16-வது ஆண்டில் வினவு! பா.ஜ.க.வைத் தடை செய் என முழங்குவோம்!

புறநிலையில் பாசிச அபாயம் நம்மை அச்சுறுத்தி வருகிறது. பாசிச எதிர்ப்பு சக்திகளை ஓரணியின் கீழ் திரளவைப்பதன் மூலம்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும்.

0

16-வது ஆண்டில் வினவு!

பா.ஜ.க.வைத் தடை செய் என முழங்குவோம்!

அன்பார்ந்த வாசகர்களே, தோழர்களே,

வினவு 16-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த வகையில் வாசகர்களுக்கு எமது புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2020 பிப்ரவரியில் வினவுக்கு ஏற்பட்ட ‘லாக்டவுனு’க்குப் பின்னர் வினவு மீண்டெழுந்து நடைபோடத் தொடங்கியதை எமது சென்ற ஆண்டுப் பதிவில் தெரிவித்திருந்தோம்.

இந்த ஓராண்டைத் தொகுத்துப் பார்க்கும் போது பல முன்னேற்றங்கள், பல புதிய அம்சங்களில் வினவின் பங்களிப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு ஆயிரக்கணக்கான வாசகர்களின் ஆதரவும், தோழர்களின் பங்களிப்பும்தான் முதன்மையான காரணம். இன்னும் குறிப்பாக, வினவுக்கென நிரந்த ஊழியர்கள் இல்லையெனினும், தோழர்கள் இடையறாது கொடுத்துவரும் ஆதரவுதான் வினவை புதிய வளர்ச்சி நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. புதிய தோழர்கள் பலரும் வினவுக்கு எழுதத் தொடங்கியிருப்பதும், வீடியோ பதிவுகளை வழங்கி வருவதும் வினவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.

000

எந்த இயக்கமாக இருந்தாலும் அதன் அரசியல் அமைப்பும் கட்டமைப்பும் எந்த அளவிற்கு விரிவடைகிறதோ அந்த அளவிற்கே அது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். புதியன புகுதலும் பழையன கழிதலும் புரட்சிகர அமைப்புக்கு இல்லையென்றால் அது என்ன ஆகும் என்பதற்கு சம காலத்தில் பல இணைய தளங்களை நாம் எடுத்துப் பார்க்கலாம். கொரோனா காலத்தில் ஓரளவிற்கு இயங்கிக் கொண்டிருந்த பல இணைய தளங்கள் இன்று தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவே போராடுகின்றன.

இவையில்லாமல் மையின் ஸ்டீரிம் (Mainstream) ஊடகங்கள் பெரும்பாலானவை மோடியின் ஊதுகுழலாக மாறிவிட்டன. சொல்லிக் கொள்ளப்படும் மாற்று ஊடகங்கள் பல பாசிச எதிர்ப்பில் உழைக்கும் மக்கள் பக்கம் நிற்காமல் திமுக-காங்கிரஸ் போன்ற ஓட்டுக் கட்சிகளிடம் சரணாகதியடைந்துவிட்டன. மக்களுக்காக குரல் கொடுக்கும் ஊடகங்கள் மீது பாசிச பாஜக அரசால் அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.


படிக்க : நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிச மோடி அரசு!


ஆனால் இந்த கடுமையான அரசியல் சூழலிலும் தோழர்கள், வாசகர்களின் ஆதரவுடன் பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு தோள்கொடுக்கும் வகையில் உழைக்கும் மக்களின் குரலாக வினவு தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பாசிச எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் வினவு:

பா.ஜ.க-வின் இந்தி திணிப்புக்கு எதிராக “மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல” என தொடர்ச்சியாக வீடியோக்கள் மற்றும் பதிவுகளை கொண்டுவந்தோம்.

ரஷ்ய புரட்சி நாள் மற்றும் பாட்டாளி வர்க்க ஆசான் ஸ்டாலின் பிறந்த நாள் ஆகிய நிகழ்வுகளையொட்டி வினவு வாசகர்களுக்கு சோசலிச உணர்வையும், பாசிச எதிர்ப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை கொண்டுவந்துள்ளோம்.

கல்வியை காவிமயமாக்கும் பாசிச அரசின் பல்வேறு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வருகிறோம். திமுக அரசால் வெவ்வேறு பெயர்களில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக்கொள்கையின் அம்சங்களை ஆசிரியர் உமா மகேஸ்வரி போன்ற கல்வியாளர்களுடன் இணைந்து வீடியோக்களையும் அம்பலப்படுத்தும் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளோம்.

பத்திரிகையாளர் சித்திக் கப்பன், பேராசிரியர் சாய்பாபா, பாடகர் நேஹா சிங் ரத்தோர் போன்ற பல்வேறு பாசிச எதிர்ப்பு சக்திகளின் மீதான மோடி அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக உடனுக்குடன் குரல் கொடுத்துள்ளோம்.

இவையில்லாமல், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என். ரவி-யின் பாசிச நடவடிக்கைகள், மோடியை அம்பலப்படுத்தும் பிபிசி ஆவணப்படம், அதானியை அம்பலப்படுத்தும் ஹிண்டன் பர்க் அறிக்கை, மோடி அரசின் உழைக்கும் மக்கள் மீதான பொருளாதார தாக்குதல்கள் போன்றவற்றின் மீது வினையாற்றியுள்ளோம்.

தற்போது “மணிப்பூர் இனப்படுகொலை” குறித்த சரியான அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் வினவு முக்கிய செயலாற்றியுள்ளது. பாசிஸ்டுகளின் பாதந்தாங்கி ஊடகங்களும் மதன்கௌரி போன்றவர்களும் திட்டமிட்டு மணிப்பூர் கலவரத்தை இரண்டு இனங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்த போது, மணிப்பூர் கலவரம் ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரம் என்பதை பல்வேறு கட்டுரைகள் வீடியோக்கள் மூலம் அம்பலப்படுத்தினோம்.

மேலும், மணிப்பூர் கலவரத்தில் குக்கி பெண்களை நிர்வாணமாக இழுத்துச்  செல்லப்பட்ட காணொளி வெளியாகி தமிழ்நாட்டு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கிய போது “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தடை செய்” என்ற முழக்கம் போராட்டக்களம் தோறும் ஒலித்தது. மாணவர் போராட்டங்களை தொகுத்து வீடியோவாக வெளியிட்டோம். ”பற்றி எரிகிறது மணிப்பூர்! பற்ற வைத்தது காவி!” என்ற முழக்கத்தின் அடிப்படையிலான புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.

இதேபோல் தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய 15 பேரின் உயிரை பறித்த கொலைகார அனில் அகர்வால் ஆகஸ்ட் 6-ஆம் தேதி சென்னைக்கு வருகைதரவிருந்த போது கார்ப்பரேட் ஊடகங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக விளம்பரங்கள் வெளிட்டது. ஆனால் வினவு, ”கொலைகார அனில் அகர்வாலே தமிழ்நாட்டிற்குள் நுழையாதே!” என்ற களபோராட்டங்களை காட்சிபடுத்தியது.

அனில் அகர்வாலின் வருகையை ஒட்டி மக்கள் அதிகாரம், மே பதினேழு இயக்கம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி போன்ற பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து சென்னையில் ”அனில் அகர்வாலே திரும்பி போ” என்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தை வினவு மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்தது. வேறு எந்த ஊடகங்களும் ஒளிபரப்பவில்லை.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க பல்வேறு சதித்தனங்களை செய்து வரும் வேதாந்த குழுமத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். இந்துராஷ்டிரத்தை நிறுவ துடிக்கும் பாசிச பா.ஜ.க-வின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வருகிறோம்.

களப்போராட்டங்களில் வினவு:

உழைக்கும் மக்களின் போராட்டத்தில் வினவு களத்தில் நின்றுள்ளது. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணத்தையொட்டி நடந்த போராட்டம், திருச்சி பெல் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம், விஷ சாராய பலிகள்- திமுக அரசை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டம், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம், ஓசூர் உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், ஸ்விக்கி தொழிலாளர்கள் போராட்டம், போர்ட் ஆலை தொழிலாளர்கள் போராட்டம், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டண கொள்ளைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் என தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் வினவு வினையாற்றி வருகிறது.

கடந்த ஓராண்டில் வினவின் வளர்ச்சி

வினவு ஊடக தளம் சமூக ஊடகங்களில் விரிவடைந்து லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றும் வகையில் இன்று சில முன்னேற்றங்கள் அடைந்துள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 19 வீடியோக்கள் வரை  பதிவிட்டுள்ளோம். மாதம் சராசரியாக 20 வீடியோ பதிவுகளை நோக்கி முன்னேறியுள்ளோம்.

அதேவேளையில், இணைய தளத்தில் நாளொன்றுக்கு சராசரியாக மூன்று பதிவுகள் என்பதை தாண்டி சில மாதங்களில் சராசரியாக நான்கு பதிவுகளுக்கு முயற்சி செய்துள்ளோம். பதிவுகளைப் பொருத்தவரை, அதிக அளவில் செய்திப் பதிவுகளாக இருந்த நிலைமையை இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் மாற்றியமைத்துள்ளோம். அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குடன் கருத்து சொல்லும் பதிவுகளைக் கொண்டுவந்துள்ளோம்.

சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் அடுத்தடுத்து நடந்த மக்கள் போராட்டங்கள், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படுகொலை தொடர்பாக தோழர்களின் களப்போராட்டங்கள், மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய எமது தோழமை அமைப்புகளின் மாநாடு போன்றவை வீடியோ எண்ணிக்கை அதிகரிப்பதில் முதன்மையான பங்காற்றியது.

குறிப்பாக, நவம்பர் மாதத்தில் இருந்துதான் வினவு தனது வீடியோக்கள் பதிவிடுவதை அதிகரிக்கத் தொடங்கியது. நவம்பர் ரசிய புரட்சி நாளை ஒட்டி வெளியிட்ட டீசர், நவம்பர் 7 தொடர்பாக தோழமை அமைப்புகளின் அரசியல் நிகழ்வை ஒட்டி கொண்டுவரப்பட்ட ஆவணப்படம், தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி மறு உருவாக்கம் செய்து கொண்டுவரப்பட்ட வீடியோ ஆகியவை வினவின் புதிய பங்களிப்புகளாகும். இத்துடன், தொடர்ந்து இந்த வகையிலான எமது வீடியோக்களை அதிகரித்து வந்துள்ளோம்.

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக
நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | பத்திரிகையாளர் சந்திப்பு, சிவப்பு அலை கலைக்குழு தொடக்க நிகழ்ச்சி, 2022 செப்டம்பர் மாநாடு, 2023 மே 15 மாநாடு ஆகியவற்றை ஒட்டி வினவு நேரலைகளைக் கொண்டுவந்தது. இதில் மே 15 மாநாட்டின் வீடியோ தொடர்ந்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு பல வகைகளில் பேசிவந்தாலும் அது தொடர்பாக புரட்சிகர கண்ணோட்டத்தில் ஒரு முறையான வரலாற்றுப் பதிவு இதுவரை இருந்ததில்லை. இந்த ஆண்டு இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் ஊடாக, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாற்றை விளக்கிக் கொண்டுவந்த வீடியோக்கள் வரலாற்று ஆவணத்தின் வினவின் முக்கியமான பங்களிப்பாகும்.

இவையன்றி, மக்களை பாதிக்கின்ற பிரச்சினைகள், உடனடி அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு வெளியிடும் வீடியோக்களும் அதிகரித்துள்ளன. ஆளுநர் ஆர்.என். ரவியின் திமிர் பேச்சு, ஜி.எஸ்.டி வரி சாதனை அல்ல வேதனை, திருமங்கலம் சுங்கச்சாவடியின் அடாவடித்தனம், திமுக அரசின் 90மிலி சாராய திட்டம், தக்காளி விலை உயர்வு, மணிப்பூர் கலவரம், அணில் அகர்வால் சென்னை வருகை என உழைக்கும் மக்களை நேரடியாக பாதிக்கும் பல விஷயங்களை ஒட்டி மக்களிடம் நேர்காணல்களை நடத்தியுள்ளோம். இது போன்ற மக்கள் நேர்காணல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழு தொடக்கமானது சமகால புரட்சிகர இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான அம்சமாகும். இது வினவின் வளர்ச்சிக்கும் பெரிய பங்காற்றியுள்ளது. புதிய இளந்தோழர்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டிருந்தாலும் அது தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் சொந்தமாக பாடல் தொகுப்பைக் கொண்டுவந்துள்ளது.

அக்குழுவின், வீழாது தமிழ்நாடு துவளாது போராடு – நமது வீர மரபை வரித்துக் கொள்ளும் பாடல்களை பல்வேறு ஜனநாயக சக்திகள் தங்களது பக்கங்களில் தீம் பாடல்களாக வைத்துள்ளனர் என்பது சிவப்பலைக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். தற்போது இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய நாளில், சிவப்பலையின் “Ban Rss Ban BJP” பாடல் பல்வேறு பிரிவுகளால் மிகவும் வரவேற்பைப் பெற்று வருவது சிறந்த முன்னேற்றமாகும். இதை இன்னும்  நாடு முழுவதும் கொண்டுச் செல்ல வேண்டிய தேவை உள்ளது.

