பொதுவாக நமது அரசாங்கங்கள் போடும் திட்டங்கள் எல்லாம் “வேண்டா விருப்பாய் பிள்ளை பெற்று ‘போதும்பிள்ளை’ எனப் பெயர் வைத்த” கதைகள் தான். அதிலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கடந்த ஐந்தாண்டுகளில் ”தீட்டியவை” அனைத்துமே மக்களுக்கான ஆப்புகள்தாம் – குறிப்பாக தூய்மை இந்தியா திட்டம். ஏற்கெனவே தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லா மாநிலங்களாக தம்மை முந்திக் கொண்டு அறிவித்த மாநிலங்கள் எப்படி போலியாக கணக்குக் காட்டின என்பது குறித்த விவரங்கள் விரிவாக வெளிவந்துள்ளன.
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா மற்றும் பஸ்தார் பகுதிகளில் இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளது என விவரிக்கிறது ’தி வயர்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரை.

சத்தீஸ்கர் மாநிலம் கேன்கெர் மாவட்டத்தைச் சேர்ந்த குர்செல் கிராமத்தில் மொத்தம் 50 வீடுகள் உள்ளன. இது பழங்குடியினரின் கிராமம். இக்கிராமத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள் 2017-ம் ஆண்டின் துவக்கத்தில் ஆய்வு செய்கிறார்கள். பின்னர் ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஐம்பது வீடுகளுக்கும் கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து இந்தக் கிராமத்தில் ‘திறந்தவெளி கழிப்பிடங்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டதாக’ அறிவிப்பும் வெளியாகிறது.

ஆனால், இன்றளவும் அந்த கிராமத்தவர்கள் அரசு கட்டிக் கொடுத்த கழிப்பிடங்களை பயன்படுத்துவதில்லை. “எங்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே மலம் கழிப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. காடுகளோடு எங்களுக்கு இருக்கும் தொடர்பு இயற்கையானது. நாங்கள் எப்போதும் காட்டினுள் கொஞ்ச தூரம் தள்ளிச் சென்று மலம் கழித்து வருவோம். அதுதான் எங்களுக்கு சௌகரியமாகவும் இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள யாருமே அரசு கட்டிக் கொடுத்த கழிவறைகளை பயன்படுத்துவதே இல்லை” என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த புனிதா குரெட்டி (வயது 40) என்பவர்.
அவர் குறிப்பிடுவதைப் போல் அந்த கிராமத்தில் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிவறைகள் தற்போது சேமிப்பு அறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பெரும்பாலான கழிவறைகள் கழிவுத் தொட்டிகளோடு இணைக்கப்படவில்லை. மேலும், தண்ணீர் இணைப்பும் கொடுக்கப்படவில்லை. மேலும், புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்ட கழிவறையின் கதவுகளும் உடைந்து விழுந்துள்ள நிலையிலேயே இருக்கின்றன.
’தி வயர்’ செய்தியாளர் சுகன்யா சாந்தா சந்தித்த கிராம மக்கள் பலரும் கழிவறையைக் குறித்து ஏராளமான மூட நம்பிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர். வீடுகளுக்கு அருகிலேயே கழிவறைக் கட்டினால் நோய்கள் வந்து விடும் என பலரும் நம்புகின்றனர். மேலும், தண்ணீர் இணைப்பு வழங்கப்படாத நிலையில் கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க முடியாத நிலையையும் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். சுகன்யா பஸ்தார் டிவிசனைச் சேர்ந்த பஸ்தார், தண்டேவாடா, பிஜாபூர், நாராயண்பூர், சுக்மா மற்றும் கேன்கெர் மாவட்டப் பகுதிகளுக்கு பயணித்து தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட கழிவறைகளை சோதித்துப் பார்த்துள்ளார்.

அனைத்து இடங்களிலுமே புதிதாக அமைக்கப்பட்ட கழிவறைகள் அவசரகதியில் கட்டப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையிலேயே காட்சியளித்துள்ளன. கட்டி முடிக்கப்பட்டதாக கணக்குக் காட்டப்படும் கழிவறைகளை கோழி அடைத்து வைக்கும் அறையாகவோ விறகு சேமிக்கும் அறையாகவோ தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார் சுகன்யா. மேலும், இப்பகுதிகளில் நக்சல்பாரிகளின் செயல்பாடுகள் இருப்பதால் அவர்களைத் தேடி வரும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் கிராமங்களுக்குள் நுழைந்து கண்ணில் கண்டவற்றையெல்லாம் சூறையாடுவதும் நடக்கிறது. அப்படி சி.ஆர்.பி.எப். வீரர்களின் ”தேடுதலில்” சேதமுறும் பட்டியலில் அரசு கட்டுக் கொடுத்த கழிவறைகளும் உள்ளன.

படிக்க:
கார்ப்பரேட் காவி பாசிசம் ! புதிய ஜனநாயகம்
அதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் !

”திறந்தவெளிக் கழிப்பிட ஒழிப்பு” என்கிற நிலையை அடைய அப்போதைய பாஜக முதல்வர் ராமன் சிங் கடுமையாக உழைத்திருக்கிறார் – விசயம் என்னவென்றால் அந்த உழைப்பு மொத்தமும் காகிதத்தில் மட்டுமே இருந்துள்ளன. தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு பேசிய ராமன் சிங், தான் வளர்ச்சியை சாதித்துக் காட்டி விட்டதாகவும் அதையே தொடர்ந்து செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

எனினும், ”வளர்ச்சி” குறித்து சங்கித்தனமான இந்த விளக்கங்களை சத்தீஸ்கர் வாக்காளர்கள் ஏற்கவில்லை. சட்டமன்றத் தேர்தலின் முடிவில் மூன்று முறை தொடர்ந்து முதல்வராக இருந்த – தோல்வியையே அறிந்திராத – ராமன் சிங் படுதோல்வியைத் தழுவினார்.

உண்மையிலேயே திறந்தவெளி மலங்கழிப்பதை ஒழிக்கும் அக்கறை இருந்திருக்கும் என்றால், பழங்குடி மக்களுக்கு கழிப்பிடங்கள் குறித்து இருக்கும் மூட நம்பிக்கைகளை பிரச்சாரங்கள் மூலம் முதலில் போக்கியிருக்க வேண்டும். அடுத்து, கழிவறைகளுக்கு தண்ணீர் இணைப்பையும் கழிவுநீர்த் தொட்டிக்கான இணைப்பையும் வழங்கியிருக்க வேண்டும். மாறாக அவசர கதியில் வேண்டா விருப்புடன் அரைகுறையாக நிறைவேற்றப்படும் துக்ளக் பாணி திட்டங்களின் முடிவு இப்படித்தான் இருக்கும். இப்படி வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணத்தை ஊழல் கணக்கில் தான் சேர்க்க வேண்டும்.

குடிநீர் இணைப்பே வழங்கப்படாத பல பகுதிகளில் அரசின் கையாலாகாத்தனத்தையும் முட்டாள்தனத்தையும் பறைசாற்றியபடி நிற்கின்றன, கழிவறை எனப் பெயர் சூட்டப்பட்ட சிதிலமான கட்டிடங்கள்.

சாக்கியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க