சத்தீஸ்கர் மாநிலத்தில் அபுஜ்மத் பகுதியில் உள்ள மாவோயிஸ்டூகள் 31 பேரை பாதுகாப்புப் படை படுகொலை செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி உளவுத்துறை மூலமாக தண்டேவாடா மாவட்டத்தின் எல்லையில் உள்ள கோவல், நெத்தூர், துல்டுலி போன்ற கிராமங்களைச் சுற்றியுள்ள அபுஜ்மத் காட்டுப்பகுதிக்குள் மாவோயிஸ்டுக்ள் இருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் மாவட்டத்தின் ரிசர்வு போலீசு படைகள் (DRG) இணைந்து மாவோயிஸ்டுக்ள் மீது நடத்திய என்கவுண்டரில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகப் போலீசு தன்னுடைய முதல்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் என்கவுண்டர் நடந்த இடத்தில் கிடைத்த ஏ.கே 47, எல்.எல்.ஆர் போன்ற ஆயுதங்கள் மூலம் சில மாவோயிஸ்ட் தலைவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசு தெரிவித்துள்ளனர்.
போலீசால் படுகொலை செய்யப்பட்ட நக்சலைட்டுகள் PLGA (மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம்) எண் 6 பிளாட்டூண் 16 சேர்ந்தவர்கள் மற்றும் மாவோயஸ்டகளின் கிழக்கு பாஸ்தார் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பாதுகாப்புப் படையினரால் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது குறித்து அக்டோபர் 4 ஆம் தேதி இரவு மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாயுடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாக முதலமைச்சர் அலுவலகம் ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனத்துக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
படிக்க: சத்தீஸ்கர் படுகொலை: பாசிசக் கும்பலால் நடத்தப்படும் நரவேட்டை
இது குறித்து தன்னுடைய எக்ஸ் (twitter) பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாநில முதல்வர் விஷ்ணு தேவ் சாய் “இது பெரிய வெற்றி” என்றும், “நம்முடைய வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்” என்றும், “நக்சலிசாத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வரை எங்களது போராட்டம் ஓயாது. எங்கள் இரட்டை இன்ஜின் அரசு இதற்காக உறுதியாக உள்ளது. நக்சலிசத்தை மாநிலத்திலிருந்து ஒழிப்பதே எங்கள் இலக்கு” என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, செப்டம்பர் 20 ஆம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சலிசத்திற்கு இந்தியாவில் முடிவுகட்டப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாசிச மோடி ஆட்சியில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடுவோர் மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ஸ்டான் சுவாமி, பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட பழங்குடி மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் செயல்பாட்டாளர்கள் நசுக்கப்படுகின்றனர். மாவோயிஸ்டுகளோ நரவேட்டையாடப்படுகின்றனர்.
கனிம வளக் கொள்ளையை எதிர்த்து உறுதியான போராட்டங்களை நடத்தும் பழங்குடி மக்கள் ஆயுதப் படைகளைக் கொண்டும் ட்ரோன் தாக்குதல் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்; மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர்.
எனவே, கனிம வளக் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டியது தற்போதைய உடனடித் தேவையாக உள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram