பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் (MAP) : இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத் திமிருக்கு ஓர் எதிர்வினை ! – பாகம் – 01

காலாபாணி பகுதியைத் தனக்குச் சொந்தமான பகுதியாக இந்தியா புதிய அரசியல் வரைபடத்தில் (மேப்) வெளியிட்டதை எதிர்த்து இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், தனது நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை ஏற்கெனவே கடந்த 2020 மே 20-ம் தேதியன்று வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியன்று பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளார். ஜம்மு – காஷ்மீரின் சிறப்புத் தகுதியை கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி இந்திய அரசு நீக்கியதன் ஓராண்டு நிறைவடைவதால், இந்த முடிவை அறிவித்துள்ளதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இது, “அரசியல் அடிமுட்டாள்தனம்”, “இத்தகைய முடிவுகள் சட்டபூர்வத் தகுதியையோ, சர்வதேச அருகதையையோ கொண்டிருக்கவில்லை” என்று இந்திய அரசு பாகிஸ்தானின் இந்தப் புதிய அரசியல் வரைபடத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதியளிக்கும் 370-வது சட்டப் பிரிவை நீக்கி, அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2019 நவம்பர் 2-ஆம் தேதியன்று இந்திய அரசு புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டது. அதில், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரப் பகுதிகளை ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடன் – அதாவது, இந்தியாவுடன் – இணைத்துக் காட்டியது. மேலும், பாகிஸ்தானின் நிர்வாகத்தின் கீழுள்ள கில்ஜித் – பல்டிஸ்தான் பகுதிகளையும் லடாக் யூனியன் பிரதேசத்துடன் – அதாவது, இந்தியாவுடன் – இணைத்துக் காட்டியது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலே, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதி நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையும் தருணத்தில், ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒருநாள் முன்னதாக, 2020 ஆகஸ்ட் 4 -ஆம் தேதியன்று தனது நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. இந்த வரைபடத்தில், இந்தியா தனது ஆதிபத்திய உரிமையாகக் காட்டிக் கொள்ளும் ஜம்மு – காஷ்மீர், ஆசாத் காஷ்மீர், கில்ஜித் – பல்டிஸ்தான், லடாக் ஆகிய பகுதிகள் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஜம்மு – காஷ்மீர் பகுதியை “இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதி” என்று இந்த வரைபடம் குறிப்பிடுகிறது. இது தவிர, ஜுனாகத், சர் கிரீக் ஆகிய பகுதிகளையும் பாகிஸ்தான் தனது ஆதிபத்திய உரிமையுள்ள பகுதியாகக் குறிப்பிட்டுள்ளது.

படிக்க:
மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! | தோழர் ராஜூ உரை

காஷ்மீர் விவகாரம் என்ன என்பதைப் பற்றியும், 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதைப் பற்றியும், தற்போது ஜம்மு – காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பற்றியும் வாசகர்கள் ஏற்கெனவே அறிந்ததுதான். இருப்பினும், தற்போதைய பாகிஸ்தானின் அரசியல் வரைபடத்தில் ஜுனாகத், சர் கிரீக் ஆகிய பகுதிகள் பாகிஸ்தானுக்குச் சொந்தமானவையாகக் காட்டப்பட்டிருக்கிறது. தற்போது இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமான ஜுனாகத் பகுதியை, பாகிஸ்தான் தனது நாட்டின் ஆதிபத்திய உரிமையுள்ள பகுதியாக, தனது வரைபடத்தில் ஏன் காட்ட வேண்டும்?

ஜுனாகத் விவகாரம் என்பது என்ன?

ஜுனாகத் என்பது, அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சிக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்த 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது, தற்போதைய குஜராத் மாநிலத்தின் தென்கோடி முனையில் – கத்திவார் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 200 ஆண்டுகளாக முஸ்லிம் நவாப்களின் கீழ் இச்சமஸ்தானம் இருந்தது. இருப்பினும், இச்சமஸ்தானத்தில் பெரும்பான்மையினர் இந்துக்களாவார்கள். கஜினி முகம்மதுவால் பலமுறை படையெடுத்துச் சூறையாடப்பட்ட பிரபல சோமநாதர் கோயில், ஜூனாகத் பகுதியில்தான் உள்ளது.

போலி சுதந்திரத்தின் போது, பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்குக் கட்டுப்பட்டுக் கப்பம் கட்டிக் கொண்டிருந்த சமஸ்தானங்கள், இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணையலாம்; அல்லது தனி நாடாக நீடிக்கலாம் என்று முடிவாகியது. இதன்படி, ஜூனாகத்தின் நவாப்-ஆக இருந்த மூன்றாவது முகம்மது மகாபட்கான் ரசூல்கான் ஜி, இச்சமஸ்தானத்தைப் பாகிஸ்தானுடன் இணைக்கத் தீர்மானித்தார். அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுண்ட்பேட்டன் கூறிய ஆலோசனையை – அதாவது, பாகிஸ்தானை ஒட்டியுள்ள சமஸ்தானமாக இருந்தால் அதனுடன் இணையலாம்; ஆனால், ஜுனாகத் சமஸ்தானமானது மூன்று பக்கமும் இந்தியாவுடன் இணைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுடன் இணைவது பொருத்தமானதாக இருக்காது என்ற ஆலோசனையை – அவர் நிராகரித்தார். செப்டம்பர் 15, 1947 அன்று பாகிஸ்தானுடன் இச்சமஸ்தானத்தை ஜூனாகத் நவாப் இணைத்தார்.

போலி சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான இந்திய அரசானது, ஜுனாகத் சமஸ்தானத்தைப் பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஜுனாகத்துக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடி தரைவழி இணைப்பு இல்லை; ஒரே வழி, கடல் வழி மட்டும்தான் என்பதால், பூகோள ரீதியாகவும் இது பொருத்தமான முடிவு அல்ல என்று இந்திய ஆட்சியாளர்கள் நைச்சியமாக வாதிட்டனர்.

பாகிஸ்தானின் தேசத்தந்தையாகச் சித்தரிக்கப்படும் முகம்மது அலி ஜின்னா, இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே நாடாக இணைந்திருக்க இயலாது என்று வாதிட்டதால், அதைக் காட்டி பெரும்பான்மை இந்துக்களாக உள்ள ஜூனாகத் பகுதியானது, இந்துக்கள் நிறைந்துள்ள இந்தியாவுடன்தான் சேர வேண்டும் என்று இந்திய அரசு நியாயவாதம் பேசியது. இந்த வாதப்படி பார்த்தால், ஜம்மு – காஷ்மீர் பிராந்தியமானது பாகிஸ்தானுடன்தான் இணைந்திருக்க வேண்டும். அங்கு முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையினர். ஆனால், காஷ்மீரின் மன்னர் ஹரிசிங் இந்து மன்னர் என்பதால், அவர் விரும்பியபடி இந்தியாவுடன் காஷ்மீர் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது.

இந்நேரத்தில், இச்சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் குறுநில மன்னர்களாக இருந்த பாபாரிவாத் மன்னரும், மங்க்ரோல் ஷேக்கும் இந்திய அரசின் தூண்டுதலால், தங்களுக்கு ஜுனாகத் சமஸ்தானத்திலிருந்து விடுதலை வேண்டும் என்றும், தங்கள் பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்றும் கோரினர். இதைச் சாதகமாக்கிக் கொண்டு, அப்போதைய இந்திய அமைச்சர் வி.பி. மேனன், ஜுனாகத் நவாப்-இடம் இந்தியாவுடன் இணைந்துவிடுமாறும், இல்லையேல் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் அச்சுறுத்தினார். மறுபுறம், பாகிஸ்தானுடன் இணைந்தால் ஜுனாகத்திலும் சௌராஷ்டிரா பிராந்தியத்திலும் மதவெறிக் கலவரங்கள் மூளும் என்று அப்போதைய உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேல் ஜுனாகத் சமஸ்தான நவாப்-ஐ எச்சரித்தார். இருப்பினும், இவற்றுக்குப் பணியாமல், பாகிஸ்தானுடன் ஜுனாகத்தை இணைப்பதாக நவாப் அறிவித்தார்.

ஜுனாகத் நவாப்-இன் முடிவைத் தொடர்ந்து, அப்போதைய இந்திய அமைச்சர் வி.பி.மேனனின் ஆலோசனைப்படி, இந்தியாவின் தேசத்தந்தையாகச் சித்தரிக்கப்படும் காந்தியின் பங்காளி வாரிசான சாமல்தாஸ் காந்தி, இந்திய அரசின் துணையுடன் 1947 செப்டம்பரில் பம்பாயில் ஜுனாகத்துக்கான இடைக்கால அரசை உருவாக்கினார். இந்த இடைக்கால அரசானது, இப்பகுதிவாழ் மக்களது விருப்பத்தின் தன்னெழுச்சியான வெளிப்பாடு என்று பாகிஸ்தான் அரசுக்கு இந்தியாவின் முதலாவது பிரதமரான நேரு கடிதம் எழுதினார்.

