பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 2
எங்கெல்ஸ் பிரஷ்ய முடியரசில் ரைன் மாகாணத்தைச் சேர்ந்த பார்மென் என்ற ஊரில் 1820-ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தகப்பனார் ஓர் ஆலைச் சொந்தக்காரர். உயர்நிலைப் பள்ளியில் தமது கல்வியை முடிக்காமலே குடும்ப நிலைமைகளின் நிர்ப்பந்தம் காரணமாக 1838-ல் எங்கெல்ஸ் பிரெமனில் ஒரு வர்த்தக நிலையத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். வர்த்தக விவகாரங்கள் விஞ்ஞான – அரசியல் கல்வியைப் பயில்வதினின்று எங்கெல்சைத் தடுத்து விடவில்லை. உயர்நிலைப் பள்ளியில் இருந்த காலத்திலேயே யதேச்சதிகாரத்தையும் அரசாங்க அதிகாரிகளின் தான்தோன்றித்தனத்தையும் எங்கெல்ஸ் வெறுக்கலானார்.
தத்துவஞானப் பயிற்சி அவரை மேலும் முன்னுக்குக் கொண்டு சென்றது. அந்தக் காலத்தில் ஜெர்மன் தத்துவஞானத்தில் ஹெகலின் போதனை ஆதிக்கம் வகித்தது. எங்கெல்ஸ் ஹெகலைப் பின்பற்றிச் சென்றார். பிரஷ்ய அரசின் சேவகத்தில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஹெகல் யதேச்சாதிகாரத்தனமான பிரஷ்ய அரசை நடப்பில் மெச்சிக் கொண்டாடி வந்தபோதிலும் ஹெகலின் போதனை புரட்சிகரமானது. மனித அறிவின் மீதும் மனித உரிமைகள் மீதும் ஹெகல் நம்பிக்கை கொண்டிருந்தார். உலகம் இடையறாத மாறுதலுக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டது என்பது ஹெகல் தத்துவஞானத்தின் அடிப்படையான ஆய்வுரையாகும்.
இந்தப் பெர்லின் தத்துவஞானியின் சீடர்களிலே, நடப்பு நிலைமையை ஏற்க மறுத்தவர்கள் இருந்தார்கள். நடப்பு நிலைமையை எதிர்த்துப் போராட வேண்டும், நடப்பிலிருந்த அநீதியையும் மேலோங்கியிருந்த தீமையையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதும் முடிவின்றி நிரந்தரமாய் வளர்ந்து செல்வதென்ற அனைத்துலகத்துக்கும் பொதுவான விதியிலே வேர்கொண்டுள்ளது என்ற கருத்தை ஹெகலின் மேற்கூறிய நம்பிக்கையும் ஹெகலின் தத்துவஞானத்தின் மேற்கூறிய அடிப்படை ஆய்வுரையும் இச்சீடர்களின் மனத்திலே உருவாகச் செய்தன.
படிக்க :
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !
எல்லாமே வளர்ச்சியுறுகின்றன என்றால், சில நிறுவனங்கள் மறைந்து அவையிருந்த இடத்தில் வேறு நிறுவனங்கள் அமைகின்றன என்றால், பிரஷ்ய மன்னனின் யதேச்சாதிகாரமோ, ரசிய ஜார் மன்னனின் யதேச்சாதிகாரமோ, மிகப் பெரும்பான்மையோராய் உள்ளவர்களைச் சுரண்டி அற்பசொற்பமான ஒரு சிறுபான்மைக் கூட்டத்தார் செல்வர்களாவதோ, மக்களின்மீது முதலாளி வர்க்கம் ஆதிக்கம் வகிப்பதோ ஏன் நிரந்தரமாக நீடிக்க வேண்டும்? ஹெகலுடைய தத்துவஞானம் ஆன்மாவின் வளர்ச்சியைப் பற்றி, கருத்துக்களின் வளர்ச்சியைப் பற்றிப் பேசிற்று. இந்தத் தத்துவஞானம் கருத்து முதல்வாத ரீதியானது.
ஆன்மாவின் வளர்ச்சியிலிருந்து அது இயற்கையின் வளர்ச்சியையும், மனிதனின் வளர்ச்சியையும், மனித, சமுதாய உறவுகளின் வளர்ச்சியையும் அனுமானித்தது. மார்க்சும் எங்கெல்சும் வளர்ச்சியின் நிரந்தரமான இயக்கப் போக்கு பற்றிய ஹெகலின் கருத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு* முன் சிந்தனைப்படி அமைந்த கருத்துமுதல்வாதக் கருத்தை நிராகரித்து ஒதுக்கி விட்டார்கள். வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனதின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனதைப் பற்றிய விளக்கமே இயற்கையிலிருந்துதான், பருப்பொருளிலிருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்.
ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போலல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனித குலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையிலிருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படையாகப் பொருளாயதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.
மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதிலே மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமுதாய வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய உறவுகளைப் படைக்கிறது. ஆனால், உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்ப சொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம்.
நவீன காலத்திய சமுதாய அமைப்பு முறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது; சோசலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே இலட்சியத்தை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது. சோசலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பதெல்லாம் – சமுதாயச் சக்திகளில் எது நவீன சமுதாயத்தில் தான் வகிக்கும் நிலையின் காரணமாக, சோசலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம்.
அதை இங்கிலாந்தில், பிரிட்டிஷ் இயந்திரத் தொழிலுக்குக் கேந்திரமாயிருந்த மான்செஸ்டரில், எங்கெல்ஸ் அறியலானார். மான்செஸ்டரில் அவர் 1842-ம் ஆண்டில் குடியேறி, தமது தகப்பனார் பங்குதாரராகச் சேர்ந்திருந்த வர்த்தக நிலையத்தில் வேலையில் அமர்ந்தார். அங்கே சும்மா அலுவலகத்தில் எங்கெல்ஸ் உட்கார்ந்துவிடவில்லை. தொழிலாளர்கள் அடைந்து கிடந்த ஆபாசமான சேரிகளில் சுற்றி அலைந்தார். அவர்களின் வறுமையையும் துன்பதுயரங்களையும் கண்கூடாகக் கண்டார். ஆனால் சுயமாகக் கண்டறிவதோடு அவர் நின்றுவிடவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றி ஏற்கெனவே வெளியாகியிருந்த விசயங்களையெல்லாம் அவர் படித்தார்; கைக்கு அகப்பட்ட அதிகாரப் பூர்வமான எல்லா ஆவணங்களையும் அவர் கவனமாகப் பரிசீலித்துப் படித்தார். இப்படிப் பார்த்தவற்றின், படித்தறிந்தவற்றின் பலனாக விளைந்ததுதான் 1845-ம் ஆண்டில் வெளியான இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூல் ஆகும். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்னும் நூலின் ஆசிரியர் என்ற முறையில் எங்கெல்ஸ் ஆற்றிய முக்கியமான பணியைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம்.
(தொடரும்)
*– தங்களுடைய அறிவு வளர்ந்து விரிவடைவதிலே மகத்தான ஜெர்மன் தத்துவ ஞானிகளுக்கு – ஹெகலுகு – தாங்கள் மிகவும் கடன்பட்டிருப்பதாக மார்க்சும் எங்கெல்சும் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். “ஜெர்மன் தத்துவஞானம் இல்லாமல் விஞ்ஞானரீதியான சோசலிசம் தோன்றியேயிருக்காது” என்கிறார் எங்கெல்ஸ்.
நூல் : பிரெடரிக் எங்கெல்ஸ்
ஆசிரியர் : வி.இ.லெனின்
வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ. 15
தொடர்பு : 73 9593 7703