பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் (MAP) : இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத் திமிருக்கு ஓர் எதிர்வினை ! – பாகம் – 02

சர் கிரீக் விவகாரம் என்பது என்ன?

சர் கிரீக் (பிரிட்டிஷ் பிரதிநிதியின் பெயரால் குறிப்பிடப்படுகிறது) என்பது சிந்து நதியின் கழிமுகப் பகுதியாகும். “பான் கங்கா” என்று குறிப்பிடப்படும் இது, இந்தியாவின் கட்ச் வளைகுடாவுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்துக்கும் இடையில் அரபிக் கடலை ஒட்டியுள்ள 96 கி.மீ. நீளமுள்ள திட்டுத்திட்டான சதுப்பு நிலப் பகுதியாகும். இந்தச் சதுப்பு நிலப் பகுதிகளுக்கிடையிலான சிந்து நதியின் கழிமுகப் பகுதிக்கும் அரபிக் கடலுக்கும் இடைப்பட்ட நீர்ப்பாதையானது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினையாக இன்னமும் தொடர்ந்து நீடிக்கிறது.

இப்பகுதியின் கடலையொட்டிய நீர்ப்பாதையை வரையறுப்பதில் அப்போதையைப் பிரிட்டிஷ் காலனிய ஆளுகைக்குட்பட்ட சிந்து மாகாணத்துக்கும், பிரிட்டிஷ் காலனியாட்சிக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்த கட்ச் மன்னராட்சிக்கும் இடையே தாவா ஏற்பட்டது. 1914-ஆம் ஆண்டில் சிந்து மாகாண அரசாங்கம், கட்ச் அரசர் ராவ் மகராஜ்-உடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் 9,10-வது அம்சங்களின்படி இப்பகுதிகள் மொத்தமும் பாகிஸ்தானுக்கே சொந்தமானது என்று பாகிஸ்தான் அரசு வாதிடுகிறது. ஆனால், 1908-இலிருந்து பிரிட்டிஷ் காலனியாட்சியின் கீழ் இருந்த சிந்து மாகாணத்துக்கும் கட்ச் அரசருக்கும் இடையே தாவா எழுந்தபோது, அன்றைய காலனிய பம்பாய் மாகாண நிர்வாகத்தின் கீழ்தான் இவ்விரு பகுதிகளும் இருந்துள்ளன. சிந்து மாகாணம் 1936-இல்தான் பம்பாய் மாகாணத்திலிருந்து தனியாகப் பிரிட்டிஷாரால் பிரிக்கப்பட்டது. எனவே, சிந்து மாகாணம் கட்ச் அரசருடன் 1914-இல் போட்டுக் கொண்ட ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல என்று இந்தியா வாதிடுகிறது.

கஜார் கீரீக், பாகிஸ்தானின் பகுதியாக உள்ளது. கோரி கிரீக், இந்தியாவின் பகுதியாக உள்ளது. இடையிலுள்ள சர் கிரீக் பகுதியிலுள்ள கடற்கழியைச் சமமாகப் பங்கிடாமல், ஒருதலைப்பட்சமாக இந்தியாவுக்குச் சாதகமாக வரையறுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, இக்கடற்கழி பகுதியை மறுவரையறை செய்ய வேண்டுமென்று பாகிஸ்தான் தொடர்ந்து கோரி வந்தது. இந்தியாவோ இக்கடற்கழி பகுதி முழுமையும் இந்தியாவுக்குச் சொந்தமானது என்று வாதிட்டது. இந்நிலையில், 90 சதவீதப் பகுதி இந்தியாவுக்கும் 10 சதவீதப் பகுதி பாகிஸ்தானுக்குமாக சர் கிரீக் கடற்கழி எல்லையைப் பிரித்து, 1968-இல் சர்வதேச தீர்ப்பாயம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

படிக்க:
அண்ணாமலை : வெறும் சங்கியிலிருந்து அதிகாரப்பூர்வ சங்கியான கதை!
காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை

இருப்பினும், இத்தீர்மானத்தை இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பும் ஏற்கவில்லை. 1997-இலிருந்து 2012 வரை 12 முறை இரு நாடுகளுக்குமிடையே இதுபற்றிப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ள போதிலும், எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் இதைப் பற்றி சர்வதேச தீர்ப்பாயத்திடம் முறையிடலாம் என்று பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இந்திய – பாகிஸ்தான் இருதரப்பு எல்லைப் பிரச்சினையில் மூன்றாவது தரப்பு தலையிடக் கூடாது என்று சிம்லா ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதைக் காட்டி இந்தியா இதை ஏற்க மறுக்கிறது.

