அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 60

ஸ்மித்தின் ஆளுமை

அ.அனிக்கின்

ஸ்மித்தின் வாழ்க்கையைப் பற்றி இனி சொல்ல வேண்டியது அநேகமாகக் குறைவே. நாடுகளின் செல்வம் வெளியிடப்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, பக்லூ கோமகன் மற்றும் அவருடைய செல்வாக்கு மிக்க நண்பர்கள், ஆதரவாளர்கள் செய்த முயற்சிகளினால் எடின்பரோவில் ஸ்காட்டிஷ் சுங்கக் கமிஷனர் என்ற வேலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அது சுகமான வேலை; அறுநூறு பவுன் வருட வருமானம் கிடைக்கும். அந்தக் காலத்தில் இது மிகவும் அதிகமான தொகையாகும். ஸ்மித் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை சுங்க இலாகாவில் கழித்தார். சுங்க வரிவசூலை மேற்பார்வையிடுவதிலும் லண்டனுக்குக் கடிதங்கள் எழுதுவதிலும் கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்காக அவ்வப்பொழுது படையினரை அனுப்புவதிலும் பொழுதைக் கழித்தார்.

அவர் தம்முடைய இருப்பிடத்தை எடின்பரோவுக்கு மாற்றிக் கொண்டார், அந்த நகரத்தின் பழமையான பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தார். அவர் முன்பிருந்த எளிமையான வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தினார், அறச்செயல்களுக்கு அதிகமான பணம் செலவிட்டார். அவர் விட்டுச் சென்ற மதிப்புடைய ஒரே பொருள் அவருடைய பெரிய நூலகமே. ”என்னுடைய புத்தகங்களைத் தவிர வேறு எதிலும் நான் பணக்காரன் அல்ல” என்று ஸ்மித் தன்னைப் பற்றி ஒரு தடவை சொன்னார்

பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்டது போன்ற அரசாங்கப் பதவிகள் அந்த நபர்களை ஆதரிப்பதற்காகக் கொடுக்கப்பட்டன, அவை மானியமாகவே கருதப்பட்டன. ஆனால் ஸ்மித் மனசாட்சி உள்ளவர், ஓரளவுக்குக் கல்விச் செருக்குடையவர். எனவே அவர் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையைப் பொறுப்போடு நிறைவேற்ற வேண்டும் என்று கருதிக்கொண்டு கணிசமான நேரத்தை அலுவலகத்தில் கழித்தார். இது மட்டுமே (அவருடைய முதிர்ந்த வயதும் பலவீனமான உடல் நிலையும் கூட) அவர் இனி எதையும் தீவிரமாக விஞ்ஞான ஆராய்ச்சி செய்வதைத் தடுத்தது. ஸ்மித்துக்கும் அப்படிப்பட்ட குறிப்பிட்ட ஆசைகளும் இல்லை என்று தோன்றுகிறது.

ஆரம்பத்தில் தன்னுடைய மூன்றாவது பெரிய புத்தகத்தை கலாச்சாரம், விஞ்ஞானத்தைப் பற்றிய சர்வாம்ச வரலாற்றை எழுத வேண்டுமென்று அவர் திட்டம் போட்டிருந்தது உண்மை தான். ஆனால் அவர் வெகு சீக்கிரத்தில் இந்தத் திட்டத்தைக் கைவிட்டார். அவருடைய மரணத்துக்குப் பிறகு வானஇயல், தத்துவஞானம், கலைகளைப் பற்றிக் கூட அவர் எழுதியிருந்த சுவாரசியமான குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அவருடைய புத்தகங்களின் புதிய பதிப்புகளைக் கொண்டு வருவதில் அவருடைய நேரத்தில் பெரும் பகுதி கழிந்தது; அவருடைய வாழ்நாளிலேயே அறவியல் உணர்ச்சிகளைப் பற்றிய தத்துவம் ஆறு பதிப்புக்களும் நாடுகளின் செல்வம் ஐந்து பதிப்புக்களும் இங்கிலாந்தில் வெளிவந்தன. நாடுகளின் செல்வம் மூன்றாவது பதிப்பின் போது (1784) ஸ்மித் முக்கியமான பகுதிகளைச் சேர்த்தார், அவற்றில் வாணிப ஊக்கக் கொள்கையைப் பற்றிய முடிவுரை என்ற அத்தியாயம் குறிப்பிடத்தக்கதாகும்.

படிக்க:
புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்
அண்ணாமலை : வெறும் சங்கியிலிருந்து அதிகாரப்பூர்வ சங்கியான கதை!

தம்முடைய புத்தகங்களுக்கு வெளிநாடுகளில் வெளிவருகின்ற பதிப்புகளையும் அவர் ஓரளவுக்குக் கவனமாகப் பார்த்துக் கொண்டார். பிரெஞ்சு மொழியில் இரண்டு தடவைகளும் ஜெர்மன், டேனிஷ் மொழிகளில் ஒரு தடவையும் மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன, இத்தாலிய மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நாடுகளின் செல்வம் அயர்லாந்திலும் அமெரிக்காவிலும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்துக்கு அது வெளியிடப்பட்ட முதல் ஐம்பது வருடங்களில் வெளிவந்த பதிப்புகள் ஒரு சிறு பழைய புத்தகக் கடை நிறைய இருக்கும். 1802-1806ம் வருடங்களில் அதன் முதல் ருஷ்ய மொழிப் பதிப்பு வெளியாயிற்று. ருஷ்ய மொழியில் இந்தப் புத்தகத்துக்கு இது வரை மொத்தம் எட்டு பதிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன; அவற்றில் நான்கு பதிப்புகள் 1917-ம் வருட அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சிக்குப் பிறகு வெளியிடப்பட்டவையாகும்.

ஸ்காட்லாந்தின் தலைநகரம் லண்டனுக்கு அடுத்தபடியாக தேசத்தின் இரண்டாவது முக்கியமான கலாச்சார நகரமாகத் திகழ்ந்தது, சில அம்சங்களில் அது முதல் நகரத்துக்குச் சிறிதும் குறையாத புகழோடு விளங்கியது. மறு பக்கத்தில் ஒப்பு நோக்கில் அது சிறிய நகரம், நெருக்கமான உணர்ச்சியைக் கொடுக்கின்ற நகரம். ஸ்மித் வழக்கம் போல இங்கேயும் பொழுதுபோக்குச் சங்கத்தில் சேர்ந்து கொண்டார், அங்கே தம்முடைய சிநேகிதர்களையும் நண்பர்களையும் கொண்ட நெருங்கிய குழுவினர்களை வழக்கமாகச் சந்தித்தார். இதைத் தவிர, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நண்பர்கள் அவரோடு விருந்துண்டார்கள். அவர் இதற்கு முன்பே ஐரோப்பாவின் புகழ் மிக்க நபர்களில் ஒருவராக, எடின்பரோ நகரத்தின் அரிய காட்சிகளில் ஒன்றாகிவிட்டார். லண்டன், பாரிஸ், பெர்லின். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களிலிருந்து வரும் பிரயாணிகள் ஸ்காட்லாந்தின் ஞானியைத் தரிசிக்க விரும்பினார்கள்.

அவர் எவ்விதத்திலும் குறிப்பிடத்தக்க தோற்றச் சிறப்பைக் கொண்டிருக்கவில்லை. அவர் சராசரிக்குச் சற்று அதிக உயரமுள்ளவர், வளையாமல் நிமிர்ந்து நடப்பார். அவருடைய எளிமையான முகம் வழக்கமான அமைப்பையும் பழுப்பு நீல நிறக் கண்களையும் நீண்ட, நேரான மூக்கையும் கொண்டிருந்தது. அவர் மற்றவர்களுடைய கவனத்தைக் கவராதபடி உடையணிவார். கடைசிவரை தலையில் பொய் முடி அணிந்திருந்தார். தன்னுடைய தோளின் மீது மூங்கில் பிரம்பைச் சாய்வாக வைத்துக் கொண்டு நடப்பது அவருக்குப் பிடிக்கும்.

