அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 61

அத்தியாயம் பன்னிரண்டு | டேவிட் ரிக்கார்டோ: தொழில், வர்த்தகத் தத்துவாசிரியர்

அ.அனிக்கின்

1799-ம் வருடத்தில் லண்டனிலுள்ள பங்குச் சந்தையைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் பாத் என்ற இடத்திலுள்ள வெந்நீர் ஊற்றுக்களில் குளித்து ஆரோக்கியமடைவதற்காகத் தன் மனைவியோடு அங்கே வந்து தங்கியிருந்தார். ஒரு நாள் அங்கேயிருந்த பொது நூலகத்துக்குச் சென்ற பொழுது ஆடம் ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகம் அவருடைய கண்களில் தட்டுப்பட்டது. அதை எடுத்துப் புரட்டினார்; அந்தப் புத்தகம் சுவாரசியமானதாகத் தோன்றவே அதைத் தன்னுடைய அறைக்குக் கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொண்டார். டேவிட் ரிக் கார்டோ இப்படி தன் கவனத்தை அரசியல் பொருளாதாரத்தை நோக்கித் திருப்பினார்.

இந்த சம்பவத்தை ரிக்கார்டோவே சொல்லியிருக்கிறார். எனினும் நியூட்டனையும் ஆப்பிள் பழத்தையும், ஜேம்ஸ் வாட் டையும் வெந்நீர்க் கொதிகலத்தையும் பற்றிச் சொல்லப் படுகின்ற கதைகளைப் போன்றதே இதுவும். அவர் கல்வி அறிவுடையவராதலால் ஆடம் ஸ்மித்தின் புத்தகத்தைப் பற்றி அவருக்கு முன்பே நன்கு தெரிந்திருக்கும். இதற்கு முன்பே ரிக்கார்டோ பொருளாதாரத்தைப் பற்றி விரிவான செய்முறை அறிவைப் பெற்றிருந்தார்; சூக்குமமாக சிந்திக்கின்ற திறமையும் அவரிடம் ஓரளவுக்கு இருந்தது. ஏனென்றால் அவர் விஞ்ஞானங்களில் அக்கறை கொண்டிருந்தார். எனினும் பாத் ஆரோக்கிய ஸ்தலத்திலிருந்த நூலகம் அவருக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம்.

ரிக்கார்டோ பணத்தைத் திரட்டுவதில் தொடர்ந்து ஈடுபட்டார்; ஓய்வுநேரத்தில் கனிப்பொருள் இயலைப் படித்தார். எனினும் இப்பொழுது அவருடைய செயல், அவர் ஆர்வத்தோடு ஈடுபட்ட காரியம் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியே. எத்தகைய சுயநல நோக்கமும் இல்லாமல், பணத்துக்காகவோ, தொழில் முறையில் வெற்றி அல்லது புகழுக்காகவோ இல்லாமல் விஞ்ஞானத்தை ஆர்வத்தோடு ஆராய்ச்சி செய்தது, தொடர்ச்சியாகவும் பற்றற்ற முறையிலும் உண்மையைத் தேடியது ரிக்கார்டோவின் சிறப்புக்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரசியல் பொருளாதாரத்தை ஆராய்வது அவருக்கு ஒரு அகத் தேவையாக, அங்ககத் தேவையாக இருந்தது; தற்சிந்தனையும் உயிர்க்களையும் நிறைந்த அவருடைய ஆளுமையை எடுத்துக் கூறக் கூடிய தர்க்கரீதியான வழியாக இருந்தது. ரிக்கார்டோ அடக்கமான பண்புகளைக் கொண்டவர்; அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத்தில் தன்னுடைய ஈடுபாடு பொழுது போக்கானதே என்று வாழ்நாள் முழுவதும் கருதினார். ஆனால் இந்தப் பொழுது போக்குவாதிதான் இங்கிலாந்தின் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைப் படைக்கும் பணியைப் பூர்த்தி செய்தார்.

ரிக்கார்டோ செய்த மாபெரும் சேவை விஞ்ஞான ரீதியான பொருளாதார ஆராய்ச்சி முறைகளை வகுத்துக் கொடுத்ததாகும். அவருடைய சமகாலத்தவர்கள், ரிக்கார்டோவின் பேனா முனையிலிருந்து உருவாகியிருக்கின்ற ”அரசியல் பொருளாதாரம் என்ற புதிய விஞ்ஞானத்தைப்” பற்றிப் பேசினார்கள்; அவர்கள் சொன்னது ஓரளவுக்குச் சரியே. அவருடைய நூல்களில் அரசியல் பொருளாதாரம் சமூகத்தின் பொருளாதார அடிப்படையைப் பற்றிய அறிவின் அமைப்பு என்ற வகையில் முதன் முறையாக விஞ்ஞானத்தின் கூறுகளைப் பெற்றது.

