ர்க்கப் போராட்டம்தான், சமகாலத்திய சமூக வாழ்வின் அச்சாணியான விசயமாகும். இந்தப் போராட்டத்தின் வளர்ச்சியில், ஒவ்வொரு வர்க்கமும் தனது சொந்த சித்தாந்தத்தால் வழிகாட்டப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் தனக்கென ஒரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இந்த சித்தாந்தம் தாராளவாதம் என்று அழைக்கப்படுகிறது. இது போலவே, பாட்டாளி வர்க்கமும் தனக்கென பிரபலமானதொரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இது சோசலிசம் என்று அழைக்கப்படுகிறது.

தாராளவாதத்தை, ஏதோ முழுநிறைவான ஒன்று என்றும் பகுக்கப்பட முடியாதது என்றும் கருதக்கூடாது. இது வெவ்வேறு முதலாளித்துவ தட்டுகளின் தேவைகளுக்குப் பொருந்தும்படி பல்வேறு போக்குளாக உட்பிரிவுகளாக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சோசலிசமும் முழுநிறைவான ஒன்றாகவோ பகுக்கப்பட முடியாத ஒன்றாகவோ இல்லை. இதிலும் கூட வெவ்வேறு போக்குகள் இருக்கின்றன.

நாம் இங்கு தாராளவாதத்தை பரிசீலிக்கவில்லை. அதை வேறொரு சந்தர்ப்பத்தில் நாம் பரிசீலிப்பதே மேலானது. இப்போது, சோசலிசம் மற்றும் அதன் வெவ்வேறு போக்குகளும் குறித்து வாசகருக்கு விளக்குவதையே நாம் இப்போது விரும்புகிறோம். தொழிலாளிகள் இதில் கூடுதலாக ஆர்வம் காட்டுவார்கள் என்றும் நாம் நினைக்கிறோம்.

சோசலிசமானது மூன்று பிரதானப் போக்குகளாகப் பிரிந்துள்ளது. அவை சீர்திருத்தவாதம், அராஜகவாதம், மார்க்சியம் ஆகியவையாகும்.

பெர்ன்ஸ்டின் வகையறாக்கள் சீர்திருத்தவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர். சோசலிசம் ஒரு தொலைதூர இலட்சியமே ஒழிய, வேறொன்றுமல்ல என்று இவர்கள் கருதுகின்றனர். அமைதியான வழிமுறைகளிலேயே சோசலிசத்தை அடைவதில் அவர்கள் குறியாக உள்ளனர். சீர்திருத்தவாதமானது, வர்க்கப் போராட்டத்தை ஆதரித்து வாதிடாமல், வர்க்க சமரசத்துக்காக நிற்கிறது. இது நாளுக்கு நாள் கெட்டழுகிக் கொண்டும், சோசலிசத்தின் எல்லா அடையாளங்களையும் இழந்து கொண்டும் இருக்கிறது. சோசலிசத்தைப் பற்றி வரையறுக்கும் இந்தக் கட்டுரைகளில், இதைப் பரிசீலனை செய்வது மொத்தத்தில் தேவையற்றது என்பது நமது கருத்தாகும்.

ஆனால், மார்க்சியத்தையும் அராஜகவாதத்தையும் பொறுத்தவரையில் விசயம் முற்றிலும் வேறானது. ஏனென்றால், இவை இரண்டுமே இப்போதைக்கு சோசலிசப் போக்குகளாக அங்கீகரிக்கப்படுகின்றன; இவ்விரு போக்குகளும், பாட்டாளி வர்க்கத்தின் முன்பு தம்முடையதே உண்மையான சோசலிசத் தத்துவம் என்று முன்னிலைப்படுத்த படாதபாடு படுகின்றன. இவ்விரு போக்குகளை ஆய்வதும் ஒப்பிட்டுப் பார்ப்பதும் வாசகர்களுக்குக் கூடுதலான ஆர்வத்துக்கு உரியதாக இருக்கும் என்பது நிச்சயம்.

படிக்க:
பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் !
ஆகஸ்ட் 30 : உலக காணாமலடிக்கப்பட்டோர் தினம் ! தஞ்சை ஆர்ப்பாட்டம் !