இச்சதுப்பு நிலப் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு முதலான வளங்கள் கடலுக்கடியில் இருப்பதால் சர் கிரீக் பகுதியைக் கைப்பற்றுவதற்கு இரு நாடுகளும் முயற்சிக்கின்றன. மேலும், சிந்து நதி அரபிக் கடலில் கலக்கும் இந்தக் கடற்கழி பகுதியானது, மிகப் பெரிய மீன் பிடி வயலாகவும் உள்ளது. இதனால், இரு நாடுகளுக்குமிடையே எந்தப் பகுதியில் யார் மீன் பிடிப்பது என்பதில் தகராறுகளும், மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கைது செய்து சிறையிடுவதும் தொடர்கிறது.

தற்போது பாகிஸ்தான் வெளியிட்டுள்ள புதிய அரசியல் வரைபடமானது, சர் கிரீக் நீர்ப்பாதையை இரு தரப்புக்கும் ஏறத்தாழ சமமானதாகப் பிரித்துக் காட்டியுள்ளது.

***

ற்போது இந்தியா, தன்னிச்சையாகவும் பிராந்திய மேலாதிக்கத் திமிரோடும் பாகிஸ்தான் பிடியிலுள்ள காஷ்மீர் மற்றும் கில்ஜித் – பல்டிஸ்தான் பகுதிகளை இந்தியாவுடன் இணைத்து வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்வினையாக, பாகிஸ்தானும் ஜம்மு – காஷ்மீர், லடாக் பிராந்தியங்களைத் தனது நாட்டின் உரிமையுள்ள பிராந்தியங்களாகக் காட்டி புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இதுவும் போதாதென்று, ஜுனாகத் பிராந்தியத்தையும் பாகிஸ்தானின் ஆதிபத்திய உரிமையுள்ள பகுதியாகக் காட்டியிருக்கிறது.

பாகிஸ்தான், உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவுக்கு விசுவாசமான நாடுதான். இந்தியாவின் பிராந்திய மேலாத்திக்கத்தின் கீழுள்ள நாடுதான். இருப்பினும், அமெரிக்க வல்லரசுக்கும் சீனாவுக்குமிடையே நிலவும் பனிப்போர்ச் சூழலில், சீனாவுடன் பொருளாதாரக் கூட்டுக்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, அரசியல் ரீதியில் இந்தியாவின் மேலாதிக்கத் திமிரை எதிர்க்க முனைந்துள்ளது. அந்நாடு, இப்போது காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைப் பற்றிச் சவடால் அடிக்கிறது. இந்தியா மீது தீவிரவாதக் குழுக்களின் தாக்குதல்கள் நடந்தால், அதற்கு எமது நாடு பொறுப்பல்ல என்று இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறது.

காலாபாணி பகுதியை இந்தியா தனது ஆதிபத்திய உரிமையுள்ள பகுதியாக புதிய வரைபடத்தில் குறிப்பிட்டுள்ளதை எதிர்த்து நேபாள மக்கள் போராடியதைப் போல, ஆசாத் காஷ்மீரிலோ, கில்ஜித் – பல்டிஸ்தான் பகுதியிலோ அப்பகுதிவாழ் மக்கள் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை அல்லது பாகிஸ்தான் அரசு இவற்றை அனுமதிக்கவில்லை. இந்தியா உரிமை கோரும் காலாபாணி – லிபுலேக் – லிம்பியாதுரா பகுதியை தனது நாட்டின் பகுதியாக அதிகாரபூர்வமாகப் புதிய வரைபடத்தில் காட்டியுள்ள நேபாளம், இதனை முறைப்படி அறிவிப்புச் செய்யுமாறு ஐ.நா. மன்றத்திடம் கோரியுள்ளதைப் போல, பாகிஸ்தான் செய்யவுமில்லை.

இந்தியாவை உலக அரங்கில் அரசியல் ரீதியாகவும் அரசு தந்திர ரீதியாகவும் அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள முயற்சியின் வெளிப்பாடுதான், இப்புதிய அரசியல் வரைபடம். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடுதான் இப்புதிய அரசியல் வரைபடங்கள்.

இஸ்லாமியக் குடியரசாக அறிவித்துக் கொண்டு மதவாத காட்டுமிராண்டித்தனத்திலும், ராணுவ கும்பலின் சர்வாதிகாரத்திலும் ஊறித் திளைக்கும் பாகிஸ்தான், இத்தகைய எதிர்ப்புகள் மூலம் குறுகிய மதவெறி, தேசியவெறியையும் போர் வெறியையும் கிளறிவிட்டு, உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறது. மறுபுறம், உள்நாட்டில் இந்திய அரசும் அண்டைநாடுகளுக்கு எதிராக ‘தேசபக்தி’ எனும் பெயரில் போர் வெறியைத் தூண்டி, தனது தோல்விகளை மறைத்து, கார்ப்பரேட் மற்றும் ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு சேவைபுரிகிறது.

( முற்றும் )

– புதியவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க