சமூகத்தின் பொருளாயதச் செல்வத்தின் வளர்ச்சிக்கு உற்பத்தி, வினியோகத்தின் மிகவும் சாதகமான (உசிதமான) சமூக நிலைமைகள் எவை என்ற கேள்வி எப்போதும் பொருளியலாளர்களின் கவனத்தைப் பெற்று வந்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு ரிக்கார்டோ முயற்சி செய்தார். இந்தப் பிரச்சினை யைப் பற்றி அவர் தெரிவித்த பல கருத்துக்கள் இன்றைக் கும் கூட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. ரிக்கார் டோவின் தத்துவக் கருத்துக்களின் முக்கியமான கூறு அவற்றின் ஒருமைவாதமே, அதாவது பொருளாதார யதார்த்தத்தின் பல்வேறு விவரங்கள் அனைத்தையும் பற்றிய விஞ்ஞான ரீதியான பொருள் விளக்கத்துக்கு அடிப்படையாக அமைகின்ற ஒரே பொதுக் கருதுகோளைக் கொண்டிருக்கிறது. தனக்கு முன்பிருந்த மாபெரும் மேதையான ஆடம் ஸ்மித் தைப் பின்பற்றி ரிக்கார்டோ பொருளாதாரத்தைப் பல் கூட்டான அமைப்பு என்ற வகையில் ஆராய்வதற்கும் அதன் சமநிலை பற்றிய அடிப்படையான நிபந்தனைகளை வரையறுப் பதற்கும் முயற்சி செய்தார்.

படிக்க:
இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !
நூல் அறிமுகம் : அராஜகவாதமா ? சோசலிசமா ? | தோழர் ஸ்டாலின்

பொருளாதாரத்தில் புற நிலையான விதிகள் இருக்கின்றன, இந்த விதிகள் நடைமுறைப் போக்குகளாக இயங்குவதை உறுதிப்படுத்துகின்ற இயந்திர அமைப்புகள் அதில் இருக்கின்றன என்ற அவருடைய நம் பிக்கையோடு இது இணைக்கப்பட்டிருந்தது. “சுய ஒழுங்கமைப்புச் செயல் முறைமை” என்ற பிரச்சினை பொருளாதாரத்தில் தத்துவ ரீதியிலும் செய்முறையிலும் அதன் முக்கியத்துவத்தை இன்னும் வகிக்கிறது. ரிக்கார்டோவின் நூல்கள் பணச் செலாவணியும் கடன் வசதியும், சர்வதேசப் பொருளாதார உறவுகள், வரி விதிப்பு போன்ற ஸ்தூலமான பொருளாதாரத் துறைகளின் வளர்ச்சியில் கணிசமான பாத்திரத்தை வகித்திருக்கின்றன. நில வாரம், சர்வ தேச உழைப்புப் பிரிவினை ஆகியவற்றைப் பற்றி ரிக்கார்டோ வெளியிட்ட கருத்துக்கள் பொருளாதாரச் சிந்தனை என்னும் கருவூலத்தின் பகுதியாகிவிட்டன. அவர் அறிவாழமிக்க தத்துவாசிரியர்; அதே சமயத்தில் தன் காலத்தையும் நாட்டையும் சேர்ந்த பொருளாதாரப் பிரச்சினைகளில் அவர் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தார். பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் அவர் நுணுக்கமான வாதத்திறமையையும் கட்டுரை வன்மையையும் கொண்டிருந்தார். ரிக்கார்டோ பின்பற்றிய விஞ்ஞான நேர்மை எனப்படும் மேன்மையான கோட்பாடுகள் இன்றும் நம்மால் போற்றப் படக்கூடியவை, நாம் பின்பற்றுகின்ற தகுதி உடையவை.

அவர் வாழ்ந்த காலத்தில் பொருளியலாளர் என்ற தொழில் இன்னும் தோன்றவில்லை; அப்படிப்பட்ட காலத் தில் கூட விஞ்ஞானத்தில் அவர் கடைப்பிடித்த பாதை குறிப்பிடத்தக்கதாகவும் அவருடைய சமகாலத்தவர்களின் போற்றுதலைப் பெறுகின்ற வகையிலும் இருந்தது. அவருடைய சீடர்களில் ஒருவர் 1821ம் வருடத்தில் பின்வருமாறு எழுதினார்: ”ஒரு ஆங்கிலேயர்-அவர் கல்விக் கூடங்களின் உள் அறைகளில் வசிக்கவில்லை, வர்த்தகச் சமூகக் கவலைகளால் எப்போதும் துன்பமடைந்து கொண்டிருந்தவர் ஐரோப்பாவிலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களும் ஒரு நூற்றாண்டுக் காலச் சிந்தனைக்குப் பிறகும் துரும்பளவு கூட சாதிக்க முடியாததை அவர் செய்து முடித்தாரென்றால் அது சாதாரண விஷயமல்ல”(1)

 

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) M. Blaug, Ricardian Economics. A Historical Study (New Haven, 1958, p. V) என்ற புத்தகத்தில் காட்டப்படும் மேற்கோள்.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க