மிழக போலீசு மீது வடமாநிலத் தொழிலாளர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழக ஊடகங்களில் ஏப்ரல் 7 அன்று செய்திகள் மிகவேகமாக வெளிவந்தன. இதேபோல் சமூக வலைத்தளப் போராளிகள், “வடக்கன்ஸ், பீகாரிகள் இன்று தமிழக போலீசை தாக்குகின்றனர். நாளை தமிழக மக்களையும் தாக்குவார்கள். இது ஒரு எச்சரிக்கை. விழித்துக் கொள்ளுங்கள் தமிழக மக்களே” என்று சமூக வலைத்தளங்களில் பரப்பினர். ஈரோட்டில் நடந்த ஒரு வடமாநில தொழிலாளியின் மரணம்தான் இந்த செய்திகளுக்கு எல்லாம் அடிப்படை.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துகுளியில் எஸ்.கே.எம் பூர்ணா என்ற எண்ணெய் ஆலை உள்ளது. இங்கு வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலம் ராம்குருவா பகுதியை சேர்ந்த காமோத்ராம் என்பவர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி இரவு லாரியில் ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் அவர்மீது ஏறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானர்.
இதையடுத்து அங்கு இருந்த வடமாநில தொழிலாளர்கள் இறந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்போதுதான் உடலை எடுத்து செல்வோம் என்றும் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசு, ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர். இதனால் போலீசுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
படிக்க :
தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு
சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொ­ய் வழக்கில் கைது செய்த போலீசு!
தமிழக தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காகப் போராட்டம் நடத்தினால் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசுத்துறை, வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக எப்படி செயல்படும்? போலீசுத்துறை எப்போதுமே ஆளும் வர்க்கத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் மட்டும்தான் சேவை செய்யும்.
தமிழக போலீசுத்துறையும் ஊடகமும் எவ்வாறு தொழிலாளர் விரோதப் போக்கை கையாளுகிறார்கள் என்பது சமீபத்தில் நடந்த ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தனது உரிமைக்காக அங்கு பணிபுரிந்த பெண் தொழிலாளர்களின் போராட்டம் என்பது துலக்கமான சான்று.
***
பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் இருந்து வாழவே வழியற்றுதான் தமிழகத்தில் உள்ள ஆலைகளிலும் ஓட்டல்களிலும் அடிமாடுபோல் வேலை செய்கின்றனர் வடமாநிலத் தொழிலாளர்கள். குறைந்த ஊதியத்திற்கு அதிகமான உடல் உழைப்பை வாங்கி உழைப்பு சுரண்டலில் ஈடுபடுகின்றனர் தமிழக முதலாளிகள். மாட்டு தொழுவத்தில் அடைத்து வைப்பதைபோல்தான் வடமாநில தொழிலாளர்களையும் மோசமான இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
வடமாநிலத் தொழிலாளிகள் என்பவர்கள் திருடர்கள், கொலைகாரர்கள் என்ற பொதுபுத்தி இங்கு நிலவுகிறது. அதை பயன்படுத்திக்கொண்டு ஈவிரக்கமற்ற முறையில் வடமாநிலத் தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் இங்குள்ள முதலாளிகள்.
ஈரோட்டில் வடமாநிலத் தொழிலாளர்களின் போராட்டம் என்பது நியாயமான ஒன்று. அந்த தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பதுதான் நமது கடமை. ஆனால், தமிழ்த்தேசியவாதிகள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக விசமத்தனமாக பிரச்சாரத்தை கட்டமைத்து, இனவெறியை அவர்களுக்கு எதிராக தூண்டி விடுகிறார்கள்.
வட மாநிலத்தை சேர்ந்த ஒரு முதலாளி தமிழகத்தில் ஒரு ஆலையை வைத்திருந்து, அந்த ஆலையில் தமிழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் தமிழக போலீசுத்துறை தமிழக தொழிலாளர்களின் உரிமைக்காக ஒருபோதும் நிற்காது. வடமாநில முதலாளியின் பக்கம்தான் நிற்கும். அதற்கு சான்றுதான் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.
அனில் அகர்வால் என்ற வட மாநில முதலாளியின் நாசகாரத் தொழிற்சாலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் வீரம் செறிந்தப் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசும், போலீசுத்துறையும் அனில் அகர்வால் எனும் வடமாநில முதலாளிக்கு ஆதரவாக நின்று, தூத்துக்குடி மக்களை சுட்டுக்கொன்றது. ஆகவே ஒன்றிய மற்றும் மாநில அரசும், போலீசுத்துறையும், எந்த மாநிலத்தை சார்ந்த தொழிலாளிகளாக இருந்தாலும், அவர்களை மட்டும்தான் அடித்து ஒடுக்கும்.
படிக்க :
இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
மணிகண்டன் படுகொலை : போலீசுக்கு கொல்லும் அதிகாரத்தை வழங்கியது யார் ?
சீமான், மணியரசன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வாய்கூட திறக்கமாட்டார்கள். அவர்கள் தமிழக முதலாளிகளின் நலன்களையும் பாதுகாப்பையும் மட்டுமே பேசுவார்கள். தமிழக போலீசுத்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநில தொழிலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக போஸ்டர் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநிதியை எதிர்க்காமல் தமிழக முதலாளிகளின் பின் நிற்பவர்கள்.
சாதி, மத, மொழி, இன, தேச வேறுபாடின்றி எங்கெல்லாம் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுகிறதோ, அங்கெல்லாம் அதற்கு எதிராக போராடவும், எங்கெல்லாம் முதலாளி வர்க்கத்துக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் போராடுகிறதோ, அங்கெல்லாம் அதற்கு துணை நிற்பதுதான் உழைக்கும் வர்க்கமாகிய நமது முதல் கடமை.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க