2019 இறுதியில் சீனாவில் கொரோனா கண்டறியப்பட்டது. உலகமே செய்வதறியாது திகைத்து நின்றபோது, 2020 பிப்ரவரியில் ட்ரம்பை குஜராத்துக்கு வரவழைத்து சுயதம்பட்டம் என்ற அருவருப்பை இங்கே அரங்கேற்றினார்கள். வெள்ளிங்கிரியில் போதை சாமியார் கூட்டிய கட்டுப்பாடற்ற கூட்டத்துக்கு பிரதமர் வந்தார்.

ஆனால் அனுமதி பெற்று நடத்தப்பட்ட டெல்லி தப்லிக் ஜமாத் இயக்கத்தையும் கூட்டத்தையும் பலிகடா ஆக்க அரசு முனைந்தது எனில் அதற்கு துணை போன அச்சு, டிவி ஊடகங்களும் சற்றும் குறைவில்லாமல் தம் ஒருதலைப்பட்சமான பிரச்சாரத்தின் மூலம் இந்திய சமூகத்தில் அருவருப்பான இஸ்லாமிய சமூக வெறுப்பை விதைத்தன.

டிசம்பர் 2019இல் சீனாவில் கண்டறியப்பட்ட உடனேயே சர்வதேச விமானபோக்குவரத்தை நிறுத்துமாறும் நாடாளுமன்ற கூட்டத்தை தள்ளிவைக்குமாறும் காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் கேட்டுக்கொண்டபோதும் மத்திய அரசு அதற்கு செவிசாய்க்காமல் இருந்ததன் காரணம்?

படிக்க :
♦ கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

மத்தியபிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம் எல் ஏக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டுமந்தைகள் போல ஊர் ஊராக கூட்டிக்கொண்டு திரிய பிஜேபிக்கு விமானபோக்குவரத்து தேவைப்பட்டது என்ற ஒற்றைக்காரணம் மட்டுமே. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது, பிஜேபியின் ஒரே ஒரு முதல்வர் பதவி ஏற்ற உடன் பிரதமர் டிவியில் தோன்றி இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த நகர்வையும் நிறுத்தி யதார்த்த வாழ்வின் சங்கடங்களை உணராமல் ஊரடங்கை அறிவித்து பல கோடி உழைக்கும் மக்களின் வயிற்றில் நெருப்பை அள்ளிப்போட்டார்.

தப்லிக் ஜமாத்தை மீண்டும் மீண்டும் பேசிய ஊடகங்கள், தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பை உமிழ்ந்த டிவிக்கள், கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லாமல் இருந்த ஒரே மாநிலம் பிஜேபி ஆண்ட மத்தியப்பிரதசம் மட்டுமே என்பதையும் அதற்கான காரணத்தையும் சொல்லாமல் அருவருக்கத்தக்க பாறை போன்ற மவுனத்தை வெட்கமின்றி கடைப்பிடித்தன.

சில மாதங்களுக்குப்பின் உச்சநீதிமன்றம், “கொரோனா இந்தியாவில் பரவியதற்கு அரசும் ஊடகங்களும் தப்லிக் ஜமாத்தை திட்டமிட்டு பலியாக்கியதை ஏற்றுக்கொள்ள முடியாதுஎன்று கண்டித்ததை அதே ஊடகங்கள் மவுனமாக கடந்து சென்றன.

இந்த கேவலங்கள் ஒரு பக்கம். ஊரடங்கு அறிவித்த ஒரே வாரத்தில் பிரதமர் டிவியில் தோன்றி கை தட்ட சொன்னார், சாப்பாட்டு தட்டுகளை தட்ட சொன்னார், விளக்கு ஏற்ற சொன்னார், இதனால் மின்காந்த அலைகள் உற்பத்தி ஆகி கொரோனா கிருமிகள் சாகும் என்று நான் அறிந்த பி., எம்., எம்.எஸ்.சி, ஐ.ஐ.டி. எம்.டெக், பி.டெக் படித்த அறிவாளிகளும் அடிவயிற்றில் இருந்து கூவி விவாதம் செய்தார்கள். மாட்டு மூத்திரம், மாட்டு மலம் ஆகியவை சிறந்த கொரோனா கிருமி கொல்லிகள் என்று அமைச்சர்கள், அதிகாரிகள் பேசி இந்திய மக்கள் மத்தியில் அறிவியல் அறிவும் அறிவியல் ஆர்வமும் பரவ ஒப்பற்ற சேவை செய்தார்கள்.

இந்தக் கொடுமைகள் ஒருபுறம் நடந்துகொண்டே இருக்க, பலப்பல லட்சம் கூலித்தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து நடக்க தொடங்கியதில் 1947 பிரிவினைக்குப் பின் ஆன வரலாற்றின் மிக மோசமான மக்கள் இடப்பெயர்ச்சிக்கு மத்திய அரசே காரணமாக இருந்தது. பல்லாயிரம் பேர் செத்து மடிந்தனர். ரயில்வே பிளாட்பாரத்தில் தன் தாய் உயிரிழந்தது தெரியாமல் பாலுக்காக அவள் சேலையை பிடித்து இழுத்துக்கொண்டு இருந்தது குழந்தை. 900 கி.மீ தள்ளி ஊர் திரும்ப வழியின்றி மாட்டிக்கொண்ட மகனை, ஸ்கூட்டரில் சென்று மீட்டுக்கொண்டு வந்தார் தாய். ஏறத்தாழ 1000 கி.மீ பயணித்து தன் தகப்பனை சைக்கிளின் காரியரில் உட்கார வைத்து சொந்த ஊருக்கு ஓட்டிக்கொண்டு வந்தாள் இளம் மகள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, போலீசும் அதிகார வர்க்கமும் ஆடிய ஆட்டம் கொஞ்சம் இல்லை. கொரோனா குறித்த துளியளவு அறிவியல் பார்வையும் இல்லாத (என்றைக்கு இருந்தது?) காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு படம்‘, கொரோனா நோயாளிகள் இருக்கும் ஒரு வேனில் கொரோனா பாதிக்காத சிலரை அடைத்து விடுவதையும், கொரோனா நோயாளிகள் அவர்களை பயமுறுத்தி பேயாட்டம் ஆடுவதையும் இவர்கள் அலறி துடிப்பதையும் காட்டி தமிழக சமூகத்துக்கு பெரும் சேவை செய்த கேவலத்தையும் பார்த்தோம்.

இதன்றி, கரைவேட்டி ஆசாமிகளும் காவியிஸ்டுகளும் அல்லக்கைகளும் லோக்கல் போலீஸுடன் கைகோர்த்து சாலை சந்திப்புகளில் நின்றுகொண்டு பொதுமக்களை படுத்தியபாடு கொஞ்சமா? நமது உழைப்பில் சேமித்த பணத்தில் அல்லது கடனில் வாங்கிய இரு சக்கர வாகனங்களுக்கு இந்த அல்லக்கைகள் பெயிண்ட் அடித்தன, எவன் உரிமை கொடுத்தான்?

காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில் கோரோணாவின் பெயரால் இவர்கள் ஆடிய சர்வாதிகார ஆட்டத்தின் உச்சம்தான் சாத்தான்குளம் மரணங்கள். சென்னை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா நிவாரணப்பணிகளுக்கு ஆர் எஸ் எஸ் ஆட்களை நியமித்து கண்டனத்துக்கு உள்ளானதை மறக்க முடியாது.

தேர்தல் முடிந்த கையோடு இப்போது கொரோனா அச்சத்தை சங்கு ஊதும் அரசு நிர்வாகத்தின் இரட்டை நிலையை புரிந்துகொள்ள பெரிய பிரயத்தனங்கள் தேவையில்லை. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டை, முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டிய முதலமைச்சரோ அமைச்சர்களோ பின்பற்றினார்களா? ஆயிரக்கணக்கான பேர்கள் பின்தொடர, பல நூறு கார்கள் ஊர்வலம் வர கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தபோது தேர்தல் கமிஷனும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் எங்கே இருந்தார்கள்? அதை விடவும் வேறு முக்கியமான வேலை என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?

படிக்க :
♦ இந்துக்களே எச்சரிக்கை : சீரடி சாய்பாபா சிலையை இடித்த இந்துத்துவ வெறி!
♦ இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் !

தங்கள் காரியம் முடிந்தவுடன் இப்போது தேர்தல் முடிந்த கையோடு மக்கள் மீது பழி சுமத்துவதும் மக்கள் கட்டுப்பாடுகளை மீறுகின்றார்கள் என்று பொய்யாக பழிப்போடுவதும் என்ன நியாயம்? மாட்டு மூத்திரத்திலும் மலத்திலும் கொரோனாவுக்கு மருந்து உள்ளதாக முட்டாள்தனமான பேசும் படித்த அரசியல் அதிகார வர்க்கம், மக்களுக்கு கொரோனா பற்றி விழிப்புணர்வு இல்லை என்று பேசுவதை விடவும் கொடூரம் வேறு எதுவும் இல்லை.

உண்மையில் மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய சமூகத்தில், ஒப்பீட்டு அளவில் மரணங்கள் குறைவு. உண்மையில் ஊரடங்கின் பின்னர் தம் உயிர்களை பட்டினியால் துறந்த மக்களையும் வேலை இன்றி வீடுகளில் முடங்கி பட்டினி கிடந்த மக்களையும் இதை விடவும் மோசமாக ஒரு அரசு நிர்வாகம் அவமானப்படுத்தி விட முடியாது.

வெற்று வீண் வார்த்தைகளால் தோரணம் கட்டுவதையும் வீண் ஜம்பங்களை வீசி மார் தட்டுவதையும் விட்டுவிட்டு அறிவியல் பார்வையுடன் கொரோனாவை அணுகினால் மக்கள் ஒத்துழைப்பார்கள். மாட்டு மூத்திரத்திலும் மலத்திலும் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக ஆள்வோர் பிரச்சாரம் செய்தால் மக்களும் ஆட்டுமந்தைகள் ஆக மாடுகளாகத்தான் இருப்பார்கள்.

முகநூலில் : இக்பால் அகமது

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க