மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன்ஃபோர்த்
பாகம் 5

ஈ. கம்யூனிஸ்ட் அகிலம்

லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும்

பிப்ரவரி புரட்சிக்குப் பின் ரசியா திரும்பிய லெனின் ஏப்ரல் 1917-ல் வெளியிட்ட “நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” என்ற பிரசுரத்தில் சர்வதேச இயக்கத்தில் நிலவிய மூன்று வகைப் போக்குகளை இனம் பிரித்துக் காட்டினார். அவ்வகைப் போக்குகள் கொண்டவர்களாக இவர்கள் உலகப் போரில் தங்கள் பக்க ஏகாதிபத்தியங்களுடன் கை கோர்த்துக் கொண்டனர். நடுநிலைவாதிகள் மேற்படி நபர்களுடன் ஒத்துப்போனவர்கள். மூன்றாவதாக, மெய்யான சர்வதேசியவாதிகள், இவர்கள் ஏகாதிபத்தியப் போரை முழுமூச்சாக எதிர்த்தனர். லெனின், மூன்றாவது பிரிவினர், இரண்டாம் அகிலத்திலிருந்து வெளியேறி புதிய அகிலத்தை தோற்றுவித்து, சந்தர்ப்பவாதத்திலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு, பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகர மார்க்சிய அடிப்படையில் ஒன்றிணைக்க வேண்டுமென அறை கூவினார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் பேரவை 1919 வசந்தத்தில் நடந்தது. அதன் முடிவில் “மூன்றாம் அகிலமும் வரலாற்றில் அதன் இடமும்” என்ற பிரசுரத்தை வெளியிட்ட லெனின், முதல் அகிலம் சர்வதேசிய அளவில் சோசலிசத்திற்காகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டியதற்கான அடிப்படைகளைத் தந்தது; இரண்டாவது அகிலம் இந்த இயக்கத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தியது; மூன்றாம் அகிலம் தன்னிலிருந்து சந்தர்ப்பவாதத்தை வெளியேற்றி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை அங்கீகரித்ததன் மூலம் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்து உள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

கம்யூனிஸ்ட் அகிலத்திற்கான லெனினது பங்களிப்புகள் அனைத்திலும் சந்தர்ப்பவாதத்தையும், குட்டி முதலாளித்துவ இடதுசாரிப்போக்கையும் அது மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகளைத் தனிமைப்பட்டுப் போகச் செய்வதாகையால் எதிர்த்துப் போராட வேண்டியதை வலியுறுத்துகிறார். (பார்க்க: லெனின் இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம் பருவக் கோளாறு)

மூன்றாம் அகிலத்தின் பணிகள் (1919 ஜூலை) என்ற பிரசுரத்தில் மிக முக்கியத் தேவைகளாக கீழ்க்கண்டவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்:

  1. சீர்திருத்தத்துக்கும் புரட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை திட்டவட்டமாக விளக்குதல். அதே வேளையில் சீர்திருத்தங்கள், முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கேற்பது ஆகியவற்றை நிராகரிக்காது இருப்பது.
  2. சட்டபூர்வ – சட்ட விரோத வேலைகளை இணைப்பது.
  3. தொழிலாளர் இயக்கத்திலிருந்து சந்தர்ப்பவாதிகளை வெளியேற்றப் பணிபுரிவது.
  4. காலனிய விடுதலைக்கான புரட்சிப் போராட்டங்களுக்காகத் துணை புரிவது.
  5. புரட்சிகர முழக்கங்களினால் எதிர்புரட்சிகரச் செயல்களை மூடி மறைக்க முயல்பவர்களை அம்பலப்படுத்துவது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேரவையின் (1920) போது லெனின் “கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேரவையின் அடிப்படை கடமைகள்” பற்றிய படிவத்தைத் தயாரித்தார்.

அதில் சோசலிசத்தில் வெற்றிக்கான தேவைகளாக

  1. சுரண்டுபவர்களைத் தூக்கியெறிவது, ஒடுக்குவது;
  2. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைக்குத் தொழிலாளர்களை வென்றெடுப்பது; தொழிலாளி வர்க்கத்தின் வாழ்விலிருந்து கட்சியைத் தனியாகப் பிரிக்க முடியாத அளவுக்கு மாற்றுவது;
  3. ஊசலாட்டப் பிரிவுகளை நடுநிலைப்படுத்துவது – ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார்.

மேலும், கம்யூனிஸ்டுகள் இந்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கள் பிரதான எதிரிகள் சந்தர்ப்பவாதிகள்தான் என்பதை உணர வேண்டும் என வலியுறுத்துகிறார்.

படிக்க:
இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம் !
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

இரண்டாவது பேரவையில் “சர்வதேசிய நிலைமைகளும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் அடிப்படைப் பணிகளும்” என்ற அறிக்கையில் போருக்குப் பிந்திய அரசியல், பொருளாதார நிலைமைகளை விரிவாக ஆராய்கிறார்.

இதே காங்கிரசில் “கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைவதற்கான நிபந்தனைகளை” லெனின் வரையறுத்தார். இந்த உரையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் சீர்திருத்தவாதக் கோட்பாடான அதிகாரத்தை வெல்வது என்பதற்குமிடையிலான வேறுபாடுகளை விளக்கினார்.

இதைப் போன்றே “விவசாயப் பிரச்சினை பற்றிய ஆய்வுகள்”, “தேசிய, காலனிய பிரச்சினை பற்றிய ஆய்வுகள்” ஆகியவற்றையும் படைத்தளித்தார். இதில் முன்னது விவசாயி வர்க்கத்துடனான கூட்டினை விளக்குகிறது.

“கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்” என்ற உரையில் பிரிட்டிஷ் பிரதிநிதிகளான டானர், மெக் க்லேன் (Tanner, Mc Claine) ஆகியோருக்கு பதிலளிக்கையில் உணர்வுபூர்வமான புரட்சிகரச் சிறுபான்மை மக்களை வழிநடத்தும் வண்ணம் கட்சியைக் கட்ட வேண்டும் என்றார். மேலும் பிரிட்டிஷ் பொதுவுடைமைக் கட்சியை தொழிலாளர் கட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினையையும் அவர்களுக்கு விளக்கினார்.

இதே சமயத்தில் எழுதிய “சுதந்திரம் பற்றிய போலிப் பேச்சுகள்” என்ற கட்டுரையிலும் சந்தர்ப்பவாதத்தை நிராகரிக்க வேண்டியது பற்றிக் கூறுகிறார். “கம்யூனிஸ்ட் அகிலத்தின் போர்த்தந்திரங்களை ஆதரித்து” என்ற உரையிலும் (1921) கட்சி மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். அதாவது, பெரும்பான்மை தொழிலாளி வர்க்கத்தை வெல்லவேண்டும். இந்தப் பெரும்பான்மை வெல்லப்படாவிடில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமில்லை எனக் குறிப்பிடுகிறார்.

இக்கருத்தையே “ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு எழுதிய கடிதத்”திலும் திரும்பக் கூறுகிறார்.

(முற்றும்)

நூல் : மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
ஆசிரியர் :
மாரிஸ் கார்ன்ஃபோர்த்

வெளியீடு : கீழைக்காற்று.
பக்கங்கள் : 272
விலை : ரூ. 150.00

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க