2008 ஜூலை 17 வினவு தொடக்க நாள்!

நெருக்கடிகளை உடைத்து முன்னேற வேண்டியுள்ளது:

இந்த ஓராண்டில் வினவுக்கு ஏற்பட்ட வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த ஊடகத்துறையின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது மிகச்சிறிய வளர்ச்சியே ஆனால், வினவை பொருத்தவரை இது குறிப்பிட்டதக்க வளர்ச்சிதான். வினவு எந்த அளவிற்கு முன்னேற்றங்களை அடைந்துள்ளதோ அந்த அளவிற்கு நெருக்கடிகளையும் சந்தித்துள்ளது.

குறிப்பாக, சென்ற ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் வினவு தளம் தொடர்ந்து  சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இதனால் சில நாட்கள் தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த நெருக்கடியான சூழலிலிருந்து வினவு கடந்து வருவதற்குப் பெரிதும் போராட வேண்டியிருந்தது. வினவு தளத்தின் சர்வரைப் பராமரிக்கும் செலவுகளும் பலமடங்கு உயர்ந்துவிட்டன. விலையேற்றம் என்பது வினவையும் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்த சூழலில் வினவுக்கு நன்கொடை வழங்கிவந்த ஓரிரு நண்பர்கள் மீண்டும் அவர்களது நன்கொடையை வழங்கியுள்ளனர். இந்த நன்கொடை உதவி என்பது படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் வினவுக்கு இரத்தம் கொடுத்தது போன்ற பங்களிப்பாகும்.


படிக்க : ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகங்களை அகற்றச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கியும் போலீசும் | தோழர் புகழ்


இருப்பினும், கடுமையான நிதி நெருக்கடி, கடனில் வினவு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. வீடியோ பதிவுகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டாலும் அதற்கு ஏற்றார்போல கட்டமைப்பை இன்னும் விரிவுப்படுத்த வேண்டியுள்ளது.

ஆனால் இந்த நெருக்கடிகளை தீர்க்க நீண்ட காலம் அவகாசம் இல்லை. புறநிலையில் பாசிச அபாயம் நம்மை அச்சுறுத்தி வருகிறது. பாசிச எதிர்ப்பு சக்திகளை ஓரணியின் கீழ் திரளவைப்பதன் மூலம்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும். ஆனால் பாசிச எதிர்ப்பு சக்திகள் பலவீனமாக இருக்கும் இந்த தருணத்தில் அவர்களை சரியான அரசியல் பிரச்சாரத்தின் மூலம் மட்டுமே ஒன்றிணைக்க முடியும். அத்தகைய பிரச்சாரத்தை தான் வினவு முன்னெடுத்துச் செல்கிறது. அதற்கு உதாரணம் புரட்சிகர அமைப்புகள் முன்வைத்த “பா.ஜ.க-வை தடை செய்” என்ற முழக்கம் இன்று மக்களின் முழக்கமாக மாறிவருவதுதான்.

ஆனால் இந்த பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்ல  உடனடியாக வினவு தன்னுடைய நெருக்கடிகளை தீர்த்துக் கொண்டு முன்னேற வேண்டியுள்ளது. அதற்கு பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரின் பங்களிப்பும் (அது எந்த வகையில் இருந்தாலும் நிதி, களச்செய்தி சேகரிப்பது, நேரலைக்கு உதவுவது, புகைப்படங்கள் மற்றும் கார்ட்டூன்கள் அனுப்புவது) தேவைப்படுகிறது.

இதனுடன் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பாசிச எதிர்ப்பு சக்திகளின் போராட்டங்களை, கூட்டங்களை நேரலையாக அல்லது வீடியோக்களாக ஒளிபரப்ப  வினவு தயாராக உள்ளது. அதற்கு தோழர்கள், வாசகர்கள் எங்களை அணுகலாம்.

பாசிச எதிர்ப்பில் அனைவரும் ஒன்றிணைந்து முழங்குவோம் பா.ஜ.க-வை தடை செய் !

வினவு


வினவு வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குங்கள்!

வங்கி மூலம் நன்கொடை செலுத்த:

NAME : S.MAHALAKSHMI
ACCOUNT NO : 6938161028
IFSC CODE : IDIB000M246
Branch : MOGAPPAIR (2147)

Account Type: Savings

Mobile – (91) 93 8465 9191
Email – vinavu@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க