“அராஜகவாதம்” என்ற சொல்லைக் கேட்ட அக்கணமே, வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, “நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்? இதைப்பற்றிப் பேசுவதே பயனற்றது” என்று ஆணவத்துடன் கூறும் இரகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல நாங்கள். இத்தகைய மட்டரகமான “விமர்சனம்” கண்ணியமற்றது என்றும் பயனற்றது என்றும் நாங்கள் நினைக்கிறோம்.

அராஜகவாதிகளின் “பின்னால் ஆட்கள் ஒன்றும் அதிகமில்லை : ஆகவே, அவர்களால் அபாயம் ஏதுமில்லை” என்று நினைத்து தம்மைத்தாமே ஆறுதல்படுத்திக் கொள்ளும் இரகத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல நாங்கள். இன்றைக்கு அதிகமான அல்லது குறைவான “மக்கள் செல்வாக்கு” யாருக்கு உள்ளது என்பதல்ல பிரச்சினை; ஆனால் யாருடைய தத்துவத்தின் சாரம் சரியானது என்பதே பிரச்சினை. அராஜகவாதிகளின் “தத்துவம்” உண்மையை வெளிப்படுத்துமானால், அவர்கள் தமக்கென ஒரு பாதையை நிச்சயம் அமைத்துக் கொள்வார்கள் என்பதும், பரந்துபட்ட மக்களை தம்மைச் சூழ்ந்து அணிதிரட்டிக் கொள்வார்கள் என்பதும் சொல்லாமலே விளங்கக்கூடிய விசயம்தான். இருப்பினும், அவர்களுடைய தத்துவம் உண்மை ஆதாரம் அற்றதாகவும், பொய்யான அடிப்படைகளின் (அஸ்திவாரம்) மீது கட்டப்பட்டதாகவும் இருக்குமானால், அந்தத் தத்துவம் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாமலும் அந்தரத்தில் தொங்குவதாகவும் இருக்கும். ஆகையால், அராஜகவாதத்தின் ஆதாரமற்ற தன்மை நிரூபிக்கப்பட்டாக வேண்டும்.

மார்க்சியமும் அராஜகவாதமும் ஒரே வகைப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையைக் கொண்டுள்ளதாகவும், அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் செயல்தந்திரங்கள் தொடர்பானவை மட்டுமே என்றும் சிலர் நம்புகின்றனர். இவ்விரு போக்குகளுக்கு இடையில் எத்தகைய வேறுபாட்டையும் கண்டறிய முடியாது என்றும் இவர்கள் கருதுகின்றனர். இது மாபெரும் தவறு, மார்க்சியத்தின் உண்மையான எதிரிகள் அராஜகவாதிகள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதற்கேற்ப உண்மையான எதிரிகளுக்கு எதிராக, உண்மையிலேயே கடுமையான போராட்டம் நடத்தப்பட்டே தீரவேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆகவே, அராஜகவாதிகளின் தத்துவத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை பரிசீலிக்க வேண்டும் என்றும், அவர்களின் எல்லா தத்துவக்கூறுகளையும் சீர்தூக்கி மதிப்பிடுவது அவசியத் தேவை என்றும் நாங்கள் கருதுகிறோம். (பக்கம் 7 – 9)

***

முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதுமான தனது திட்டத்தை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்? எந்தப் பாதையை மேற்கொள்ள வேண்டும்? – இதற்கான விடை மிகத் தெளிவானது.

முதலாளித்துவ வர்க்கத்துடன் சமாதானம் செய்து கொள்வதன் மூலம், பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தை அடைவதைச் சாதிக்க முடியாது. தவறாமல் போராட்டப் பாதையை அது மேற்கொள்ள வேண்டும்; இந்தப் போராட்டம் வர்க்கப் போராட்டமாகவே இருந்தாக வேண்டும்; முதலாளித்துவ வர்க்கம் முழுவதற்கும் எதிராக, பாட்டாளி வர்க்கம் முழுவதும் தொடுக்கும் போராட்டமாக அது இருக்க வேண்டும். ஒரு பக்கம் முதலாளித்துவ வர்க்கமும் அதன் முதலாளித்துவமும்! அல்லது இன்னொரு பக்கத்தில் பாட்டாளி வர்க்கமும் அதன் சோசலிசமும் ! இரண்டில் எது என்ற கேள்வியை பாட்டாளி வர்க்கம் எப்போதும் முன் வைக்க வேண்டும். இதுதான், பாட்டாளி வர்க்கத்தினுடைய நடவடிக்கைகளின் அடிப்படையாக, அதனுடைய வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையாக தவறாமல் இருக்க வேண்டும்.

இருப்பினும், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் எண்ணற்ற வடிவங்களை மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, வேலை நிறுத்தம் என்பது வர்க்கப் போராட்டமே. அது பகுதியளவிலான வேலைநிறுத்தமாக இருந்தாலும் சரி, அல்லது, பொது வேலைநிறுத்தமாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே இது பொருந்தும். இதுதவிர, புறக்கணிப்புகள், உற்பத்தியைச் சீர்குலைத்தல் ஆகியனவும் சந்தேகத்துக்கிடமின்றி வர்க்கப் போராட்டங்களேயாகும்.

பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் – இவையும் வர்க்கப் போராட்டமே. பொது மக்கள் பிரதிநிதித்துவ அவைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வர்க்கப் போராட்ட நடவடிக்கைகளே. அந்த அவைகள் தேசிய நாடாளுமன்றங்களாக இருந்தாலும் சரி, அல்லது, உள்ளூராட்சி மன்றங்களாக இருந்தாலும் சரி, இதில் ஒன்றும் வேறுபாடு இல்லை. இவை அனைத்துமே ஒரே வர்க்கப் போராட்டத்தின் வெவ்வேறான வடிவங்களே ஒழிய வேறல்ல. பாட்டாளி வர்க்கத்துக்கு, அதனுடைய வர்க்கப் போராட்டத்தில், எந்த வடிவிலான போராட்டம் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் பரிசீலிக்கப் போவது இல்லை. பாட்டாளி வர்க்கமானது தனது வர்க்க உணர்வையும் அமைப்பு ரீதியிலான பலத்தையும் அதிகமாக்கிக் கொள்வதற்கான சாதனம் என்ற முறையில், காலத்துக்கும் இடத்துக்கும் பொருத்தமாக, ஒவ்வொன்றும் பாட்டாளி வர்க்கத்துக்கு அவசியமாகிறது என்பதையே நாம் கவனித்தாக வேண்டும்.

உயிர்வாழ காற்று எவ்வளவு அவசியமாகத் தேவைப்படுகிறதோ, அதே போல பாட்டாளி வர்க்கத்திற்கு வர்க்க உணர்வும் அமைப்புரீதியிலான பலமும் தேவைப்படுகிறது. இருப்பினும் இன்னொன்றையும் கவனித்தாக வேண்டும். பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில், இந்தப் போராட்ட வடிவங்கள் அனைத்துமே வெறும் தயாரிப்புக்கான போராட்ட வடிவங்களே.

இருந்த போதிலும் எந்த தனிப்பட்டதொரு போராட்ட வடிவத்தையும் எடுத்துக்கொண்டு பார்த்தால், இவற்றில் எந்த ஒரு வடிவமும், முதலாளித்துவ வர்க்கத்தை அடித்து நொறுக்குவதற்கான தீர்மானகரமான வழிமுறைச் சாதனமாக பாட்டாளி வர்க்கத்துக்கு இருக்காது. பொது வேலை நிறுத்தத்தால் மட்டுமே, முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கிவிட முடியாது. முதலாளித்துவத்தை அடித்து நொறுக்குவதற்கான சூழ்நிலைகளில் அவசியமான ஒரு சிலவற்றை வேண்டுமானால், பொது வேலை நிறுத்தமானது உருவாக்க முடியும். நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு, பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்துவிட முடியும் என்று நினைத்துப் பார்க்க முடியாது. முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கு அவசியமான நிலைமைகளில் சிலவற்றை மட்டுமே நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலம் தயாரிக்க முடியும்.

அப்படியானால், எந்த தீர்மானகரமான சாதனத்தைக் கொண்டு, பாட்டாளி வர்க்கமானது, முதலாளித்துவக் கட்டைமைவைத் தூக்கியெறியும்? (பக்கம் 64-66)

நூல் : அராஜகவாதமா? சோசலிசமா?
ஆசிரியர் : ஸ்டாலின்

வெளியீடு : கீழைக்காற்று.

பக்கங்கள்: 96
விலை: ரூ. 45.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க