இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!

மூன்றில் ஒரு இந்திய விவசாயி தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த தரவு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணைய் வித்துக்கள் போன்ற பயிர்களை விளைவிப்பவர்கள் மத்தியில் அதிகளவில் அதிருப்தி நிலைமை இருப்பதை தரவுகள் தெரிவிக்கின்றன.

மீண்டும் ஒருமுறை பாசிச மோடி அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக் கருவிகள் தனது கோரப்பற்களை அப்பட்டமாக காட்டி, அடக்குமுறையை ஏவிவிட்டதன் மூலம் விவசாயிகளின் ’டெல்லி சலோ’ பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது எந்தவகையிலும் விவசாயிகளின் போராட்ட உணர்வைக் குறைத்துவிடவில்லை.

வயல்களில் விவசாயம் செய்பவர்களுக்கு எதிரான ஆயுதமாக கண்ணீர்புகைக் குண்டுகளும், ரப்பர் தோட்டாக்களும், பெல்லட் குண்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. கன்சர்டினா கம்பிகள், ஆணிகள், கான்கிரீட் தடுப்புகள் என எல்லைகளை விவசாயிகளுக்கு எதிராக பலப்படுத்தியது பாசிச மோடி அரசு. போராட்டக்காரர்களை கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்த சிறைச்சாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

படிக்க : அகதிகளாக்கப்படும் இந்திய உழைக்கும் மக்கள்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

பாசிச அரசாங்கத்தால் இத்தகைய கடும் அடக்குமுறைகள் செலுத்தப்படுகின்ற அளவுக்கு விவசாயிகளின் கோரிக்கைதான் என்ன? எம்.எஸ்.சுவாமிநாதன் கமிசன் பரிந்துரைத்த வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் 50 சதவீதமாக உயர்த்த வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண்துறையைப் பாதிக்கும் சர்வதேச ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம், 2020-21 போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு, மேற்கு உ.பி.யில் ஜேவர் விமான நிலையத் திட்டம் மற்றும் யமுனா விரைவுச் சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தீர்வு, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் மின்கேபிள்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு என்ற வகையில் விவசாயிகள் தங்கள் வாழ்வுரிமைகளுக்காகத்தான் ஒன்றிணைந்துள்ளனர். இந்தப் போராட்டம் என்பது விவசாயிகளின் வாழ்க்கையின் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட புறக்கணிப்பின், ஏமாற்றத்தின் உந்துதலே ஆகும்.

உண்மையில் இந்திய விவசாயத்தை ஒரு பயங்கரமான துயரம் சூழ்ந்துள்ளது. MSP க்கான போராட்டம் என்பது வெறும் பொருளாதாரக் கோரிக்கை அல்ல; இந்தியாவில் முழு விவசாயப் பொருளாதாரத்தையும் கைப்பற்றுவதற்கு போட்டியிடும் தடையற்ற சந்தைக் கோட்பாடுகள் மற்றும் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சவால் விடும் கோரிக்கையாகும். இந்திய கிராமப்புற விவசாயத்தின் அவலநிலையை அறிந்து கொள்ளும்போதுதான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2014-22-க்குள் 100,741 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு 30 தற்கொலைகள்! மோடி அரசாங்கத்தின் இரண்டாவது ஆட்சியில், மொத்த விவசாயிகளின் தற்கொலைகள் ஆண்டுக்கு 10,281 இல் இருந்து 11,281 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கவலைக்குரிய வகையில், விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் ஆண்டுக்கு 4,324 இல் இருந்து 6083 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவின் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து, 2047 க்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவது, பொருளாதார மந்த நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவது என மோடி கும்பல் சுயபுராணங்கள் பாடினாலும், முகத்தில் அறையும் உண்மை என்னவென்றால், இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரமானது மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதாகும். இதனை தொழிலாளர் ஆணையத்தின் உண்மையான ஊதியம் பற்றிய தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

கடந்த ஐந்தாண்டுகளில் (நவம்பர் 2023 வரை) விவசாயக் கூலியானது ஆண்டுக்கு 0.2% என்ற அளவுக்கு மட்டுமே வளர்ந்துள்ளது. அதேசமயம் விவசாயம் அல்லாத ஊதியங்கள் ஆண்டுக்கு 0.9% அளவுக்கு குறைந்துள்ளது.

இந்திய விவசாயத்தில் லாபகரமான விலை கிடைக்காதது ஒரு தொடர் பிரச்சினையாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பானது (NSSO),  SAS (Statistical Analysis System) ஆல் நடத்தப்பட்ட கிராமப்புற இந்தியாவில் விவசாயக் குடும்பங்கள், நிலம் மற்றும் கால்நடை வைத்திருப்பவர்களின் நிலைமை குறித்த மதிப்பீட்டை வெளியிட்டது.

மூன்றில் ஒரு இந்திய விவசாயி தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் கிடைக்கும் விலை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக அந்த தரவு தெரிவிக்கிறது. பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணைய் வித்துக்கள் போன்ற பயிர்களை விளைவிப்பவர்கள் மத்தியில் அதிகளவில் அதிருப்தி நிலைமை இருப்பதை தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் 77வது சுற்று கணக்கெடுப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் கடன் 58% அதிகரித்து, 50% விவசாயக் குடும்பங்கள் கடனில் இருப்பதாகத் தெரிவிக்கின்றது. விவசாய வருமானத்தின் பெரும்பகுதி கூலி என்ற அடிப்படையிலோ, விவசாயம் அல்லாத வணிகத்தின் அடிப்படையிலோதான் இருக்கிறது. இந்த அதிகரித்து வரும் போக்கானது விவசாயிகளை விவசாயத் தொழிலாளர்களாக மாற்றுகிறது அல்லது வேறுவிதமாகக் கூறினால், விவசாயிகளிடையே பாட்டாளிமயமாக்கல் (ஓட்டாண்டிமயமாக்கல்) போக்கு அதிகரித்து வருகிறது.

புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானியான தேவீந்தர் ஷர்மாவின் கூற்றுப்படி, பயிர் சாகுபடி மூலம் ஒரு நாள் வருமானம் என்பது வெறும் ரூ.27 மட்டுமே. இது கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளியின் வருமானத்தைவிட குறைவானதாகும். பால் கறக்கும் பசுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட குறைவானதாகும்.

உற்பத்திச் செலவை விட குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை தருவதாக 2014 தேர்தலின் போது வாக்குறுதி அளித்த மோடி, அதன் பின்பு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் MSP யானது, சந்தையை சிதைத்து விடும் என்று கூறியது. அதன் பிறகு 2016, பிப்22 ல் ‘2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்’ என்று அளந்துவிட்ட வாக்குறுதியும் காற்றில் கரைந்து போனது. இந்தக் காலங்களில் விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை தீவிரப்படுத்தி வந்தது மோடி கும்பல்.

அதேசமயம் தொழிற்துறைத் தொழிலாளர்களின் கட்டமைப்பிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தரவுகள் தெரிவிக்கின்றன. தனியார் முதலீடுகள் குறைவது, கண்ணியமான வருமானம் ஈட்டும் வகையில் வேலைகள் இல்லாதது ஆகியவை பலருக்கும் நெருக்கடியில் உள்ள விவசாயத்தை கடைசி புகலிடமாக்கியுள்ளது. 2017-18 மற்றும் 2022-23 க்கு இடைப்பட்ட காலத்தில் 42 மில்லியன் தொழிலாளர்கள் விவசாயத்திற்கு திரும்பியுள்ளனர். இது 2011-12 ஆம் ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. ஒரு பக்கம் பெண்களின் சுயதொழில்கள் அதிகரித்துள்ளது. 95 மில்லியன் மக்கள் கூலி இல்லாமல் வேலை செய்வதாக தரவுகள் கூறுகின்றன.

சமீபத்திய இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், விவசாயம், கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகள் தேக்கநிலையிலோ அல்லது வீழ்ச்சியடைந்துள்ளது. இது கிராமப்புறப் பொருளாதாரத்தை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் அபாயம் உள்ளது. இத்தகைய அவலமான சூழலில்தான் மோடியின் உதவியோடு அம்பானி, அதானி வகையறாக்களின் லாபமும், சொத்தும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பது முக்கியமானதாகும். இதுதான் வளர்ச்சியடைந்த பாரதம் என்று கூவிக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசின் சாதனை.

இத்தகைய அபாயகரமான நிலைமைகளோடு இணைத்துத்தான் விவசாயிகள் போராட்டத்தை நாம் பார்க்க வேண்டும். பொதுத்தேர்தலுக்கு முன்னதாக மோடி பிரச்சாரம் செய்து வரும் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற வெற்று ஜம்பத்தை விவசாயிகள் கிழித்தெறிந்துள்ளனர்.

இதே நேரத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் ஆளும் அரசாங்கங்கங்களைக் கண்டித்து விவசாயிகள் டிராக்டர் பேரணிகளையும், போர்க்குணமிக்க போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பெரு நகரங்களையே முடக்குகின்ற வகையில் போராடி வருகின்றனர். பிரான்ஸ், ஜெர்மனி, ருமேனியா, நெதர்லாந்து, போலந்து, லித்வேனியா, பல்கேரியா, பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்ப்பு பேரணிகளை நடத்தவும் அவர்கள் தயாராகி வருகின்றனர். இந்திய விவசாயிகளைப் போலவே, உறுதியளிக்கப்பட்ட மற்றும் நியாயமான விலையை மறுப்பதற்கு எதிராகவே அங்கும் போராட்டங்கள் எழுந்துள்ளன.

படிக்க : வலுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்!

உலகம் முழுக்கவே விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை முழுமைப்படுத்தி அதன் மூலம் கொள்ளை லாபம் அடிப்பதற்கான முனைப்புகளில் ஆளும் வர்க்க அரசுகள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதும், அதற்கெதிராக உலகு தழுவிய அளவில் தங்களின் வாழ்வுரிமைக்காக பாதிக்கப்பட்ட விவசாய வர்க்கம் வீறுகொண்டெழுந்து போராடுவதும் என்ற பொதுப்போக்கு அதிகரித்துள்ளது.

இப்போராட்டங்களின் உறுதியும், இலக்கும் கார்ப்பரேட்மயமாக்கலை வீழ்த்துகின்ற பாதையில் சரியான முறையில் வளர்த்தெடுக்கப்படும்போது சந்தையின் மூலம் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களிடமிருந்து மீப்பெரும் செல்வத்தை கொள்ளையடிக்க நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு காத்திருக்கும் கார்ப்பரேட்டுகளின் திட்டங்கள் தவிடுபொடியாகும் என்பது உறுதி.


அய்யனார்
செய்தி ஆதாரம் : Frontier Weekly

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க