மார்க்ஸ் பிறந்தார் – 25
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

10. மேதையின் அருகில் மற்றொரு மேதை – 2

மார்க்ஸ் கூருணர்ச்சி உடையவர். எனினும் தன்னைக் காட்டிலும் எங்கெல்சைப் பற்றிய விமர்சனமே அவரை அதிகமாகப் பாதித்தது.

கூலிப் பத்திரிகையாளர்களின் தாக்குதலை அவர் அமைதியோடு சகித்துக் கொள்வார், அவற்றுக்குப் பதில் எழுத விரும்பமாட்டார். ஆனால் அது எங்கெல்சின் கெளரவத்தைப் பற்றிய பிரச்சினையாக இருந்தால் மார்க்ஸ் தயவு தாட்சண்ணியமின்றி நடந்து கொள்வார். அவர் உடனே சண்டைக்குக் கிளம்பிவிடுவார்.

1850-இல் முல்லர் – டெல்லெரிங் என்ற பெயர் கொண்ட யாரோ ஒருவர் தொழிலாளர் சங்கத்துக்கு எங்கெல்சை அவதூறு செய்து கடிதம் எழுதிய பொழுது மார்க்ஸ் ஆவேசமடைந்தார். தன்னுடைய ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த நபருக்குப் பின்வருமாறு எழுதினார்:

“நீங்கள் நேற்று தொழிலாளர் சங்கத்துக்கு எழுதிய கடிதத்திற்காக என்னுடன் சண்டைக்கு வரும்படி நான் உங்களுக்குச் சவால் விடுவேன் அதாவது எங்கெல்சைக் கேவலமான முறையில் அவதூறு செய்த பிறகு உங்களால் இன்னும் திருப்தியளிக்க முடியுமானால். உங்களுடைய அற்பமான அக்கறைகளை, உங்களுடைய பொறாமையை, உங்களுடைய அதிருப்தியுற்ற அகம்பாவத்தை, உங்களுடைய மாபெரும் மேதையை உலகம் அங்கீகரிக்கவில்லை என்ற அதிருப்தியில் ஊறிய ஆத்திரத்தை நீங்கள் புரட்சிகரமான வெறி என்ற போலித்தனமான முகமூடிக்குப் பின்னால் இதுவரை வெற்றிகரமாக மறைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த முகமூடியைக் கிழித்தெறிவதற்கு உங்களை வேறொரு களத்தில் சந்திக்கின்ற வாய்ப்பை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்…..”(6)

படிக்க :
மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
சோவியத் ஒன்றியத்தின் சலிப்பூட்டும் வாழ்க்கை !

மார்க்சின் கெளரவத்தைப் பாதுகாக்கின்ற பிரச்சினை என்றால் எங்கெல்சும் இதைப் போலவே நடந்து கொள்வார். அ. லோரியா என்ற கொச்சையான பொருளியலாளர் மூலதனத்தின் கருத்துக்களைத் திரித்துக் கூறுவதை விசேஷமாகச் செய்து கொண்டிருந்தார். எங்கெல்ஸ் அவரை ஆத்திரத்தோடு கண்டனம் செய்தார்.

“கார்ல் மார்க்சைப் பற்றி உங்களுடைய கட்டுரை வந்து சேர்ந்தது. அவருடைய போதனையைப் பற்றி மிகவும் கூர்மையான முறையில் விமர்சனம் செய்வதற்கும் அதைத் தவறாகப் புரிந்து கொள்வதற்கும் கூட உங்களுக்கு உரிமையுண்டு. அவருடைய வாழ்க்கையைப் புனைகதை மாதிரி மாற்றிக் கூறுவதற்கும் உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் என்னுடைய காலஞ்சென்ற நண்பருடைய குணத்தை அவதூறு செய்வதற்கு உங்களுக்கு உரிமை கிடையாது, அப்படிச் செய்வதற்கு நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன்…..”(7)

