மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளியதில் முக்கியபங்காற்றிய, மோடிக்கும்பலுக்கு சிப்பசொப்பனமாக திகழும் விவசாயிகள் தற்போது மீண்டும் டெல்லி சலோ 2.0 போராட்டத்தை முன்னெடுத்திருப்பது பாசிஸ்டுகளுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தங்களின் போராட்டத்தின் மூலம் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ள விவசாயிகள் “பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை களப்போராட்டங்கள்தான்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
மேலும் உலகம் முழுவதும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் விவாயிகள் போராட்டம் தீவிரமடைந்துவரும் சூழலில், மறுகாலனியாக்க கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிச மோடி அரசுக்கு எதிராகவும், விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கப்படுவதற்கு எதிராகவும், ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் மக்களின் நலன்களை உள்ளடக்கிய இந்திய விவசாயிகள் நடத்திக்கொண்டிருக்கும் இப்போராட்டம் சர்வதேச அளவில் முன்னுதாரணமிக்க போரட்டமாகும்.
டெல்லி சலோ 2.0!
கடந்த 2020-ஆம் ஆண்டு விவசாயிகள் முன்னெடுத்த டெல்லி சலோ போராட்டத்தினால் அடிபணிந்த பாசிசக் கும்பல் மூன்று வேளான் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்ததோடு விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மோடி அரசு அக்கோரிக்கைகளை நிறைவேற்றாததை எதிர்த்து தற்போது மீண்டும் விவசாயிகள் டெல்லி சலோ 2.0 போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) (SKM(NP)), கிசான் மஸ்தூர் மோர்ச்சா (KMM) ஆகிய விவசாய சங்கங்களின் தலைமையில் நடத்தப்படும் இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கெடுத்துள்ளன. 2020-2021 விவசாயிகள் போராட்டத்திற்கு, தலைமை தாங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) சங்கத்திற்கு கீழுள்ள பாரதிய கிசான் யூனியன் (BKU) போன்ற பல விவசாய சங்கங்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளன. அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய டெல்லி சலோ 2.0 போராட்டமானது, நாடுமுழுவதும் பாசிச மோடி அரசுக்கு எதிராகவும் அதன் பாசிசத் சட்டத்திட்டங்களுக்கு எதிராகவும் போராடும் பிற வர்க்கங்களுக்கு முன்னுதாரணமிக்க வகையில் வீரதிரத்துடன் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில், 2020-2021 போராட்டத்தின்போது மோடி அரசு நிறைவேற்றுவதாக ஏற்றிருந்த வாக்குறுதிகளான குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்துவதற்கான சட்டம், விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி, மின்சாரச் சட்டத்திருத்தம் 2020 ரத்து உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை விவசாயிகள் மீண்டும் முன்வைத்துள்ளனர். அதனோடு, 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்; உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்; பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலம், காடுகள், நீர் ஆதாரங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற ஒட்டுமொத்த இந்திய மக்களின் வாழ்வாதராத்தை பாதுக்காக்க கூடிய, மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு எதிரான முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில், களப்போராட்டம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழி என்பதை நன்குணர்ந்துள்ள விவசாயிகள் பாசிசக்கும்பலுக்கு எதிராக நாடுமுழுவதுமிருந்து அணித்திரண்டு கொண்டிருக்கிறார்கள். “13 நாட்கள், 13 மாதங்கள், 13 ஆண்டுகள் ஆகினாலும் ஒன்றிய அரசு சட்டம் இயற்றும்வரை, மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாங்கள் வீடு திரும்பமாட்டோம்” என்ற விவசாயிகளின் போராட்ட உறுதியைக்கண்டு பாசிசக் கும்பல் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறது.
விவசாயிகள் மீதான மோடி அரசின் உள்நாட்டு போர்
டெல்லி முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் அறிவித்தவுடனேயே, கதிகலங்கிய ஒன்றிய மோடி அரசும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளும் விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது ஒடுக்கி தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்பதற்காக தயாரிப்புப் பணிகளில் இறங்கின. ஹரியானா – பஞ்சாப் எல்லையில் அமைந்திருக்கும் அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த் போன்ற கிராமங்களில் பிப்ரவரி 11 அன்று காலை 6 மணி முதல் இணையம் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் துண்டிக்கப்பட்டன.
ஒன்றிய பா.ஜ.க. அரசு டெல்லியில் ஒருமாதக் காலத்திற்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. நகரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கூடி நிற்க தடை விதிக்கப்பட்டது. சில கல்வி நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. விவசாயிகள் டெல்லிக்குள் மெட்ரோ ரயில் வழியாக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக சில மெட்ரோ ரயில் நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், டெல்லிக்குள் நுழையும் போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக, டிராக்டர்கள், தள்ளுவண்டிகள், பேருந்துகள் போன்ற வாகனங்கள் டெல்லிக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஹரியானாவில், விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் தடுப்பதற்காக அம்மாநில பா.ஜ.க. அரசு விவசாயிகள் மீது மூர்க்கத்தனமான அடக்குமுறைகளை செலுத்தியது. விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று போலீசு கிராமங்களில் எச்சரிக்கை விடுத்தது; டிராக்டருடன் விவசாயிகள் வெளியில் வந்தால் அவர்கள் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது; விவசாயிகளுக்கு டீசல் வழங்கக்கூடாது என்று பெட்ரோல் நிலைய உரிமையாளர்களை மிரட்டியது. விவசாய சங்கத் தலைவர்களிடம் அவர்களது வங்கிக்கணக்குகள் மற்றும் நிலங்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது; விவரங்களை அளிக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மிரட்டியது. போலீசின் அடக்குமுறையால் பல விவசாய சங்கத் தலைவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே பஞ்சாப்பிற்கு சென்றுவிட்டனர்.
படிக்க: தொடரும் விவசாயிகள் போராட்டம்: மார்ச் 10 நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்!
விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர், ஷம்பு உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் சிமெண்ட் மற்றும் மணல் மூட்டைகள், முள்வேலிகள், பேரிகார்டுகள், லாரிகள் போன்றவற்றின் மூலம் தடுப்புகளை அமைப்பது; டிராக்டர்களின் டயரை கிழிக்க சாலைகளில் ஆணிகளைப் புதைப்பது; டிராக்டர்கள் செல்ல முடியாத வகையில் சாலையில் பள்ளங்களை தோண்டுவது போன்ற காட்டுமிராண்டித்தனமான முறைகளை போலீசும் துணை ராணுவப் படைகளும் கையாண்டன. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் ட்ரோன்கள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பீரங்கிகள், தடுப்புகளை நகர்த்தி வைப்பதற்கான கிரேன்கள் என விவசாயிகளை ஒடுக்க பாசிசக் கும்பலின் அடியாட்படையான போலிசும் துணை ராணுவமும் முழுத்தயாரிப்பில் இருந்தன. கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டங்களை கலைப்பதற்கான ஒத்திகையிலும் ஈடுபட்டன.
விவசாயிகளின் மீது கொடிய தாக்குதல்களை தொடுப்பதற்காக மோடி அரசு செய்துவந்த முன்தயாரிப்புகள் ஆங்கில செய்தி ஊடகங்களில் வெளிவந்து மோடி அரசின் கோரமுகம் அம்பலப்பட்டதோடு பெரும் பேசுபொருளானது. சமூக ஊடகங்களில், “மோடி அரசு தயாராவது விவசாயிகளின் போராட்டத்திற்கா? இல்லை உள்நாட்டு போருக்கா” என பலரும் கேள்வியெழுப்பி பாசிச மோடி அரசின் முகத்திரையை கிழித்தனர்.
அடக்குமுறைகளை எதிர்கொண்டு முன்னேறும் விவசாயிகள்
பாசிச மோடி அரசின் இந்த ஒடுக்குமுறைகளை கண்டு அஞ்சாத விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் டெல்லி எல்லையை நோக்கி விரையத் தொடங்கினர். விவசாயிகளின் மீது போலீசு கொடிய அடக்குமுறைகளை செலுத்தி வந்தாலும் எல்லைகளில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது.
டெல்லி முற்றுகைப் போராட்டம் துவங்கிய 13-ஆம் தேதி அன்று, ஷம்பு எல்லைப் பகுதியில் மட்டும் 10,000 விவசாயிகள் திரண்டிருந்ததாக போராட்டத்தில் பங்கேற்ற விவசாய அமைப்பு ஒன்று தெரிவித்தது. ஒரு வாரத்திற்கு பிறகு அதே ஷம்பு எல்லையில் சுமார் 14,000 விவசாயிகள் திரண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. டெல்லி எல்லையை நோக்கி செல்வதற்காக ஒட்டுமொத்தமாக இலட்சக்கணக்கில் விவசாயிகள் போராட்டகளங்களில் குவிந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அதேபோல், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கர்நாடகா போன்ற நாட்டின் பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். பலர் தங்கள் மாநிலத்தில் இருந்து டெல்லி எல்லைகளை நோக்கி செல்லும்போது போலீசு படையினரால் தடுத்துநிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். விவசாயிகளுக்கு ஆதாரவாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாட்கள் செல்ல செல்ல நாட்டின் ஒட்டுமொத்த விவசாய வர்க்கத்தின் போராட்டமாக டெல்லி முற்றுகை போராட்டம் உருவெடுத்தது.
விவசாயிகள் தங்கள் டிராக்டர்கள் உதவியுடன் எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். கான்கீரிட் தடுப்புகளை தங்கள் டிராக்டர்களில் கயிறுகட்டி இழுத்து சென்று அப்புறப்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. சம்பு எல்லையில் மேம்பாலத்தில் இருந்த தடுப்புகளை அகற்றி கீழே தூக்கி வீசி எறிந்தனர். தடுப்புகளை மீறிச் செல்ல முடியாத நிலையில் நெடுஞ்சாலைகளைத் தவிர பிற வழிகளிலும் டெல்லிக்குள் செல்ல முயன்றனர். தண்ணீர் ஓடும் கால்வாய்களை டிராக்டர்கள் கடந்து செல்லும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
தடுப்புகளை மீறிச் செல்ல முயன்ற விவசாயிகளை ஈவிரக்கமின்றி ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போலீசு தாக்கியது. பல இடங்களில் விவசாயிகள் கூடாரங்கள் அமைத்து முகாமிட்டிருந்த பகுதிகளின் மீது தொடர்ச்சியாக ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது பாசிச பா.ஜ.க. அரசு. இதற்காக டெல்லி போலீசு மட்டும் 30,000 கண்ணீர் புகைக்குண்டுகளை கொள்முதல் செய்திருந்தது. இது பாலஸ்தீன மக்களை ஒடுக்க இஸ்ரேல் இனவெறி அரசால் கையாளப்படும் கொடூரமான வழிமுறையாகும்.
விவசாயிகள் போரட்டத்தை எப்படியாவது அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதற்காக, ரப்பர் குண்டுகள், விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் பெல்லட் குண்டுகளை கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதிக அழுத்தத்தில் தண்ணீரை பீய்ச்சியடிக்கும் தண்ணீர் பீரங்கிகள், செவித்திறனை பறிக்கக்கூடிய சோனிக் (ஒலி) பீரங்கிகள் உள்ளிட்ட மிருகத்தனமான ஆயுதங்களை கையாண்டது.
இவ்வாறு மோடி அரசு எதிரி நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதைப் போல விவசாயிகளின் மீது போர் தொடுத்து அவர்கள் மீது ஈவிரக்கமின்றி கொடூரமாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், நெஞ்சுரமிக்க விவசாயிகள் மோடி அரசின் கொடிய தாக்குதல்களை மிகுந்த மன உறுதியுடன் எதிர்கொண்டு வருகின்றனர். 21 வயது விவசாயி உட்பட ஆறு விவசாயிகள் பாசிஸ்டுகளின் தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். பலருக்கு கண்பார்வை பறிபோயுள்ளது. இத்தகைய, சூழலிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ஆனால், பாசிஸ்டுகளின் கொடிய அடக்குமுறைகளிலிருந்து அனுபவப் படிப்பினைகளை எடுத்துகொண்ட விவசாயிகள், கண்ணீர்ப்புகை மூக்கினுள் புகாமல் தடுக்கக்கூடிய முகக்கவசங்கள், கண்ணீர் புகையிலிருந்து பாதுகாக்கும் மூக்குக் கண்ணாடிகள் போன்ற உபகரணங்களை பயன்படுத்தனர். ட்ரோன்களை செயலிழக்க செய்ய பட்டம் விடுவது, காஸ்கோ பந்துகளை பயன்படுத்துவது போன்ற வழிமுறைகளையும் கையாண்டு வருகின்றனர்.
குலை நடுக்கத்தில் மோடி-அமித்ஷா கும்பல்
அத்துணை அடக்குமுறைகளையும் மீறி விவசாயிகள் போராட்டக்களத்தை நோக்கி முன்னெறி கொண்டிருப்பது பாசிசக் கும்பலின் பீதியை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் இப்போராட்டத்தில் பங்கெடுக்காத சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு, 21 வயது இளைஞர் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் கொல்லப்பட்டதையடுத்து நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து போராட்டத்தில் குதித்தது. போலிசின் அடக்குமுறைகளை கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் 20-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. தலைவர்களின் வீட்டு வாசலின் முன் போராட்டம் நடத்தப்பட்டது.