பின்னர் இந்திய அரசின் ஏற்பாட்டின்படி, இந்த இடைக்கால அரசானது, ஜுனாகத் சமஸ்தானப் பகுதிகளை அதிரடியாகக் கைப்பற்றிக் கொண்டு, சில இடங்களில் சூறையாடல் வன்முறைகளையும் ஏவியது. இத்தகைய அராஜகங்களைத் தடுத்து நிறுத்த நேரு அரசு முன்வரவேண்டும் என்று அப்போதைய பாகிஸ்தான் அரசு வேண்டுகோள் விடுத்தது. இருப்பினும், இந்த இடைக்கால அரசுக்கு இந்திய அரசு எவ்வகையிலும் உதவிகள் செய்யவில்லை என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நேரு அரசு கூசாமல் புளுகியது.

மங்க்ரோல், பாபாரிவாத் ஆகிய குறுநில மன்னர்களின் பிரதேசங்கள் இந்தியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. ஜுனாகத்தை இந்தியத் துருப்புகள் முற்றுகையிட்டன. நவாப் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திக்கும் வகையில், இந்திய அரசானது அந்த சமஸ்தானத்துக்குச் சரக்குப் போக்குவரத்து, அஞ்சல், விமானத் தொடர்பு முதலானவற்றைத் துண்டித்ததோடு, விறகு முதலான எரிபொருட்களுக்கும் தடை விதித்தது. ஜுனாகத் பகுதியில் கொலைகள், கற்பழிப்புகள், சூறையாடல்கள் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. பல முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குத் தப்பியோடினர். ஜுனாகத் மக்களுக்கும் இந்தியப் படைகளுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்த நிலையில், ஜுனாகத் நவாப் அக்டோபர் 26 அன்று குடும்பத்தோடு பாகிஸ்தானிலுள்ள கராச்சிக்குத் தப்பியோடி, அங்கு ஒரு இடைக்கால அரசை அமைத்துக் கொண்டார்.

பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், நவம்பர் 10,1947 அன்று நேரு அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், உங்கள் அரசானது ஜுனாகத் நிர்வாகத்தை ஏற்று நடத்துவதும், இந்தியத் துருப்புகளை அனுப்புவதும் பாகிஸ்தானுக்கே தெரியாமல், அதன் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டுள்ள செயலாகும். இது, அனைத்துலகச் சட்டத்திற்கு எதிரானதோடு, பாகிஸ்தானின் பிராந்தியத்தை அத்துமீறிக் கைப்பற்றும் செயலாகும் என்று சாடினார்.

படிக்க:
கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !
ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி.. | மக்கள் அதிகாரம் பாடல் !

முறைப்படி யார் உரிமை பெற்ற ஆட்சியாளரோ அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்து, அதன் பிறகு கருத்துக் கணிப்புத் தேர்தலை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியது. கருத்துக் கணிப்புத் தேர்தலுக்கு முன்பாக, இந்தியப் படைகளை முற்றாக விலக்கிக் கொள்ள வேண்டுமென நிபந்தனை விதித்தது. ஆனால், இந்தியா இதனை ஏற்க மறுத்தது.

வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு (a Biography of Vallabhbhai Patel (1875–1950)) எனும் நூலை எழுதியுள்ள காந்தியின் பேரனாகிய ராஜ்மோகன் காந்தி, இதைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசு இச்சமஸ்தானத்தின் நிர்வாகப் பொறுப்பேற்று, பிப்ரவரி 20,1948-இல் கருத்துக் கணிப்புத் தேர்தலை நடத்தியது. ஆனால் எந்தவொரு சர்வதேசப் பார்வையாளரும் இத்தேர்தலைக் கண்காணிக்கவில்லை. இத்தேர்தலில் 99.95 சதவீதத்தினர் இந்தியாவுடன் இணைவதற்கு வாக்களித்தனர். சமஸ்தான நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து நிர்பந்தத்தை ஏற்படுத்தியும், இந்துக்களை இந்தியாவுடன் இணைய வேண்டுமெனப் பல்வேறு வழிகளில் ஆசைகாட்டியும் இந்தத் தேர்தல் நாடகம் நடத்தப்பட்டது. ஜனநாயக முறைப்படியும், சட்டபூர்வமாகவும் ஜுனாகத் சமஸ்தானப் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாக இந்திய அரசு அறிவித்தது.

இதற்கெதிராக ஐ.நா. மன்றத்தில் 1948-ல் பாகிஸ்தான் அரசு ஜுனாகத் விவகாரத்தை முன்வைத்தது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலானது, தனது சிறப்புக் கமிசன் (குழு) மூலம் காஷ்மீர் விவகாரத்துடன் சேர்த்து ஜுனாகத் விவகாரத்தையும் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. இருப்பினும், காஷ்மீர் விவகாரமானது முக்கியத்துவம் பெற்றதாக மாறிவிட்டதால், ஜுனாகத் விவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்னமும் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் ஜுனாகத் விவகாரம் தீர்க்கப்படாத விவகாரமாகவே நீடிக்கிறது.

பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்திலேயே, இந்திய ஆளும் வர்க்கங்கள் அகண்ட பாரதக் கனவுடன், தெற்காசியாவில் ஏகாதிபத்திய விசுவாச துணை வல்லரசாக வளர்வது என்ற நோக்கத்துடன்தான் செயல்பட்டன. 1940-களிலிருந்தே பிரிட்டனுடன் சேர்ந்து காஷ்மீர், நேபாளம், பூடான், சிக்கிம், வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களைத் தமது பாரம்பரிய உரிமையாகக் காட்டி, அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் அகண்ட பாரத நோக்கத்துடன்தான் இயங்கின. 1947-க்குப் பின்னர், கம்யூனிச எதிர்ப்பும், ஏகாதிபத்திய வல்லரசுகளுக்குத் தொண்டூழியம் செய்து தெற்காசியப் பிராந்தியத்தில் மேலாதிக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதாக, புதிய இந்திய அரசினுடைய வெளியுறவுக் கொள்கை அமைந்தது. அதிகார மாற்றத்திற்குப் பின்னர், இந்தியாவில் பல்வேறு சமஸ்தானங்கள் எவ்வாறு நைச்சியமாகவும், அச்சுறுத்தியும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டனவோ, அதேபோலத்தான் ஜுனாகத் சமஸ்தானமும் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டது.

தெலுங்கான மக்கள் போராட்டத்தைக் காரணம் காட்டி அச்சுறுத்தியும், இந்திய அரசின் உயர் பதவிகள் தருவதாக ஆசைகாட்டியும், இந்தியப் படைகளைக் கொண்டு முற்றுகையிட்டு எச்சரித்தும் ஐதராபாத் சமஸ்தானம் எவ்வாறு இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டதோ, அதேபோலத்தான் ஜுனாகத்திலும் நடந்தது. ஒரு வேறுபாடு என்னவென்றால், ஜுனாகத்தில் கருத்துக் கணிப்புத் தேர்தல் நாடகம் நடத்தப்பட்டு, ஆகப் பெரும்பான்மை மக்களின் முடிவுப்படி சட்டபூர்வமாக இந்தச் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்படுவதாக ஜனநாயக நாடகம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.

ஜுனாகத் பிராந்தியமானது இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அன்றைய பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியான சௌராஷ்டிரா மாகாணத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1956 நவம்பர் முதல் நாள் வரை இருந்தது. 1960-இல் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, குஜராத் தனி மாநிலமாகவும், பம்பாயைத் தலைநகராகக் கொண்ட மகாராஷ்டிரா தனி மாநிலமாகவும் மாறின. தற்போது ஜுனாகத், குஜராத்தின் சௌராஷ்டிரா பிராந்தியத்தின் ஒரு முக்கிய மாவட்டமாக அமைந்துள்ளது.

– தொடரும்

புதியவன்

2 மறுமொழிகள்

  1. இந்திய பாகிஸ்தான் பிரிவினை இரு தேசங்களின் உருவாக்கம் குறித்து உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்களால் எழுதப்பட்ட நிறைய நூல்கள் மற்றும் கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ளன. இந்த மாதிரி புதியவன் பழையவன் ஆகியோரால் தமிழ் மொழியில் எழுதப்படும் அரைகுறை உண்மைகளை கொண்ட கட்டுரைகளால் யாருக்கு என்ன பலன் என தெரியவில்லை. அரசியல் பண்ணுபவர்களுக்கு அரிப்பு எடுத்தால் சொரிந்து கொள்ள இம்மாதிரியான ஆட்களின் கட்டுரைகள் உதவும். அவ்வளவுதான்.

    • பெரியசாமி சார்,

      இதுக்குப்பதிலா, உங்களுக்கு ‘அறிவு’ அரிப்பெடுத்து அதுக்கு நீங்க சொரிஞ்சுகிடுறதுக்காக படித்த கட்டுரைகளையோ அல்லது புத்தகங்களயோ குறிப்பிட்டு, இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களுக்கு எதிர்வாத கருத்துக்களைச் சுட்டிக்காட்டியிருந்தால், இந்தக்கட்டுரையைப் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருந்துருக்கும்.

      வெறுமனே நீங்க தணியா சொரிஞ்சுக்கிறதை ஒரு கருத்தா எழுதி, எல்லா வாசகர்களோட ஒரு நிமிடத்தை வீணாக்குறது எந்த விதத்துல சரியானது?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க