அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 59

ஸ்மித்தின் வாதம்

அ.அனிக்கின்

ஸ்மித்தின் போதனை இங்கிலாந்திலும் பிரான்சிலும் அதிகமான தாக்கத்தைக் கொண்டிருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்த நாடுகளில் தொழில்துறை வளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்திருந்தது. மேலும் இங்கே முதலாளிகள் கணிசமான அளவுக்கு அரசு அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள்.

எனினும் இங்கிலாந்தில் ஸ்மித்தைப் பின்பற்றியவர்களில் சுதந்திரமான, முக்கியத்துவமுடைய சிந்தனையாளர்கள் (ரிக்கார்டோ வரும் வரையிலும்) யாருமே இல்லை. ஸ்மித்தின் முதல் விமரிசகர்கள் நிலவுடைமையாளர்களின் நலன்களை எடுத்துரைத்தவர்களே. இங்கிலாந்தில் அத்தகைய விமரிசகர்களில் மால்தசும், லொடர்டேல் பிரபுவும் அதிக முக்கியமானவர்கள்.

மால்தஸ் பாதிரியார்

பிரான்சில் ஸ்மித்தின் போதனை ஆரம்பத்தில் அண்மைக் காலத்தைச் சேர்ந்த பிஸியோகிராட்டுகளிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. பிறகு புரட்சி ஏற்பட்டதும் பொருளாதாரத் தத்துவத்திலிருந்து கவனம் திரும்பிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. 1802 -ம் வருடத்தில் நாடுகளின் செல்வம் முதல் தடவையாக ஜெ. கார்னியே என்பவரால் சரியான முறையில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதில் அவருடைய விளக்கக் குறிப்புகளும் இருந்தன. 1803-ம் வருடத்தில் ஸேய், ஸி ஸ்மான்டி ஆகியோருடைய புத்தகங்கள் வெளிவந்தன.

இந்த இரண்டு பொருளியலாளர்களும் தங்களுடைய புத்தகங்களில் பிரதானமாக ஸ்மித்தைப் பின்பற்றுபவர்களாகவே தோன்றினார்கள். ஸேய் ஸ்மித்துக்கு எழுதிய பொருள் விளக்கம் ”பரிசுத்தமான” ஸ்மித்தைக் காட்டிலும் ஓரளவுக்கு முதலாளிகளுக்கு உகந்ததாக இருந்தது. எனினும் ஸேய் முதலாளித்துவத் தொழில் துறை வளர்ச்சிக்காக சுறுசுறுப்பாகப் போராடிய அளவுக்கு, அவருடைய கருத்துக்களில் பல ஸ்மித்துக்கு நெருக்கமாக இருந்தன.

இங்கிலாந்திலும் பிரான்சிலும் ஸ்மித்தின் கருத்துக்கள் முற்போக்கானவையாக இருந்தன என்றால் நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு நிலவிக் கொண்டு முதலாளித்துவ வளர்ச்சி அப்பொழுது தான் ஆரம்பமாகியிருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயினிலும் நிச்சயமாக ருஷ்யாவிலும் இது இன்னும் அதிகமாகத் தெளிவாயிற்று. ஸ்பெயினிலிருந்த மத விரோதக் குற்ற விசாரணை மன்றம் ஸ்மித்தின் புத்தகத்துக்கு முதலில் தடை விதித்தது என்று சொல்லப்படுகிறது.

காமெராலிஸ்டிக் என்று சொல்லப்படும் வாணிப ஊக்கக் கொள்கையின் ஜெர்மானியப் பதிப்பின் உணர்ச்சியை ஒட்டி விரிவுரையாற்றிய பிற்போக்குத்தனமான ஜெர்மானியப் பேராசிரியர்கள் நெடுங்காலம் வரை ஸ்மித்தை அங்கீகரிக்க மறுத்தார்கள். எனினும் ஜெர்மனியிலிருந்த அரசுகளில் மிகவும் பெரியதான பிரஷ்யாவில்தான் ஸ்மித்தின் கருத்துக்கள் சம்பவங்களின் நிகழ்ச்சிப் போக்கின் மீது ஓரளவுக்குத் தாக்கத்தைச் செலுத்தின; நெப்போலியனின் யுத்தங்களின் காலகட்டத்தில் அங்கே மிதவாத முதலாளித்துவ சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தவர்கள் ஸ்மித்தின் கருத்துக்களை ஆதரித்தவர்களே.

படிக்க:
NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !
பாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி

ஸ்மித்தின் போதனையையும் அவருடைய தாக்கத்தையும் பற்றிப் பேசும் பொழுது, அவரிடமிருந்த பொருந்தாத் தன்மை, வேறுபாடுள்ள – சில சமயங்களில் முரண்பாடுள்ள – கருத்துக்கள் அவர் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது முற்றிலும் வெவ்வேறான கோட்பாடுகளையும் கருத்துக்களையும் கொண்ட மனிதர்கள் அவரிடமிருந்து பலனடைவதற்கும் அவரைத் தங்களுடைய ஆசிரியராகவும் முன்னோடியாகவும் கருதுவதற்கும் இடமளித்தது என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருபதுகளிலும் நாற்பதுகளிலும் ரிக்கார்டோவின் போதனையை முதலாளி வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்த விரும்பிய ஆங்கில சோஷலிஸ்டுகள் ஆடம் ஸ்மித்தின் ஆன்மிக வாரிசுகளாகத் தங்களைக் கருதினார்கள்; உண்மையும் அதுவே.

The Wealth of Nations Adam Smith Bookஉழைப்பின் முழு உற்பத்திப் பொருள், அதிலிருந்து முத லாளிக்கும் நிலவுடைமையாளருக்கும் கழிவுகள் செய்வது பற்றிய ஸ்மித்தின் கருத்துக்களை இவர்கள் பிரதானமாகத் தங்களுக்கு அடிப்படையாகக் கொண்டார்கள். மறு பக்கத் தில் பிரான்சில் முதலாளித்துவ அரசியல் பொருளா தாரத்தில் கொச்சையான; மழுப்பல்வாதப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்திய “ஸேயின் மரபு” தன்னை ஸ்மித்தைப் பின்பற்றுபவர்கள் என்று கருதியது. ஸ்மித்தினுடைய சிந்தனையில் இன்னொரு போக்கை, பொருளையும் அதன் மதிப்பையும் படைப்பதில் உற்பத்திக் காரணிகளின் ஒத்துழைப்பு என்ற போக்கை அது ஆதாரமாகக் கொண்டது. அவர்கள் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த ஸ்மித்தின் வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டனர், ஆனால் அதற்கு நயமில்லாத வர்த்தகத் தன்மையைக் கொடுத்தனர்.

ஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது.

ஸ்மித்தின் போதனை தத்துவ ரீதியாகவும் பொருளாதார, சமூகக் கொள்கை என்ற ஸ்தூலமான ரீதியிலும் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. ஸ்மித்தைப் பின் பற்றியவர்களில் சிலர் இவற்றில் சுதந்திரமான அந்நிய வர்த்தகம், காப்புவாதத்தை எதிர்த்துப் போராட்டம் போல ஏதாவது ஒரு அம்சத்தை மட்டும் இரவல் வாங்கிக் கொண்டார்கள். இந்த வாதங்கள் அங்கேயிருந்த ஸ்தூலமான நிலைமையைப் பொறுத்து முற்போக்குத் தன்மையோ அல்லது சுமாரான பிற்போக்குத் தன்மையோ கொண்டிருந்தன.

உதாரணமாக, பிரஷ்யாவில் பிற்போக்கான ஜங்கர் வட்டாரங்களே சுதந்திர வர்த்தகத்துக்காக இயக்கம் நடத்தின. மலிவான தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களை அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் தங்களுடைய சொந்த தானியத்தை எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் ஏற்றுமதி செய்வதிலும் அவர்களுக்கு அக்கறை இருந்தது. ஆனால் ஸ்மித்தைப் பொறுத்தவரையிலும் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்துக்குரிய விரிவான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு வேலைத் திட்டத்தில் சுதந்திர வர்த்தகம் என்பது ஒரு பகுதி மட்டுமே என்பதை நாம் நன்றாக அறிவோம்.

ஸ்மித்தினுடைய கருத்துக்களை (முன்னணியிலிருந்த மற்ற பதினெட்டாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களின் கருத்துக்களோடு இவை பிரிக்க முடியாதபடி பெரும்பாலும் கலந்திருந்தன) பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் தோன்றிய பல முற்போக்கான இயக்கங்களிலும் விடுதலை இயக்கங்களிலும் உணர முடியும் என்பது நாகரிக வரலாற்றில் அவருடைய மகத்தான பாத்திரத்தைக் காட்டுகிறது.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க