Thursday, May 30, 2024
முகப்புசெய்திஇந்தியாதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

தீவிரவாதிகளுடன் காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேவேந்தர் சிங்கின் பழைய வரலாறு பல கேள்விகளை எழுப்புகிறது.

-

காஷ்மீர் மாநிலத்தின் மிக முக்கியமான போலீசு அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளை அழைத்துக்கொண்டு டெல்லி வரும் வழியில் பிடிபட்டிருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை ஜம்மு-ஶ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் ஒரு காரில் செல்வதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர். அதில் தேடப்படும் மூன்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் காஷ்மீர் டி.எஸ்.பி தேவேந்தர் சிங்கும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இச்சம்பவத்தில், தேவேந்தர் சிங்கின் வரலாறுதான் பல கேள்விகளை எழுப்புகிறது. இவர் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி அல்ல.

வெளிநாட்டு தூதுவர்களை வரவேற்கும் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருக்கும் தேவேந்தர் சிங்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச நாடுகளின் தூதுவர்களை காஷ்மீருக்கு அழைத்து அங்கு இயல்புநிலை நிலவுவதாக காட்டியது மோடி அரசு. இந்த முக்கியமான நிகழ்வில் சர்வதேச தூதுவர்களிடையே தேவேந்திர சிங்கும் நின்றிருந்தார். அந்த அளவுக்கு மிக முக்கியமான அதிகாரி. பொதுவில் இது போன்ற நிகழ்வுகளில் ‘செட் பிராப்பர்டியாக’ நிற்க வைக்கப்படும் நபர்களின் ஜாதகத்தை கூட அலசி ஆராய்ந்த பிறகுதான் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் வெளிநாட்டு தூதுவர்களின் பாதுகாப்புக்கு என்று தேர்ந்தெடுக்கும் அளவுக்கு பாதுகாப்பு /உளவுத்துறைகளின் நன்மதிப்பை பெற்றிருந்தார் தேவேந்தர் சிங். கூடுதலாக, கடந்த ஆண்டு குடியரசு தலைவரின் வீர தீர செயலுக்கான விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு முக்கியமான போலீஸ் அதிகாரி ஏன் தீவிரவாதிகளை அழைத்துக்கொண்டு டெல்லி சென்றார்? அப்பாவி காஷ்மீரிகளைகூட கைது செய்து, கொடூரமாக லாக் அப் டார்ச்சர் செய்வதில் பெயர் பெற்றவர் தேவேந்தர் சிங் என்பது அவரைப் பற்றிய மற்றொரு செய்தி.

கடந்த 2004-ம் ஆண்டு நடத்தப்பட்ட பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டு இந்தியாவின் ‘கூட்டு மனசாட்சியை’ திருப்திபடுத்த்வதற்காகவே தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு தன்னுடைய வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில், இந்த தேவேந்திர சிங்தான் ஒரு நபரை தன்னுடன் டெல்லியில் தங்கவைக்குமாறு கட்டளையிட்டதாக எழுதியிருக்கிறார். மேலும் அவர் கொடுத்த வாக்குமூலத்திலும் காஷ்மீர் பாதுகாப்பு அதிகாரிகள் தன்னை கைது செய்து சித்திரவதை செய்ததையும், பணம் பறித்ததையும், பின்னர் தீவிரவாதி என்று அறியப்பட்ட ஒருவரை தன்னுடன் அனுப்பிவைத்து தங்கவைக்குமாறு கட்டளையிட்டதையும் எழுதியிருக்கிறார் அப்சல் குரு.

படிக்க:
சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !
காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

முன்னர் வாஜ்பாய் அரசு பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தபோது பாராளுமன்றத் தாக்குதல் சம்பவம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஊழல் பிரச்சினை பின்னுக்குப் போய் பாகிஸ்தானுடன் போர், நாட்டு பாதுகாப்புப் பிரச்சினை முன்னுக்கு வந்தது. அப்போது தேவேந்தர் குமார் உள்ளிட்ட காஷ்மீர் போலீசார் பலரின் பெயரை அப்சல் குரு உள்ளிட்ட ‘பயங்கரவாதிகள்’ தெரிவித்த போதும் அவர்கள் மீது விசாரணை நடைபெறவில்லை. எனில் அந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது யார் ? எதற்காக ? என்கிற கேள்வி ஜனநாயக சக்திகளால் அப்போது எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டம் போஸ்டர்
அப்சல் குரு

