நூறு நாள் வேலை திட்டத்தை ஒழித்துக் கட்டத் துடிக்கும் பாசிச மோடி அரசு!

சென்ற ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.73,000 கோடி. ஆனால் இந்த ஆண்டு (2023) பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ரூ.60,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும். முதன் முதலில் 2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையும் இதே ரூ.60,000 கோடி தான்.

ந்த மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிராமப்புற வளர்ச்சித் துறை (rural development) அமைச்சர் கிரிராஜ் சிங் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் குறித்து விவாதத்தில் ஒரு தகவலை தெரிவித்தார். இத்திட்டத்தை நிறைவேற்றுகின்ற 34 மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளின் வேலைக்கான அடையாள அட்டைகளை (job card) பட்டியலில் இருந்து நீக்கி உள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் (2022-2023) சுமார் 61 லட்சம் வேலைக்கான அட்டைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 247 சதவீதம் அதிகமாகும்.

இறந்துவிட்டவர்கள், நகரங்களுக்கு குடிமாறி போய்விட்டவர்கள், சரியான அடையாள ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் போலி அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் என்று ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு நீக்கிக் கொண்டு தான் வருகிறார்கள். இருப்பினும் இது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 2012-ஆம் ஆண்டு கணக்கின்படி 14.2 கோடி பேர் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டு வேலைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. இப்போது அதிலிருந்து தான் ஐந்து கோடி அடையாள அட்டைகள் நீக்கப்பட்டு இருக்கின்றன.

மேலும் இந்தத் திட்டத்திற்கென ஒதுக்கப்படும் நிதியை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக் கொண்டே வந்திருக்கிறது மோடி அரசு. சென்ற ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.73,000 கோடி. ஆனால் இந்த ஆண்டு (2023) பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ரூ.60,000 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம் குறைவாகும்.

முதன் முதலில் 2006-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்போது நிதி அமைச்சராக இருந்த பா.சிதம்பரம், அந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகை இதே ரூ.60,000 கோடி தான்.


படிக்க: நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !


ஒருபுறம் பட்ஜெட்டில் திட்டத்திற்கான நிதியை குறைத்து விட்டு மறுபுறம் பயனாளர்களுக்கான கூலியை உயர்த்தி இருக்கிறார்கள். இந்தத் தொகையைக் கொண்டு இத்திட்டப் பயனாளர்களுக்கு வெறும் 40 நாட்களுக்கு மட்டுமே கூலியை கொடுக்க முடியும். உண்மையில் ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுக்க வேண்டும் என்றால் பட்ஜெட்டில் ரூ.2.72 லட்சம் கோடி ஒதுக்கியிருக்க வேண்டும்.

ஆனால், இதிலும் மோசமான நிலைமை என்னவென்றால் ஒதுக்கீடு செய்துள்ள இந்த குறைந்தபட்ச தொகையை கூட உரிய முறையில் மாநில அரசுகளுக்கு கொடுக்காமல் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.6,600 கோடியை எட்டு மாதங்களாக பாக்கி வைத்திருக்கிறது இந்த மோடி அரசு. இந்நிலையில் ஒன்றிய, மாநில அரசுகள் இவற்றையெல்லாம் சாக்காக வைத்துக் கொண்டு சகட்டுமேனிக்கு வேலைக்கான பட்டியலில் இருந்து பயனாளர்களின் பெயர்களை நீக்கி விடுகிறார்கள்.

1990-களில் தனியார்மய தாராளமய கொள்கைகள் அமல்படுத்தபட்ட பிறகு 2000-ஆவது ஆண்டுகளில் நாடு முழுவதும் விவசாயம் அழிந்து விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது அப்போதிருந்த மன்மோகன் சிங் அரசு 2006-ஆம் ஆண்டு இந்த 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வந்தது. இந்தியாவைப் பற்றி மோடி அரசு உலகின் மூன்றாவது பொருளாதாரம் என்று என்னதான் பீற்றிக் கொண்டாலும் பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை என்னவோ இந்த 100 நாள் வேலையை நம்பித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.

மக்களின் உயிரை மட்டும் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு குறைந்தபட்ச ஏற்பாடு என்பது தான் இந்த 100 நாள் வேலை திட்டம். இது கிராமப்புறங்களில் வாழும் முதியோர்கள், யாருமற்றவர்கள் உள்ளிட்டு ஏதுமற்ற வாழ வழியற்ற மக்களின் கைகளில் நேரடியாக பணத்தைக் கொண்டு போய் சேர்க்கிறது. இந்தத் திட்டத்தை தான் கைவிட துணிகிறது இந்த மோடி அரசு.


படிக்க: நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?


ஆனால், மக்கள் என்று மோடி அரசுக்கு சிலர் இருக்கிறார்கள்.

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிவந்து அதானின் பங்கு மதிப்புகள் சரிவை சந்தித்தபோது எல்.ஐ.சி-யிலும் எஸ்.பி.ஐ-யிலும் சேமித்து வைக்கப்பட்டிருந்த மக்களின் பணத்தை ரத்தமும் சதையுமாக கொண்டு போய் கொடுத்து அதானியை காப்பாற்றியது இந்த மோடி அரசு.

அம்பானியின் புதிய மடிக்கணியான ஜியோ புக் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது மோடி அரசு.

அம்பானிக்கும் அதானிக்கும் ஒன்று என்றால் நாட்டையே விற்றுக் கொடுத்து அவர்களைக் காக்க துணியும் இந்த பாசிச கும்பல் தான் இது போன்ற மக்கள் நலத்திட்டங்களை காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், கிராமப்புறங்களில் உள்ள வாழ வழியற்ற இந்த மக்களால் மோடி அரசாங்கத்திற்கோ கார்ப்பரேட் கும்பல்களுக்கோ எந்தப் பயனும் இல்லை. பிறகு ஏன் இவர்கள் உயிர் வாழ வேண்டும் என்பதுதான் இவர்களின் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு காரணம். இந்த பாசிச கும்பல், உழைக்கும் மக்களை மக்களாகவும் மனிதர்களாகவும் ஒருபோதும் கருதுவதில்லை.

இந்த ஆர்.எஸ்.எஸ் – பாஜக அரசாங்கம் என்பது அம்பானிக்கும் அதானிக்கும் சேவை செய்யக்கூடியதே தவிர ஒரு போதும் உழைக்கும் மக்களுக்கானதல்ல!!


பாரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க