அவர் தன்னிடம் பேசிக் கொண்டபடியே நடந்து செல்லும் பழக்கம் உடையவர். இந்தப் பழக்கம் சற்று அதிகமான அளவுக்கு அவரிடமிருந்தபடியால், ஒரு நாள் சந்தையிலிருந்து வந்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் அவரைப் பார்த்துப் பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொண்டார்கள். “அட கடவுளே!” என்று ஒரு பெண் தலையை பலமாக ஆட்டிக்கொண்டு சொன்னாள். “எப்படி உடையணிந்திருக்கிறான் பார்” என்று அடுத்துப் பேசினாள் இரண்டாவது பெண். அவருக்கு அதிகமான ஞாபகமறதி ஏற்படும். அவர் மற்றவர்களோடு இன்முகத்தோடு பழகினார்; சதா பேசிக்கொண்டிருப்பதும் அவரிடமிருந்த பழக்கம். அவருடைய சமகாலத்தவர்களில் ஒருவர் அவரைப் பற்றி – சற்று மிகையாகவே – எழுதுகிறார்: “நான் பார்த்தவரையிலும் கூட்டத்திலிருக்கும் பொழுது, அதிகமான ஞாபக மறதியோடு இருந்தவர் அவர்தான். அவர் பெரிய கூட்டங்களில் இருக்கும் பொழுது கூட தனக்குத் தானே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்; அவருடைய உதடுகள் எப்பொழுதும் துடித்துக் கொண்டிருக்கும். அவருடைய சிந்தனை மயக்கத்தைக் கலைத்து நாம் உரையாடிக் கொண்டிருக்கும் பொருளை கவனிக்கச் செய்தோமென்றால் அவர் உடனே ஆவேசமாகப் பேச ஆரம்பித்து விடுவார். அதைப் பற்றி அவருக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அதிகமான தத்துவஞான நுண்ணறிவோடு சொல்லி முடிக்கின்ற வரையிலும் அவர் ஒருபோதும் நிறுத்த மாட்டார்”. (1)

படிக்க:
ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ! அடுத்து என்ன ? | வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை
அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?

ஸ்மித் எடின்பரோ நகரத்தில் 1790-ம் வருடம் ஜூலை மாதத்தில் தமது அறுபத்தேழாம் வயதில் மரணமடைந் தார். அதற்கு முன்பு சுமார் நான்கு வருட காலம் அவர் அதிகமான அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார்.

ஸ்மித் அறிவுத்துறையில் சில சமயங்களில் ஒரு குடிமகன் என்ற முறையில் கணிசமான அளவுக்குத் துணிச்சல் கொண்டவராக இருந்தார். ஆனால் அவர் எப்படிப்பட்ட அர்த்தத்திலும் ஒரு போராட்டக்காரர் அல்ல. அவர் இரக்கசிந்தை உடையவர், அநீதியையும் வன்முறையையும் கொடுமையையும் வெறுத்தார்; ஆனால் ஓரளவு சுலபமாகவே அவற்றைப் பொறுத்துக் கொண்டார். பகுத்தறிவு, பண்பாடு ஆகியவற்றின் வெற்றியில் நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் இந்தக் கரடுமுரடான, தீமைகள் மலிந்த உலகத்தில் அவற்றின் நிலையைப் பற்றி அதிகமாக அச்சமடைந்தார். அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அவர் வெறுத்தார், துச்சமாகக் கருதினார்; ஆனால் தாமும் அவர்களில் ஒருவராக மாறினார்.

