த்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத் தலைமையகத்தில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ள நஹாடி கிராமத்தில் போலீசு முகாம் அமைப்பதற்கு குவாகொண்டா வளர்ச்சித் தொகுதிக்குட்பட்ட 13 கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் உள்ள மக்கள் தங்களது முதன்மைத் தேவையான மருத்துவமனை, பள்ளிக்கூடம், அங்கன்வாடி போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அரசோ கிராம மக்களின் கோரிக்கைக்கு மாறாக போலீசு முகாமை நிறுவுகிறது.
சுக்மா மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீசு படையின் முகாமிற்கு எதிராக கடந்த  2021, மே மாதம் பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தியபோது போலீசுத்துறையால் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைக் கண்டித்து பிஜப்பூர் – சுக்மா மாவட்டத்தின் கிராமப்புற எல்லையில் உள்ள சில்கர் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகவும் தற்போது தண்டேவாடா மாவட்டத்தின் பஸ்தர் கிராம மக்கள் போராடி வருகின்றனர்.
படிக்க :
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !
“இங்கு ஒரு போலீசு முகாம் அமைக்கப்பட்டால் நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது கூட கடினமாக இருக்கும்” என்று 13 கிராமங்களில் ஒன்றில் வசிக்கும் ஒருவர் கூறினார். “ஒரு போலீசு முகாம் இருக்கும்போது மற்ற கிராமங்களுக்கு அல்லது காடுகளுக்குச் செல்வது எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். போலீசுக்காரர்கள் எங்களையும் எங்கள் குடும்ப பெண்களையும் துன்புறுத்துவார்கள். அதனால்தான் இங்கு முகாம் வேண்டாம் என்று சொல்கிறேன். அதற்கு பதிலாக எங்களுக்கு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகள் அமைத்து தாருங்கள்” என்றார் அவர்.
கடந்த மே மாதம் சில்கர் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை கொன்ற போலீசின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 2012-ம் ஆண்டு பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கேகுடா கிராமத்தில் 17 பழங்குடியினர் போலீசுத்துறையால் கொல்லப்பட்டதற்கு எதிராகவும், 2013-ல் இதே பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள எடெஸ்மெட்டா கிராமத்தில் 4 சிறார்கள் மற்றும் 4 பெரியவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராகவும், இம்மாவட்டத்தில் ஏற்கனவே நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தண்டேவாடா மாவட்டத்தில் அமையவுள்ள போலீசு முகாமிற்கு எதிராகவும் இம்மாவட்டத்தின் 13 கிராம மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.
ஆனால், கடந்த டிசம்பர் 9, 2021 அன்று நஹாடி கிராமத்தில் மக்கள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு பெண் கமாண்டோக்கள், மாவட்ட ரிசர்வ் போலீசு (District Reserve Group – DRG) திடீரென அங்கு வந்து போராடுபவர்களை தாக்கி இடத்தை காலிசெய்யும்படி உத்தரவிட்டது.
போராட்டத்திற்கான தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சமையல் கூடத்தில் எரிந்து கொண்டிருக்கும் மரக்கட்டைகளை வைத்து போராட்டத்தின் மேடைக்கு, DRG போலீசு தீ வைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், அருகில் உள்ள நெல் வயலில் தீ ஆரம்பித்து போராட்டம் நடக்கும் மேடைக்கு பரவியது என்பதுபோலவும், அந்த தீயை DRG போலீசு அணைப்பது போலவும் வீடியோ ஒன்று உள்ளூர் வாட்ஸ் அஃப்-ல் உலா வந்தது. ஆனால், அந்த வீடியோ போலீசுக்காரர்கள் தாங்களே படப்பிடிப்பு நடத்தி  பரப்பியதாக நேரில் பார்த்த அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
போராட்டத்திற்காக மக்கள் அமைத்த கூடாரங்கள், தடுப்புக் கட்டைகளை, போராட்ட மேடையை பிடுக்கி எறிந்தது போலீசு. அப்பொருட்களை வைத்து மற்றொரு போராட்ட மேடையை கிராம மக்கள் அமைத்துவிடுவார்கள் என்பதால், அனைத்துப் பொருட்களையும் போலீசு அபகரித்துக் கொண்டது என்று கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், போராட்டம் நடந்த இடத்தில் மக்களை கலைப்பதற்காக போலீசு பட்டாசு வெடித்தாகக் கூறப்படுகிறது.
படிக்க :
சத்தீஸ்கர் : சேமிப்புக் கிடங்குகளான ஸ்வச் பாரத் கழிப்பறைகள் !
எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் : இராணுவ சர்வாதிகாரம்!
போலீசின் இந்த நடவடிக்கையால் போராட்டம் நடந்துவரும் இடத்தை சுற்றி இருக்கும் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். குறிப்பாக கர்கா கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால், போலீசால் விசாரணைக்கு உட்படுத்தபடுவோம், மோசமாக விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. பத்திரிகையாளர்கள் இந்த அச்சத்தை பற்றி அக்கிராம மக்களிடம் பேச முற்பட்டபோது ஊடகங்களிடம் பேச பயமாக இருப்பதாக கூறுகின்றார்கள் என்று த வயர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மக்களைப் பாதுகாக்க வேண்டிய போலீசு, சத்தீஸ்கர் மாநில பழங்குடி மக்களை அச்சுறுத்தியும், துன்புறுத்தியும், கொலைசெய்தும் வருகிறது. இந்தப் போலீசின் சர்வாதிகார நடவடிக்கையை முறியடிக்க நாட்டின் அனைத்து மக்களும் போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது அவசியம். செய்யத் தவறினால், போலீசின் இத்தகைய கொடுமைகள் நாடுமுழுவதும் தங்குதடையின்றி அரங்கேறும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க