அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 62

தொழில்துறைப் புரட்சி

அ.அனிக்கின்

ங்கிலாந்து சுமார் கால் நூற்றாண்டுக் காலம் யுத்தத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தது. முதலில் ஜாக்கொபின் வாதிகளோடும் பிறகு ஜெனரல் போனபார்ட்டோடும் கடைசியாக சக்கரவர்த்தி நெப்போலியனோடும் போர் புரிந்தது. 1815ம் வருடத்தின் கோடை காலத்தில் வாட்டர் லோவில் அடைந்த வெற்றியோடு போர் முடிவுக்கு வந்தது. வெற்றியின் பலன்களை அனுபவிக்கின்ற வாய்ப்பு இங்கிலாந்துக்கு இப்பொழுது கிடைத்தது. இங்கிலாந்தின் வர்த்தகத்தை ஒடுக்குவதற்கு நெப்போலியன் தயாரித்த ஐரோப்பாக் கண்டத்தை முற்றுகையிடும் திட்டம் வீழ்ச்சியடைந்தது. அந்தக் காலத்தில் உலகத்திலேயே மிகச் சிறப்பான, பல விதமான பொருள்களை இங்கிலாந்து தயாரித்து வந்தது. அந்தச் சரக்குகளுக்கு ஐரோப்பியச் சந்தைகள் திறந்துவிடப்பட்டன.

யுத்தம் இங்கிலாந்தின் கடற்கரைகளுக்கு வெகு தூரத்துக்கு அப்பால் ஐரோப்பாக் கண்டத்தில், குடியேற்ற நாடுகளில், கடலில் நடைபெற்றது. இங்கிலாந்து பணக்கார நாடாக வளர்வதை அந்த யுத்தம் தடுக்கவில்லை, மாறாக அதற்கு உதவி செய்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசி மூன்றாம் பகுதியும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் மூன்றாம் பகுதியும் இங்கிலாந்தின் தொழில் துறைப் புரட்சிக் காலமாகும். முதலாளித்துவம் பட்டறைத் தொழில் கட்டத்தைக் கடந்து இயந்திரத் தொழில் துறை கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது. குடிசைப் பட்டறைகளுக்குப் பதிலாக நூற்றுக்கணக்கானவர்கள் வேலை செய்கின்ற தொழிற்சாலைகள் ஏற்பட்டன.

இருள் அடர்ந்த, அழுக்குப் பிடித்த ஆலை நகரங்கள் தோன்ற ஆரம்பித்தன : மான்செஸ்டர், பர்மிங்காம், கிளாஸ்கோ…. பருத்தித் தொழில் இந்தத் தொழில் துறைப் புரட்சியின் முக்கியமான மையமாயிற்று. அந்தத் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்களையும் எரிபொருள்களையும் உற்பத்தி செய்கின்ற துணைத் தொழில்கள் வளர்ச்சி அடைந்தன. நிலக்கரி, இரும்பு ஆகியவற்றின்யுகம் ஆரம்பமாயிற்று. நீராவி உந்து சக்தி பிரதான தோற்றுவாயாயிற்று. 1822ம் வருடத்தில் ரிக் கார்டோ நீராவிப் படகில் ஐரோப்பாவுக்குப் பிரயாணம் செய்தார்; அவர் மரணமடைந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு நீராவியைப் பயன்படுத்தும் முதல் ரயில் வண்டி ஏற்பட்டது.

இங்கிலாந்தின் கிராமப்புறங்கள் மாறிக் கொண்டிருந்தன. சொந்த நிலத்தில் அல்லது குத்தகை நிலத்தில் இருந்த சுதந்திரமான, சிறு அளவு விவசாய நிலவுடைமைகள் மறைந்து கொண்டிருந்தன; பெரிய பண்ணைகளும் முதலாளித்துவக் குத்தகை விவசாயிகளின் நிலங்களும் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. விவசாயத் தொழிலாளி வர்க்கம் உருவாகிக் கொண்டிருந்தது; சுரங்கம், கப்பல் துறை, கட்டிடத் தொழில், ஆலைத் தொழிலாளர்களின் அணியில் அவர்களும் கலந்தனர்.

