நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் (ஐ.சி.ஏ.ஆர்.) 109 புதிய ரக உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவை, சிறு தானியங்கள், தீவனப் பயிர்கள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்ட 34 வகையான வயல் பயிர்கள் மற்றும் பழங்கள், பூக்கள், மூலிகைப் பயிர்கள் உள்ளிட்ட 27 வகையான தோட்டப் பயிர்கள் என மொத்தம் 61 பயிர்களுக்கான விதைகள் ஆகும்.
இந்த உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் அதிக மகசூலை தரும் என்றும் அனைத்து பருவநிலைகளையும் தாங்கி வளரும் என்றும் மோடி அரசால் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விதைகளில் பெரும்பாலானவை ஐ.சி.ஏ.ஆர். விஞ்ஞானிகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் மோடி அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மோடி-அமித்ஷா கும்பலால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய நிதிநிலை அறிக்கை-2024-இல், அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரக்கூடிய 109 பயிர் ரக விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்வது என்று அறிவித்திருந்ததன் படியே இந்த விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது மட்டுமல்ல, தன்னுடைய பத்தாண்டுக்கால பாசிச ஆட்சிக்காலத்திலும் அதிக மகசூல் தரும் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் என்று கூறி ஆயிரக்கணக்கான விதைகளை மோடி அரசு விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. சான்றாக, கடந்த 10 ஆண்டுகளில் பாரம்பரிய பயிர்களை விட 25 சதவிகிதம் குறைவான தண்ணீர் தேவைப்படும் அரிசி வகைகள் உட்பட, சுமார் 2,500 காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பயிர்களை மோடி அரசாங்கம் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி உள்ளதாக ஆங்கில செய்தி ஊடகமான மிண்ட் தன்னுடைய இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இத்தகைய உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும், அதிக மகசூலைத் தரும் என்று மோடி அரசாலும் விவசாய விஞ்ஞானிகளாலும் பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவை அப்பட்டமான பொய்யாகும். இதற்கு இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட கலப்பின பயிர் ரகங்களான பி.டி.கத்தரிக்காய், பி.டி.பருத்தி போன்றவற்றால் மகசூலை அதிகரிக்க முடியவில்லை என்பதுதான் வரலாறு. மேலும், பி.டி.பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதையும் நாம் மறந்து விடமுடியாது.
படிக்க: அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள்
மாறாக, இந்த உயிரி செறிவூட்டப்பட்ட விதைகள் கார்ப்பரேட்டுகளின் இலாப நோக்கத்திற்காகவே விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதனால்தான், மோடி அரசு உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துவதை கார்ப்பரேட் முதலாளிகள் வரவேற்று புகழ்கின்றனர்.
“ஒன்றிய நிதிநிலை அறிவிப்பில் விவசாயிகளுக்கு 109 புதிய உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளை அறிமுகப்படுத்துவது என்ற அம்சத்தை சேர்ப்பது, அதிக மகசூல் தரும் மற்றும் காலநிலையை எதிர்க்கும் விதை வகைகளில் அரசாங்கத்தின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது விவசாயத்துறைக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும் சாதகமான அறிகுறியாகும்” என்று பார்ச்சூன் ஹைபிரிட் விதைகளின் இயக்குநர் ராவ் கூறியுள்ளதே அதற்கு சிறந்த சான்றாகும்.
மேலும், பல முதலாளித்துவ பொருளாதார ஆய்வு நிறுவனங்களும் இந்திய விவசாய உற்பத்திமுறை படிப்படியாக கலப்பின மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளாலான உற்பத்தி முறையாக மாற்றப்பட்டு வருவதால் இந்திய விவசாய விதை சந்தை மதிப்பு அதிகரிக்கும் என்று தங்களது ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றன. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட சந்தை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான மோர்டோர் இண்டலிஜென்ஸின் கூற்றுப்படி, இந்தியாவில் விதை சந்தை 2024-இல் 3.61 பில்லியன் டாலராக இருக்கும் என்றும், 2030 ஆம் ஆண்டில் 5.01 பில்லியன் டாலராக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, விவசாயத்தில் பாரம்பரிய விதைகளிலான உற்பத்தி முறையை சிதைத்து கலப்பின விதைகளிலான உற்பத்தி முறை நிலைநாட்டப்பட்டு வருவதைப் போல, உயிரி செறிவூட்டப்பட்ட விதைகளிலான உற்பத்தி முறையை நிலைநாட்டுவதும் விவசாயிகளை விதைகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களை சார்ந்து இருக்கும் நிலையை உருவாக்கி விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதன் ஒரு அங்கம் ஆகும்.
விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிராக, தங்களின் உயிராதாரமான கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயக் கடன் தள்ளுபடி, மின்சாரத் சட்டத் திருத்தம் (2020) ரத்து உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து விவசாய சங்கங்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்திவரும் நிலையிலும் மோடி அரசு, விவசாயிகளுக்கு அதிக மகசூல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பயிர்களை அறிமுகப்படுத்துகிறோம் என்று கூறி நயவஞ்சகமாக விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவும் வேலைகளில் தான் ஈடுபட்டு வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube