பினரின் கடமைகள் என்ன?

நமது கட்சி ஒரு சமூக – ஜனநாயகக் கட்சியாகும். அவ்வாறெனில் இதற்கு என்று ஒரு சொந்தத் திட்டம் (இயக்கத்தின் உடனடியான மற்றும் இறுதியான இலக்குகள்) அதன் சொந்த செயலுத்திகள் (போராட்ட முறைகள்) மற்றும் அதன் சொந்த அமைப்புக் கொள்கை (அமைப்பு வடிவம்) ஆகியவை இருக்கும் என்பதே இதன் பொருளாகும். திட்டத்தில் ஒற்றுமை, செயலுத்தி ரீதியான பார்வையிலும் அமைப்பு ரீதியான பார்வையிலும் உள்ள ஒற்றுமை ஆகியனவற்றின் அடிப்படையில்தான் நமது கட்சி கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. நமது கட்சி உறுப்பினர்களை ஒரே மத்தியத்துவப்பட்டக் கட்சியில் ஒன்றுபடுத்துவதற்குத் திட்டம், செயலுத்தி மற்றும் அமைப்பு குறித்த பார்வை ஆகியவற்றால் மட்டுமே முடியும்.

படிக்க:
தொழில்துறைப் புரட்சி | பொருளாதாரம் கற்போம் – 62
லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும் !

ஒருவேளை இவற்றில் ஒற்றுமை குலைந்தால், கட்சி சிதறும். எனவே கட்சியின் திட்டம், செயலுத்தி மற்றும் அமைப்பு விதிகளை ஏற்கும் ஒருவரை மட்டுமே கட்சி உறுப்பினர் என்று சொல்லமுடியும். இவற்றைப் போதிய அளவிற்கு கற்று முழுமையாக ஏற்பவரே கட்சியின் அணிகளில் இருக்க முடியும், இவ்வாறு இதன் மூலம் பாட்டாளி வர்க்கப் படைத் தலைவர்களின் அணிவரிசையிலும் இருக்க முடியும்.

ஆனால் ஒரு கட்சி உறுப்பினர் வெறுமனே கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்பு விதிகளை ஏற்பது மட்டும் போதுமானதா? இவ்வாறான ஒரு நபரை பாட்டாளி வர்க்கப் படையின் ஒரு உண்மையான தலைவர் என்று கருத முடியுமா? நிச்சயமாக இல்லை ! முதலில் கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்பு உடனடியாக ஏற்றுக் கொள்ளும் காற்றடைத்தப் பைகளைப் போன்ற ஏராளமான நபர்கள் இவ்வுலகில் உள்ளனர் என்பதையும் ஆனால் அவர்களால் காற்றடைத்தப் பைகளாக இருப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் ஒவ்வொருவரும் அறிந்துள்ளனர். ஒரு கட்சி உறுப்பினர் (அதாவது பாட்டாளி வர்க்கப் படைத் தலைவர்) என்று ஒரு காற்றடைத்தப் பையை அழைப்பதே கட்சியின் புனிதத் தன்மையை கெடுக்கும் சொல்லாகும்! மேலும், நமது கட்சி ஒன்றும் தத்துவப் பள்ளியோ அல்லது மதப்பிரிவோ அல்ல. நமது கட்சி போரிடும் கட்சியாக இருக்கிறதல்லவா? எனவே அது அவ்வாறு உள்ளபோது சொல்லளவில் கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்ப விதிகளை ஏற்பதில் இருந்து அது நிறைவுறாது என்பது தெளிவாகிறதில்லையா? மேலும் அது தனது உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்ட கண்ணோட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஐயத்துக்கு இடமின்றி கோரிக்கை வைக்கும் இல்லையா? எனவே, யாரெல்லாம் நமது கட்சியின் உறுப்பினராக வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் நமது கட்சியின் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்பு விதிகளை வெறுமனே ஏற்பதை விடுத்து அவற்றை உருப்படியான விளைவு ஏற்படுத்தும் வகையில் அமல்படுத்தத் தொடங்க வேண்டும்.

ஒரு கட்சி உறுப்பினர் கட்சியின் கொள்கைகளை அமல்படுத்துவது என்பதன் பொருள் என்ன? கட்சியின் கொள்கைகளை அவர் எப்போது அமல்படுத்த முடியும்? அவர் ஒட்டுமொத்த கட்சியுடன் அணிவகுத்துச் செல்லும்போது, பாட்டாளி வர்க்கப் படையின் தலைமையில் அவர் போரிடும் போது மட்டுமே அமல்படுத்த முடியும். தனிமையில் உள்ள சிதறுண்ட தனிநபர்களைக்கொண்டு இப்போராட்டத்தை நடத்த முடியுமா? நிச்சயமாக முடியாது! மாறாக, மக்கள் முதலில் ஒன்றுபட்ட அமைப்பான பின்பே களத்திற்குச் செல்கிறார்கள். ஒருவேளை இவ்வாறு நடைபெறாவிடில் அனைத்துப் போராட்டமும் பயனற்றதாகும். ஒரு கட்டுக்கோப்பான அமைப்பில் கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபடும்போது மட்டுமே அவர்களால் போரிடமுடியும், கட்சியின் கொள்கைகளை அமல்படுத்த முடியும் என்பது தெளிவாகிறது. கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபடும் அமைப்பானது எந்தளவிற்குக் கட்டுக்கோப்பாக உள்ளதோ, அந்தளவிற்கு அவர்களால் சிறப்பாகப் போரிடமுடியும், மற்றும் இதன் விளைவாக அவர்களால் கட்சியின் திட்டம், செயலுத்திகள் அமைப்புக் கொள்கைகளை மேலும் அதிகமாக அமல்படுத்த முடியும். தனிநபர்களின் கதம்பத் திரள் அல்ல அது ஒரு தலைவர்களின் அமைப்பு என்று நமது கட்சியை எந்தக் காரணமுமின்றி சாதாரணமாக சொல்லப் படவில்லை. மேலும், கட்சியானது தலைவர்களின் அமைப்பாக இருப்பதால் இவ்வமைப்பில் செயல்படுபவர்கள்தான் இக்கட்சியின், இவ்வமைப்பின் உறுப்பினர்களாகக் கருதப்பட முடியும் என்பதோடு இவர்கள் விருப்பங்களைக் கட்சியின் விருப்பங்களோடு இணைப்பதைத் தமது கடமையாகக் கருதவேண்டும் என்பது ஐயத்துக்கிடமில்லாததாகும். மேலும், கட்சி உறுப்பினர்களாகக் கருதப்படுபவர் கட்சியுடன் இசைவாகச் செயல்படவேண்டும் என்பதும் ஐயத்துக்கிடமற்ற உண்மையாகும்.

எனவே, ஒருவர் கட்சி உறுப்பினராக வரவேண்டுமாயின் கட்சித் திட்டம், செயலுத்திகள் மற்றும் அமைப்புக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும்; கட்சியின் கொள்கைகளை அமல்படுத்த வேண்டுமாயின் ஒருவர் அதற்காகப் போராட வேண்டும். மேலும் இக்கொள்கைகளுக்காகப் போராடுவதற்கு ஒருவர் கட்சி அமைப்பில் கட்சியுடன் ஒத்திசைந்து வேலை செய்ய வேண்டும். ஒருவர் கட்சி உறுப்பினராக ஆவதற்கு கட்சி அமைப்புகள் ஏதாவது ஒன்றில் இணைந்து செயல்படவேண்டும் என்பது தெளிவாகிறது.(2) கட்சியின் அமைப்புகள் ஒன்றில் நாம் இணையும் போதுதான், நாம் கட்சியின் நலன்களுடன் நமது சொந்த நலன்களை இணைத்தவர்களாவோம். இதன் விளைவாக நாம் பாட்டாளி வர்க்கப் படையின் உண்மையான தலைவர்களாகவும் ஆகிறோம்.

( தொடரும் )

அடிக்குறிப்புகள் :

(1) ரசியாவில் உள்ள இதரக் கட்சிகளை நாம் இங்கு குறிப்பிடவில்லை . ஏனெனில் நாம் விவாதத்தில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் கேள்விகளில் அவற்றைத் தொடர்புப்படுத்த தேவை எழவில்லை.

(2) எப்படி ஒவ்வொரு சிக்கலான உயிரியும் கணக்கற்ற எளிய உயிரிகளால் உருவாகியிருக்கிறதோ, அதைப் போன்றுதான் சிக்கலானதும், பொதுவானதுமாக உள்ள அமைப்பான நமது கட்சியும் எண்ணற்ற மாவட்ட மற்றும் உள்ளூர் அமைப்புகளால் கட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அவை யாவும் கட்சிப் போராட்டம் அல்லது மையக்குழுவின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. நீங்கள் பார்த்தவாறு குழுக்களை மட்டும் கட்சி அமைப்புகள் என்று சொல்வதில்லை. இவ்வமைப்புகளின் செயல்பாடுகளுக்கு ஒரு தனித் திட்டத்திற்கேற்ப வழிகாட்டி இயக்குவதற்கு ஒரு மையக்குழு உள்ளது. இதன் மூலமாக இந்த உள்ளூர் கட்சி அமைப்புகள் யாவும் ஒரே, பெரிய மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உருவாகிறன்றன.

***

நூல் : ஜே. வி. ஸ்டாலின் படைப்புகள், தொகுதி ஒன்று
வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்.
விலை : ரூ. 450/-
கிடைக்குமிடம் :
5/1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089.
தொடர்பு : 98417 75112.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க