குறிப்பாக, கடந்த 2020-ஆம் ஆண்டு மூன்று வேளான் சட்டம் என்ற பாசிச அடக்குமுறைக்கு எதிராக போராடிய விவசாயிகள் இம்முறை குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட வாழ்வாதார உரிமைகளுக்காக போராடுவது விவசாயிகள் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாகும். ஜனநாயக வாடையை கூட அறிந்திருந்த பாசிச கும்பலால் விவசாயிகளின் இத்தகைய ஜனநாயகப்பூர்வமான போராட்டத்தையும் கோரிக்கைகளையும் சகித்துகொள்ள முடியவில்லை. இதனை ஆர்.எஸ்.எஸ்-இன் பத்திரிகையான “ஆர்கனைசர்”-இன் கதறல் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
விவசாயிகள் போராட்டம் குறித்து தலையங்கம் எழுதிய ஆர்கனைசர் பத்திரிகை, “2020-ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு விவசாயத்துறையில் சீர்திருத்தங்கள் தொடர்பான மூன்று மசோதாக்கள் காரணமாக இருந்தது. ஆனால், தற்போது அத்தகைய காரணம் எதுவும் இல்லை” என்றும், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், உலக வர்த்தக கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் உள்ளிடவை “நியாயமற்ற கோரிக்கைகள்” என்றும் கதறியுள்ளது.
படிக்க: WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!
ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு, அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு, ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது போன்ற எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதல்கள், உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல், உத்தரகாண்ட் கலவரம் என பா.ஜ.க. கும்பல் அடுத்தடுத்த பாசிச நடவடிக்கைகளையும் தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தாலும், களத்தில் பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிரான இளைஞர்களின் நாடளுமன்ற புகைக்குப்பி வீச்சு, பாசிசக் கும்பலை பணியவைத்த லாரி ஓட்டுநர்களின் போராட்டம் என அடுத்தடுத்த மக்கள் போராட்டங்கள் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவந்தன.
தற்போது அதன் உச்சமாக ஜனநாயக உரிமைகளைகோரும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருவது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, விவசாயிகளின் போராட்டம் பிற வர்க்கத்தினரிடம் பரவி பாசிச மோடி அரசிற்கு எதிரான வலுவான போரட்டமாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளதால், விவசாய போராட்டத்தை ஒடுக்கிவிட வேண்டும் என்பதில் பாசிசக் கும்பல் தீவிரமாக உள்ளது. ஒருபுறம் போராடும் விவசாயிகள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை தொடுத்துவரும் அதேவேளையில் மறுபுறம் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் நயவஞ்சகமான முறையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்ற நோக்கத்தில் காய்களை நகர்த்தி வருகிறது மோடி அரசு.
போராட்டம் துவங்குவதற்கு முன்னாலேயே விவசாய சங்கத் தலைவர்களுடன் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான குழுக்களை அமைப்பதாக வாக்குறுதி அளித்தது பா.ஜ.க. அரசு. வாக்குறுதியை நிராகரித்த விவசாயிகள், “குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்கெனவே பல குழுக்கள் விவாதிட்டுவிட்டன, குழுக்களை உருவாக்குவதன் மூலம் விஷயத்தை நீட்டிக்க விரும்புகின்றனர்” என்று மோடி அரசை அம்பலப்படுத்தினர்.
நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் பருத்தி, சோளம், துவரை, உளுந்து, மசூர் பருப்பு ஆகிய விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு கொள்முதல் செய்யும் என அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், “அடிப்படையில், இது ஒரு ஒப்பந்த விவசாய திட்டம். ஒப்பந்த விவசாயம் ஏற்கெனவே தோல்வியடைந்துள்ளது மற்றும் ஒப்பந்த விவசாயத்தில் நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது” என்றும், “23 விளைபொருட்களில் ஐந்து விளைபொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது, மற்ற விவசாயிகளை விட்டுவிடுவது நியாயமானதல்ல” என்றும் கூறி விவசாயிகள் அவ்வாக்குறுதியை நிராகரித்தனர்.
மேலும், விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்திகளை தங்களுடைய பினாமி ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் இருந்து மூடிமறைப்பது; விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் எக்ஸ் பக்கத்தை முடக்குவது; போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை “காலிஸ்தான் தீவிரவாதிகள்” என்றும் “போராட்டத்தை காங்கிரஸ் தூண்டிவிட்டுள்ளது” என்றும் இழிவுப்படுத்தி பிரச்சாரம் செய்வது போன்ற பா.ஜ.க. கும்பலின் கீழ்த்தரமான நடவடிக்கைகளும் மோடி அரசின் குலைநடுக்கத்தின் வெளிப்பாடுகளே.