கடந்த பாரளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடந்த புல்வாமா தாக்குதலிலும் தீவிரவாதிகள் இராணுவப் பாதுகாப்பு மிக்க பகுதிக்குள் அவ்வளவு வெடி மருந்துகளை எப்படிக் கொண்டு வந்தார்கள் என்கிற கேள்வி எழுந்தது. அதற்கு இதுவரை எந்த விடையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது தேவேந்தர் சிங்குடன் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதிகளின் முந்தைய நடவடிக்கைகளும் நம் கவனத்தை கோருகின்றன. கைது செய்யப்பட்டுள்ள நவீது முஸ்தாக் என்கிற தீவிரவாதி ஹிஸ்புல் முஜாகீதீனின் தலைமையில் 2-ம் இடம் வகிப்பவர் என்கின்றன பத்திரிகை செய்திகள். காஷ்மீர் மாநில அந்தஸ்தை பறித்த பிறகு வெளி மாநில வியாபாரிகள் மீது இவர்கள் நடத்திய தாக்குதல்கள் காஷ்மீரின் ஆப்பிள் வணிகத்தை பாதித்தன. மேலும் காஷ்மீர் மக்களின் மீதான இந்திய அரசின் அடக்குமுறையை நியாயப்படுத்த இந்த தாக்குதல்கள் உதவின.

டி.எஸ்.பி தேவேந்தர் சிங்கின் கைதுக்கு பிறகு அவரது வீட்டில் நடந்த சோதனையில் ஏ.கே-47 ரக துப்பாக்கிகளும் இரண்டு கைதுப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

இப்படியான முன்னணி போலீஸ் அதிகாரி செல்லும் வாகனத்தை யாரும் சோதனையிட மாட்டார்கள் என நினைத்து அந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தியிருக்கலாம் என பெயர் வெளியிட விரும்பாத போலிஸ் அதிகாரி ஸ்க்ரால் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தேவேந்தர் சிங் கைது குறித்த ஜம்மு காஷ்மீர் போலிசாரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கைது நிகழ்வு காஷ்மீர் முழுவதும் தெரியவந்தது. அது ஊடகங்களிலும் வெளியானது. பின்னர் இரவு காஷ்மீர் மாநில ஐ.ஜி விளக்கம் அளித்தார்.

இந்த கைதும் இதற்கு முந்தைய நிகழ்வுகளும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன !

முன்னணியான ஒரு போலீசு அதிகாரி, தீவிரவாதிகளை டெல்லிக்கு அழைத்து வந்ததன் நோக்கம் என்ன? அதிகாரி, தீவிரவாதிகளுக்கு விலை போனாரா?

முன்னர் வாஜ்பாய் அரசின் போதும் இதே போல பாதுகாப்பு அதிகாரிகள் அனுப்பிவைத்தவர்கள்தான் பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள் எனும் போது, இப்போது அழைத்து வந்தவர்களை வைத்து என்ன செய்ய திட்டமிட்டிருந்தார்கள்?

பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐ.பி., ரா உள்ளிட்ட உளவு நிறுவனங்களின் ஏஜெண்டுகள் போலீசாரிடம் தெரியாமல் மாட்டிக்கொள்வது உண்டு. கடந்த ஆண்டு கூட சி.பி.ஐ இயக்குநர் வீட்டின் அருகில் சந்தேகத்தின் பெயரில் சிலரை கைது செய்து விசாரித்த போது அவர்கள் ஐ.பி ஏஜெண்டுகள் என்கிற விசயம் அம்பலமானது நினைவிருக்கலாம்

அதைப் போலவே தற்போதும் அரசின் ஒரு ஏஜென்சியின் திட்டமிட்ட செயல் மற்றொரு ஏஜென்சியினால் தடுக்கப்பட்டிருக்கிறதா? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

அதைவிட முக்கியமாக, தேசபக்தியையும் பாகிஸ்தான் எதிர்ப்பையும் குத்தகைக்கு எடுத்ததாகக் காட்டிக் கொள்ளும் பா.ஜ.க ஆதரவு ஆங்கில-இந்தி மீ(மோ)டியா’க்களால் இந்த விவகாரம் ஏன் பரபரப்பாக விவாதிக்கப்படவில்லை?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை நாம் தேடத் துவங்கும் இடத்திலிருந்துதான், அரசு – தேசியம் – பாதுகாப்பு ஆகிய சொல்லாடல்களின் சாயம் கரையத் தொடங்கும் !


ராமச்சந்திரன்
செய்தி ஆதாரம் : ஸ்க்ரால், என்.டி.டி.வி.

  1. மூன்று குரங்குகளை நினைத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் .இல்லையென்றால் தேசதுரோகி பட்டம் தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க