எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கம் :
‘தேசப் பாதுகாப்பு’  என்ற பெயரில் அரங்கேறும் இராணுவ சர்வாதிகாரம் !
ந்தியாவை இந்து ராஷ்டிரமாக்க வேண்டும் என்ற தனது கனவை நனவாக்குவதற்கு மிக மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது, ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். அதற்காக, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அதிகாரத்தை மத்தியில் குவிப்பது; ‘‘ஊழல் ஒழிப்பு’’, ‘‘தேச வளர்ச்சி’’ என்ற பொய்ப் பிரச்சாரங்களின் மூலமும் மதவெறி, தேசவெறியைத் தூண்டிவிட்டு கலவரங்கள் நடத்துவதன் மூலமும் மாநிலங்களில் நேரடியாக ஆட்சியைப் பிடிப்பது; ஆட்சிக்கு வந்தபின், தான் ஆளும் மாநிலங்களில் மிகத் தீவிரமாக காவி − கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்துவது எனத் துல்லியமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தான் நேரடியாக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஆளும் கட்சியினரை மிரட்டி அவர்களுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு அதிகாரத்தில் பங்குபெறுவது, குதிரை பேரம் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது என பார்ப்பனியத்திற்கே உரிய தந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது காவிக் கும்பல். தனக்கு சல்லிக்காசு கூட செல்வாக்கு இல்லாத மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை ஆளுநர்களாக நியமிப்பதன் மூலம் அம்மாநிலங்களின் அதிகாரத்தைக் கைக்குள் வைத்துக் கொள்கிறது. இந்த நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக இராணுவ ரீதியிலான திடீர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது, மோடி – அமித்ஷா கும்பல்.
***
எந்தவித முன்னறிவிப்புமின்றி பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF − border security force) அதிகார வரம்பை 15 கி.மீட்டரிலிருந்து 50 கி.மீட்டராக அதிகரித்து கடந்த அக்டோபர் 11 அன்று அரசாணை வெளியிட்டிருக்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம். எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF) அதிகார வரம்பை அதிகரித்திருப்பதற்கான உரிய காரணங்கள் எதுவும் இந்த அரசாணையில் குறிப்பிடப்படவில்லை.
படிக்க :
AFSPA -ஐ இரத்து செய் : நாகாலாந்து கிராம மக்களை சுட்டுக் கொன்ற துணை இராணுவப்படை
நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !
மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கையை, ‘‘எல்லைப் பாதுகாப்புப் படையின் செயல்திறனை மேம்படுத்துவது மற்றும் நாடு முழுவதும் ஒரே சீரான தன்மையை உருவாக்குவது’’ என்று நியாயப்படுத்துகிறார் எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. சாலமன் யாஷ் குமார் மின்ஸ்.
அசாமின் பா.ஜ.க. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள அதே நேரத்தில், பஞ்சாப், மேற்குவங்க மாநிலங்களோ இந்த இராணுவ நடவடிக்கையை ‘‘கூட்டாட்சியின் மீதான தாக்குதல்’’ என எதிர்க்கின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை அதிகரிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘‘சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், மாநில போலீசுத் துறையின் மீதான நம்பிக்கையற்ற தன்மையின் வெளிப்பாடுதான் இந்த அரசாணை’’ என்றும் விமர்சித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி. மேற்குவங்க முதல்வர் மம்தாவோ, ‘‘இது கூட்டாட்சியின் மீதான தாக்குதல். இதனால் மக்கள்தான் தொல்லைக்குள்ளாவர்கள்’’ என்று எதிர்க்கிறார்.
பா.ஜ.க.வின் தமிழக செய்தித் தொடர்பாளர் நாராயணன், ‘‘தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இது நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. முக்கியமாக அசாம், பஞ்சாப், மேற்குவங்க மாநிலங்களின் நலன் கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தமிழகத்திலும் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கான அடித்தளத்தைப் போடுகிறார்.
விரிவுபடுத்தப்படும் பி.எஸ்.எஃப். படையின் அதிகாரம்
2014-ல் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்கள் முழுவதும், குஜராத்தில் 80 கி.மீ, ராஜஸ்தானில் 50 கி.மீ, பஞ்சாப், அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் 15 கி.மீ வரை சர்வதேச எல்லையிலிருந்து எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எப்) கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இதில் திருத்தம் செய்யப்பட்டு மேற்கூறியபடி எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படை விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என மோடியிடம் கோரிக்கை வைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா.
குறிப்பாக நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் 425 கி.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிற பஞ்சாப் மாநிலத்தில் அதிகார வரம்பு விரிவாக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தில் பாதி எல்லைப் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. பங்களாதேஷூடன் 2216.7 கீ.மீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிற மேற்குவங்க மாநிலத்தில், மொத்தமுள்ள 23 மாவட்டங்களில், மால்டா, நொய்டா, முர்சிதாபாத், கூச் பெஹர், ஜல்பைகுரி, உத்தர் தினைஜ்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் பங்களாதேஷ் எல்லையில் இருப்பதால், பி.எஸ்.எஃப்−ன் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. இதனால் மாநிலத்தின் வட பகுதி முழுவதும், அதாவது மூன்றில் ஒரு பங்கு மாநிலம் இராணுவத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால்தான் இம்மாநிலங்கள் இதை எதிர்க்கின்றன.
தேசப் பாதுகாப்பு எனும் போலியான நியாயவாதம்
இந்திய இராணுவத்தின் 7 பிரிவுகளில் ஒரு படைப்பிரிவே எல்லைப் பாதுகாப்புப் படையாகும். இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு, 1968-ல் எல்லைப் பாதுகாப்புப் படைச்சட்டம் உருவாக்கப்பட்டு, 1969-லிருந்து இப்படை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. 1968 – சட்டத்தின்படி, அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் எல்லையைப் பாதுகாப்பது இப்படையின் வேலையாகும்.
இப்படை தொடங்கப்பட்ட காலத்தில், எல்லையோர மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் போலீசு நிலையங்கள், வாகன மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மாநில போலீசுத் துறையிடம் இல்லை. இதனைக் காரணமாகக் கொண்டு, ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் அண்டை நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களில் சர்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ வரை எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், விசா சட்டம் 1962 மற்றும் 1967, சுங்க வரி சட்டம், கஞ்சா ஒழிப்புச் சட்டம், ஆயுத தடுப்புச் சட்டம் மற்றும் அன்னியச் செலாவணி சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 15 கி.மீட்டருக்குள் தேடுதல் வேட்டை நடத்த, கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள எல்லைப் பாதுகாப்புப் படைக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இந்த 15 கி.மீட்டருக்குள் போலீசு வேலையை இராணுவம் செய்யும் என்பதுதான்.
ஆனால், 1969-களில் இருந்த போலீசுத் துறை இன்று இல்லை, போலீசு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, வாகனம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளால் போலீசுத்துறை நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை அதிகரிக்கத் தேவையில்லை என முதலாளித்துவ பத்திரிகைகளே விமர்சிக்கின்றன.
பஞ்சாப், மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (BSF – Borser Security Force) அதிகார வரம்பை 15 மி.மீட்டரிலிருந்து 50 கி.மீட்டராக அதிகரித்திருக்கிறது.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கத்தான் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் சங்கிகள். ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்ட போது குஜராத்தின் எல்லைப் பாதுகாப்பு படை என்ன செய்தது? அப்பாவி முஸ்லீம்களை சுட்டுக் கொல்லும் இராணுவம் ஏன் முந்த்ரா துறைமுகத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவில்லை? போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பது என்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு என்று இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், பயங்கரவாத ஊடுருவல் ஆகியவை அனைத்தும் அதிகாரவர்க்கத்தின் துணை இன்றி நடப்பது இல்லை. பிரச்சினை எல்லையிலேயே இருக்கும்போது அந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரத்தை விரிவுபடுத்தி என்ன பயன்? ஆகவே கடத்தல், எல்லை தாண்டிய ஊடுருவல் ஆகியவையெல்லாம் தங்களுடைய காவி பாசிச நோக்கத்தை மறைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பல் பயன்படுத்தும் சொற்சிலம்பங்களே அன்றி வேறல்ல.
காவி பாசிச கும்பலின் உண்மையான நோக்கம் என்ன?
கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மேகாலயா வரிசையில் பஞ்சாப் மாநிலமும் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் தனது தேர்தல் வியூகத்தை வகுத்து செயல்படத் தொடங்கிவிட்டது. மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் நடத்திவரும் மக்கள் திரள் போராட்டம் பா.ஜ.க.வை அம்மாநிலத்திலிருந்தே துடைத்தெறிந்திருக்கும் நிலையில் அங்கு தாம் ஆட்சியைப் பிடிப்பது பற்றி காவிக்கும்பல் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.
மேற்கு வங்கத்தில், பா.ஜ.க. மெல்ல மெல்ல வளர்ந்துவந்தாலும், மம்தாவின் கவர்ச்சிவாத பொறுக்கி அரசியலின் செல்வாக்கு, மாநில அரசு எந்திரத்தில் தனது விசுவாசிகளை வலுவாகப் பெற்றிருப்பது போன்றவை பாசிச பா.ஜ.க.விற்கு சவாலாக உள்ளன. இதனால் திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலைக்கு வாங்கி பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்ட பல்வேறு எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து வருகிறார்கள்.
எனவே, இவ்விரு மாநிலங்களும் இந்திய – பாகிஸ்தான், இந்தியா – பங்களாதேஷ் எல்லையில் அமைந்துள்ளதை முகாந்திரமாக வைத்துக் கொண்டு, பயங்கரவாத பீதியூட்டி இம்மாநிலங்களில் இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான முயற்சியாகவே எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு 50 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பஞ்சாப், மேற்குவங்க முதல்வர்கள் சொல்வதைப் போல ‘‘மாநில உரிமை பறிப்பு’’ என்ற வரம்போடு இதனைச் சுருக்கிப் பார்க்கக் கூடாது.
மேலும், இந்தச் சட்டங்கள் பஞ்சாப், மேற்குவங்கம் என்ற வரம்போடு நின்றுவிடும் என்றும் கனவு காணக் கூடாது. இன்றைய சூழலில் சங்கிகளுக்கு எட்டாக்கனியாக இருக்கும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரமுடியும். குறிப்பாக தமிழ்நாட்டில், இலங்கை வழியாக சீன அச்சுறுத்தல், விடுதலைப் புலிகள் ஊடுருவல் என பல்வேறு காரணங்களைக் காட்டி இங்கு தனது அதிகாரத்தை இராணுவத்தின் மூலமாகக் குவிக்க முடியும்.
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவல், முஸ்லீம் பயங்கரவாதம், முஸ்லீம் அகதிகள் ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல் என்ற பெயரில் விசாரணையின்றி யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், தேடுதல் வேட்டை நடத்தலாம், துப்பாக்கி சூடு கூட நடத்தவும் முடியும். படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், மனித உரிமை மீறல்கள், பொய் வழக்குகள் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றது எல்லைப் பாதுகாப்புப் படை என்பதை, வடகிழக்கு மாநிலங்களின் வரலாறு நமக்குச் சொல்லும்.
ஏற்கெனவே, அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு, சி.ஏ.ஏ. ஆகியவற்றின் மூலம் முஸ்லீம்களின் குடியுரிமையைப் பறித்து அகதிகளாக்கியுள்ளது காவிக் கும்பல். இந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு அதிகரிப்பின் மூலம் அப்பாவி முஸ்லீம்களின் மீது இராணுவ நடவடிக்கையும் பாய இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு திரிபுராவில் எல்லைத் தாண்டினார் என்று கூறி 23 வயது ஜாஸ்கிம் மியா என்ற இளைஞரை சுட்டுப் படுகொலை செய்துள்ள சம்பவம் இதற்கு நல்ல சான்று.
மேற்கு வங்கத்தில் மட்டும் இதுவரை 250 வழக்குகள் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு எதிராகப் பதிவாகி உள்ளன. 33 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதற்கான போராட்டக் குரல்கள் காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதிலிருந்து இராணுவத்தின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள முடியும். இனி இந்தப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகின்றது என்பதைத் தாண்டி அம்மாநில மக்களுக்கு ஒன்றிய அரசின் இந்த ‘‘வரம்பு விரிவாக்க’’ நடவடிக்கையால் எவ்விதப் பலனும் இல்லை. ஆனால் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கோ தங்களது இந்துராஷ்டிரக் கனவை வெல்வதற்கான அடித்தளங்களில் இதுவும் ஒன்று.
படிக்க :
புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2021 அச்சு இதழ் !
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2021 மின்னிதழ் !
அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, மிசோராம், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு – காஷ்மீர் – லடாக் ஒன்றிணைந்த மாநிலமாக இருந்த போதும், யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகும் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் என்பவை பெயரளவிற்கானவையே. அவை முழுக்க முழுக்க இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, தேசப் பாதுகாப்பு என்ற போலிக் காரணத்தைக் கூறி தமக்குச் சாதகமற்ற அரசியல் நிலைமைகள் உள்ள பஞ்சாபையும், மேற்குவங்கத்தையும் இன்னுமொரு காஷ்மீராகவும், வடகிழக்கு மாநிலங்களைப் போன்றும் மாற்றுவதற்கான முயற்சியே காவிக் கும்பலின் இந்த நடவடிக்கை. எனவே இது வெறும் அதிகார வரம்பு பற்றிய பிரச்சினையில்லை, காவி பாசிசத்தை நிலைநாட்ட இராணுவ சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கான முன்னோட்டம்!

அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க