ட்கட்சிப் போராட்டம் குறித்த லியூஷோசி-யின் இந்நூல் கட்சிக்குள் எழும் முரண்பட்ட கருத்துக்கள், மாற்று வர்க்கச் சித்தாந்தங்களை கட்சித் தலைமை மற்றும் அணிகள் கையாளுவது குறித்து விரிவாகப் பேசுகிறது. இந்த நூலாசிரியர் லியூ ஷோசி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தவர். பின்னாட்களில் வலது சந்தர்ப்பவாதத்தில் வீழ்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.

0-0-0

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 1

தோழர்களே!

அங்கத்தினர்களின் கட்சி உணர்வை உறுதிப்படுத்தும் வேலையை, பலப்படுத்தும் பிரச்சினையை நாம் சமீபகாலத்தில் கட்சியில் கிளப்பியிருக்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றி மத்திய கமிட்டியும் ஒரு முடிவு எடுத்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அது கூடிய சீக்கிரம் நமக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். நமது அங்கத்தினர்களின் கட்சி உணர்வை உறுதிப்படுத்தும் வேலையை பலப்படுத்தும் பொருட்டு கட்சிக்குள் கட்சி உணர்வுக்கு முரணாகவுள்ள பல்வேறு விரும்பத்தகாத போக்குகளை எதிர்த்து கட்சிக்குள் ஸ்தூலமான சித்தாந்தப் போராட்டத்தை துவக்கப் போகிறோம். கட்சிக்குள் இந்த சித்தாந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு சரியான வழியென்ன? எது தவறான வழியாகும்? குறிப்பாக இந்தக் கேள்வியைத்தான் நான் விவாதிக்க விரும்புகிறேன்.

நமது கட்சி தொழிலாளி வர்க்க கட்சி, பரந்த பொதுஜனங்களின் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தும் கட்சி, தனக்கு கடமையாக அமைந்துள்ள சரித்திரப்பூர்வமான பணிகளை கட்சி நிறைவேற்ற வேண்டுமானால் பல்வேறு காலகட்டங்களில் புரட்சிக்கு எதிராக வரும் விரோதிகளை எதிர்த்துப் போராட வேண்டும். பல்வேறு புரட்சிகரமான ஜனப்பகுதிகள், வர்க்கங்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.

கட்சி தோன்றிய காலத்திலிருந்து கடுமையான போராட்டத்தை தவிர வேறு எந்தச் சுற்றுச்சார்பிலும் ஒரு விநாடியும் வாழ்ந்ததில்லை. கட்சியும், தொழிலாளி வர்க்கமும், தொழிலாளி வர்க்கத்தை சாராத மற்ற பல்வேறு வர்க்கங்களினால் சுற்றி வளைக்கப்பட்ட நிலைமையில் சதா வாழ்ந்து வருகிறது. அதாவது பெரும் பூர்ஷ்வா, குட்டி பூர்ஷ்வா, விவசாயி, பிரபுத்துவ சக்திகளின் மிச்சசொச்சங்கள் கூட இவ்வர்க்கங்கள் தொழிலாளி வர்க்கத்தை எதிர்த்து போராடும் பொழுது அல்லது அதனுடன் ஒத்துழைக்கும் பொழுது, கட்சிக்குள்ளும், தொழிலாளி வர்க்கத்திற்குள்ளும் உள்ள ஸ்திரத் தன்மையற்ற நபர்களை கட்சியின் இருதயத்திற்குள் ஊடுருவிப் பாய்வதற்கு உபயோகப்படுத்துகின்றன. சதா கட்சியையும் தொழிலாளி வர்க்கத்தையும் சித்தாந்த ரீதியாகவும், வாழ்க்கைப் பழக்க வழக்கங்களிலும் தத்துவத்திலும், காரியாம்சத்திலும் பாதித்துக் கொண்டேயிருக்கின்றன. இதுதான் கட்சிக்குள் காணப்படும் எல்லாவிதமான தவறான, விரும்பத்தகாத போக்குகளின் தோற்றுவாய். கட்சிக்குள் பலவித சந்தர்ப்பவாதத்திற்கும் இதுதான் சமூக அடிப்படை, உட்கட்சிப் போராட்டத்திற்கு தோற்றுவாயும் இதுவே.

கட்சிக்கு வெளியே நிகழும் வர்க்கப் போராட்டங்களின் பிரதி பிம்பமே உட்கட்சிப் போராட்டம்.

படிக்க :
♦ தொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் !
♦ அறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்

கட்சி உருவெடுத்த தினத்திலிருந்தே கட்சிக்கு வெளியிலுள்ள விரோதிகளை எதிர்த்து மட்டுமல்ல. கட்சிக்குள் இருக்கும் பலவித விரோத, தொழிலாளி வர்க்க சார்பற்ற போக்குகளை எதிர்த்தும் போராடி வந்திருக்கிறது. இந்த இரண்டுவித போராட்டங்களும் வேறானவை. ஆனால் இரண்டும் அவசியம். இரண்டிற்கும் பொதுவான வர்க்க உள்ளடக்கமிருக்கிறது. நமது கட்சி இரண்டாவது விதப்போராட்டத்தை நடத்தவில்லையென்றால், விரும்பத்தகாத போக்குகளை எதிர்த்து கட்சிக்குள் சதாசர்வ காலம் போராடவில்லையென்றால், கட்சியை ஒவ்வொரு தினுசான, தொழிலாளி வர்க்க சார்பற்ற சித்தாந்தம், இடதுசாரி, வலதுசாரி சந்தர்ப்பவாதங்கள் முதலியவற்றிலிருந்து சதா சுத்தப்படுத்திக் கொண்டிருக்காவிடில், பின், அத்தகைய தொழிலாளி வர்க்க சார்பற்ற சித்தாந்தமும், அத்தகைய இடதுசாரி வலதுசாரி சந்தர்ப்பவாதமும் கட்சியில் மேலோங்கி, கட்சியை பாதிக்கவும், கட்சியின் மீது ஆதிக்கம் செலுத்தவும் கூடும். இது கட்சியை ஆபத்துக்கு உட்படுத்தும். அதன் சீரழிவிற்கு வழி செய்யும். அத்தகைய தொழிலாளி வர்க்கசார்பற்ற சித்தாந்தமும் இடதுசாரி, வலதுசாரி சந்தர்ப்பவாதமும் நமது கட்சியை அல்லது அதன் சில பகுதிகளின் தன்மையைக் கூட தொழிலாளி வர்க்க சார்பற்ற ஸ்தாபனமாக மாற்றவும் கூடும். உதாரணமாக இந்த முறையில்தான் ஐரோப்பாவிலுள்ள சோஷலிக் டெமாக்ரடிக் கட்சிகள் பூர்ஷ்வா சித்தாந்தத்தினால் சீர்கேடடைந்து, பூர்ஷ்வா தினுசான அரசியல் கட்சிகளாக மாற்றப்பட்டு பூர்ஷ்வா வர்க்கத்தின் பிரதான சமூகத்தூண்களாக ஆயிற்று.

ஆதலால் அத்தகைய உட்கட்சிப் போராட்டம் முற்றிலும் அவசியம்; தவிர்க்க முடியாதது. உள்கட்சிப் போராட்டத்தை தவிர்ப்பதற்கு முயலுகின்ற எவ்வித எண்ணமானாலும் சரி அல்லது தன் குற்றத்தை பிறர் விமர்சிக்காமலிருக்கட்டும் என்பதற்காக மற்றவர்களின் குற்றங்களை விமர்சிக்காமல் ஒதுங்குவதானாலும் சரி, முற்றிலும் தவறானது.

உள்கட்சிப் போராட்டம் பிரதானமாக சித்தாந்தப் போராட்டமாகும். அதன் உள்ளடக்கம் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களிலிருந்து எழுகின்ற திரிபுகளும், முரண்பாடுகளுமாகும். சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில் நமது தோழர்களிடையே எழுகின்ற திரிபுகளும், முரண்பாடுகளும் கட்சிக்குள் அரசியல் பிளவுகளில் கொண்டு செல்லலாம்; சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாத ஸ்தாபன பிளவுகளிலும் கொண்டு செல்லலாம். ஆனால் குணாம்சத்திலும் உள்ளடக்கத்திலும் அத்தகைய திரிபுகளும் முரண்பாடுகளும் அடிப்படையில் சித்தாந்தப் போராட்டங்கள்.

இதிலிருந்து ஏற்படுவதென்னவென்றால், சித்தாந்தம், கோட்பாடு முதலிய விஷயங்களில் திரிபு சம்பந்தப்படாத உள்கட்சி போராட்டமும், கட்சி அங்கத்தினர்களுக்கிடையே கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில் வேறுபாட்டை அடிப்படையாகக் கொள்ளாத தகராறுகளும், கோட்பாடில்லாத போராட்ட ரகத்தைச் சேர்ந்ததாகும்; உள்ளடக்கம் இல்லாத போராட்டமாகும். கட்சிக்குள் கோட்பாடோ அல்லது உள்ளடக்கமோ இல்லாத இம்மாதிரியான போராட்டம் அறவே தேவையில்லை. அது கட்சிக்குத் தீமை பயக்கவல்லது; கட்சிக்கு உதவிகரமானதன்று அத்தகைய போராட்டங்களை கட்சி அங்கத்தினர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கட்சியின் சுயேட்சைத் தன்மையையும் பரிசுத்த தன்மையையும் பாதுகாப்பதற்கு தொழிலாளி வர்க்கத்தின் மிக உன்னதமான நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழிகளில் கட்சியின் நடவடிக்கை எப்பொழுதுமே திருப்பப்படுகின்றன என்பதை உத்தரவாதம் செய்வதற்கும், கட்சியின் அடிப்படையான தொழிலாளி வர்க்க குணாம்சத்தை பாதுகாப்பதற்கும் உட்கட்சிப் போராட்டம் முற்றிலும் இன்றியமையாதது. இந்த இலட்சியத்தை மனதிற்கொண்டு, உட்கட்சிப் போராட்டம் இரு பக்கங்களிலிருந்து அல்லது இரண்டு முனைகளில் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் இது எதிரியின் தத்துவரீதியான பாதிப்பு இரு திசைகளிலிருந்து வருகின்றது. கட்சி வலது பக்கத்திலிருந்தும் இடது பக்கத்திலிருந்துமாக இரு பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுகிறது. இது கட்சியில் வலது அல்லது இடதுசாரி சந்தர்ப்பவாதமாக பிரதிபலிக்கிறது.

ஆதலால் நமது உள்கட்சிப் போராட்டம் ஏககாலத்திலேயே வலதுசாரி சந்தர்ப்ப வாதத்தையும் இடதுசாரி சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து திருப்பிவிடப்பட வேண்டும்; இந்த இரண்டு அம்சங்களை எதிர்த்து திருப்பினால்தான் நமது கட்சி அதன் திட்டவட்டமான தொழிலாளி வர்க்க குணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை நாம் செய்யத் தவறினால், நாம் ஒருதலைப்பட்சமான போராட்டத்தை மட்டும் நடத்திக் கொண்டிருப்போமேயானால், அல்லது நமது உஷார் உணர்வு தளர்த்தப்படுமேயானால், இரு பக்கத்தையும் எதிர்த்து நாம் நடத்தும் போராட்டம் தளருமேயானால் அப்பொழுது விரோதி தாக்கக்கூடும் என்பது மட்டுமல்ல, நாம் புறக்கணித்த பக்கத்திலிருந்து நிச்சயமாகத் தாக்குவான். அம்மாதிரி நிலைமையில் கட்சியின் பரிசுத்தத் தன்மையையும், சுயேட்சை தன்மையையும் பாதுகாப்பதும் கட்சியை ஒன்றுபடுத்துவதும் அசாத்தியமாகிவிடும். ஆதலால் இரு முனைகளில் ஓய்வு ஒழிச்சலின்றி நிகழ்த்தப்படும் உள்கட்சிப் போராட்டத்தின் மூலம்தான் நமது கட்சி பலம் பெற்று வளர்கிறது.