எங்கெல்ஸ் லண்டனுக்குச் செல்கின்ற பொழுது இரு நண்பர்களும் நேரடியாகச் சந்தித்துக் கொள்வார்கள், மார்க்ஸ் குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். மார்க்சின் பெண் மக்கள் எங்கெல்சை சித்தப்பா என்று அழைப்பார்கள். எங்கெல்ஸ் தன்னலமின்றிப் பல வருடங்கள் உதவி செய்திருக்காவிட்டால் மார்க்சுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்பதைச் சொல்வது கடினம். அவர் தன்னுடைய நண்பரின் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய சொந்த விஞ்ஞான அக்கறைகளை ஒதுக்கி வைத்தார். மார்க்ஸ் இதை நினைத்து எப்பொழுதுமே வருத்தமடைவார்.

1867 ஆகஸ்ட் 16-ம் தேதியன்று அதிகாலையில் இரண்டு மணிக்கு மார்க்ஸ் மூலதனத்தின் முதல் தொகுதியின் அச்சுப்படிகளைத் திருத்தி முடித்தார். உடனே எங்கெல்சுக்குக் கடிதம் எழுதினார்: “இந்தத் தொகுதியின் வேலை முடிந்துவிட்டது. உங்கள் உதவியினால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. உங்களுடைய தியாகம் இல்லையென்றால் மூன்று தொகுதிகளையும் எழுதுவதற்கு அவசியமான ஏராளமான வேலையை என்னால் ஒருபோதும் செய்து முடித்திருக்க இயலாது. நன்றிப் பெருக்குடன் உங்களை நெஞ்சாரத் தழுவுகிறேன்.”(8)

ஆனால் எங்கெல்ஸ் ஒருபோதும் தன்னுடைய விதியைப் பற்றிப் புகார் செய்யவில்லை, வருத்தமடையவில்லை. அவர் தன்னுடைய அலுவலகத்தில் உற்சாகமாக வேலை செய்தார். உலகத்திலேயே அந்த வேலைதான் சிறப்பானது என்று தெரிவிப்பதைப் போல அமைதியாக வாழ்ந்தார்.

எங்கெல்ஸ் உண்மையில் எப்படிப்பட்ட வேதனையை அனுபவித்தார் என்பதை எலியனோர் மார்க்ஸ்-ஏவ்லிங் எழுதியுள்ள நினைவுக் கட்டுரையின் பின்வரும் பகுதியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எங்கெல்சின் “கடுந்தண்டனை” முடிவுக்கு வந்து கொண்டிருந்த பொழுது அந்த அம்மையார் எங்கெல்ஸ் வீட்டுக்கு செல்வதுண்டு.

“அன்று காலையில் அவர் கடைசித் தடவையாக அலுவலகத்துக்குப் புறப்பட்ட பொழுது ‘கடைசித் தடவை!’ என்று சொல்லிக் கொண்டு காலணிகளை அணிந்த நேரத்தில் அவர் முகத்திலிருந்த பிரகாசத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

“அதற்குச் சில மணிநேரத்துக்குப் பிறகு நாங்கள் அவரை எதிர்பார்த்துக் கொண்டு வாயிலில் காத்திருந்தோம். வீட்டுக்கு எதிரிலிருந்த சிறிய வயிலைக் கடந்து அவர் வந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவர் கைத்தடியைக் காற்றில் சுழற்றிக் கொண்டும் பாடிக் கொண்டும் முகத்தில் பரவசத்துடன் வந்து கொண்டிருந்தார். நாங்கள் விருந்துக்கு ஏற்பாடுகளைச் செய்தோம். ஷாம்பேன் மது அருந்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.”

’’அன்று அதைப் புரிந்து கொள்ள முடியாத சின்னப் பெண்ணாக நான் இருந்தேன். இன்று அதை நினைத்துப் பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.”(9)

அதே தினத்தில் எங்கெல்ஸ் தன்னுடைய தாயாருக்குப் பின்வருமாறு எழுதினார். “நான் முற்றிலும் வேறு மனிதனாகிவிட்டேன், என் வயதில் பத்து வருடங்கள் குறைந்துவிட்டன.”(10)

எங்கெல்சிடம் நிறைந்திருந்த உற்சாகமும் உயிர்த்துடிப்பும் ஆற்றலும் தெளிவும் பாசமும் அவரை எல்லோரும் மிகவும் விரும்புகின்ற மனிதராக்கின. மார்க்சின் ஹாம்பர்க் பதிப்பாளர் எழுதிய கடிதம் ஒருநாள் மார்க்சுக்குக் கிடைத்தது. எங்கெல்ஸ் அவரைச் சந்தித்ததாகவும் தான் இதுவரையிலும் சந்தித்தவர்களில் அவர் மிகவும் சிறந்த பண்புடையவர் என்றும் அவர் எழுதியிருந்தார்.

மார்க்ஸ் கடிதத்தைப் படிப்பதை நிறுத்தி விட்டுப் பெருமிதத்தோடு கூறினார்: “பிரெட் (எங்கெல்ஸ் – பர்) எவ்வளவு அறிவாளியோ அவ்வளவு இனிமையானவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத நபரை நான் பார்க்க விரும்புகிறேன்.”(11)

மார்க்சைப் போலவே எங்கெல்சிடமும் அதிகமான நகைச்சுவை உணர்ச்சி இருந்தது. அந்நிய நாட்டில் வாழ்க்கையின் துன்பங்களைச் சகித்துக் கொள்வதற்கு அது உதவியது.

மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதமொன்றில் தனக்கு நோய் ஏற்பட்ட பொழுது பட்ட கஷ்டங்களை வர்ணித்தார், ஆனால் மற்ற சந்தர்ப்பங்கள் எப்படி இருந்தாலும் நம்முடைய நட்பு எவ்வளவு மாபெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்பதை முன்னெப்போதையும் காட்டிலும் மிகவும் அதிகமாக உணர்ந்ததாகவும் வேறு எந்த உறவையும் இவ்வளவு உயர்வானதாகத் தான் மதிக்கவில்லை என்றும் எழுதினார்.

எங்கெல்ஸ் தான் மிகவும் வெறுத்த வர்த்தக நுகத்தடியைத் தூக்கியெறிந்த பிறகு லண்டனுக்குச் சென்று மார்க்சின் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீட்டில் குடியேறினார். நண்பர்கள் அநேகமாக நாள்தோறும் சந்தித்துக் கொண்டனர். எங்கெல்ஸ் பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்த இலக்கியப்படைப்புத் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகின்ற வேலையில் இப்பொழுது கடுமையாக உழைத்தார்.

இயற்கை விஞ்ஞானங்களின் சாதனைகளை இயக்கவியல் ரீதியில் ஒன்றிணைக்கின்ற மாபெரும் திட்டம் அவற்றில் முக்கியமான ஒன்றாகும். 1878-இல் அவர் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு வெளியாயிற்று. இப்புத்தகம் தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞானத் துறைகளில் மிகவும் முக்கியமான பிரச்சினைகளை ஆராய்கிறது என்று லெனின் எழுதினார்.

அவர் பூர்வீக சமூகத்தின் வரலாற்றையும் ஆராய்ந்தார். அவர் எழுதிய குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற புத்தகம் 1884-இல் வெளியிடப்பட்டது.

எங்கெல்ஸ் விஞ்ஞான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதுடன் கட்சி, அமைப்பு ரீதியான வேலைகளிலும் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். அவர் அகிலத்தின் பொதுக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பல நாடுகளுக்குத் தொடர்புச் செயலாளராக இருக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எங்கெல்ஸ் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் புரட்சிகரப் போராட்டத்தின் செய்முறை நோக்கங்களுக்குத் தகவமைப்பதற்கு எப்பொழுதும் முயற்சி செய்பவர். ஆகவே அவர் எதிர்காலத்தை முன்னறிந்து ஸ்லாவ் மொழிகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

மார்க்சும் எங்கெல்சும் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வெற்றிகளைத் தம் காலத்திலேயே கண்டார்கள். ஒவ்வொரு வெற்றியையும் தம்முடைய சொந்த வெற்றியாகக் கொண்டாடினார்கள். ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பொழுது எங்கெல்ஸ் முதுமைப் பருவத்திலிருந்தார். எனினும் அந்தச் சமயத்தில் தன்னுடைய வீட்டில் பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அவர் வீட்டில் விருந்து தயாரித்தார் (எங்கெல்ஸ் “சுவையான உணவு தயாரிக்கக் கூடியவர்”), விசேஷமான ஜெர்மன் பீர் ஒரு மிடா வாங்கினார், தன்னுடைய நெருங்கிய நண்பர்களை அழைத்தார் என்று எட்வார்டு ஏவ்லிங் எழுதினார்.

“ஜெனரல்” ஒவ்வொரு தந்தியையும் பிரித்து அதன் வாசகத்தை உரக்கப் படித்தார்: “அது வெற்றி (தேர்தலில் சமூக-ஜனநாயகவாதிகளுக்கு – ஆசிரியர்) என்றால் நாங்கள் குடித்தோம். அது தோல்வி என்றாலும் நாங்கள் குடித்தோம்.”(12)

மார்க்ஸ் மரணமடைந்த பிறகு எங்கெல்ஸ் சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவரானார். அவரே முழுப் பொறுப்பையும் வகித்தபோதிலும் அவர் முன்பிருந்த மாதிரியே அடக்கமானவராக, ஆர்ப்பாட்டமில்லாதவராக இருந்தார். “என்னுடைய காலஞ்சென்ற சமகாலத்தவர்களுக்கு, எல்லோரையும் காட்டிலும் மார்க்சுக்குக் கிடைக்க வேண்டிய கெளரவம் கடைசியாக எஞ்சியவன் என்ற முறையில் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி முடிவு செய்திருக்கிறது”(13) என்று எங்கெல்ஸ் ஒரு சமயத்தில் கூறினார். எனக்குக் கிடைத்திருக்கும் கெளரவத்துக்குத் தகுதியுடையவன் என்று காட்டிக் கொள்வதற்காக எதிர்காலத்திலாவது பாட்டாளி வர்க்கத்தினுடைய சேவையில் என்னுடைய எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் கழிப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

மார்க்சும் எங்கெல்சும் தமது வாழ்க்கையின் இறுதியில் ருஷ்யா மீது கவனத்தைத் திருப்பினார்கள். எங்கெல்ஸ் பிளெஹானவ், ஸ்குலிச், லபாதின் மற்றும் இதரர்களான சிறந்த ருஷ்ய சோஷலிஸ்டுகளுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார்.

எங்கெல்ஸ் ருஷ்யப் புரட்சியாளர்களுடன் உரையாடுகின்ற பொழுது அவர்கள் மார்க்சின் எழுத்துக்களை மேற்கோள் காட்டினால் மட்டும் போதாது, அவர்களுடைய நிலையிலிருந்தால் மார்க்ஸ் எப்படிச் சிந்தித்திருப்பாரோ அப்படிச் சிந்திக்க முயல வேண்டும் என்று கூறினார். அப்படிச் செய்தால்தான் “மார்க்சியவாதி” என்ற சொல்லை உபயோகிப்பதற்குத் தகுதியுண்டு என்று அவர் நம்பினார். ருஷ்யாவில் ஏற்படப் போகின்ற புரட்சி உலக கம்யூனிஸ்ட் இயக்கம் முழுவதின் விதியில் மாபெரும் பாத்திரத்தை வகிக்கும் என்று அவர் கருதினார். அந்தக் கருத்து சரியாயிற்று.

படிக்க் :
அஜினோமோட்டோ: முதலாளித்துவம் கண்டுபிடித்த எமன்
இருக்கிறவனுக்கு முதலாளித்துவம், இல்லாதவனுக்கு கம்யூனிசமா?

தான் தேர்ந்தெடுத்த பாதை சரியானது, தானும் மார்க்சும் அனைத்துச் சக்தியையும் அர்ப்பணித்த இலட்சியத்துக்கு மகத்தான எதிர்காலம் காத்திருக்கிறது என்று உறுதியாக நம்பிய எங்கெல்ஸ் வாழ்க்கையை மிகவும் நேசித்தது நியாயமானதே. அவர் ஏராளமான சுமைகளைத் தாங்கியபோதிலும் அவருடைய வாழ்க்கை அவரைப் போலவே ஒருங்கிணைந்ததாக, அழகு மிக்கதாகப் பொலிந்தது.

மார்க்ஸ் மரணமடைந்த பிறகு மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை முடிப்பது அவருடைய முக்கியமான பணியாயிற்று. அவர் எழுதிக் கொண்டிருந்த இயற்கையின் இயக்க இயல் என்ற புத்தகம் தொடர்பான வேலைகளை நிறுத்தி விட்டு – அந்தப் புத்தகம் முடிக்கப்படவே இல்லை – தன்னுடைய நண்பரின் புத்தகத்தைப் பிரசுரத்துக்குத் தயாரிக்கின்ற வேலையைத் தொடங்கினார். அவர் இந்த மாபெரும் பணியைத் தன்னுடைய மரணத்துக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் முடித்தார். அவருடைய ஆராய்ச்சியில் எப்பொழுதும் இருக்கின்ற கடும் உழைப்பு, கறாரான கவனம், பூரணத்துவம் இந்தப் பணியிலும் இருந்தன.

ஆகவே மூலதனம் இரண்டு மேதைகளின் சாதனையாகும். மனிதகுலம் இத்தகைய ஆன்மிக சக்தியைக் கொண்ட ஒரு நூலை, அதன் பிற்கால கதிப்போக்கு முழுவதிலும் மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கின்ற நூலை ஒருபோதும் அறிந்ததில்லை.

*****

மூலதனம் எப்படி, எந்த நிலைமைகளில் எழுதப்பட்டது என்பது இப்பொழுது நமக்குத் தெரியுமாதலால், இந்த மிகச் சிறப்பான புத்தகத்தைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் எழுதுவோம். கலப்பற்ற பொருளாதாரப் பிரச்சினைகளே ஒதுக்கிவிட்டு புதிய, உண்மையிலேயே விஞ்ஞான ரீதியான உலகக் கண்ணோட்டத்தின், இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத் தத்துவஞானத்தின் மிக முழுமையான வடிவமாக இப்புத்தகம் எப்படி இருக்கிறது என்பதை அறிய முயலுவோம்.

குறிப்புகள்:

(6) Marx, Engels, Werke, Bd. 27, Berlin, 1965, S. 526.
(7) Marx, Engels, Werke, Bd.36, S. 19.
(8) Marx, Engels,Selected Correspondence, p. 18.
(9) Reminiscences of Marx and Engels, pp. 185-86.
(10) Marx, Engels, Werke, Bd. 32, Berlin, 1965, S. 167.
(11) Reminiscences of Marx and Engels, p. 91.
(12) Reminiscences of Marx and Engels, p. 316.
(13) Marx, Engels, Werke, Bd. 37, Berlin, 1967, S. 513.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய 24 பாகங்களை படிக்க:

மார்க்ஸ் பிறந்தார் வரலாற்றுத் தொடர்


இதையும் பாருங்க …

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க