ஆனால் விவசாயிகள் மீது மோடி அரசு தொடுத்துவரும் கொடூரத் தாக்குதல்களும் விவசாயிகளின் போர்க்குணமிக்க போராட்ட வழிமுறைகளும் முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களிலும், ஆங்கில செய்தி ஊடகங்களிலும் நாடு முழுவதும் பரவி பாசிச கும்பலின் பொய் பிரச்சாரங்கள் புஸ்வானமாகி வருவதோடு விவசாயிகளின் போராட்டத்திற்கான ஆதரவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதம்
விவாசாயிகள் தங்களின் போராட்டத்தை தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவந்த போதிலும், விவசாயிகளை ஒடுக்க மோடி அரசு ஆயத்தாமாகி வருவது தொடர்ந்து ஆங்கில ஊடகங்களில் வெளியாகி கொண்டிருந்த போதிலும் எதிர்க்கட்சிகள் கருத்தேதும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்துவந்தன. 13-ஆம் தேதி விவாசாயிகள் மீது மோடி அரசு மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய பிறகுதான் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை விமர்சித்தன. நியாயமான கோரிக்கைகளோடு போராட்டம் நடத்தவரும் விவசாயிகளை, பா.ஜ.க. அரசு பயங்கரவாதிகள் போலத் தாக்க நினைக்கிறது என்றும் சீன எல்லைப் பாதுகாப்பைப் பலப்படுத்தச் சொன்னால் டெல்லியின் எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இப்போது அறிவிக்கிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எங்களின் முதல் வாக்குறுதி இது. ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதியை நிச்சயம் செயல்படுத்துவோம்” என்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இதே வாக்குறுதியை ராகுல்காந்தியும் அளித்திருந்தார். மேலும் இமாச்சலப்பிரதேச காங்கிரஸ் அரசும் விவசாயிகளுக்கு பாலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.
மேலும், இப்போராட்டத்தில் கணிசமான அளவு விவசாயிகள் கலந்துகொண்டுள்ள பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை, அம்மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மன்-தான் விவசாயிகளுக்கும் ஒன்றிய மோடி அரசுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறார். இப்போராட்டத்தில் பங்கெடுத்துள்ள கிசான் மஸ்தூர் மோர்ச்சாவிற்கும் ஒன்றிய மோடி அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்வதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். போராட்டக்களத்தில் பாசிச பா.ஜ.க-வால் சுட்டுக்கொல்லப்பட்ட 21 வயது இளைஞரின் குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடும் அவரது தங்கைக்கு அரசு வேலையும் வழங்குவதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
ஆனால், இன்னொருபுறம் இந்நடவடிக்கைகள் ஆம் ஆத்மி அரசின் மீதான அம்மாநில விவசாயிகளின் எதிர்ப்பை திசைதிருப்புவதற்கான முயற்சி என்று விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக, ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு எதிராக பிப்ரவரி 24 அன்று பாரதி கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) (BKU(EU)) என்ற விவசாய சங்கத்தால் “சலோ சண்டிகர்” பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, டெல்லி சலோ போராட்டத்தால் இப்பேரணி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022-ஆம் ஆண்டு நடந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 22 பயிர்களை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதாகவும் கொள்முதலை உத்தரவாதம் செய்வதாகவும் பகவந்த் மன் உள்ளிட்ட பல ஆம் ஆத்மி தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது ஆம் ஆத்மி அரசு. வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
குறைந்தபட்ச ஆதாரவிலை கோரிக்கையை நிறைவேற்றுவதாக தற்போது வாக்குறுதி அளித்துவரும் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும், இக்கோரிக்கையானது விவசாயிகளுக்கு உயிராதாரமானது என்பதும் காங்கிரஸ் ஆட்சி காலத்திலிருந்தே விவசாயிகள் இக்கோரிக்கைக்காக போராடி வருகின்றனர் என்பதும் நன்கு தெரியும். சொல்லபோனால், சுவாமிநாதன் கமிட்டியின் குறைந்தபட்ச ஆதார விலை பரிந்துரையை ஏற்பதற்கு அப்போதைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு விடாப்பிடியாக மறுத்தது என்பதே உண்மை.
