கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 04

முதல் பாகம்

4. பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி பற்றி

நம்முடைய பிரச்சாரம் புரட்சிகரமானது

20. புரட்சிகரமான பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியை நடத்துவது என்பது வெளிப்படையான புரட்சிப் போராட்டம் நடத்தும் நமது கடமையில் தலையாயதாகும். இந்த வேலையும் இதை நடத்துவதற்கான நிறுவனங்களும் இன்னமும், பிரதானமாக, சம்பிரதாயமான முறைகளிலேயே நடத்தப்படுகின்றன. எப்போதாவது நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுவதுடனேயே இருக்கிறது. உரைகள் மற்றும் கட்டுரைகளின் பருண்மையான புரட்சிகர உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தப்படாமல் உள்ளது.

தொழிலாளர்களின் பொது நலன்களிலிருந்தும், விழைவுகளிலிருந்தும் குறிப்பாக அவர்களது ஒன்றுபட்ட போராட்டங்களிலிருந்தும், அவர்கள் மத்தியிலிருந்தே பொதுவுடைமைப் பிரச்சாரமும் கிளர்ச்சியும் வேர்விட்டிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவுடைமைவாதப் பிரச்சாரம் புரட்சிகரத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய அதிமுக்கியமான விசயம். பருண்மையான பிரச்சினைகளின்பாலான பொதுவுடைமைவாதக் கண்ணோட்டமும், அதற்குரிய பொதுவுடைமைவாதப் போராட்ட அறைகூவல்களும் (முழக்கங்களும்) நமது சிறப்பான கவனத்தையும் அக்கறையையும் பெற வேண்டும்.

இந்தச் சரியான போக்கை உத்திரவாதப்படுத்திக் கொள்ள, பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அறிவுறுத்துவதற்குக் கவனம் செலுத்த வேண்டும்.

பிரச்சாரம் மற்றும் முழக்கங்களின் வடிவங்கள்

21. பொதுவுடைமைவாதப் பிரச்சாரங்களின் தலையாய வடிவங்கள் பின்வருமாறு: 1. தனிப்பட்ட வாய்வழிப் பிரச்சாரம் 2. தொழிலாளர்களின் தொழிற்சங்க மற்றும் அரசியல் இயக்கத்தில் பங்கு பெறுவது 3. கட்சிப் பத்திரிகை மற்றும் கட்சி வெளியீடுகளை விநியோகிப்பது – ஆகியவைகளின் வாயிலாக நடத்தும் பிரச்சாரம். சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் இப்பிரச்சார வடிவங்கள் ஏதாவதொன்றில் முறையாகப் பங்கேற்க வேண்டும்.

பொதுவுடைமைவாத நிறுவனங்கள் தமது சொந்த தொழிலாளர் இயக்கத்தின் வீரமிக்க, அறிவுக்கூர்மைமிக்க, பேராற்றல்மிக்க, எப்போதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமை என்ற தோற்றத்தை அளிக்கத்தக்க முறையில் பாட்டாளி வர்க்கத் திரளினரிடையே பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி நடத்த வேண்டும்.

பொதுவுடைமைவாத நிறுவனங்கள் தமது சொந்த தொழிலாளர் இயக்கத்தின் வீரமிக்க, அறிவுக்கூர்மைமிக்க, பேராற்றல்மிக்க, எப்போதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமை என்ற தோற்றத்தை அளிக்கத்தக்க முறையில் பாட்டாளி வர்க்கத் திரளினரிடையே பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி நடத்த வேண்டும்.

தனிப்பட்ட வாய்வழிப் பிரச்சாரம் என்பது விசேடமான தொழிலாளர் குழுக்கள் வீடுவீடாகச் சென்று முறையாகவும் தொடர்ச்சியாகவும் பிரச்சாரம் செய்வது என்ற வடிவத்தை மேற்கொள்ள வேண்டும். கட்சி செல்வாக்குக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டைக்கூட விட்டுவிடாமல் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். பெரு நகரங்களில் சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்கள் விநியோகிப்பது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பிரச்சார இயக்கம் மனநிறைவு அளிக்கக்கூடிய விளைவுகளை வழக்கமாக ஏற்படுத்தும். இத்துடன் தொழில் நிலையங்களில் பிராக்சன்கள் நேரடியான கிளர்ச்சிகளை முறையாக நடத்த வேண்டும். இதைத் தொடர்ந்து கட்சி வெளியீடுகளை தொழில் நிலையங்களில் விநியோகிக்க வேண்டும்.

தேசிய சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் இந்தத் தேசிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கப் பிரிவினரிடையில் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியை நடத்துவதற்குத் தேவையான கவனத்தைச் செலுத்துவது கட்சியின் கடமையாகும். கட்சியின் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி அந்தந்த சிறுபான்மை மொழிகளில்தான் நடத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காக அவசியமான விசேட பத்திரிகைகளை கட்சி உருவாக்க வேண்டும்.

22. பெரும்பான்மை பாட்டாளி வர்க்கத்தினர் இன்னும் புரட்சிகர உணர்வை அடையாத நிலையில் உள்ள முதலாளித்துவ நாடுகளில், இத்தகைய பின்தங்களிய தொழிலாளர்களைப் புரட்சிகர அணிவரிசைக்குக் கொண்டுவரும் வகையிலான புதுப்புது பிரச்சார வடிவங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முறையில் பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி அமைய வேண்டும். முதலாளித்துவ கருதுகோள்கள் மற்றும் மரபுகளுக்கு எதிராக, தொழிலாளர் மனங்களில் உணர்வுபூர்வமற்ற முறையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்ற அரைகுறையான, ஊசலாட்டமான, அரை முதலாளித்துவத் தன்மையுடைய புரட்சிகரப் போக்குகள் மேலோங்குவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. பொதுவுடைமைவாதப் பிரச்சாரமானது, திரும்பத்திரும்ப பிரபலப்படுத்தப்படும் தனக்கே உரித்தான சொற்றொடர்கள், அறைகூவல்களுடன் (முழக்கங்களுடன்) இப்போக்குகளை வெளிக்கொணரச் செய்ய வேண்டும்.

அதேவேளையில், பாட்டாளி வர்க்கத் திரளினரின் வரம்புக்கு உட்பட்ட மற்றும் குழப்பமான கோரிக்கைகள் அல்லது விருப்பங்களுடன் பொதுவுடைமைவாதப் பிரச்சாரம் மனநிறைவு பெற்று ஓய்ந்துவிடக் கூடாது. இந்தக் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் புரட்சிக் கருத்துக்களின் நுண்ணுயிர்களைக் கொண்டிருக்கின்றன. இவை பாட்டாளி வர்க்கத்தை பொதுவுடைமைவாதப் பிரச்சாரத்தின் செல்வாக்கின்கீழ் கொண்டு வருவதற்கான சாதனங்களாகும்.

தொழிலாளர் வர்க்கத்தின் அன்றாடப் போராட்டங்களுக்குத் தலைமையேற்பது

23. பொதுவுடைமைவாத நிறுவனங்கள் தமது சொந்த தொழிலாளர் இயக்கத்தின் வீரமிக்க, அறிவுக்கூர்மைமிக்க, பேராற்றல்மிக்க, எப்போதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமை என்ற தோற்றத்தை அளிக்கத்தக்க முறையில் பாட்டாளி வர்க்கத் திரளினரிடையே பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி நடத்த வேண்டும்.

இதை ஈடேற்ற பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர்களின் ஆரம்ப நிலையிலுள்ள போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்திலும் பங்கேற்க வேண்டும். வேலைநேரம், வேலை நிலைமைகள், கூலி இன்னும் இதுபோன்ற பிரச்சினைகளில் முதலாளிகளுடனான மோதலில் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தினுடைய பருண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றியும் பொதுவுடைமையாளர்கள் பெரும் கவனம் செலுத்த வேண்டும். இப்பிரச்சினைகளின் மீது சரியான புரிதலுக்கு வர தொழிலாளர்களுக்குப் பொதுவுடைமையாளர்கள் உதவ வேண்டும். மிகமிகக் கொடிய அத்துமீறல்களின்பால் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்ப்பதையும் தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை நடைமுறை ரீதியிலும், தெளிவான வடிவிலும் உருவாக்க உதவுவதையும் பொதுவுடைமையாளர்கள் செய்ய வேண்டும். இந்த வழியில் பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர் மத்தியில் ஒற்றுமை உணர்வை விழித்தெழச் செய்ய முடியும். ஒரு ஒன்றுபட்ட வர்க்கம் – இது உலகப் பாட்டாளி வர்க்கப் படைவரிசையின் ஒரு பிரிவே – என்ற ரீதியில் நாட்டில் உள்ள தொழிலாளர்கள் அனைவரிடமும் சமுதாய நலன்கள் பற்றிய உணர்வை ஏற்படுத்த முடியும்.

முட்டாள்தனமான வேலை நிறுத்தங்கள் மற்றும் பரிசீலனையற்ற நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களைத் தூண்டிவிடுகிறோம், வெறியூட்டுகிறோம் என்ற குற்றச்சாட்டு வரும்படியானதாக நமது கிளர்ச்சி வேலைகள் இருக்கக் கூடாது. மக்களுடைய போராட்டங்களில் வீரத்துடனும் துடிப்புடனும் பங்கேற்பவர்கள் பொதுவுடைமையாளர்கள் என்ற பெயரை போராடும் மக்களிடையே ஈட்ட பொதுவுடைமையாளர்கள் திடசித்தத்துடன் முயல வேண்டும்.

இத்தகைய அடிப்படையான கடமைகளை அன்றாடம் நிறைவேற்றுவது பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்பது ஆகியவற்றின் வாயிலாக பொதுவுடைமைக் கட்சியானது உண்மையான பொதுவுடைமைக் கட்சியாக உருவாக முடியும். இத்தகைய முறைகளை மேற்கொள்வதன் மூலமாகவே பொதுவுடைமைக் கட்சி பிரச்சாரத்தை பாமரத்தனமான பிரச்சாரகர்களிடமிருந்து, தூய சோசலிஸ்டு பிரச்சாரம் என்று சொல்லப்படுவதிலிருந்து – புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, சீர்திருத்தங்கள் பற்றியும், நாடாளுமன்ற சாத்தியப்பாடுகள் அல்லது சாத்தியப்பாடின்மைகள் பற்றிப் பேசுவது ஆகியவற்றைக் கொண்டது இது – வேறுபடுத்திப் பார்க்க முடியும். சுரண்டுபவர்களுடனான சுரண்டப்படுவோரின் அன்றாடப் போராட்டங்கள் மற்றும் பல வடிவங்களிலான மோதல்களில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சுயதியாக அர்ப்பணிப்புடனும், உணர்வுபூர்வமாகவும் பங்கேற்பது என்பது பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு மட்டுமின்றி, மேலும் கூடுதலான அளவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமானதாகும். முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கு எதிரான சிறு போர்களில் தொழிலாளி வர்க்கத்தை வழிநடத்துவதன் வாயிலாகவே பொதுவுடைமைக் கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப் படையாக வளர முடியும். முதலாளித்துவ வர்க்கத்தின் மீது மேல்நிலையை அடைவதற்கான போராட்டத்தில் முறையான தலைமை அளிப்பதற்கான திராணி உடையதாக வளர முடியும்.

ஒவ்வொரு போராட்டத்திலும் முன்வரிசையில் நிற்பது

24. தொழிலாளர் இயக்கத்தில் பங்கேற்க, வேலை நிறுத்தங்கள், கதவடைப்புகள், தொழிலாளர்கள் மொத்தமாக வெளியேற்றப்படுவது போன்ற விசேடமான காலங்களிலும் பொதுவுடைமையாளர்கள் தமது முழு சக்தியையும் அணிதிரட்டிட வேண்டும்.

கட்சியின் வேலைத்திட்டத்தை, ஏன், இறுதி நோக்கங்களை அடைவதற்கான புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் தேவையைக் காரணம் காட்டி, தொழிலாளர்களின் வேலை நிலைமைகளில் சிறு முன்னேற்றங்களைக் கொண்டுவருவதற்கான இப்போதைய போராட்டங்களை பொதுவுடைமையாளர்கள் வெறுத்தொதுக்குவதும், இத்தகைய போராட்டங்களின்பால் ஊக்கமற்ற போக்கைக் கடைபிடிப்பதும் மிகப் பெரிய தவறாகும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் எவ்வளவுதான் சிறு அளவிலானதாகவும், சாதாரணமானதாகவும் இருந்தாலும் இன்று தொழிலாளர்கள் முதலாளிக்கு எதிராகப் போராடத் தயாராக முன்வரும் பட்சத்தில் அந்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதற்கான நொண்டிச் சாக்காக கோரிக்கைகளின் சிறு அளவிலான தன்மையை பொதுவுடைமையாளர்கள் காட்டக் கூடாது. முட்டாள்தனமான வேலை நிறுத்தங்கள் மற்றும் பரிசீலனையற்ற நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களைத் தூண்டிவிடுகிறோம், வெறியூட்டுகிறோம் என்ற குற்றச்சாட்டு வரும்படியானதாக நமது கிளர்ச்சி வேலைகள் இருக்கக் கூடாது. மக்களுடைய போராட்டங்களில் வீரத்துடனும் துடிப்புடனும் பங்கேற்பவர்கள் பொதுவுடைமையாளர்கள் என்ற பெயரை போராடும் மக்களிடையே ஈட்ட பொதுவுடைமையாளர்கள் திடசித்தத்துடன் முயல வேண்டும்.

பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டங்களைத் தொடுக்கக் கற்பது

25. தொழிற்சங்க இயக்கத்தில் உள்ள பொதுவுடைமைவாத செல்கள் (அல்லது பிராக்சன்கள்) அன்றாட வாழ்க்கையில் எழக்கூடிய சில சாதாரணமான பிரச்சினைகளை நடைமுறையில் எதிர்கொள்ள இயலாதவை என்று தம்மைக் காட்டிக் கொண்டுள்ளன. பொதுவுடைமையின் பொதுக் கோட்பாடுகளைப் போதித்துக் கொண்டே இருப்பது எளிமையானது. ஆனால் பயனற்றது. ஏனெனில், பருண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்கையில் எதிர்மறை போக்கான சர்வசாதாரணமான சிண்டிகலிசத்தில் வீழ்வதில் போய் முடியும். இத்தகைய நடைமுறைகள் ஆம்ஸ்டர்டாம் மஞ்சள் அகிலத்தின்* வலையில் வீழ்வதாகும்.

மாறாக, பொதுவுடைமையாளர்கள் தமது நடவடிக்கைகளில், பிரச்சினையின் ஒவ்வொரு அம்சத்தையும் எச்சரிக்கையாகப் பரிசீலிக்குமாறு வழிநடத்தப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தத்துவார்த்த ரீதியில் மற்றும் கோட்பாடுகளின் மீது வேலை சம்பந்தமான ஒப்பந்தங்களையும் (கூலிகள் மற்றும் வேலை நிலைமைகள் பற்றி) எதிர்ப்பதுடன் பொதுவுடைமையாளர்கள் மனநிறைவு அடைந்துவிடுவதற்குப் பதிலாக ஆம்ஸ்டர்டாம் தலைவர்களால் சிபாரிசு செய்யப்படும் கூலி ஒப்பந்தங்களின் குறிப்பான இயல்புக்கு எதிரான போராட்டத்தில் தலைமை ஏற்று நடத்த வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தயாரிப்புக்கு ஊறுவிளைவிக்கும் விசயங்கள் எதையும் எதிர்க்க வேண்டும் என்பது உண்மையே. எல்லாவகை நடைமுறை ஒப்பந்தங்களின் மூலமாகவும் முதலாளிகளும் ஆம்ஸ்டர்டாம் கேடுகெட்ட ஆமாம்சாமிகளும் தொழிலாளர்களின் கைகளைக் கட்டிப் போடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். எனவே, இந்த நோக்கங்களின் இயல்பு பற்றி தொழிலாளர்களின் கண்களைத் திறக்கச் செய்வது பொதுவுடைமையாளர்களின் கட்டாயக் கடமையாகும். தொழிலாளர்களை விலங்கிடாத ஒப்பந்தங்களுக்காக வாதிடுவதன் மூலம் இந்நோக்கத்தை பொதுவுடைமையாளர்கள் மிகச் சிறப்பாக அடைய முடியும்.

தொழிற்சங்க நிறுவனங்களுடைய வேலையின்மை, சுகவீனம் மற்றும் பிற நன்மைகளுக்கும் இதுவே பொருந்தும். போராட்ட நிதிகளை உருவாக்குவது, வேலை நிறுத்தக் காலத்துக்குச் சம்பளம் வேண்டும் எனக் கோருவது ஆகிய நடவடிக்கைகள் நாம் சிபாரிசு செய்யக் கூடாது.

எனவே கோட்பாட்டு ரீதியில் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்ப்பது உசிதமானது அல்ல. ஆனால் ஆம்ஸ்டர்டாம் தலைவர்கள் கூறுகின்ற முறையில் இந்த நிதிகளை சேகரிப்பதும் உபயோகிப்பதும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானது என்பதை பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். நோயுற்றோர் நல நிதி போன்றவை சம்பந்தப்பட்டவரை பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர்களிடமிருந்து நிதி கோரும் முறையை ஒழிக்க வேண்டும். எல்லா வகையான தாமாக முன்வந்து தரும் நிதிகள் தொடர்பாக கட்டாயப்படுத்தும் நிபந்தனைகளையும் ஒழிக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும். (அரசும் முதலாளிகளும் இவற்றுக்கான நிதியைத் தர வேண்டும் என்று கோர வேண்டும் – மொழிபெயர்ப்பாளர்) கட்டணங்கள் செலுத்துவதன் மூலம் நோயுற்றோர் நல நிதி பெறுவதற்கு சில தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்னமும் ஆர்வம் காட்டுவார்களேயானால், அவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாமல் போய்விடுவார்களோ என்று அஞ்சி, வெறுமனே அவற்றைத் தடை செய்வது நமக்குப் பலனளிக்காது. தீவிரமான நேரடியான பிரச்சாரத்தின் மூலம் அத்தகைய தொழிலாளர்லளை அவர்களது குட்டி முதலாளித்துவ கருத்தோட்டங்களிலிருந்து வென்றெடுப்பது அவசியமாக இருக்கும்.

(தொடரும்)


குறிப்பு:

* மஞ்சள் அகிலம் அல்லது பெர்ன் அகிலம் :
இரண்டாம் அகிலத்தில் எப்பொழுதுமே இடது, வலது, நடுநிலை என்றிருந்தது. இவை நாளடைவில் கெட்டிப்பட்டு மூன்று அகிலங்களாகப் பிரிந்தன. வலது சந்தர்ப்பவாதிகள் இரண்டாம் அகிலத்தைப் புதுப்பித்துக் கொண்டனர். 1919-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பெர்ன் நகரில் கூடிய சோசலிஸ்டுக் கட்சிகளுடைய மாநாட்டில் இது நடந்தது. இதுவே மஞ்சள் அல்லது பெர்ன் அகிலம் எனப்படுவதாகும்.

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க