உழைக்கின்ற ஏழை மக்கள் மீது, தொழிலாளி வர்க்கத் தின் மீது ஸ்மித்துக்கு அதிகமான அனு தாபம் இருந்தது. கூலித் தொழிலாளர்களுக்கு இயன்ற அளவுக்கு அதிகமான ஊதியம் கொடுப்பதை அவர் ஆதரித்தார். ஏனென்றால் “சமூகத்தின் மிகப்பெரும் பகுதி ஏழ்மையிலும் துன்பத்திலும் உழல்கின்ற பொழுது அந்த சமூகத்தில் வளப்பெருக்கம் ஏற்பட முடியாது.” தங்களுடைய உழைப்பின் மூலமாக சமூகத்தையே ஆதரித்துக் காப்பாற்றுகின்ற மக்கள் ஏழ்மையிலே வாடுவது அநீதியானது. ஆனால் அதே சமயத்தில் “இயற்கைச் சட்டங்கள்” தொழிலாளர்களுக்குச் சமூகத்தில் மிகவும் கீழ் நிலையான இடத்தையே கொடுத்திருப்பதாக அவர் அனுமானித்துக் கொண்டார். “தொழிலாளியின் நலன் சமூக நலன்களோடு கண்டிப்பான வகையில் இணைக்கப்பட்டிருந்த போதிலும் அவன் அந்த நலன்களைப் புரிந்து கொள்வதற்கோ அல்லது தன்னுடைய நலனோடு அவை இணைக்கப்பட்டிருப்பதை அறிவதற்கோ இயலாதவன்”  (2) என்று கருதினார்.

ஸ்மித் முதலாளி வர்க்கத்தை வளர்கின்ற முற்போக்கான வர்க்கம் என்று கருதினார்; அதனுடைய நலன்களை குறுகிய, தற்காலிகமான நலன்களை அல்ல, விரிவான நெடுந்தொலைவு நோக்கில் அதன் நலன்களை-புற நிலையில் எடுத்துக் கூறினார். ஆனால் அவர் கீழ்வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவி என்ற வகையில் முதலாளிகள் மீது சிறிதளவு பிரியம் கூட அவருக்கு ஏற்படவில்லை. லாபவேட்கை இவர்களைக் குருடர்களாக்கிவிடுகிறது, அவர்களுடைய இதயங்களைக் கல்லாக்கி விடுகிறது என்று கருதினார். அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்துக்காக, சமூக நலன்களுக்கு எதிரான எந்த வழியையும் பின்பற்றத் தயாராக இருக்கிறார்கள். தங்களுடைய பண்டங்களின் விலையை அதிகரிப்பதற்கும் தொழிலாளர்களின் கூலியைக் குறைப்பதற்கும் அவர்கள் தங்கள் முழு பலத்தையும் திரட்டிப் பாடுபட்டார்கள். தொழிலதிபர்களும் வணிகர்களும் சுதந்திரமான போட்டியைக் கட்டுப்படுத்துவதற்கும் நசுக்குவதற்கும் சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கின்ற ஏகபோகங்களை உருவாக்குவதற்கும் எப்பொழுதும் முயற்சித்தார்கள்.

பொதுவாகச் சொல்வதென்றால், முதலாளி என்பவர் முன்னேற்றம், ”நாட்டின் செல்வத்தின்” வளர்ச்சியின் ஆட்சார்பற்ற இயற்கையான கருவி என்று ஸ்மித் கருதினார். சமூகத்திலுள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் நலன்களோடு முதலாளி வர்க்கத்தின் நலன்கள் பொருந்தி வருகின்ற அளவுக்குத்தான் ஸ்மித் அந்த வர்க்கத்தை ஆதரித்தார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) C. Fay, Adam Smith and the Scotland of His Day, Cambridge, 1956, p. 79.
(2) A. Smith, The Wealth of Nations, Vol. 1, London, 1924, p. 230.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க