இதனையடுத்து விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாகக் கூறி மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் நயவஞ்சகமாக விவசாயிகளை ஏமாற்றி வருவதோடு விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் மூன்று வேளான் சட்டங்கள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக விவாசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதும், வாழ்வாதாரத்தை இழந்துவரும் விவாசாயிகள் மத்தியில் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கைக்கான போராட்டங்கள் அதிகரித்து வருவதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல், தாங்கள் ஆளும் மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதார விலைய நிறைவேற்றாமலும் அதற்கான வாக்குறுதிகளை அளிக்காமலும்தான் எதிர்க்கட்சிகள் இருந்து வந்துள்ளன. அவ்வாறு வாக்குறுதி அளித்த ஆம் ஆத்மி கட்சியும் அதனை விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்துகொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தியதே ஒழிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மேலும், மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வைக்கும் வகையிலான போராட்டங்களையும் கட்டியமைத்ததில்லை.
தற்போது விவசாயிகள் மத்தியில் உள்ள பா.ஜ.க. எதிர்ப்பை பயன்படுத்தி மக்கள் வாக்குகளை அறுவடை செய்து கொள்வதற்காக குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை நிறைவேற்றுவதாக எதிர்க்கட்சிகள் வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால், மக்கள் இக்கட்சிகளை நம்ப வேண்டுமெனில் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளின் போராட்டம் உரிமைக்கான போர்க்குரல்!
இந்தியாவில் 1990-களுக்குப் பிறகு, தனியார்மயம்–தாராளமயம்–உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, விவசாயம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகிய இடுபொருள்களின் விலை உயர்வு, விவசாயத்துறைக்கு அளித்துவந்த மானியங்களின் அளவை குறைப்பது, இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் விளைபொருள்கள் வீழ்ச்சி, வங்கிக்கடன் மறுப்பு, விவசாயத் துறைக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டு நிதியை குறைப்பது போன்றவற்றால் விவசாயிகளின் வாழ்வு கேள்விக்குறியாகிவிட்டது.
குறிப்பாக, மோடி-அமித்ஷா தலைமையிலான பாசிசக் கும்பல் இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, மறுகாலனியாக்க கொள்கைகள் மூர்க்கத்தனமாக அமல்படுத்தப்படுகின்றன. விவசாயத்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் வேகமாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. உலக வர்த்தக கழகத்தின் உத்தரவின்படி, கடந்த 10 ஆண்டுகால பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கான நிதிஒதுக்கீடும், உர மானியத்திற்கான நிதிஒதுக்கீடும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. மூன்று வேளாண் சட்டங்களின் கூறுகளை மறைமுகமாக அமல்படுத்துவதன் மூலம், உள்நாட்டு-பன்னாட்டு கார்ப்பரேட் கும்பல்களின் ஆதிக்கத்தை நிறுவும் வகையில் விவசாயத்துறைக்கான கட்டமைப்புகள் மாற்றப்பட்டு வருகின்றன.
அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-2025 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு 2022-2023 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை ஒப்பிடும் போது 81 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய கிசான் சபா (AIKS) தெரிவித்துள்ளது. மேலும், 2024-2025 நிதியாண்டிற்கான விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு, 2022-2023 நிதியாண்டிற்கான உண்மையான செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் 22.3 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், 2023-2024 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் உடன் ஒப்பிடுகையில் 6 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மோடி அரசின் பத்தாண்டுகாலப் பாசிசப் பேயாட்சியில், கோடிக்கனக்கான விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு பிழைக்க வழியின்றி மரணப் படுகுழியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுபடி, 2020-ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் தற்கொலை 5.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் 1,00,474 விவசாயிகள் இறந்துள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.
படிக்க: இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!
கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவரும் இந்த பின்னணியில் இருந்துதான், வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்படி அமல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நாம் அணுக வேண்டியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை என்பது, விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களுக்கு அதன் உற்பத்திச் செலவிற்கு அதிகமாக (குறைந்தப்பட்சம் 50 சதவிகிதத்திற்கு)விலை நிர்ணயத்து அரசால் கொள்முதல் செய்யும் முறை. இப்படி கொள்முதல் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை அரசு பொதுவிநியோக முறை மூலம் மக்களுக்கு வழங்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாமல் அவர்களின் வாழ்வாதாரம் உத்தரவாதம் செய்யப்படும். ஆனால், இந்தியாவில் நெல், கோதுமை தவிர மற்ற வேளாண்பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை உறுதி செய்யப்படாத நிலையே இன்றுவரை உள்ளது. அதிலும் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டுமே நெல், கோதுமை ஆகியவை முழுமையாக அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. பெரும்பாலும் இடைத்தரகர்களால்தான் கொள்முதல் செய்யப்படுகின்றன.
பொருளை நேரடியாக உற்பத்தி செய்யாத சிறுகுறு வணிகர்களால் கூட குறிப்பிட்ட அளவிற்கு சரக்கு விலையை நிர்ணயம் செய்ய முடியும்போது, விவசாயிகளால் தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கான விலையை தீர்மானிக்க முடியாதது என்பது அப்பட்டமான பகல் கொள்ளை. 1990-களில் மறுகாலனியாக்க கொள்கைகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் விவசாய தரகர்கள், இடை தரகர்கள், கமிஷன் மண்டி முதலாளிகள் சிண்டிக்கேட் அமைத்து விவசாய பொருட்களின் விலையை தீர்மானித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இன்று அந்த இடத்தை கார்ப்பரேட்டுகள் பிடித்துள்ளன.
எனவே, விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கான கோரிக்கை என்பது தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை உரிமைக்கு ஒப்பான உயிராதாரமான கோரிக்கையாகும். விவசாயத்துறையில், உழைப்பவருக்கே அதிகாரம் என்பதை நிலைநாட்டும் வகையிலான கோரிக்கையாகும்.
அதேசமயம் விவசாயிகளின் போராட்டமும் கோரிக்கையும் அவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கானது என்று மட்டும் பார்க்க கூடாது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் உணவு பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துவதற்கான மகத்தான போராட்டம். ஏனெனில், விவசாயித்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதால் விவசாயிகள் மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கமும் படுகுழியில் தள்ளப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்த மோடி அரசு பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. பொது விநியோக முறைக்கான பொருட்களை கொள்முதல் செய்யும் இந்திய உணவுக் கழகத்திற்கான மானியங்களை வெட்டுவது, கொள்முதலை குறைப்பது, இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் உணவு தானியங்களை மாநில அரசுகள் ஏலம் எடுப்பதற்குத் தடை விதிப்பது, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு மானியங்களை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான திட்டம் என திட்டமிட்டு பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்கான வேலைகளை செய்து வருகிறது. பொது விநியோக முறையை முற்றிலும் ஒழித்துக்கட்டினால், விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை முழுமையாக கார்ப்பரேட் கைப்பற்ற முடியும். எனவே, விவசாயிகளின் குறைந்தப்பட்ச ஆதார விலை கோரிக்கை உத்தரவாதப்படுத்தப்பட்டால், அவர்களால் தொடர்ச்சியாக உற்பத்தியில் ஈடுபட முடியும், பொது விநியோக முறையையும் அரசு தொடரவேண்டியிருக்கும். அதேப்போல், மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உழைக்கும் மக்கள் எதிர்கொண்டு வரும் தாக்குதல்களில் முக்கியமானது, உணவுப்பொருட்களின் விலையேற்றம். இதுவும் விவசாயத்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப்பட்டுவருவதன் விளைவே.
எனவே விவசாயிகளின் கோரிக்கை என்பது அவர்களின் உரிமைக்கானாது மட்டும் கிடையாது, நம்முடைய உணவுக்கானது, நாட்டின் உணவுப்பாதுகாப்புக்கு இன்றியமையாதது. விவசாயிகளின் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்து, வெற்றிடைய செய்ய வைப்பது இந்திய உழைக்கம் வர்க்கத்தின் கடமையாக உள்ளது.மேலும்,கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற சுரண்டலின் விளைவாக உருவாகியிருக்கும் பருவநிலைமாற்றமும், சுற்றுச்சூழல் சீர்கேடும் இன்று உலகாளாவிய பிரச்சனையாக உருவாகியிருக்கும் சூழலில் விவாசயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை எதிர்த்து, நிலம், நீர் சுற்றுச்சுழை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்திருப்பது சர்வதேசளவில் முக்கியத்துவம் வாயந்தது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மறுகாலனியாதிக்க பிடியிலிருந்து விடுவிக்க கூடிய போராட்டத்திற்கான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.
பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசுக்காக போராடுவோம்!
தேசிய நதிநீர் கொள்கை, அணைப்பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டத்திட்டங்களால் ஏரி குளம் போன்ற நீர்நிலைகளில் கார்ப்பரேட் ஆதிக்கம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது; கிராணைட் கொள்ளை, சிப்காட் போன்ற நாசகர திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு நாசமாக்கப்படுவதால் வேளான்பரப்பு தொடர்ந்து குறைந்துவருவது; ஸ்டெர்லைட் போன்ற நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் கார்ப்பரேட் ஆலைகள், சுற்றுசூழலுக்கு கேடான பிளாஸ்டிக் கழிவுகளின் பெருக்கம், மணல் கொள்ளை ஆகிய பல்வேறு காரணங்களால் விவசாய கட்டமைப்பு பிரம்மாண்டமான அளவிற்கு அழிக்கப்பட்டுள்ளது.
இணைய வணிகம், முன் பேர வர்த்தகம், ஒப்பந்த விவசாயமுறை போன்றவற்றால் விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது; விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் காரணமாக விவசாயத்திற்கான இயற்கை உள்ளீடு பொருட்கள் அனைத்தும் ரசாயனமயமாக்கப்பட்டுள்ளது; இதனால், பூச்சிக்கொல்லி, மரபனு மாற்றப்பட்ட விதைகள் போன்ற செயற்கை உள்ளீடு பொருட்களை சார்ந்து வாழவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்; ஒப்பந்த விவசாயமுறை, அரசின் உத்தரவாதமற்ற கொள்முதல் போன்றவை இதை மேலும் தீவிரப்படுத்துகிறது.
இதனால், விவசாய கட்டமைப்பு பெருமளவு சிதைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் ஆதிக்கம் காரணமாக இந்த கட்டமைப்பில் விவசாயம் உயிர்பித்து வாழ்வதற்கே குறைந்த பட்ச ஆதார விலை கோரிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், இத்தகைய குறைந்தபட்ச உத்தரவாதத்தைக்கூட மோடிக்கும்பல் கொடுக்க மறுப்பதுதான் இப்பிரச்சனையின் தீவிரமாகும்.
விவசாயிகள் போராட்டத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கோரிக்கை உலக வர்த்தக கழகத்திலிருந்தும், சுதந்திர வர்த்தகத்திலிருந்தும் இந்தியா வெளியேற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளானது இப்போலி ஜனநாயக கட்டமைப்பில் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை மட்டும் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உண்மையான பாதுகாப்பை வழங்கிவிடாது என்ற உண்மையுடன் நெருக்கமானது. இந்த போலி ஜனநாயக கட்டமைப்பிற்குள் குறைந்தபட்ச ஆதார விலையை கோரிக்கையைக்கூட முழுமையாக உத்தரவாதப்படுத்த முடியாது என்பதே எதார்த்தம். மறுகாலனியாக்க கொள்கைகளை திணிக்கும் உலக வர்த்தக கழகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு விவசாயித்தில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படுவதை தடுப்பதோ, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோ நடக்காத காரியம். இதனை உணர்ந்தால்தான் “விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கொடு! உலக வர்த்தக கழகத்திலிருந்து வெளியேறு! சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்!” என்ற கோரிக்கைகளையும் முன்வைத்து போராடி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் மாற்றுக்கட்டமைப்பிற்கான தேவையை தெளிவாக பறைசாற்றுகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நாட்டையும் மக்களையும் மறுகாலனியாதிக்க புதைசேற்றில் தள்ளிவிட்டு, காவி-கார்ப்பரேட் பாசிசத்தை திணித்துவரும் பாசிசகும்பலை தூக்கியெறிவது முதன்மையானதென்றால், மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கக்கூடிய, விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உண்மையான பாதுகாப்பை அளிக்கக்கூடிய மாற்று ஜனநாயக கட்டமைப்பு நிறுவுப்படுவதும் அவசியமானது.
விவசாயிகளுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் வழங்கக் கூடிய, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளை தடுக்க கூடிய, மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு மாற்றாக தேசிய ஜனநாயக பொருளாதார கொள்கைகளை வகுத்து செயல்படக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதென்பதே இதற்கு தீர்வாகும். அங்குதான் ஒட்டுமொத்த உழைக்கும்மக்களுக்கான உரிமை நிலைநாட்டப்படுவதோடு, விவசாயிகளுக்கு முழுமையான பாதுகாப்பும், மறுவாழ்வு அளித்து முன்னேற்றத்தையும் கொடுக்க முடியும்.
எனவே, பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைப்பதற்கான போராட்டத்தை விவசாயிகளும் விவசாயிகளை ஆதரிக்கக்கூடிய புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் முன்னெடுப்போம்!
டெல்லி சலோ 2.0 போராட்டத்தின் மூலம் விவசாயிகள் வழிகோலியுள்ள பாசிசத்தை வீழ்த்தும் பாதையில் அனைவரும் ஒன்றிணைவோம்!
அமீர்
(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube