நாகாலாந்து மாநிலத்தில் சுரங்கத் தொழிலாளர்களையும் கிராம மக்களையும் துணை இராணுவம் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடுமுழுவதும் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் மோன் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டம் மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள ஓடிங் பகுதியில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி மாலையில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களை துணை இராணுவப்படை சுட்டுக்கொன்றுள்ளது.
அந்தப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் சுரங்கத் தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகப்பட்டு  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக துணை இராணுவப்படை தரப்பு தெரிவிக்கிறது.
சுரங்கத் தொழிலாளர்கள் அனைத்து வார நாட்களிலும் சுரங்கத்தில் தங்கி வேலைசெய்துவிட்டு சனிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு தங்களது ஊருக்குள்வந்து குடும்பத்துடன் செலவிட்டு விட்டு மீண்டும் சுரங்க வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அவ்வகையில் சனிக்கிழமை மாலை தமது சொந்த ஊருக்குத் திரும்பிய தொழிலாளர்களைத் தான் சுட்டுக் கொன்றுள்ளது கொலைகார துணை இராணுவப் படை.
படிக்க :
பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !
ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
“துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிக்-அப் டிரக்கில் இருந்த உடல்களை எடுத்து செல்லும் நோக்கி மற்றொரு பிக்-அப் டிரக்கில் அவர்கள் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர். அங்கிருந்து தப்பித்துச் சென்ற துணை இராணுவப்படை, மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். அப்போது அசாம் பக்கம் சிலர் ஓடிச்சென்றபோது, அவர்களை துரத்திச் சென்ற இராணுவத்தினர் வழியில் இருந்த நிலக்கரிச் சுரங்க குடிசைகளின் மீது கூட கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்பதை நேரில் பார்த்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று போலீசு தரப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், மோன் மாவட்ட பாஜக தலைவர் நியாவாங் கொன்யாக், ஓட்டிங் – திரு சாலையில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாகவும், கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் இறந்துவிட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், டிசம்பர் 4 சம்பவம் நடந்த இடத்தை நோக்கிச் சென்றுள்ளார்.
அங்கு விசாரிக்கச் சென்ற அவர் மற்றும் உடன் வந்தவர்கள் மீதும் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், அவருடன் வந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டார். கொன்யாக் அந்த இடத்தை அடைந்த நேரத்தில் துப்பாக்கிச்சூடு பற்றி கேள்விப்பட்ட பல கிராம மக்களும் அங்கு வந்தனர். அவர்கள்மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், குறைந்தது ஏழுபேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.” என்றும் அறிக்கை கூறுகிறது.

டிசம்பர் 5-ம் தேதியன்று ஹார்ன்பில் டிவி-க்கு கொன்யாக் அளித்த பேட்டியில், “நாங்கள் அங்கு சென்றபோது, பிக்-அப் வேன் இரத்தக் கரைகளுடன் காலியாக இருந்தது. இறந்தவர்களின் உடல்களில் இருந்த ஆடைகளை அகற்றி காக்கி உடைகளை அணிவிக்க முயற்சித்தனர். அதை நாங்கள் பார்த்தோம் அதனால்தான் எங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்” என்று கூறினார்.
டிசம்பர் 5-ம் தேதியன்று, படுகொலையை நிகழ்த்திய துணை இராணுவப்படையான அசாம் ரைபிள்ஸ் அமைப்பின் முகாம்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மக்கள் கூட்டத்தினர் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் துணை இராணுவப் படையின் முகாம்களைத் தாக்கி சூறையாடினர்.
மாநிலத்தின் தலைநகரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி படுகொலையை கண்டித்து அமைதி ஊர்வலங்கள் பொதுமக்களால் நடத்தப்பட்டன. இதையடுத்து அம்மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது என்று காரணம் கூறி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த படுகொலைக்கு நாகாலாந்தின் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பின் தலைவர் கெகாங்சிம் யிம்யுங்கர், “இதுவரை பொதுமக்கள் 16 பேர் கொல்லப்படுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் பலரை காணவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திலிருந்து எந்த தகவல் தொடர்புகளும் வரவில்லை. எஸ்.எம்.எஸ். மற்றும் இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நாகாலாந்து சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இது தொடர்பாக ஒன்றிய அரசு உண்மையான விளக்கத்தை தரவேண்டும். நமது நாட்டின் சொந்த நிலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய உள்துறை அமைச்சகம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
நாகாலாந்து உள்ளிட்ட சில வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (ASFPA) 1958 நடைமுறையில் உள்ளது. இதன்மூலம், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் முன் அனுமதியின்றி அத்துமீறி துணை இராணுவம் சோதனையிட முடியும். கண்ணில் படும் நபர்களை வாரண்ட்(முன்னறிவிப்பு) ஏதுமின்றி கைது செய்யவும் முடியும். சந்தேகம் ஏற்பட்டால் சுட்டிக் கொல்லவும் முடியும்.
நாகாலாந்து மாநிலம் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (ASFPA) 1958-ஐ உடனே ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாடுமுழுவதும் பற்றிப் படர்ந்து வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டிசம்பர் 6-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில், துப்பாக்கிச்சூட்டில் இறந்த பொதுமக்களுக்கு வருத்தம் தெவிப்பதாக கூறியுள்ளார். அந்த பேச்சில் கூட, துணை இராணுவத்தின் வாகனங்களை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தியதைப் பற்றியும், முகாமை சூறையாடியது பற்றியும் பேசுகிறாரே தவிர, பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாப்பு படையினர் பற்றியும், அவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது பற்றியும் குறிப்பிடவில்லை.
மோன் மாவட்ட பாஜக தலைவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தைப் பற்றி அமித்ஷாவும் பேசவில்லை. ஊடகங்களும் பேசவில்லை என்பதைத் தாண்டி பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட பேசவில்லை.
சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலாளர்களது உடலில் இருக்கும் உடையை காக்கி உடைகளாக மாற்றுவதற்கு துணை இராணுவப்படை முயற்சித்துக் கொண்டிருந்தது என்பதையும் , அதனைக் கண்ட தம்மையும் தன் உடன்  வந்தவர்களையும் துணை இராணுவப் படை சுட்டது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனில் இதற்கு முன்னர், காஷ்மீர், குஜராத் மற்றும் பிற வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகளை சுட்டுப் பிடித்ததாகக் காட்டி பரிசில்களையும் பதவி உயர்வையும் பெறுவதற்காக, அப்பாவிகளை சுட்டுக் கொன்று அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தியிருக்கிறது துணை இராணுவம். அதே போன்ற ஒரு முயற்சிதான் தற்போது நாகாலாந்தில் நடைபெற்றதா? என்ற கேள்வியை இந்த ‘காக்கி’ சட்டை மாற்றும் சம்பவம் நடந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து யாரும் வாய்திறப்பதில்லை. வட கிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரிலும்  குவிக்கப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமும், இப்படுகொலைகள் நடப்பதற்கு முக்கியக் காரணமாகும். இது குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாய்மூடி மவுனிக்கின்றன.
படிக்க :
மாப்பிளா கிளர்ச்சி : பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற இராணுவம் !
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?
000
இந்திய இராணுவம் காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களில் இந்தியாவின் எல்லைப்பகுதி கிராமங்களில் பாலியல் வன்கொடுமை, போலி என்கவுண்டர், சித்திரவதை என எண்ணற்ற கொடுமைகளைச் செய்து வருகிறது. அதற்கு ஓர் உதாரணம்தான் இந்த நாகாலாந்து துப்பாக்கிச்சூடு.
பாசிச மோடி அரசு வெளியிட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை விரிவாக்கச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் போது, இத்தகைய படுகொலைகளும் அதிகரிக்கும் என்பது உறுதி. அன்று இராணுவத்தின் துப்பாக்கிகள் நம்மை நோக்கியும் இருக்கலாம் என்பதற்கு நாகாலாந்தே சாட்சி !

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க