ஜனவரி 26 அன்று பாசிச மோடி அரசுக்கு எதிராக 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 484 மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான டிராக்டர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுடன் பேரணியை நடத்தியுள்ளது சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) விவசாயிகள் கூட்டமைப்பு. இந்த பேரணியில் விவசாயிகள் மட்டுமின்றி மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2021-ஆம் ஆண்டு டிசம்பரில் வீரஞ்செறிந்த விவசாயிகள் போராட்டத்தின்போது மோடி அரசு விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்குதல், அனைத்து பயிர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கொள்முதல் விலை, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரத் துறையில் தனியார்மயமாக்கலை நிறுத்துதல், பயிர்க் காப்பீட்டை உறுதி செய்தல், லக்கிம்பூர் கேரி விவசாயிகளின் படுகொலையின் முக்கிய குற்றவாளியான அஜய் மிஸ்ரா தேனியை பதவி நீக்கம் செய்து வழக்குத் தொடர்வது என எதையும் நிறைவேற்றவில்லை. எனவே, பாசிச மோடி அரசிற்கு தங்களின் கோரிக்கைகளை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் விவசாயிகள் இந்த டிராக்டர் பேரணியை நடத்தியுள்ளனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் “மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை எதிர்ப்போம்! விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை எதிர்ப்போம்! மதச்சார்பற்ற ஜனநாயக தன்மையை வலுப்படுத்துவோம்!” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
படிக்க: நியூஸ் கிளிக் எஃப்.ஐ.ஆர் நகலை எரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு!
இந்த பேரணியைத் தொடர்ந்து பிப்ரவரி 16 ஆம் தேதி சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) விவசாயிகள் கூட்டமைப்பு கிராமப்புற கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் தொழில்துறை வேலைநிறுத்தங்கள் மூலம் தொழிலாளர்களும், மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளும் கிராமப்புற கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் SKM தெரிவித்துள்ளது.
விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை கொண்டு வந்தது விவசாய நெருக்கடிக்கு வழிவகுத்து. அதன் விளைவாக 2014-2022 காலகட்டத்தில் 1,00,474 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் 14.64 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டாலும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்ற செய்தி இந்த அரசு கார்ப்பரேட்டுகளுக்கானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் இந்த அரசை வீழ்த்தாமல் நமக்கு உண்மையான விடுதலை கிடைக்காது.
ஆதன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube