“நூறு நாள் வேலைத் திட்டத்தில் யாரும் வேலையே செய்வது இல்லை. சும்மா உட்கார்ந்து சம்பளம் வாங்குகிறார்கள். விவசாயம் அழிந்ததே இந்த 100 நாள் வேலைத் திட்டத்தால்தான்” என்று சீமான் போன்ற ‘பண்ணையார்கள்’ வசைபாடுகின்றனர்.
சீமானின் கட்சியைச் சேர்ந்த ‘தம்பி’களுக்கான ஆமைக்குஞ்சு, அரிசிக்கப்பல் கதைகளாக இதையும் கடந்து போய்விட முடியாது. நூறு நாள் வேலைத்திட்டத்தைப் பற்றிய தவறான ஒரு பொதுப் பார்வை நடுத்தர வர்க்க, உயர்தட்டு வர்க்க பிரிவினரிடம் நீடிக்கிறது. இதனைக் களைவது மிகவும் அவசியமானது.
இந்தியா முழுவதும் கடந்த 25.05.2005 முதல், நூறு நாள் வேலைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. துவங்கிய நாள் முதல் 2009 செப்டம்பர் வரை “தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்” என்ற பெயரில் இயங்கி வந்தது. காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் இயங்கி வந்தது. ஆரம்பம் முதல் தமிழகத்தில் இத்திட்டம் “100 நாள் வேலைத்திட்டம்” என்றே அழைக்கப்படுகிறது.
படிக்க :
நூறு நாள் வேலை திட்டம் : 25% நிதியைக் குறைத்த மோடி !
‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு
பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால், பருவமழை பொய்த்துப் போவதால் ஏற்படும் வறட்சி மற்றும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி உண்ண உணவு இன்றி கிராமப்புற கூலி விவசாயிகளும், ஏழை, நடுத்தர விவசாயிகளும் தவித்து வரும் நிலை இந்தியாவில் நீடிக்கிறது. கூடுதலாக தனியார்மய தாராளமய திட்டங்களின் கீழ், உர மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்கள் வெட்டப்பட்டு, விவசாயமே அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அரசுக் கட்டமைப்புக்கு எதிராக வெகுண்டெழாமல், அவர்களது குறைந்தபட்சத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சீர்திருத்த நடவடிக்கையாக, தற்காலிக நிவாரணமாகத் கொண்டுவரப் பட்டதுதான் 100 நாள் வேலைத் திட்டம், என்பதை யாராலும் மறுக்க முடியாது.
குடிமக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை, வாழ்வதற்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகளைப் போன்றதுதான் வேலைவாய்ப்புக்கான அவர்களது உரிமையும். அந்த வகையில் 100 நாள் வேலைத்திட்டம் என்பது மக்களின் உரிமையே தவிர அரசாங்கத்தின் கருணை அல்ல என்பதை நாம் உணரவேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு அரசாங்கமே நேரடியாக ஊராட்சி செயலர் / தலைவர் மூலம் இந்த வேலைகளை வழங்குகிறது. இடையே ஒப்பந்ததாரர்கள் கிடையாது. இத்திட்டத்தின் கீழ் பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படக் கூடாது. ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே சம்பளம் என்பது போன்ற கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படுகிறது, இத்திட்டம். ஒரு நாள் கூலி ரூ.249 என்ற வகையில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம், கிராமங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படுவது, நீர் வழித்தடங்களை சீரமைப்பது, புதிய பண்ணைக் குட்டைகளை அமைப்பது, மரக் கன்றுகள் நட்டு வன வளம் பெருக்குவது போன்ற பணிகள் செய்யப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, 2000 பெண்கள் இணைந்து இவ்வேலைத்திட்டத்தின் கீழ், வறண்டு கிடந்த ஜவ்வாது மலை நாக நதி நகரக் கழிவுகளால் நாசமடைந்து ‘கூவமாக’ மாறியதை தங்களது கூட்டு உழைப்பால் மீட்டுருவாக்கம் செய்து இந்த நதியை மீண்டும் நீரோடும் ஜீவநதியாக மாற்றியுள்ளனர். இந்த மாற்றத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட நிர்வாகம் பிற நதிகளான, அகரம் ஆறு, கவுண்டன்ய மகாநதி, மலட்டாறு, பாம்பாறு, மத்தூர் ஆறு ஆகிய ஆறுகளையும் இத்திட்டத்தின் கீழ் சீரமைத்து வருகிறது. இதற்காக உழைத்தவர்களைப் பற்றி கடந்த 20-10-2021 ஆனந்த விகடன் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 2021-22 ஆண்டில் ஏறக்குறைய 2.92 கோடி பேர் வேலை செய்துள்ளனர். குறிப்பாக வேலைவாய்ப்புகள் இல்லாமல் முடங்கிய கொரோனா காலத்தில், ஏழை எளிய கூலி விவசாயிகளுக்கு வாழ்வு கொடுத்தது இந்த 100 நாள் வேலைத்திட்டம் தான் என்றால் மிகையாகாது.
இது போன்ற வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்கள் அனைத்துமே மக்களை சாந்தப்படுத்தும் தற்காலிக ஏற்பாடுகள்தான். ஆனால் கோடிக்கணக்கான மக்களை பட்டினிக் கொடுமையிலிருந்து இத்திட்டங்கள் மீட்டுள்ளதை நிராகரிக்க முடியாது. அதனால் தான் விவசாய சங்கத் தலைவர்கள் தற்காலிக ஏற்பாட்டை நிரந்தரமாக்க விவசாய வேலைகளை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று கோருகின்றனர்.
படிக்க :
விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு !
அதானி நிறுவனத்தை இழுத்து மூடிய பஞ்சாப் விவசாயிகள் !!
இந்த 100 நாள் வேலைத்திட்டங்களின் கீழ் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய தணிக்கைக்குழுக்களின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன. இந்தியா முழுவதும் சுமார் ரூ.935 கோடி அளவிற்கு இலஞ்சம், வேலை செய்யாத நபர்களின் பெயரில் பணம் ஏமாற்றுவது, அதிக விலை கொடுத்து பொருட்கள் வாங்குவது என முறைகேடுகள் நடந்துள்ளன. இவை கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ரூ. 12.5 கோடி மட்டுமே (1.34%) மீட்கப்பட்டுள்ளது.
இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்று கிராமப்புற பணிகளை ஆக்கப்பூர்வமாக சாதித்ததை எல்லாம் இந்த முறைகேடுகள் மூடி மறைத்துவிட்டன. அல்லது இந்த முறைகேடுகளைக் காட்டி மக்களுக்குப் பலனளிக்கும் இந்தத் திட்டங்கள் இழிவுபடுத்தப்படுகின்றன. முறைகேடுகளில் ஈடுபட்டது, அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடங்கிய ஊழல் கிரிமினல் கூட்டம்தான். ஆனால் பழி உழைக்கும் மக்களின் மீது.
இந்த கிரிமினல் கூட்டத்திடமிருந்து 100 நாள் வேலைத்திட்டத்தை மீட்டெடுக்கவும், இத்திட்டத்தை நேரடியாக உழைப்பாளர்களே நிர்வகிக்கவும் ஏற்ற வகையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பங்கேற்கும் உழைப்பாளர்கள் இணைந்து தங்களுக்குள் ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அனைத்து முறைகேடுகளை  தடுத்து நிறுத்தவும், அரசு நிர்ணயிக்கும் கூலியை முழுமையாக உழைப்பாளருக்குக் கொண்டு சேர்க்கவும் முடியும். மேலும் விவசாய வேலைகளை, அது சார்ந்த பராமரிப்புப் பணிகளை 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கொண்டு அந்து நிரந்தரப் பணியாக மாற்றவும் போராட முடியும்.

கதிரவன்

4 மறுமொழிகள்

 1. விவசாயத்தின் பேரழிவிற்கு காரணம் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை என்பதை விவரித்து இருக்கவேண்டும்!

 2. KT ராகவன் ஆதரவு,
  100 நாள் வேலைக்கு எதிர்ப்பு,
  தாய்மதம் திரும்ப சொல்வது என
  தினசரி ஒருதலைப்பில் பேச வை க்கப்படுகிறான். சீமான்.
  மொத்தத்தில் பார்ப்பன RSS கும்பலால் இயக்கப்படும் கோமாளி சீமான்.

  கோமாளி சீமானுக்கு சிவசேனா பால்தாக்ரே போல் கனவு கண்டு வருகிறான். ஆனால் தமிழகத்தில் இனவெறி அரசியல் என்பது கண்ணாடி கூண்டில் இருக்கும் பொம்மைதான்.

 3. சீமான் அண்ணா எப்ப 100 நாள் வேலை திட்டத்தை எதிர்தார் …?அவர் சொல்வதுவது பயனாளிகளுக்கு 250ரூபாய் அரசாங்கம் கொடுப்பதோடு, விவசாயிகள் அவர்கள் உழைப்பை பயன்படுத்தி சம்பளமாக 300ரூபாய் கொடுத்தார்கள் என்றால் ,பயனாளிகளை 550 ரூபாய் ஒரு நாளைக்கு எடுத்து கொண்டு செல்வார்கள்… அதனால் பயனாளிகளின் வாழ்க்கை தரமும் உயரும் …விவசாயிகளின் உற்பத்தியும் உயரும்… அதனால் தமிழ் நாடும் உயரும் …”துங்கிறவனை எழுப்பலாம் ஆனால் துங்கிற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது “ஆசிரியரே 😂😂😂…!

 4. நூறுநாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்ட சில இடங்களில் சிறப்பான முறையில குடிமராமத்து பணிகள் நடந்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில எதுவும் நடக்கவில்லை, தெருக்கூத்தில் கூட கிண்டல் அடிக்கப்பட்ட, எல்லோருக்கும் தெரிந்த உண்மையை பொதுவெளியில் சொன்னதற்காக சீமானை பண்ணையார் என இந்த கட்டுரை ஆசிரியர் விளித்திருப்பதும் பின்னூட்டம இட்டவர் வசைபாடி இருப்பதும் இவர்களின் வக்கிரபுத்தியை காண்பிக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டம் என்னும் தெளிவான இலக்கற்ற திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது சிறு மற்றும் குறு விவசாயிகள் தான். வயிற்றுக்கு சோறும் காய்கறிகளும் திண்ணும் யாரும் இந்த திட்டத்தில் இருக்கும் ஊழலையும் சோம்பேறித்தனத்தையும் கண்டிக்கவே செய்வார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க