கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 05

முதல் பாகம்

சீர்திருத்தவாதத் தலைவர்களை பருண்மையாக அம்பலப்படுத்துவது

26. சமூக ஜனநாயகவாத மற்றும் குட்டி முதலாளித்துவ தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், இதுபோலவே பல்வேறு வகையான தொழிலாளர் கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு வெறுமனே எடுத்துக் கூறுவதன் மூலம் அதிகமாக சாதித்துவிட முடியும் என்று நம்ப முடியாது.

இவர்களுக்கு எதிரான போராட்டம் மிகமிக ஆற்றல்மிக்க வகையில் நடத்தப்பட வேண்டும். அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களை இல்லாமல் செய்வது, முதலாளித்துவத்தின் தாளத்துக்கு ஆடும், துரோகத்தனமான சோசலிஸ்டு தலைவர்களின் உண்மைச் சொரூபத்தை தொழிலாளர்களுக்குக் காட்டுவது இதற்கு மிகச் சிறந்த வழியாகும். தலைவர்கள் என்று கூறப்படும் இவர்களின் முகமூடியைக் கிழித்தெறிவதற்கும் அதற்கடுத்த மிகவும் ஆற்றலுள்ள பாணியில் அவர்களைத் தாக்கி வீழ்த்துவதற்கும் பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும்.

முதலாளித்துவத்தின் தாளத்துக்கு ஆடும், துரோகத்தனமான சோசலிஸ்டு தலைவர்களின் உண்மைச் சொரூபத்தை தொழிலாளர்களுக்குக் காட்டுவது இதற்கு மிகச் சிறந்த வழியாகும். தலைவர்கள் என்று கூறப்படும் இவர்களின் முகமூடியைக் கிழித்தெறிவதற்கும் அதற்கடுத்த மிகவும் ஆற்றலுள்ள பாணியில் அவர்களைத் தாக்கி வீழ்த்துவதற்கும் பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும்.

ஆம்ஸ்டர்டாம் தலைவர்களை* (சீர்திருத்தவாத தொழிற்சங்கத் தலைவர்களை) மஞ்சள் தலைவர்கள் என்று கூறுவது மட்டும் போதாது. தொடர்ச்சியான மற்றும் நடைமுறை ரீதியிலான விளக்கங்களுடன் அவர்களது துரோகத்தன்மை நிரூபிக்கப்பட வேண்டும். தொழிற்சங்கங்களில் அவர்களது நடவடிக்கைகள், உலக நாடுகள் லீகின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பில் அவர்களது நடவடிக்கைகள், முதலாளித்துவ அமைச்சரவைகள் மற்றும் நிர்வாகத்தில் அவர்களது நடவடிக்கைகள், மாநாடுகள் மற்றும் நாடாளுமன்றங்களில் அவர்கள் ஆற்றும் துரோகத்தனமான உரைகள், அவர்களது எழுத்துபூர்வமான அறிவிப்புகள் மற்றும் பத்திரிகைகளில் உள்ள ஆலோசனைகள் எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து போராட்டங்களிலும், ஏன், மிகக் குறைவான கூலி உயர்வுக்கான போராட்டங்களிலும் வெளிப்படும் அவர்களது ஊசலாட்டம் மற்றும் தயக்கம் – இவை அனைத்தும் எளிய உரைகளிலும் தீர்மானங்களிலும் ஆம்ஸ்டர்டாம் தலைவர்களின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்துவதற்கு இடையறாத வாய்ப்புகளை அளித்துக் கொண்டிருக்கின்றன.

பிராக்சன்கள் தங்களது நடைமுறை முன்னணி இயக்கத்தைத் திட்டமிட்ட பாணியில் நடத்த வேண்டும். கீழ்மட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் காட்டும் அற்ப சமாதானங்களை பொதுவுடைமையாளர்கள் ஏற்கக் கூடாது. அவர்கள் என்னதான் நல்லெண்ணம் கொண்டிருந்தாலும் தங்களது பலவீனம் காரணமாக சட்டங்கள், தொழிற்சங்க முடிவுகள், மேல்மட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் கட்டளைகள் ஆகியவற்றின் பின்னால் அடிக்கடி நின்றுகொண்டு, தொழிலாளர்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுக்கிறார்கள். மாறாக, தொழிலாளர்களது வழியில் அதிகாரத்துவ எந்திரத்தால் வைக்கப்படுகிற உண்மையான அல்லது கற்பனையான தடைகளை நீக்கும் விசயத்தில் தங்களுக்கு திருப்தி ஏற்படும்வரை பொதுவுடைமைவாதிகள் கீழ்மட்டத் தொழிற்சங்க நிர்வாகிகளை வற்புறுத்த வேண்டும்.

பிராக்சன்கள் எவ்வாறு வேலை செய்ய வேண்டும்?

27. தொழிற்சங்க நிறுவனங்களின் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பொதுவுடைமையாளர்கள் பங்கேற்க எச்சரிக்கையான தயாரிப்புகளை பிராக்சன்கள் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, அவைகளை தாங்கள் வைக்கப்போகும் முன்மொழிதல்களை அலசி ஆராய வேண்டும். பேச்சாளர்களையும் ஆலோசகர்களையும் தெரிவு செய்ய வேண்டும். திறமையான அனுபவமிக்க செயல்திறனுள்ள தோழர்களை (தொழிற்சங்க) வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

தமது பிராக்சன்கள் வாயிலாக பொதுவுடைமை நிறுவனங்கள் அனைத்துத் தொழிலாளர்களின் கூட்டங்கள், தேர்தல் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் விழாக்கள் இன்னும் இதுபோன்று, பொதுவுடைமைவாத விரோத நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் எச்சரிக்கையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். பொதுவுடைமையாளர்கள் தமது சொந்த தொழிலாளர் கூட்டங்களைக் கூட்டும்போதெல்லாம், கூட்டத்தினரிடையே போதுமான அளவு பொதுவுடைமையாளர்களின் குழுக்கள் விரவி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பிரச்சாரத்தில் மனநிறைவு தரும்படியான விளைவுகளை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கான தயாரிப்புகள் அனைத்தையும் அவர்கள் செய்ய வேண்டும்.

தொழிலாளர் நிறுவனங்கள் அனைத்திலும் வேலை செய்வது

28. நிறுவனமயமாக்கப்படாத மற்றும் பின்தங்கிய தொழிலாளர்களை நிரந்தரமாகக் கட்சியின் அணிவரிசைகளில் ஈர்ப்பதற்கும் பொதுவுடையாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நமது பிராக்சன்களின் உதவியோடு தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் சேர்க்கவும் நமது கட்சிப் பத்திரிகைகளைப் படிக்கவும் தூண்ட வேண்டும். பிற நிறுவனங்களை – கல்விக் கழகங்கள், ஆய்வு வட்டங்கள், விளையாட்டு மன்றங்கள், நாடக மன்றங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், நுகர்வோர் சங்கங்கள், யுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் அமைப்புகள் இன்னும் இதுபோன்றவை – நமக்கும் தொழிலாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் நிறுவனங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுவுடைமைக் கட்சி சட்டவிரோதமாக வேலை செய்யும் இடங்களில் கட்சி உறுப்பினர்களின் முன்முயற்சியால் தலைமைக் கட்சி உறுப்புகளின் ஒத்துழைப்போடும் அவற்றின் கட்டுப்பாட்டிலும் இத்தகைய தொழிலாளர் கழகங்களை (ஆதரவாளர்கள் தலைமையிலான சங்கங்களை) அமைக்கலாம்.

கல்வி வகுப்புகள், வாசகர் வட்டங்கள், சுற்றுலாக்கள், விழாக்கள், ஞாயிறு உலாக்கள், இன்னும் இதுபோன்றவை மூலமாகவும், பிரசுரங்கள் விநியோகிப்பது, கட்சிப் பத்திரிகையின் எண்ணிக்கையை அதிகரிப்பது, இன்னும் இதுபோன்றவை மூலமாகவும் பின்தங்கியவர்களை ஈர்க்க முடியும். பொது இயக்கத்தில் பங்கேற்பதன் வாயிலாக தொழிலாளர்கள் தம்மைத்தாமே தமது சிறு முதலாளித்துவ சார்பிலிருந்து விடுவித்துக் கொள்வர்.

அரசியலில் அக்கறை காட்டாத பாட்டாளி வர்க்கத்தினரின் நலன்களைத் தட்டி எழுப்பவும் பின்னர் அவர்களைக் கட்சியில் ஈர்க்கவும் பொதுவுடைமைவாத இளைஞர் மற்றும் மகளிர் நிறுவனங்களும் உதவுவதாக இருக்கலாம். கல்வி வகுப்புகள், வாசகர் வட்டங்கள், சுற்றுலாக்கள், விழாக்கள், ஞாயிறு உலாக்கள், இன்னும் இதுபோன்றவை மூலமாகவும், பிரசுரங்கள் விநியோகிப்பது, கட்சிப் பத்திரிகையின் எண்ணிக்கையை அதிகரிப்பது, இன்னும் இதுபோன்றவை மூலமாகவும் பின்தங்கியவர்களை ஈர்க்க முடியும். பொது இயக்கத்தில் பங்கேற்பதன் வாயிலாக தொழிலாளர்கள் தம்மைத்தாமே தமது சிறு முதலாளித்துவ சார்பிலிருந்து விடுவித்துக் கொள்வர்.

குட்டி முதலாளித்துவப் பிரிவினரை வென்றெடுப்பது

29. தொழிலாளர்களில் அரைப் பாட்டாளி வர்க்கப் பிரிவினரை புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின்பாலான ஆதரவாளர்களாக வென்றெடுக்க, அவர்களுக்கு நிலவுடைமையாளர்களுடனும் முதலாளிகளுடனும் முதலாளித்துவ அரசுடனும் உள்ள விசேடமான முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த இடைப்பட்ட குழுக்கள் பாட்டாளி வர்க்கத்தின் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையைப் போக்கி வென்றெடுக்க இது அவசியம். இதற்கு அவர்களது தேவைகளின்பால் அறிவுபூர்வமான ஆதரவளிப்பது, அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படும்போது உதவியும் ஆலோசனையும் வழங்குவது, அவர்களது கல்வியை முன்னேற்ற வாய்ப்புகள் அளிப்பது, இன்னும் இது போன்றவை இதற்கு அவசியமாகலாம். இவையனைத்தும் பொதுவுடைமை இயக்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும். நமக்கு எதிரான இயக்கங்களின் நச்சு செல்வாக்கை எதிர்க்கவும் பொதுவுடைமையாளர்கள் முயல வேண்டும். அவை சில மாவட்டங்களில் பலமான செல்வாக்கு செலுத்துபவையாக அல்லது குட்டி முதலாளித்துவ உழைக்கும் விவசாயிகளிடையே செல்வாக்கு உடையவையாக இருக்கலாம். இவை குடிசைத் தொழில்களில் வேலை செய்வோர் மற்றும் பிற அரைப் பாட்டாளி வர்க்கங்களிடையே செல்வாக்கு செலுத்தலாம். சுரண்டப்படுபவர் தமது சொந்த கசப்பான படிப்பினைகளிலிருந்து இந்த நிறுவனங்கள் கொடூரமான முதலாளித்துவக் கட்டமைவின் பிரதிநிதிகள் என்பதையும் அதன் மொத்த உருவங்கள் என்பதையும் அறியும்படியாக அவற்றின் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும். பொதுவுடைமைவாத கிளர்ச்சியின் போக்கில் ஜனநாயகம் மற்றும் நீதித்துறை பற்றிய குட்டி முதலாளித்துவ கற்பனைகளுடன் அரசு அதிகார வர்க்கம் மோதுகின்ற அன்றாட நிகழ்ச்சிகள் அனைத்தையும் மதிநுட்பமான மற்றும் ஆற்றல் மிக்க முறையில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாட்டுப்புற கட்சி நிறுவனமும் தமது மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும், பண்ணை குடியிருப்புகளிலும் – தொலைதூரக் குடியிருப்புகளிலும் பொதுவுடைமைப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதற்காக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் வேலைகளை தனது உறுப்பினர்களுக்குள் கவனமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.

இராணுவத்தினரிடையே வேலை செய்வது

30. தரைப்படை மற்றும் கப்பல் படையினரின் மத்தியிலான பிரச்சார முறைகள் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சிறப்பான நிலைமைகளுக்கு பொருந்தக் கூடியதாக இருத்தல் வேண்டும். சாந்தப்படுத்தும் இயல்புடைய இராணுவ எதிர்ப்புக் கிளர்ச்சி மிகமிக கேடு விளைவிக்கக் கூடியதும், பாட்டாளி வர்க்கத்தை நிராயுதபாணியாக்கும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் முயற்சிகளுக்கு உதவக் கூடியதுமாகும். முதலாளித்துவ அரசு எந்திரத்தின் எவ்வகையான இராணுவ நிறுவனங்களையும் பொதுவாக முதலாளித்துவ வர்க்கத்தையும் பாட்டாளி வர்க்கம் கோட்பாடு அடிப்படையில் நிராகரிக்கிறது. தனது சக்தி அனைத்தையும் கொண்டு எதிர்த்துப் போரிடுகிறது. இருப்பினும், எதிர்காலத்தில் வரக்கூடிய புரட்சிப் போர்களுக்கு தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் நோக்கத்திற்காக இந்த நிறுவனங்கள் (இராணுவம், துப்பாக்கி சுட பயிற்சியளிக்கும் கிளப்புகள், குடிமக்கள் பாதுகாப்பு நிறுவனம், இன்னபிற) அனைத்தையும் பாட்டாளி வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு எதிராக தீவிரமான கிளர்ச்சிகள் நடத்தக்கூடாது. தொழிலாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடிய ஒவ்வொரு சாத்தியப்பாட்டையும் நாம் மிக ஆர்வமுடன் நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

படிக்க:
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை: அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு!
புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும்!

