டந்த ஜனவரி 19 அன்று இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது இளைஞர்கள் சுக்மா மாவட்டத்தில் உள்ள சில்கர் கிராமத்தில் இருந்து ராய்பூரில் உள்ள சத்தீஸ்கர் ஆளுநர் அனுசுயா உய்கேவிடம் மனு அளிக்கப் புறப்பட்டனர். அவர்களை பொய் வழக்கின் கீழ் கைது செய்திருக்கிறது சத்தீஸ்கர் போலீசு.
20 வயதுக்குட்பட்ட இவர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக தங்கள் கிராமத்தில் மத்திய ரிசர்வ் போலீசு படை முகாமை வலுக்கட்டாயமாக அமைப்பதற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கிராமத்தில் முகாம் அமைப்பதற்கு எதிரான கிராம சபையின் முடிவை ஆளுநரிடம் மனுவாக அளிக்க முடிவு செய்தனர்.
ஆளுநரை சந்திக்க செல்லும்போது அவர்களது கிராமத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தொலையில் உள்ள கொண்டகான் பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்குள் இருந்து போலீசால் கைதுசெய்யப்பட்டு இழுத்து செல்லப்பட்டனர். அவர்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
படிக்க :
சத்தீஸ்கர் : போலீசு முகாமிற்கு எதிராக பழங்குடி கிராமங்கள் போராட்டம் !
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஜனவரி 22 அன்று ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள நான்கு பேர் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அறிகுறிகள் இல்லை என்றாலும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றின் காரணமாக இப்பகுதியில் விதிக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144-வது பிரிவை மீறியதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசு கூறியுள்ளது. ஆனால் இளைஞர்கள் ஆளுநரை சந்திக்க செல்வதை தடுப்பதற்காகவே கைது நடவடிக்கையில் போலீசு ஈடுபட்டதாக பல உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரகு மிதியம், ராம் ஓயம், அஞ்சலி, மாதவி, சுனிதா போடம், ரமேஷ் உய்கே, உர்ரா குஞ்சம், ஹிரம் கோவாசி, சுஷில் கோர்சா அனைவரும் சில்கர் கிராமத்தில் வசிப்பவர்கள், நடைபெற்று கொண்டிருக்கும் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர்கள். அவர்கள் அனைத்திந்திய கிராந்திகாரி கிசான் சபாவின் (AIKKS) ஒருங்கிணைப்புடன் ஜனவரி 21 அன்று ஆளுநர் அலுவலகத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இளைஞர்கள், நள்ளிரவு முதல் நடந்து அடர்ந்த காடுகளின் வழியாக பல மலைகளில் ஏறி உரிமை ஆர்வலர் சோனி சோரி வசிக்கும் கீதம் நகரத்திற்குச் சென்றனர். “அவர்கள் மதிய உணவை சாப்பிட்டார்கள் சிறிது ஓய்வெடுத்தனர். பின்னர் ராய்பூருக்கு ஒரு பேருந்தில் சென்றனர்” என்று சோரி கூறினார்.
ஆனால் பேருந்தில் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது உள்ளூர் போலீசு இளைஞர்களை தடுத்து நிறுத்தியது. ஐந்து முதல் ஆறு பேர் கொண்ட போலீசுப்படை பேருந்து நிறுத்தத்திற்கு சென்றது. பேருந்தில் இருந்த இளைஞர்களை வெளியே இழுத்து கைது செய்தது. கொரோனா தடை விதிகளை மீறியதால்தான் இந்த நடவடிக்கை என்று போலீசு ஊடகங்களுக்கு கூறியுள்ளது. ஆனால் மற்ற பயணிகளை விதிகளை மீறியதாக கைது செய்யவில்லை.
சி.ஆர்.பி.எஃப் முகாமிற்கு எதிராக கிராம சபையால் தொகுக்கப்பட்ட அறிக்கை மற்றும் தாங்கள் வைத்திருந்த ஆவணங்களை போலீசு பறிமுதல் செய்துவிட்டதாக இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
***
சில்கர் போராட்டம் மே 12, 2021 அன்று தொடங்கியது. சி.ஆர்.பி.எஃப் 70 கி.மீட்டர் பாசமுடா –  ஜாகர்குண்டா சாலையில் சில்கர் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட மோகூரில் ஒரு முகாமை அமைத்தது. மே 10-ம் தேதி முகாம் அமைக்கப்பட்டு இரண்டு நாட்களில் கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அங்கு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பெருமளவில் வந்து சி.ஆர்.பி.எஃப் வெளியேறுமாறு முழங்கினர். மே 17 அன்று பாதுகாப்புப் படையினர் போராடும் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒரு சில நாட்களுக்கு பிறகு மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
தற்போது ஆளுநரிடம் மனு அளிக்க சென்ற இளைஞர்களை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசின் இந்த செயல் போராட்டத்தை மழுங்கடிப்பதற்கானது என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். சத்தீஸ்கர் சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (PUCL) வெளியிடப்பட்ட அறிக்கையில், “போராடுபவர்கள் குறிவைக்கப்பட்டு பொய்வழக்குகளில் சிக்க வைக்கப்படுவார்கள் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என கூறியது.
படிக்க :
சத்தீஸ்கர் : உள்ளூர் மோதலை முஸ்லீம் வெறுப்பாக மாற்றும் காவிக் குண்டர்கள் !
சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !
கொரோனா ஊரடங்கு விதிகளை பயன்படுத்தி போராடுபவர்களை பொய்வழக்கில் கைது செய்து, அச்சுருத்து வேலையை செய்கிறது சத்தீஸ்கர் மாநில போலீசு. பாதுகாப்பு படையினரின் முகாமை எதிர்த்து அமைதியாக போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துத்துவதிலிருந்தே தெரிகிறது இது பாதுகாப்பு படை அல்ல. உழைக்கும் மக்களுக்கு எதிரான படை.
இப்படையினருக்கு உதவும் சத்தீஸ்கர் போலீசும் அவர்களது கைக்கூலிகள். இவர்களை மக்களை கொல்ல அனுமதிக்கும் மத்திய மாநில அரசுகளும் உழைக்கும் மக்களுக்கு எதிரானவையே.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க