இங்கிலாந்தில் செல்வம் குவிந்தது; ஆனால் இந்தச் செல்வத்தோடு வினியோகத் துறையில் ஏற்றத்தாழ்வும் ஏற்பட்டது. வர்க்க வேறுபாடுகள் அதிகக் கூர்மையடைந்தன, தீவிரமான முனைப்போடு வெளிப்பட்டன. அது தொழிலாளர்களுக்கு அருவருக்கத்தக்க குரூரத் தன்மையைக் கொண்ட உலகமாக இருந்தது. 1842ம் வருடத்தில் இளைஞரான எங்கெல்ஸ் இங்கிலாந்துக்கு முதன்முறையாக வந்தபொழுது அவருக்குத் தடுமாற்றத்தை ஏற்படுத்திய உலகம் இதுதான். ஒரு நாள் வேலை என்பது பன்னிரண்டு முதல் பதிமூன்று மணி நேர வேலையாக இருந்தது, சில சமயங்களில் இன்னும் அதிகமாகவும் இருக்கும். தொழிலாளர்கள் பட்டினி கிடக்காமல் சாப்பிடக் கூடிய அளவுக்கே குறைவான ஊதியம் பெற்றார்கள். வேலை இல்லாத பொழுது அல்லது நோய் வாய்ப்பட்டால் தொழிலாளியும் அவருடைய குடும்பமும் பட்டினி கிடக்க வேண்டும். தொழிற்சாலைகளின் உடைமையாளர்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தியபடியால் அவற்றில் குறிப்பாகப் பஞ்சாலைத் தொழிலில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மிகவும் மலிவான உழைப்பை உபயோகித்துக் கொள்ள முடிந்தது.

படிக்க:
தோழர் மாவோ சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம் ! தாராளவாதத்தை வீழ்த்துவோம் !
நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்

தொழிலாளர்கள் ஒன்று கூடுவது அல்லது எவ்விதத்திலும் சங்கம் அமைப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டது, அவ்வாறு செய்வது கலகம் செய்வதாகும் என்று கருதப்பட்டது. இத்தகைய பயங்கரமான நிலைமைகளுக்கு எதிராகத் தொழிலாளர்களின் ஏமாற்றமும் கோபமும் தாமாகவே பொங்கி வெடித்தன; இவை தான் அவர்கள் நடத்திய முதல் ஆர்ப்பாட்டங்கள். இயந்திரங்களே தங்களுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று வெகுளித்தனமாக நம்பிய லுட்டைட்டுகள் அவற்றை உடைத்து நொறுக்கினார்கள். 1811-12ம் வருடங்களில் அவர்களுடைய இயக்கம் கணிசமான அளவுக்கு அதிகரித்தது. இந்தக் கடைகெட்ட மக்களுக்கு ஆதரவாகக் கவிஞர் பைரன் பிரபுக்கள் சபையில் தனிக்குரல் எழுப்பினார். லுட்டைட்டுகளின் நட வடிக்கைகளை ரிக்கார்டோ அங்கீகரிக்க முடியாது என்பது உண்மையே. எனினும் அவர் தொழிலாளர்களின் சங்கங்களுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் அளிக்க வேண்டுமென்று போராடினார்.

இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய சமூக விளைவுகளைப் பற்றி முதல் தடவையாகக் கருத்துச் செறிவோடு ஆராய்ந்து எழுதியவர் அவரே. 1819ம் வருடத்தில் பீட்டர் ஸ்பீல்டில் நடைபெற்ற மான்செஸ்டர் தொழிலாளர்களின் பிரம்மாண்டமான ஆர்ப் பாட்டத்தின் போது அவர்கள் மீது துருப்புகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தன. சமகாலத்தவர்கள் இந்தப் படு கொலையைப் பற்றி (வாட்டர்லோ வெற்றியைக் கேலி செய்து) ”பீட்டர்லோ வெற்றி” என்று வேடிக்கையாகக் கூறினார்கள்.

எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் ஏற்பட்டிருந்த வர்க்க முரண்பாடு சமூகத்தின் முக்கியமான மோதலாக, எல்லா சமூக உறவுகளையும் சித்தாந்தத்தையும் நிர்ணயிக்கின்ற மோதலாக இன்னும் உருவாகவில்லை. முதலாளி வர்க்கம் முன்னேற்றமடைந்து கொண்டிருக்கும் வர்க்கமாக இன்னும் இருந்தது; பொதுவாக, அதனுடைய நலன்கள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் நலன்களோடு பொருந்தியிருந்தன. தொழிலாளி வர்க்கம் இன்னும் பலவீனமாகவும் சிதறிப்போன நிலையிலும் இருந்தது. சமூக உறவுகள் மற்றும் அரசியலில் அது புறப்பொருளாக இருந்ததே தவிர அகப் பொருளாக இருக்கவில்லை.

முதலாளிகளின் நலன்களுக்கு நிலவுடைமையாளர்களின் அத்து மீறல்கள் அதிகமான அச்சத்தைக் கொடுத்தன. தானிய விலை அதிகரிப்பின் மூலம் அவர்களுக்குக் கிடைத்து வந்த நிலக்குத்தகைப் பணம் அதிகரித்தது; யுத்தத்துக்குப் பிறகு அவர்கள் நாடாளுமன்றத்தில் டோரிக் கட்சிக்கு இருந்த பெரும்பான்மையைப் பயன்படுத்தி தானியச் சட்டங்களை நிறைவேற்றுமாறு செய்தனர். இவற்றின் மூலம் அந்நிய நாட்டிலிருந்து இங்கிலாந்துக்குள் தானியத்தை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்பட்டது; அதனால் ரொட்டியை அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முடிந்தது. இது தொழிலதிபர்களுக்குப் பாதகமாக இருந்தது. ஏனென்றால் தங்களுடைய தொழிலாளர்கள் பட்டினி கிடக்காமலிருக்க வேண்டும் என்பதற்காக அதிகமான ஊதியம் கொடுக்க வேண்டிய கட்டாயமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. தானியச் சட்டங்களைச் சுற்றி நடைபெற்ற போராட்டம் 19ம் நூற்றாண்டின் முதற்பாதி முழுவதிலும் ஆங்கில அரசியல் வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக இருந்தது; அது பொருளியலாளர்களின் தத்துவ நிலைகளையும் பெரிய அளவுக்கு நிர்ணயித்தது. இந்தப் போராட்டத்தில் நிலவுடைமையாளர்களின் நலன்களைத் தொழில்துறை முதலாளி வர்க்கம் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் கூட்டு நலன்கள் குறிப்பிட்ட அளவுக்கு எதிர்த்து நின்றன.

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் ரிக்கார்டோவின் போதனை வளர்ச்சியடைந்தது. மூலச் சிறப்புடைய ஆங்கில மரபு அதன் உச்ச நிலையை எட்டியது. அடிப்படையான சமூக பொருளாதாரப் பிரச்சினைகளை, குறிப்பாக மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே உள்ள உறவுகளை ரிக்கார்டோ நடுநிலையோடும் விஞ்ஞான யதார்த்தத்தோடும் ஆராய்ச்சி செய்ய முடிந்தது எப்படி என்பதை இந்தப் பின்னணி ஓரளவுக்கு விளக்குகிறது. ரிக்கார்டோ என்ற அறிஞருடைய ஆளுமையும் இதில் முக்கியமான பங்கு வகித்தது இயற்கையானதே.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க