பாகம் 1 : மாப்பிளா கிளர்ச்சியைக் கண்டு காவிக்கும்பல் அஞ்சுவது ஏன் ? || மு இக்பால் அகமது தொடர்
பாகம் 2 : மாப்பிளா கிளர்ச்சி : 1921 அக்டோபரில் நிகழ்த்தப்பட்ட இராணுவ வெறியாட்டம்
பாகம் 3 : மாப்பிளா கிளர்ச்சி : பெண்களையும் குழந்தைகளையும் கொன்ற இராணுவம் !
லபார் புரட்சியின் போக்கில் பெண்கள், குழந்தைகள், முதியோர்க்கு பிரிட்டிஷ் இராணுவம் இழைத்த கொடுமைகளில் பலவும் பொதுவெளியில் ஆவணப்படுத்தப்படாமலேயே போயின. மேல்முறி – அதிகாரத்தோடி நிகழ்வில் பெண்கள், குழந்தைகள், முதியோர் சந்தித்த கொடுமைகள், போர்க்காலங்களின் போது பின்பற்ற வேண்டிய பொதுவான கட்டுப்பாடுகளை மீறியவை ஆகும். தங்கள் தந்தையரை பிரிட்டிஷ் இராணுவத்தினர் இழுத்துச் சென்றபோது தடுக்க முனைந்த இரண்டு மகள்களின் கல்லறைகளும் அங்கே உள்ளன.
அதிகாரத்தோடியில் இருந்த கீடக்கடன் குடும்பத்தை சேர்ந்த 11 வயதுக் குழந்தை அவள். வீட்டுக்குள் புகுந்து தன் தந்தையை பிரிட்டிஷ் இராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது இவள் அவரை கட்டிப்பிடித்து இழுத்திருக்கின்றாள், அப்போது இரக்கமின்றி துப்பாக்கியின் பின் கட்டையால் அவளை அடித்திருக்கின்றார்கள். அதையும் மீறி அவள் தன் தந்தையை இறுக தழுவி இருந்ததால், பிரிக்க முடியாத நிலையில் இருவரையும் ராணுவம் சுட்டுக்கொன்றது. தன் அம்மாவழிப் பாட்டியின் வீட்டுக்கு வந்தபோதுதான் இருவருக்கும் இந்த கொடுநிலை ஏற்பட்டுள்ளது.
கோணோம்பாற சீரங்கந்தோடியைச் சேர்ந்த அரீப்புரம் பாரக்கல் குஞ்சீன் ஹாஜியின் மகள் கடியாமு. திருமணம் ஆன அவள், நோய்வாய்ப்பட்டு இருந்த வயதான தன் தந்தையை கவனித்துக்கொள்ள வந்திருந்தாள் கடியாமு. பத்தாயம் எனப்படும் பெரிய மரப்பெட்டியின் மீது படுத்துக்கொண்டு இருந்த தந்தையை, பிரிட்டிஷ் இராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது தடுக்க முனைந்த அவளை துப்பாக்கியின் பின்கட்டையால் தாக்கியுள்ளனர். வலுக்கட்டாயமாக அவரை இழுத்து சென்று வீட்டின் கிழக்கு முற்றத்தில் தரையைப் பார்த்ததுபோல படுக்கச்சொல்லி ஆனையிட்டுள்ளனர். தன் தந்தையை சுட்டுவிடுவார்கள் என்று அறிந்த கடியாமு, அவர் மீது கட்டிப்பிடித்து படுத்துள்ளாள். இராணுவம் இருவரையுமே சுட்டுக்கொன்றது.
படிக்க :
நாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால் அகமது
கொரோனா பெருந்தொற்று : முதலாம் அலையும் பாடமும் || இக்பால் அகமது
இந்த இரு வீராங்கனைகள் பற்றி நம் வரலாற்றுப் பக்கங்களில் எதுவும் சொல்லபடவில்லை. மாப்பிளா வரலாறு குறித்த, மாப்பிளா சமூக பெண்கள் குறித்த வரலாறு திட்டமிடப்பட்ட வகையில் மறைக்கப்படுகின்றது என்பதற்கு இந்த நிகழ்வுகள் உதாரணம்.
மேல்முறி – அதிகாரத்தோடி படுகொலைகள் குறித்து பொதுவான வரலாறு மவுனமாக இருக்கின்றது, ஆனால் மலபார் முஸ்லிம் சமூகத்தின் கிசாப்பாட்டுகளில் இந்த நிகழ்வை அந்த மக்கள் பாட்டாக பாடி பதிவு செய்துள்ளார்கள். யோக்யன் ஹம்ஸா மாஸ்டர் என்ற கிசாப்பாட்டு நிபுணர், விடுதலைப் போராட்ட வீரர் முகம்மத் அப்துர் ரஹ்மானைப் போற்றி எழுதிய அப்துர் ரஹ்மான் கிசாப்பாட்டு என்ற பாடலில் இந்த நிகழ்வை பதிவு செய்துள்ளார்.
இப்பாடலின் பொருள் இது : மேல்முறியில் கிளர்ச்சியாளர்கள் கூடியுள்ளதை அறிந்த பிரிட்டிஷ் இராணுவம், பீரங்கிகள், குண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றுடன் வந்து, ஓசையடக்கப்பட்ட துப்பாக்கிகளால் சிரித்துக் கொண்டே மக்களை சுட்டு வீழ்த்தினார்கள், ஒரு விசாரணையும் இன்றி.

000

சமீல் இலக்கில் அவர்களின் பதிவின் தமிழாக்கமே இது:
ஒன்பது சவக்குழிகள்:
 1. அதிகாரித்தோடி வட்டப்பரம்பில் இருக்கும் அரீப்புரம் பாரக்கல் கோயாகுட்டி ஹாஜியின் வீட்டு முற்றத்தில் தோண்டப்பட்ட குழியில் 11 பேர் புதைக்கப்பட்டனர். அவர்களின் விவரம் : அவரது தாத்தா அரீப்புரம் பாரக்கல் அகமது குட்டி ஹாஜி, அவர் சகோதரர் மொய்தீன் குட்டி ஹாஜி, குட்டிரயீன், மரைக்காயர், கொங்காயன் அலாவி, கீடக்காடன் குடும்பத்தின் ஒரு ஆணும் அவர் மகளும். அவள் 11 வயதே ஆனவள்.

  அகமது குட்டி ஹாஜியின் மகள் ஆயிஷா – அப்போது 4 வயது சிறுமி. பிற்காலத்தில் அவர் தன் மகன் யோக்யன் ஹம்ஸா மாஸ்டருக்கு இந்த சம்பவங்களை பற்றி சொல்லியிருக்கிறார், மாஸ்டர் கிசாப்பாட்டு எழுதுபவர், பாடுபவர். மாஸ்டர் 2017-ல் தன் 102-வது வயதில் காலமானார். வீட்டில் இருந்த அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பின் வீட்டுக்கு தீ வைத்தார்கள். பெண்களும் குழந்தைகளும் அருகில் இருந்த வாழைத்தோப்புக்குள் சென்றுவிட, ஆண்கள் அனைவரையும் ஓசையடைக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.

  அகமது குட்டி ஹாஜியின் நண்பரும் அருகில் வசித்துவருபவரும் ஆன கொங்கையன் அலாவியும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் என்று அலாவியின் பேரன் சொல்கின்றார். இவர் தந்தையின் பெயரும் அலாவிதான். நான்கு தலைமுறைகளிலும் ஒருவருக்கு அலாவி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஏமன் நாட்டில் இருந்து மாம்புரத்தில் தங்கி அங்கேயே வசித்துவந்த மாம்புரம் சையத் அலாவி தங்ஞள் என்ற இஸ்லாமிய அறிஞரின் நினைவாகவே இப்படி பெயர் சூட்டப்படுகின்றது. ஆன்மிகம், மதம், சமூகம் தொடர்பான விசயங்களைப் பற்றி அவருடன் உரையாடுவதற்காக மக்கள் அவரை சந்திப்பது வழக்கம்.

  19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியததுக்கு எதிரான நிலை எடுத்திருந்தார் என்பதால் அவர் புகழ் பெற்றிருந்தார். மாம்புரத்தில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூண், கேரளாவின் புகழ்பெற்ற புண்ணிய யாத்திரை தலங்களில் ஒன்று. வீட்டின் முற்றத்தில் அமைந்துள்ள செவ்வோடு குவாரியில் பாய்கள் விரிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் அவற்றில் கிடத்தப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டனர்.

 1. கபூர் குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரித்தோடியில் அமைந்துள்ள அரசு மாப்பிளா உயர் தொடக்கப்பள்ளியின் பின்னால் இருந்த நிலத்தில் குழி தோண்டப்பட்டு அதில் புதைக்கப்பட்டனர். கபூர் முண்டசேரி யூசுப், அவர் மகன் போக்கர், கபூர் மூசம், ஆயமுட்டி, மம்முது ஆகிய அந்த ஐவரின் வாரிசுகள் ஒருவர் கூட இப்போது அந்த ஊரில் இல்லை.
 2. நானத் குருவயில் ஹம்சாவின் வீட்டுக்கு அருகில் குழிதோண்டப்பட்டு அறுவர் புதைக்கப்பட்டனர். ஹம்சாவின் அப்பாவழி தாத்தாவான நானத் குருவயில் மொய்து, அவர் சகோதரர் குஞ்ஞி மரைக்காயர், மாடம்பி குஞ்ஞி முகம்மது ஆகியோர் உட்பட அறுவர்.

  நானத் குருவயில் மொய்து தன் வீட்டுக்குள் உட்கார்ந்து குர் ஆன் வாசித்துக்கொண்டு இருந்தார். தாங்கள் ஒரு சம்பவத்திலும் ஈடுபட்டதில்லை என்பதால் கவலைப்பட அவசியமில்லை என்று நம்பிக்கொண்டு இருந்தார். அவரை இராணுவத்தினர் வந்து பிடித்தபோது 14 வயது மகன் முகம்மது தன் தந்தையின் கையை இறுகப்பிடித்து இழுத்துள்ளான், ஆனால் இராணுவத்தினர் அவனை கீழே தள்ளியுள்ளனர். இத்தகவலை முகம்மதுவின் மூத்த மகன் ஆன மொய்து (82) இப்போது கூறுகின்றார். அங்கிருந்து செல்லும்முன் வீட்டின் கூரையில் இராணுவத்தினர் தீ வைத்துள்ளார்கள். ஹம்சாவின் இப்போதுள்ள வீடு அந்த இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது.

  அருகில் கரட்டுபரம்பனில் அப்போது குடியிருந்த தீயர் சமூக மக்கள்தான் அப்போது உதவிக்கு ஓடி வந்தவர்களில் முதன்மை ஆனவர்கள் என்று மொய்து கூறுகின்றார். தீயர் சமூக மக்கள் அப்போது அங்கே நடந்த அனைத்துக் கொடுமைகளையும் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தார்கள், அவர்களால் ஒன்றும் செய்ய இயலாத நிலை. இராணுவம் அங்கிருந்து நகன்ற பின் உடனடியாக ஓடி வந்து வீட்டின் தீயை அணைத்துள்ளார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் ஆன ஈழவர், தீயர் ஆகியோரும் முஸ்லிம் மக்களும் அப்போது யாருக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். (தீயர், ஈழவ மக்கள் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்களாக அறியப்படுகின்றனர்.)

 3. அதிகாரித்தோடி ஆக்கப்பரம்பில் கண்ணன்தோடு என்ற ஊரில் முள்ளப்பள்ளி உம்மர் என்பவர் வீட்டின் பின்புறம் தோண்டப்பட்ட குழியில் 5 பேர் அடக்கம் செய்யப்பட்டனர். அதிமண்ணில் மம்மூட்டி, வல்லிக்கடன் குடும்பத்தின் ஒரு உறுப்பினர் உட்பட ஐவர். மம்மூட்டியின் மகன் குஞ்ஞி முகம்மது பெண் உடை தரித்து தப்பியதாக அவர் மகன் மொய்தீன் (72) கூறுகின்றார். வீட்டில் இருந்த அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செவ்வோடு குவாரிகளில் புதைக்கப்பட்டன.
தொடரும்…
ஃபேஸ்புக் பார்வை
மு இக்பால் அகமது
வினவு குறிப்பு :
முகநூலில் தோழர் மு. இக்பால் அகமது எழுதிய 8 பாகத் தொடரை, நான்கு பாகங்களாக மாற்றி இங்கு தொடராக வெளியிடுகிறோம். நன்றி !!
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க