மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன்ஃபோர்த்
பாகம் 4

இ. இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம்

லெனின்: தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதமும் அதன் வேர்களும் என்பது பற்றி

லெனின் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்தின் இயல்புகள் மற்றும் அதன் காரணங்கள் பற்றிய தனது அடிப்படை ஆய்வை “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்ட வளர்ச்சி” என்னும் நூலில் தொகுப்பாகவும், பல்வேறு சிறு பிரசுரங்களிலும் தருகிறார்.

“வரலாற்றில் காரல் மார்க்சின் போதனைகளுக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்” என்னும் நூலில் (1913) லெனின் தொழிலாளி வர்க்க இயக்கம் இதுவரை மூன்று கட்டங்களைக் கடந்து வந்துள்ளது என்று காட்டினார். முதற்கட்டம் புரட்சிகர எழுச்சிகளின் காலம், 1848 புரட்சிகளில் இருந்து 1871 பாரீஸ் கம்யூன் வரையிலானது, இந்தக் காலப் பகுதியிலேயே பல சுதந்திர தொழிலாளி வர்க்கக் கட்சிகள் முதன் முதலில் தோன்றின. இரண்டாம் கட்டம் 1905 ரஷ்யப் புரட்சி வரையிலானது. “அமைதியான” வளர்ச்சி நிலவிய காலம். இக்காலகட்டத்தில் தொழிலாளி வர்க்க கட்சிகள் வலிமையுற்று, தங்கள் சொந்தக் கட்சி இதழ்களை நடத்தியும், முதலாளியப் பாராளுமன்றத்தை பயன்படுத்தக் கற்றும் உள்ளன. ஆனால் இக்கட்டத்திலேயே சந்தர்ப்பவாதம் “சமூக அமைதி” எனப் பேசிக்கொண்டு, வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து இயக்கத்துக்குள் புகுந்தது. கடைசிப் பகுதியாக 1905-க்குப் பிற்பட்ட காலம், புதிய பிரச்சினைகள் முளைத்துள்ள இக்கட்டத்தில் சந்தர்ப்பவாதத்தை கட்சியிலிருந்து துரத்தியடித்து புரட்சிகர மார்க்சியத்தின் வெற்றியைப் பாதுகாக்க வேண்டி இருந்தது.

இந்நூலுக்கு முன்பே மார்க்சியமும் திருத்தல்வாதமும் (1908) என்ற நூலில் திருத்தல்வாதத்தை லெனின் ஆய்கிறார். தங்களை மார்க்சியவாதிகள் என்றழைத்துக் கொண்டே மார்க்சிய அடிப்படைகளைத் திருத்துகின்ற சந்தர்ப்பவாதிகளின் தத்துவமே திருத்தல்வாதம். திருத்தல்வாதிகள் இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்குப் பதிலாக முதலாளித்துவ தத்துவத்தின் “மிகப் புதிய விஷயங்களை” சார்ந்திருப்பதைக் காட்டினார். குறிப்பாக முதலாளித்துவ அரசியல் பொருளாதாரவாதிகளின் நவீன தத்துவங்களைக் கையிலெடுத்துக் கொண்டு மார்க்சியத்தைத் “திருத்த” குறிப்பாக மார்க்சின் “மதிப்பு” பற்றிய கோட்பாட்டை, முதலாளித்துவ நெருக்கடிகளின் தவிர்க்க இயலாத தன்மையைத் திருத்த முயன்றனர். ஜனநாயகமும் பொதுமக்கள் வாக்குரிமையும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளை அகற்றி விட்டன என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்.

திருத்தல்வாதம் சோசலிச லட்சியங்களைக் கைவிட்டு “பாட்டாளி வர்க்க அடிப்படை நலன்களை கற்பனையான அல்லது நிஜமான பொருளாதார நலன்களுக்காக தியாகம் செய்துவிடும்” அளவுக்கு சரிந்தது. பாட்டாளி வர்க்க இயக்கத்தில் இது குட்டி முதலாளித்துவ போக்கைப் பிரதிபலித்தது.

“ஐரோப்பிய தொழிலாளர் இயக்கத்தில் கருத்து வேற்றுமைகள்” (1910) என்னும் நூலில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் புலப்படும் மார்க்சிய – விரோதப் போக்குகள் தற்செயலானவை அல்ல, மாறாக, அனைத்து முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையைப் பொறுத்தது என்று குறிப்பிடுகிறார். ருஷ்ய சமூக ஜனநாயகவாத இயக்கத்தில் சீர்த்திருத்தவாதக் கருத்துக்களின் தாக்கத்தை முதலாளித்துவப் பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்துகிறார் லெனின். சோசலிசத்திற்கு எதிராக நேரடியாகப் போராடாமல் முதலாளித்துவம் சீரான, துண்டு துண்டுச் சீர்திருத்தங்களை முன்வைக்கக் கற்றுக் கொண்டு உள்ளது எனக் கூறுகின்றனர். இது முதலாளித்துவத்திற்கு ஒட்டுப் போட முனைவது ஆகும்; அவர்கள் அத்தகைய பிரச்சாரத்தைப் பயன்படுத்தி பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி வலுவிழக்கச் செய்ய முயலுகிறார்கள்; முதலாளிவர்க்க ஆட்சியை தக்கவைக்கப் பார்க்கிறார்கள். இப்பிரச்சாரம் சீர்திருத்தவாத சித்தாந்தங்கள் வாயிலாக தொழிலாளி வர்க்க இயக்கத்தில் வெளிப்பட ஆரம்பித்து விட்டது – புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தங்களை அது முன் வைக்கிறது. (இக் கட்டுரை, ருஷ்யத் தொழிலாளர்கள் ஒருபோதும் புரட்சிப் பாதையை எக்காரணம் முன்னிட்டும் தேர்ந்தெடுக்கக் கூடவே கூடாது என்று பிரச்சாரம் செய்த சீர்திருத்தவாத சோசலிஸ்டுகளைப் பற்றிய பெருந்திரளான விவரங்களுடன் கூடிய வாதத்தை உள்ளடக்கியதாகும்.)

ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் (1916) என்ற நூலில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் நிலவுவதற்கும் அதன் வலிமைக்கும் அடிப்படைக் காரணங்களைத் தொகுத்து லெனின் உரைக்கிறார். ஏகாதிபத்தியத்தின் உயர்விகித லாபங்கள் தொழிலாளி வர்க்கத்தின் மேல்தட்டுக்கு லஞ்சம் அளிக்கவும், ஊழல்படுத்தவும் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாகப் பூர்ஷ்வா தொழிலாளர் கட்சி எல்லா ஏகாதிபத்திய நாடுகளிலும் தலை எடுத்தது.

படிக்க:
மதுரை – கரூர் : நீட் தேர்வை ரத்து செய் ! அண்ணா பல்கலைக் கழக கட்டணக் கொள்ளைக்கு முடிவுகட்டு !! பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

குறிப்பாக பிரிட்டனை ஆய்கின்ற லெனின், அங்கு சந்தர்ப்பவாதம், முறையான ஏகாதிபத்தியம் தோன்றுவதற்குப் பல பத்தாண்டுகளின் முன்பே பிறந்து விட்டதாகக் கூறுகிறார். தொழில்துறையில் தனியாதிக்கமும் (Industrial Monopoly) ஏகாதிபத்தியத்துக்கு முந்தைய முதலாளித்துவ வளர்ச்சியிலேயே அது பிடித்திருந்த செழிப்பான காலனிய நாடுகளும் அவர்களுக்கு உயர் லாபங்களைத் தோற்றுவித்தன. இது ஏகாதிபத்தியத் தோற்றத்தின் முன்பே நிகழ்ந்த போதும் தன்னுள் சில ஏகாதிபத்திய இயல்புகளைக் கொண்டிருந்தது.

இதே கருத்தை லெனின் தனது “இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி” (1915) என்னும் கட்டுரையிலும் கையாள்கிறார். இதில் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன என்று வரையறுக்கிறார். அதாவது “சிறுபான்மையினரின் தற்காலிக நலன்களின் பொருட்டு பெருந்திரளான தொழிலாளர்களின் நலன்களை தியாகம் செய்து விடுவது” எனப் பொருளாகும். வேறு விதமாகச் சொல்வதானால் “தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவு பெருந்திரளான தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக கூட்டு சேர்வது” ஆகும்.

முதலாளிகள் தொழிலாளிகளுக்கிடையில் ஒரு பிரிவுக்கு மட்டும் சலுகை அளிப்பதன் மூலம் அவர்களுக்கிடையில் தகுதிபெற்ற தொழிலாளர் “தட்டு” ஒன்றை ஏற்படுத்த முடிகிறது என்பதால் சந்தர்ப்பவாதம் தோன்றவும் வலிமையடையவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் “பழக்கங்களின் வலிமை, ஒப்பீட்டளவில் அமைதியான வளர்ச்சிப் போக்குக்குப் பழகிப் போவது, தேசியத் தன்னியல்புப் போக்கு (Prejudice) கூரிய பிளவுகளுக்கு அஞ்சுவது, நம்பிக்கையின்மை முதலியவற்றால் சந்தர்ப்பவாதம் வலிமையடைகிறது என்கிறார் லெனின்.

இரண்டாம் அகிலத்தின் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் 1914-இல் அவர்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களோடு கைகோர்த்துக் கொள்வதாக முடிந்தது. ஏகாதிபத்தியப் போருக்குத் துணைபோன அவர்களது வாதங்களைக் கிழிக்கிறார் லெனின். சந்தர்ப்பவாதத் தலைவர்களைப் பொறுத்தவரையில் “சொல்லில் சோசலிசம் நடைமுறையில் பூர்ஷ்வாக்களோடு ஒவ்வொரு முக்கியப் பிரச்சினையிலும் கைகோர்த்து கட்சியிலிருந்து வெளித்தள்ளப்பட வேண்டிய நபர்கள் இவர்கள்” என்று தனது கட்டுரையை லெனின் முடிக்கிறார்.19

லெனின்: போரைப் பற்றி

பாட்டாளி வர்க்கத்தின், போர் குறித்த நிலைப்பாடு பற்றிய அடிப்படைப் போதனைகள் லெனினால் முதல் உலகப்போரின் போது வகுத்தளிக்கப்பட்டன. அவ்வடிப்படைக் கோட்பாடுகள் போல்ஷ்விக் கட்சி வரலாறு அத்தியாயம் 6-ஆம் பிரிவில் தொகுக்கப்பட்டுள்ளன.

லெனின்: சோசலிசமும் போரும் (1915) என்னும் தமது நூலில் நியாயமான நியாயமற்ற 20 போர்களுக்கிடையிலான வேறுபாட்டை வரையறுக்கிறார். தொழிலாளி வர்க்கம் நியாயமற்ற ஏகாதிபத்தியப் போர் மீது எவ்வகை நிலைப்பாட்டை வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய மார்க்சியப் போதனைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.

லெனின் 1914-இல் எழுந்த போர் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையிலான நியாயமற்ற போர் என்று காட்டுகிறார். இத்தகைய போர்களில் அந்த அந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கங்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களை எதிர்க்க வேண்டும். “ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக” மாற்ற முயல வேண்டும்.

லெனின் – ஏகாதிபத்திய யுத்தங்கள் மூளும்போதும் நியாயமான சமாதானம் ஏகாதிபத்திய அரசுகளைத் தூக்கியெறியாமல் எட்டக் கூடியது அல்ல என்று காட்டுவதன் மூலம், சமாதானவாதிகளும், தாராளவாதிகளும் போர்களின் போது பரப்பும் “சமாதானம்” பற்றிய அரூபமான (Abstract) முழக்கம் போலித்தனமான ஏமாற்று வேலை என்று நிறுவுகிறார்.

இரண்டாம் அகிலத்தின் “சோசலிஸ்டுகள்’’ போருக்காதரவு அளித்தது சோசலிசத்தையே நேரடியாகக் காட்டிக் கொடுத்தது ஆகும் என்கிறார் லெனின். அவர்களின் கொள்கையை குறிக்க சமூகவெறி (Social Chavunism) என்ற சொல்லை உருவாக்கினார். சமூக வெறி என்பது நியாயமற்ற போரில் தங்கள் தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய சோசலிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் வாதம். சந்தர்ப்பவாதம், சமூக வெறி (Social Chavunism) இரண்டுடனும் சர்வதேசிய அளவில் தொடர்புகளை முறித்துக் கொண்டு மூன்றாம் அகிலம் புரட்சிகர அடிப்படையில் தொடங்கப்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

ஏகாதிபத்தியப் போர் பற்றிய மார்க்சியப் பார்வையை மீண்டும் போர் பற்றி 1917 மே மாதம் தனது பேச்சில் விளக்குகிறார். மீண்டும் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை யுணர்த்தி விட்டு, “நாம் எப்பொழுதும் எவ்வர்க்கம் போரை எந்த நோக்கத்திற்காக நடத்துகிறது என்று பார்க்க வேண்டும்” என விளக்குகிறார்.

மற்ற கட்டுரைகளில் உலகப் போரை ஒட்டி யெழுந்த சில சிறப்பான பிரச்சினைகளை ஆய்கிறார்.

“ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என்ற முழக்கம்” (1915) என்ற நூலில் தொழிலாளர்கள் இப்படிப்பட்ட முழக்கத்தை ஆதரிக்க முடியாது என்கிறார். ஏகாதிபத்திய சக்திகள் அதிகாரத்தில் உள்ள வரை “ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என்பது காலனிகளை, கொள்ளைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஒப்பந்தமே, சோசலிசத்தை கூட்டாக நசுக்கும் ஒரு முகாந்திரமே” என்கிறார்.

சோசலிசம் அதன் வளர்ச்சிப் போக்கில் “உலக ஐக்கிய நாடுகளை” உருவாக்கும். ஆனால் இது இன்றைய நடைமுறைக் குறிக்கோள் அல்ல என்கிறார். சோசலிசத்தின் வெற்றி பல்வேறு நாடுகளிலோ அல்லது ஒரே ஒரு நாட்டிலோ சாத்தியமானதுதான். (இதன் காரணம் முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான்)21 இந்த நாடு அல்லது நாடுகள் பிற முதலாளித்துவ நாடுகள் சூழ்ந்திருக்கும் போதும் நீண்ட காலம் சோசலிசத்தின் மையங்களாக விளங்கவும் முடியும்.

படிக்க:
லெனின் முன் வைத்த புதுப்பாணியிலான கட்சி !
கொரோனா தளர்வுகள் : பொருளாதாரம் எப்போது சீரடையும் ! | பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் காணொளி

லெனின், தொழிலாளர்களும் சமாதானவாதமும் (பாசிபிசமும்) என்ற நூலில் முழுமையான ஆயுத ஒழிப்பு என்னும் பாசிபிச முழக்கத்தை அம்பலப்படுத்துகிறார். முதலாளித்துவச் சூழலில் அது சாத்தியமற்றது. எனவே அதற்காக பிரச்சாரம் செய்வது உண்மையில் மெய்யான புரட்சிகரப் போராட்டங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்குமிடையிலான பிரச்சினைகளிலிருந்து நழுவுவதற்கானது.

நசுக்கப்படுகிறவர்கள் சமாதானவாதிகள் ஆக முடியாது. மாறாக ஆயுதங்களைக் கையாளவும், அவற்றை நசுக்குபவர்களுக்கெதிராகத் திருப்பவும் தயாராக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும். ஆயுதங்களைப் பயன்படுத்தாது நசுக்கப்படுவதற்கும் சம்மதிப்பவர்கள் அடிமைகளாக நடத்தப்பட தகுதியானவர்கள்தான். நாம் பாசிபிஸ்டுகளாக இருக்க முடியாது. ஏனெனில் நாம் நியாயமான போர்கள் இருப்பதை ஏற்கிறோம். நசுக்கப்படுபவர்கள் நசுக்குகிறவர்களுக்கு எதிராக நடத்துவதே நியாயமான போர்களாகும்.

இதே கருத்தை 1916-ல் எழுதிய “பாட்டாளி வர்க்கப் புரட்சியின் போர்த்திட்டம்” என்னும் நூலில் கையாள்கிறார். இதன் முதல் பகுதியில் சோசலிஸ்டுகள் எல்லாப் போர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அவர்கள் அப்படி இருக்கவும் முடியாது என்று விளக்குகிறார். ஏனெனில் நசுக்கப்பட்டவர்கள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். உள்நாட்டுப் போர்கள் நடக்கின்றன; சோசலிசத்தைக் கட்டியமைத்த பின் ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கெதிரே தற்பாதுகாப்புக்காகப் போராடி ஆக வேண்டி வரலாம். நசுக்கப்படுபவர்கள் விடுதலைக்காகப் போராடத் தயாராக இருக்க வேண்டும். சோசலிச நாட்டின் மக்கள் தங்கள் தாய்நாட்டைக் காக்கப் போர் நடத்த போராடவே வேண்டும்.

இந்த நூலின் பிற்பகுதிகளில் லெனின் ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாடுகளை எடுத்துரைக்கிறார்.

லெனின்: பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம் பற்றி

லெனினும் பிரிட்டனும் என்ற நூலில் லெனின் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம் பற்றித் தமது பல்வேறு படைப்புகளில் குறிப்பிட்டவற்றை உள்ளடக்கி உள்ளது. அந்நூலில் லெனின் காட்டுபவை:

மார்க்சும் எங்கெல்சும் பிரிட்டனின் சுதந்திரமான தொழிலாளி வர்க்க இயக்கத்தினைக் கட்டியமைப்பதன் முக்கியத்துவத்தை எப்படி வலியுறுத்தி வந்தனர் 24 என்பதைக் குறிப்பிடுகின்றார். அவர்களின் அணுகுமுறை, மார்க்சியம், சோசலிசத்தையும் வெகுஜன தொழிலாளர் இயக்கத்தையும் ஒன்றிணைத்த தத்துவம் என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாகத் திகழ்கிறது. மார்க்சும் எங்கெல்சும் பழைய சமூக ஜனநாயகவாதக் கூட்டமைப்பு (Social Democratic Federation) என்னும் அமைப்பு பிரிட்டனில் கையாண்ட குறுங்குழுவாதப் போக்கை, தன்னை வெகுஜன இயக்கத்திலிருந்தே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த போதும் வரட்டுத்தனமான “தனித்தன்மை”யைப் பற்றி பேசியதை வன்மையாகக் கண்டனம் செய்தனர்.

சோசலிஸ்டுகள் “தங்கள் குறுகிய குறுங்குழுவாதப் போக்கினைத் தூக்கியெறிந்து தொழிலாளர் இயக்கத்தில் இணைய வேண்டும்” என்று மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தினர். அதேசமயம் தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் இயக்கத்திற்கு புரட்சிகரத் தத்துவம் ஒன்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.

கொள்கை ஒன்றுக்குப் போராட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை லெனின் வலியுறுத்துகிறார். தொழிலாளர் கட்சியின் தொடக்கமே “ஒருவகையில் உண்மையில் உணர்வுள்ள பாட்டாளி வர்க்க நிறுவனங்கள் வர்க்கக் கொள்கைக்கும், சோசலிசத் தொழிலாளர் கட்சி நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் முதல் கட்டம் ஆகும்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் 1918-ல் தொழிலாளர் கட்சி பற்றிக் குறிப்பிட்டபோது “இது தொழிலாளர்களை உள்ளடக்கி உள்ளபோதும் எதிர்ப்புரட்சிக்காரர்களால் தலைமை தாங்கப்படுகிறது” என்று கூறுகிறார்.

பிரிட்டனில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றினைக் கட்ட வேண்டிய தேவையையும் அது தொழிலாளர் கட்சியோடு உறவு கோர வேண்டியதையும் காட்டுகிறார்.25

(தொடரும்)

குறிப்புகள்

  1. பார்க்க, லெனின், மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும்.
  2. பார்க்க, லெனின், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம்.
  3. பார்க்க, மார்க்சு, பிரான்சில் உள்நாட்டுப் போர்.
  4. பார்க்க, லெனின், ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்.
  5. பார்க்க, ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள், முதல் அமெரிக்கத் தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு அளித்த பேட்டி.
  6. பார்க்க, லெனின், நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள், ஏப்ரல் மாநாடு.
  7. பார்க்க, எங்கெல்சு, பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம், மற்றும் மார்க்சு – எங்கெல்சு கடிதங்கள்.
  8. பார்க்க, லெனின், பொதுவுடைமைக் கட்சியின் பாத்திரம்.

நூல் : மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
ஆசிரியர் :
மாரிஸ் கார்ன்ஃபோர்த்

வெளியீடு : கீழைக்காற்று.
பக்கங்கள் : 272
விலை : ரூ. 150.00

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க