தோழர் ஸ்டாலின் கூறினார்:

‘இங்குள்ள விஷயம், இந்த கோட்பாடு அல்லது அந்தக்கோட்பாடு, இந்தப் போராட்டத்திற்கு அல்லது அந்தப் போராட்டத்திற்கு குறிக்கோளை வரையறுப்பது இலட்சியத்தை அடைவதற்கு இந்தப் போராட்ட முறையை அல்லது அந்தப் போராட்ட முறையை முடிவு கட்டுவது முதலானவற்றிற்கு நிகழ்த்தும் போராட்டத்தின் மூலம்தான் முரண்பாடுகளை தீர்க்க முடியும். நம்மிடம் தற்கால கொள்கை விஷயத்திலோ அல்லது பரிபூரணமாக நடைமுறை சம்பந்தமான விஷயத்திலோ கட்சிக்குள் மாறுபாடு கொண்டவர்களிடத்தில் ஒத்துப்போவது சாத்தியமானது அவசியமானதுங்கூட. கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நடுவாந்தரம் பாதை இருக்கவும் முடியாது, இல்லவும் இல்லை. கட்சியின் வேலை ஒன்று இந்த கோட்பாடுகள் அல்லது அந்த கோட்பாடுகளில் ஏதாவதொன்றை அடிப்படையாகத்தான் கொண்டிருக்க வேண்டும். கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் ‘நடுவாந்தர’ கொள்கை என்பது ஒருவருடைய மூளையை குழப்பும் கொள்கை; கட்சியை சித்தாந்த ரீதியில் சீரழிக்கும் கொள்கை; அத்தகைய நடுவாந்தரக் கொள்கையை பின்பற்றுவது நமது கொள்கையல்ல; தினசரி க்ஷிணித்து, சீரழிந்து வரும் கட்சியின் கொள்கை அது; அத்தகைய கொள்கை, கட்சியை உள்ளடக்கமில்லாத வெறும் அதிகார வர்க்க ஆயுதமாகவும், தொழிலாளி மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நின்று ஒன்றுமே செய்ய இயலாத வெறும் பொம்மையாகவும் மாற்றும். அத்தகைய பாதை நமது பாதையாக இருக்க முடியாது.

மேலும் அவர் கூறினார்:

‘கட்சிக்குள்’ இருக்கும் முரண்பாடுகளை போக்குவதின் அடிப்படையில்தான் நமது கட்சி பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது உட்கட்சிப் போராட்டத்தின் முக்கியமான குணாம்சத்தை விளக்குகிறது.

இது உட்கட்சிப் போராட்டத்தின் முக்கியமான குணாம்சத்தைப் பற்றியும், ஏன் கட்சியில் லிபரலிசமும், கன்ஸிலியேசனிஸமும் உபயோகமற்றது என்பது பற்றியும் லெனின், ஸ்டாலின் நூல்களில் ஏற்கெனவே நிரம்ப வெளிவந்திருக்கிறது. தோழர்களே நீங்கள் இவற்றை வாசித்துக் கொள்ளலாம்; இந்த விஷயத்தைப் பற்றி இங்கு நான் அதிகம் சொல்லப்போவதில்லை.

நான் இப்போது பேச விரும்பும் பிரச்சினை உட்கட்சி போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது பற்றியேயாகும். நமக்கு இது இன்னும் புதிய பிரச்சினை. இன்று இந்த பிரச்சினையை எல்லோரும் கற்று வருகின்றனர். இது பரிபூரண முக்கியத்துவம் கொண்டதுதான். ஆனால் இந்தச் சமயம் இப்பிரச்சினைப் பற்றி சகல அம்சங்களையும் தழுவிய முறையில் பேச உத்தேசிக்கவில்லை. நான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திர பூர்வமான அனுபவத்தை பற்றி என்னுடைய தனிப்பட்ட முறையில் குறித்துள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட எனது அபிப்பிராயங்களை வெறுமனே சமர்ப்பிக்கிறேன். இந்த அபிப்பிராயங்கள் சரியானவைதானா என்பதைப் பற்றி விவாதிக்கும்படி எல்லா தோழர்களையும் அழைக்கிறேன்.

(தொடரும்)

 

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க