செப்டெம்பர் 9, 2020 – தோழர் மாவோவின் 44-வது நினைவு தினம் இன்று. மார்க்சியத்தின் அடிப்படைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஜனநாயக மத்தியத்துவம், விமர்சனம் – சுயவிமர்சனம் ஆகிய பெரும் ஆயுதங்களைக் கொண்டு இடது, வலது சந்தர்ப்பவாதங்களுக்கு எதிராகப் போராடி புரட்சியை சாதிக்கவல்ல எஃகுறுதிமிக்க ஒரு கட்சியைக் கட்டியமைத்தார் லெனின். விளைவு – ரசியாவில் சோசலிசப் புரட்சி நடந்தது.

உலகின் முதல் சோசலிச நாடான ரசியா, தோழர் ஸ்டாலினின் தலைமையில் ஏகாதிபத்தியங்களின் நேரடியான மற்றும் மறைமுக தாக்குதல்களை ஒருபக்கம் எதிர்கொண்டு, மறுபுறத்தில் கட்சிக்குள் எழுந்த திருத்தல்வாத, வலது சந்தர்ப்பவாத  சித்தாந்தங்களையும் எதிர்கொண்டு அவற்றுக்கு எதிராகப் போராடியது.  இந்தப் போராட்டங்களின் அனுபவங்களையும், மார்க்சிய லெனினிய சிந்தனைகளையும் வரித்துக் கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியை போல்ஷ்விக் மயமாகக் கட்டியமைத்தார் தோழர் மாவோ.

சீனாவின் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், சீன மக்களின் பண்பாட்டு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு கட்சி ஸ்தாபனத்தில் வரும் பிரச்சினைகள், கட்சிக்குள் நிலவும் தவறான போக்குகள், ஊழியர்களுக்கும்  தலைவர்களுக்கும் இடையிலான சிக்கல்கள் ஆகியவற்றை பகுத்தாய்ந்து அவற்றைக் கலைவதற்கான வழிமுறைகளை தோழர் மாவோ முன் வைத்தார்.

கட்சியில் நிகழும் பிளவுகள், குழப்பங்கள் உள்ளிட்ட எதுவும் ஒரிரு நாட்களில் தோன்றிவிடுவதில்லை. அவை வலது இடது சந்தர்ப்பவாதப் போக்கு மெது மெதுவாக  கட்சிக்குள் வேரூன்றி வளர்ந்து, ஒரு சமயத்தில் வெடிக்கும்போதுதான் கட்சியில் பிளவுகளும் குழப்பங்களும் விளைகின்றன. அதனைத் தவிர்ப்பதற்கு இருக்கும் ஒரே வழிமுறை எப்போதும் கறாராக தாராளவாதத்திற்கு எதிராக போர் தொடுப்பதும், விமர்சன சுயவிமர்சன முறையைப் பின்பற்றுவதும்தான்!

மேல்கமிட்டியோ, கீழ் கமிட்டியோ எதுவாக இருந்தாலும், மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் இருந்து தோழர்களின் திசைவிலகலைக் கண்டதும், அதனோடு எக்காரணம் கொண்டும் சமரசம் மேற்கொள்ளாமல், அதற்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை பின்வரும் கட்டுரையில் விவரிக்கிறார் தோழர் மாவோ !

தாராளவாதத்திற்கு எதிராக அணிதிரண்டு அதனை எதிர்த்து முறியடிப்போம் !
தோழர் மாவோவின் சிந்தனையை எங்கும் எப்போதும்  உயர்த்திப்பிடிப்போம் !!

– வினவு

***

தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக !

நாம் ஊக்கமான சித்தாந்தப் போராட்டத்துக்காக நிற்கிறோம். காரணம், அது கட்சிக்குள்ளும் புரட்சிகர ஸ்தாபனங்களுக்குள்ளும் ஐக்கியத்தை உருவாக்கவும் அவற்றைப் போராடத் தகுதியுள்ளவைகளாக்கவுமான ஆயுதமாக மாற்றவும் உதவுகிறது. ஒவ்வொரு கம்யூனிஸ்டும், புரட்சிவாதியும் இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தாராளவாதம், சித்தாந்தப் போராட்டத்தை மறுத்து, கோட்பாடற்ற சமாதானத்துக்காக நிற்கிறது. இதன் விளைவாக உலுத்துப் போன பண்பற்ற மனோபாவம் தோன்றி, கட்சியிலும் புரட்சிகர ஸ்தாபனங்களிலும் உள்ள சில அமைப்புகளையும் தனி நபர்களையும் அரசியல் ரீதியில் சீரழிக்கிறது.

தாராளவாதம், பல்வேறு வழிகளில் வெளிப்படுகின்றது. ஒருவர் தவறிழைத்துவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தும், நீண்டகாலம் பழகியவர், சக ஊரவர், சக மாணவர், நெருங்கிய நண்பர், அன்பிற்குரியவர், பழைய சக ஊழியர் அல்லது பழைய கீழ்ப்பணியாளர் என்ற காரணத்தால் அவருடன் கோட்பாடு ரீதியில் வாதிடுவதற்கு மாறாக, சமாதானத்துக்காகவும் நட்புக்காகவும் விஷயங்களை நழுவவிடுவது அல்லது, சுற்றிலும் நெருக்கம் நீடிக்க வேண்டி முழுமையான தீர்வு காண்பதற்கு பதில் லேசாகத் தொட்டுவிடுவது இதன் விளைவாக ஸ்தாபனத்துக்கும் தனி நபருக்கும் தீங்கு விளைவிக்கப்படுகின்றது. இது தாராளவாதத்தின் முதலாவது வகை.

ஸ்தாபனத்துக்குத் தனது யோசனைகளை ஊக்கமாக முன் வைப்பதற்குப் பதிலாக முதுகுக்குப் பின் பொறுப்பற்ற விமர்சனத்தில் ஈடுபடுவது நபர்களது முகங்களுக்கும் முன் ஒன்றும் சொல்லாமல், அவர்களது முதுகுகளுக்குப் பின் வம்பளப்பது, கூட்டத்தில் ஒன்றும் பேசாமல் அது முடிந்த பின் வம்பளப்பது, கூட்டு வாழ்வுக் கோட்பாடுகளைச் சற்றும் பொருட்படுத்தாமல், தனது சொந்த விருப்பப்படி நடப்பது – இது இரண்டாவது வகை.

படிக்க:
நூல் அறிமுகம் : நமது படிப்பைச் சீர்செய்வோம் | மா சே துங்
லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !

தன்னைப் பாதிக்காத விஷயங்களை அலமாரியில் வைத்துவிடுவது தெளிவாகத் தவறானவை என்று தெரிந்தவை பற்றி, இயன்ற அளவு சொற்பமாகப் பேசுவது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனது குறைபாடுகளைக் கண்டு விமர்சிப்பார்களே என்று அதிலிருந்து தப்புவதற்காகவும் எச்சரிக்கையாக இருந்துவிடுவது – இது மூன்றாவது வகை

கட்டளைகளுக்குப் (முடிவுகளுக்கு) பணிந்து ஒழுகாமல் தனது சொந்தக் கருத்துகளுக்கு எல்லாவற்றுக்கும் மேலான இடத்தைத் தருவது; ஸ்தாபனத்திலிருந்து விசேஷ சலுகை கோருவது; ஆனால் அதன் கட்டுப்பாட்டை நிராகரிப்பது – இது நாலாவது வகை.

ஐக்கியத்துக்காக அல்லது முன்னேற்றத்துக்காக அல்லது வேலையைச் சிறப்பாகச் செய்வதற்காக, தவறான கருத்துக்களை எதிர்த்துப் போராட்டங்களிலும் விவாதங்களிலும் ஈடுபடுவது என்பதற்குப் பதிலாக தனிநபர் தாக்குதல் தொடுப்பது; சண்டை சச்சரவுகள் செய்வது; சொந்தக் குரோதங்களைக் கொட்டித் தீர்ப்பது; அல்லது பழி வாங்குவது – இது ஐந்தாவது வகை.

தவறான கருத்துக்களைக் கேட்டதும் அவற்றை மறுத்துரைப்பதில்லை. எதிர்ப் புரட்சிவாதிகளது கூற்றுகளைக் கேட்டாலும் அதனைக் கட்சிக்குத் தெரிவிப்பதில்லை; மாறாக ஒன்றும் நடக்காதது போல அவற்றை அமைதியாகக் கேட்டு சகித்துக் கொள்வது இது ஆறாவது வகை.

மக்கள் மத்தியில் இருந்தும் கிளர்ச்சிப் பிரச்சாரம் செய்யாமல் இருப்பது அல்லது சொற்பொழிவுகள் ஆற்றாமல் இருப்பது – அவர்கள் மத்தியில் பரிசீலனைகளும் விசாரணைகளும் நடத்தாமல் இருப்பது – மக்களிடம் பாராமுகமாகவும், அவர்களது இன்ப துன்பங்களில் கவலை இல்லாமலும், தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதை மறந்து கம்யூனிஸ்ட் அல்லாதவரைப் போல் நடந்து கொள்வது – இது ஏழாவது வகை.

மக்களின் நலன்களுக்கு ஒருவர் தீங்கு விளைவிக்கக் கண்டும், ஆத்திரமடையாமல் அவருக்கு அறிவுரை கூறாமல் அல்லது அவரைத் தடுக்காமல் அல்லது அவருடன் நியாயம் கூறி வாதிடாமல், தொடர்ந்து அப்படிச் செய்ய அவரை அனுமதிப்பது – இது எட்டாவது வகை.

வரையறையான திட்டமில்லாமல், திசையில்லாமல் அரைமனதுடன் வேலை செய்வது, அக்கறையின்றி ஏனோ தானோ என்று வேலை செய்வது, ‘பூசாரியாக இருக்கும் வரை மணியடித்துக் கொண்டிருப்போம்’ என்று செயல்படுவது – இது ஒன்பதாவது வகை.

புரட்சிக்குத் தான் பெரும் சேவை செய்வதாகக் கருதிக் கொண்டு, தான் பெரும் அனுபவசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்வது, பெரிய பணிகளுக்குத் தகுதியில்லாமல் இருந்து கொண்டே சிறிய பணிகளை அவமதிப்பது – வேலையில் அசட்டையாகவும், படிப்பில் அக்கறையில்லாமலும் இருப்பது – இது பத்தாவது வகை.

தனது சொந்தத் தவறுகளை அறிந்திருந்தும், அவற்றைத் திருத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் தன்னைப் பொறுத்துத் தாராளவாதத்தை மேற்கொள்ளுதல் – இது பதினோராவது வகை.

நாம் மேலும் கூறிக்கொண்டே போகலாம். ஆனால், இந்தப் பதினொன்றுமே பிரதானமானவை. இவை அனைத்தும் தாராளவாதத்தின் வெளிப்பாடுகள்.

புரட்சிகர அமைப்புகளில் தாராளவாதம் என்பது பெருந்தீங்கு விளைவிக்கும் அது ஒற்றுமையை அரித்துத் தின்னும்; ஒருமைப்பாட்டுக்கு குழி பறிக்கும்; வேலையில் ஊக்கமின்மையை ஏற்படுத்தும்; வேற்றுமையை விதைக்கும். இது புரட்சிகர அணிகளில் உள்ள கட்டுக்கோப்பான ஸ்தாபன அமைப்பையும், கண்டிப்பான கட்டுப்பாட்டையும் அழித்துவிடும்; கொள்கைகள் முழுமையாக அமல் நடத்தப்படுவதைத் தடுக்கும்; கட்சியின் தலைமையில் உள்ள மக்களிடமிருந்து கட்சி ஸ்தாபனங்களைப் பிரித்துவிடும். இது மிகவும் தீமையான ஒரு போக்காகும்.

படிக்க:
♦ மாமேதை லெனின் : அறிவாளிகளின் அந்தரங்கம் || லெனின் – தலைவர்! தோழர்! மனிதர்!
♦ சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது. இதனால் சிந்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும், ஸ்தாபன ரீதியிலும் தாராளவாதம் தோன்றுகிறது.

தாராளவாதிகள் மார்க்சியக் கோட்பாடுகளைப் பொதுப்படையான வறட்டுச் சூத்திரங்களாகக் கருதுகின்றனர். அவர்கள் மார்க்சியத்தை அங்கீகரிக்கின்றனர்; ஆனால் அதனை அனுஷ்டிக்க அல்லது முழுமையாக அனுஷ்டிக்கத் தயாராக இல்லை; தங்களது தாராளவாதத்துக்குப் பதிலாக அதன் இடத்தில் மார்க்சியத்தை வைக்க அவர்கள் தயாராக இல்லை.

அந்த நபர்களிடம் மார்க்சியமும் இருக்கிறது; அதே வேளையில் தாராளவாதமும் இருக்கிறது. அவர்கள் மார்க்சியம் பேசுகின்றனர்; ஆனால் தாராளவாதத்தை அனுஷ்டிக்கின்றனர். பிறருக்கு மார்க்சியத்தையும் தங்களுக்கு தாராளவாதத்தையும் பிரயோகிக்கின்றனர். அவர்கள் இரண்டு விதமான சரக்குகளையும் இருப்பில் வைத்துக் கொண்டு இரண்டுக்கும் உபயோகம் காண்கின்றனர். இப்படித்தான் சில நபர்களின் மூளைகள் வேலை செய்கின்றன.

தாராளவாதம் என்பது சந்தர்ப்பவாதத்தின் ஒரு வெளிப்பாடு, மார்க்சியத்திற்கு அது அடிப்படையில் முரண்பாடானது. இது ஊக்கமற்ற (செயலற்ற) தன்மை உடையது. யதார்த்தத்தில் எதிரிக்கு உதவும் விளைவு கொண்டது. எனவேதான் அது நம் மத்தியில் இருப்பதை எதிரி வரவேற்கிறான். அதன் இயல்பு இப்படி இருப்பதால் புரட்சி அணிகளில் அதற்கு இடமே இருக்கக்கூடாது. செயலூக்கமற்ற தாராளவாதத்தை வெல்ல மார்க்சியத்தின் செயலூக்கமுள்ள உணர்வையும் உபயோகிக்க வேண்டும். ஒரு கம்யூனிஸ்ட் ஒளிவு மறைவில்லாது பேசுபவராக, விசுவாசமுள்ளவராக செயலூக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களைத் தனது சொந்த உயிரைவிட மேலானதாகக் கருத வேண்டும். தனது தனிநபர் நலன்களைப் புரட்சியின் நலன்களுக்கு உட்படுத்த வேண்டும்.

எங்கும், எப்போதும் அவர் சரியான கோட்பாடுகளின் வழி ஒழுகி எல்லாத் தவறான கருத்துகளுக்கும் செயல்களுக்கும் எதிராகச் சலியாத போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு கட்சியின் கூட்டு வாழ்வை ஸ்திரப்படுத்தி, கட்சிக்கும் பொது மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒரு தனிநபரைக் காட்டிலும் கட்சியிலும் மக்களிடத்திலும் கூடுதலான அக்கறையும், தன்னைவிடப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று கருதப்பட முடியும்.

விசுவாசமான, நேர்மையான, செயலூக்கம் உள்ள உறுதியான கம்யூனிஸ்டுகள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, நம்மிடையேயுள்ள சிலரது காட்டு தாராளவாதப் போக்குகளை எதிர்த்து (திருத்தி) அவர்களைச் சரியான திசையில் இட்டுச் செல்ல வேண்டும். சித்தாந்த முனையில் உள்ள நமது கடமைகளில் இதுவும் ஒன்றாகும்.

000

நூல் : தலைமை தாங்கும் வழிமுறைகள் – மாசேதுங்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 10
கிடைக்குமிடம் :
பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை
சென்னை-018
தொடர்பு : 044- 24332424, 24332924

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க