இராணுவத்தில் வெளிப்படுகின்ற வர்க்கப் பகைமைகளை – பொருளாதார ரீதியில் மிகவும் சாதகமான நிலையில் அதிகாரிகள் இருப்பதற்கு எதிரிடையாக சாதாரணப் படை வீரர்கள் மோசமாக நடத்தப்படுவதையும், சமூக வாழ்வில் உத்திரவாதம் ஏதுமின்றி இருப்பதையும் – படைவீரர்களுக்கு மிகத் தெளிவாகக் காட்டியாக வேண்டும். இத்துடன் சுரண்டப்படும் வர்க்கங்களின் தலைவிதியோடு அவர்களது எதிர்காலம் பின்னிப் பிணைந்திருக்கிறது என்ற உண்மையை கீழ்மட்டத்தினர் உணரும்படியாக கிளர்ச்சிகள் இருக்க வேண்டும். புரட்சிக் கொந்தளிப்பு ஆரம்ப நிலைக்கு முந்திய காலத்தில் எல்லா படைத்தலைவர்களும் படை வீரர்களாலும், மாலுமிகளாலும் ஜனநாயகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், படை வீரர்கள் கவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரி கிளர்ச்சி செய்வதானது, முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளங்களைக் குழிபறிப்பதற்கு மிகவும் சாதகமானதாக விளங்கும்.

முதலாளித்துவ வர்க்கத்தினர் வர்க்க யுத்தத்தில் பயன்படுத்தும் பொறுக்கி எடுத்த படைகளுக்கு எதிராக, குறிப்பாக அதன் தொண்டர் படைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்கையில், மிக நெருக்கமாகக் கண்காணிப்பதும் அதிகபட்சம் கவனம் செலுத்துவதும் எப்போதும் அவசியம்.

மேலும், இந்தப் படைகளின் சமூக சேர்க்கையும் ஊழல்மிக்க நடத்தையும் கிளர்ச்சி நடத்துவதற்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் சீர்குலைவுகள் ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். எங்கெல்லாம் இராணுவம் தனது தனிச்சிறப்பான முதலாளித்துவ வர்க்கத் தன்மையைக் கொண்டிருக்கிறதோ, எடுத்துக்காட்டாக அதன் அதிகாரிகள் பட்டாளத்தில், அங்கெல்லாம் அது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு அதன் விளைவாய் தனக்குத்தானே சீர்குலைந்து போகுமளவிற்கு அனைத்து மக்களின் முன் அதன் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும். மக்கள் அதனை மிகவும் வெறுக்கும்படியும் எதிர்க்கும்படியும் செய்ய வேண்டும்.

(தொடரும்)


குறிப்பு:

* ஆம்ஸ்டர்டாம் மஞ்சள் தொழிற்சங்கத் தலைவர்கள் :
1919 ஜூலையில் ஆம்ஸ்டர்டாமில் இது ஏற்படுத்தப்பட்டது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களையும் அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனத்தையும் இது உள்ளடக்கி இருந்தது. ஆம்ஸ்டர்டாம் அகிலம் ஒரு சீர்திருத்தவாதக் கொள்கையை மேற்கொண்டது. முதலாளித்துவத்துடன் வெளிப்படையாகவே கூடிக்குலாவியது. தொழிலாளர் இயக்கத்தில் ஐக்கிய முன்னணியை எதிர்த்தது. சோவியத் யூனியனுக்கு எதிராகப் பகைமையான கண்ணோட்டத்தைக் கடைபிடித்தது. இவைகளின் விளைவாக, தொழிலாளர் இயக்கத்தில் அதன் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்தது. இரண்டாவது ஏகாதிபத்திய உலகப் போர் சமயத்தில் இந்த அகிலம் ஏறத்தாழ செயலற்றுப் போனது. 1945-ல் உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டிணைப்பு உருவாகியதைத் தொடர்ந்து இது கலைந்து போனது. இந்த அகிலத்தின் தலைவர்கள்தான் ஆம்ஸ்டர்டாம் மஞ்சள் தொழிற்சங்கத் தலைவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க