கிராமப்புறங்களில் வறுமையை போக்க வேண்டுமெனில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு (மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்திரவாதத் திட்டம் – MGNREGA) 2019-20 நிதியாண்டிற்கென ரூ. 88,000 கோடி தேவைப்படும். ஆனால் 2019, பிப்ரவரி முதல் தேதியில் வெளியிடப்பட்ட மைய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் ரூ. 20 ஆயிரம் கோடி குறைவாக, அதாவது ரூ. 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

“ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள வேலைக்கும், காலதாமதமின்றி கூலியை கொடுப்பதற்கும் 88,000 கோடி ரூபாயை விட குறைவான நிதி எதுவும் பயனளிக்காது” என்று தொழிலாளர் விவசாயிகள் சங்கம் (Mazdoor Kisan Shakti Sangathan) கூறியுள்ளது. அருணா ராய் தலைமையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்பாட்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக இந்த சங்கம் பரவலாக அறியப்பட்டது. ஏற்கனவே தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படாத ரூ. 7,568 கோடி நிலுவைத்தொகையாக இருக்கும் நிலையில் [2017 நிதியாண்டின் நிலுவைத்தொகை – ரூ. 11,000 கோடி] இந்த நிதியாண்டிலும் இந்நிலை தொடர்ந்து அதிகரிக்கும்” என்று அச்சங்கம் கூறுகிறது.

“அதாவது இந்த நிலுவைத் தொகையையும் சேர்த்தால் 2019-20 நிதியாண்டு தொடங்குவதற்கு முன்பே இந்த திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 52,000 கோடி மட்டுமே வருகிறது. பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஆரவாரமான இடைக்கால நிதி நிலை அறிக்கையின் பின்னே இந்த உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டது. 100 நாள் திட்டத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்கினால் மட்டுமே நிலுவைத் தொகையையும் பணப் பற்றாக்குறையையும் சமாளிக்க முடியும்” என்று மேலும் அது கூறியது.

2018-19-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் 100 நாள் வேலை திட்டத்திற்காக முதலில் ரூ. 55,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் 2019 ஜனவரிக்கு முன்பே அது தீர்ந்து விட்டது. MGNREGA தொழிலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரச்சாரகர்களிடமிருந்து தொடர்ந்து வந்த நெருக்குதல் மற்றும் விமரிசனங்களால் கூடுதலாக ரூ. 6,084 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகை இதுவரையில் மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த சூழலில், ரூ. 60,000 கோடி ஒதுக்கியிருப்பது 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள பொறுப்பின்மை மற்றும் அக்கறையின்மையைதான் காட்டுகிறது என்கிறது அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை.

படிக்க:
♦ தேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை !
♦ விவசாயிகளின் போராட்டமும் அண்டப் புளுகு அர்னாப் வகை ஊடகங்களின் கூவலும் !

தனிப்பட்ட சில ஆய்வுகள் படி, 2017-18 காலப்பகுதியில் அரசாங்கம் 32 விழுக்காடு கூலி மட்டுமே குறித்த நேரத்தில் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் 85 விழுக்காடு கொடுத்ததாக அரசாங்கம் கூறியுள்ளது. மாநிலங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்திடம் தொடர்ந்து வைத்த கோரிக்கைகளுக்கு பிறகும் கூட அது தன் மட்டத்திலோ அல்லது பணம் வழங்கும் நிறுவனங்களின் மட்டத்திலோ ஏற்படும் காலதாமதத்தை பதிவு செய்திருக்கவில்லை என்று அரசின் கூற்றுகளில் உள்ள ஓட்டைகளை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

அரசாங்கம் கூறிய 85 விழுக்காட்டிற்கு மாறாக 2018 நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டில் 32 விழுக்காடு நிதியே குறித்த நேரத்தில் வழங்கப்பட்டது என்று அரசாங்கத்தின் சொந்த தகவலின் மீதான இரண்டு தனிப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. 100 நாள் திட்டத்திற்கான பணப் பற்றாக்குறையினால் கடைசி இரண்டு காலாண்டுகளில் இந்த சூழல் இன்னும் மோசமாகி விடுகிறது.

காலதாமதத்தின் முழு அளவையும் அரசாங்கம் இன்னும் கணக்கிடாததால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடும் கூட இன்னும் கணக்கிடப்படவில்லை. தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டாலும் மைய அரசாங்கம் மற்றும் பணம் வழங்கும் நிறுவனங்களுக்கான பொறுப்புகள் இன்னும் வரையறுக்கப்படவில்லை. மைய அரசாங்கத்தின் தவறான இழப்பீடு வரையறையான நாளுக்கு 0.05 விழுக்காட்டின் படி 2013-ம் ஆண்டிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய ரூ.1,898 கோடி இழப்பீடு, தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கூலியில் 4 விழுக்காட்டிற்கும் குறைவே. மேலும் கடந்த ஏழு ஆண்டுகளில் நிலுவைத்தொகையின் அளவு 10-லிருந்து 35 விழுக்காடு ஆகியுள்ளது.

அரசியலமைப்பு விதிமுறைகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் பல்வேறு குழுக்களின் தொடர்ச்சியான பரிந்துரைகள் படி 100 நாள் வேலைக்கான குறைந்தபட்ச கூலி அந்தந்த மாநிலங்களின் சராசரி கூலியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று MKSS வலியுறுத்தியுள்ளது. “கிராமப்புற தொழிலாளர் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-R) படி, குறைந்தபட்சம், பண வீக்கத்திற்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.” என்று மேலும் அது கூறியது.

படிக்க:
♦ காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தப்பிப் பிழைத்தது எப்படி ?
♦ குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்

கிராமத் தேவை அடிப்படையிலான இந்த வேலை வாய்ப்பு திட்டத்தின்படி நிதியாண்டிற்கான வேலையின் அளவு மற்றும் தன்மையை கிராம நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மாநில மற்றும் மைய அரசாங்கங்களால் இது தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அடிமட்டத்திலிருந்து கணக்கிடப்பட வேண்டிய மனித வேலை நாட்கள், மைய அரசாங்கத்தினால் “அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் வரவு செலவு திட்டமாக” குறைத்து மதிப்பிடப்படுகிறது. இது 100 நாள் வேலைத்திட்ட சட்டத்தின் ஆன்மாவிற்கே எதிரானது” என்று MKSS சங்கம் கூறுகிறது.

நாடு முழுவதும் கடுமையான வேலையின்மை மற்றும் விவசாயிகளுக்கு பொருளாதார நெருக்கடி நிலவும் இந்நேரத்தில் 100 நாள் வேலை திட்டத்தை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதென்பது முன்னெப்போதுமில்லா அளவுக்கு இன்று இன்றியமையாததாகிறது.

தமிழாக்கம்: சுகுமார்
நன்றி: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க