அகதிகளாக்கப்படும் இந்திய உழைக்கும் மக்கள்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!

மோடி அரசின் பத்தாண்டுகால பாசிசப் பேயாட்சியில் பயங்கரவாத பொருளாதாரக் கொள்கைகளாலும் உழைக்கும் மக்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி சுரண்டலாலும் வேலைவாய்ப்பின்மையாலும் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.

டந்த மார்ச் 4-ஆம் தேதி, ஹவுசிங் அண்ட் லேண்ட் ரைட்ஸ் நெட்வொர்க் (Housing and Land Rights Network) என்ற அரசு சாரா நிறுவனம் (Non Governmental Organisation), இந்திய உழைக்கும் மக்கள் கட்டாய வெளியேற்றம் செய்யப்படுவது குறித்தான ஒரு ஆய்வறிக்கையை தன்னுடைய இணையதளப்பக்கத்தில் வெளியிட்டது. “இந்தியாவில் கட்டாய வெளியேற்றம்” (Forced Evictions in India) என்று தலைப்பிடப்பட்ட அவ்வறிக்கையில், 2022-23 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது.

புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் எச்.எல்.ஆர்.என். நிறுவனம், வீடுகள் இடிக்கப்பட்டு இந்தியாவின் ஏழை எளிய உழைக்கும் மக்கள் விரட்டியடிக்கப்படுவது குறித்து கடந்த ஏழு ஆண்டுகளாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதில், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளாலும் ஒன்றிய அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி அரசாலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளாலும் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரிலும், குடிசை மாற்று வாரியத் திட்டங்களை ‘வளர்ச்சி’த் திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்துவதன் மூலமும், மேலும் இதுபோன்ற பல நடவடிக்கைகளின் மூலமும் இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வறிய நிலையில் வாழும் ஏழை எளிய மக்களின் வீடுகள் அடாவடித்தனமாக இடிக்கப்படுவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக அம்மக்கள் தாங்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுவதை அவ்வறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

படிக்க : ஊருக்கு தண்ணீர் கேட்டால் தாக்குதலா? | தோழர் செல்வராஜ்

குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த பகுதிகளில் எத்தனை வீடுகளை என்ன காரணத்தை கூறி மாநில அரசுகள் இடித்துள்ளன; அதனால் எத்தனை மக்கள் பாதிக்கப்பட்டார்கள்; அவர்களுக்கு அரசாங்கத்தால் மறுகுடியமர்வுக்கான வேலைகள் செய்துத் தரப்பட்டனவா ஆகியவை குறித்தான மிகவும் விரிவான விவரங்கள் இந்த ஆய்வறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.

இந்நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான (2022-2023) தரவுகளை கொண்டுள்ளது. அதில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1,53,820 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் 7,38,438 மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளை ஒப்பிடும் போது, 2023-ஆம் ஆண்டில்தான் அதிகளவில் 1,07,449 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன என்றும் அதன் விளைவாக குறைந்தபட்சமாக 5,15,752 மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஆய்வறிக்கை கூறுகிறது.

மேலும், 2022-ஆம் ஆண்டில் தினமும் 129 வீடுகள் இடிக்கப்பட்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 25 மக்கள் தாங்கள் வாழும் பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. ஆனால், 2023-ஆம் ஆண்டில் தினமும் 294 வீடுகள் இடிக்கப்பட்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 58 மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. அதிகபட்சமாக, 2023-ஆம் ஆண்டில் தலைநகரான டெல்லியில் மட்டும் ‘நகரத்தை அழகுபடுத்துகிறோம்’ என்ற பெயரில் 2.8 லட்சம் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து 16.8 லட்சம் மக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 1.7 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுதற்கான அச்சுறுத்தலில் உள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, மும்பையில் அதானி கைப்பற்றியுள்ள தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்காக 65,000 குடும்பங்களும், காங்கிரஸ் ஆளும் இமாச்சலப்பிரதேசத்தில் காகெல் விமான நிலைய விரிவாக்கத்திற்காக 1,446 குடும்பங்களும், பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தில் விமான நிலையம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது போன்ற பல திட்டங்களுக்காக 5000 மக்களும், சி.பி.ஐ(எம்)கேரளாவில் சில்வர்-லைன் திட்டத்திற்காக 20,000 குடும்பங்களும் வெளியேற்றப்படுவதற்கான அபாயத்தின் கீழ் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தாங்கள் வாழும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களில், ‘நகரங்களை அழகுப்படுத்துதல்’ என்ற பெயரில் குடிசைகளை அப்புறப்படுத்துவதன் மூலம் 58.7 சதவிகித மக்களும் சாலைகளை அகலப்படுத்துதல், நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்துதல், பாலங்கள் கட்டுதல் போன்ற ‘வளர்ச்சி’த் திட்டங்கள் என்ற பெயரில் 35 சதவிகித மக்களும் அடங்குகின்றனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த மக்கள், முஸ்லீம்கள், பழங்குடியின மக்களே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாகும் மக்களாக உள்ளனர்.

படிக்க : வலுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்!

ஏற்கெனவே மோடி அரசின் பத்தாண்டுகால பாசிசப் பேயாட்சியில் பயங்கரவாத பொருளாதாரக் கொள்கைகளாலும் உழைக்கும் மக்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி சுரண்டலாலும் வேலைவாய்ப்பின்மையாலும் நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பெரும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய மக்களின் மீது அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட் கும்பல்களின் நலனுக்காக ‘வளர்ச்சி’த் திட்டங்கள் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்னும் பாசிச தாக்குதல் உழைக்கும் மக்கள் மீது நாள்தோறும் தொடுக்கப்படுகிறது. மேலும் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற இந்நடவடிக்கையை இஸ்லாமிய மக்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் சதித் திட்டத்தின் அடிப்படையிலும்  பாசிசக் கும்பல் மேற்கொண்டு வருகிறது.

இன்னொருபுறம், கார்ப்பரேட் நலனுக்காக பா.ஜ.க. மேற்கொள்ளும் ‘ஆக்கிரமிப்பு அகற்றம்’ என்ற இந்த மக்கள்விரோத நடவடிக்கையை, பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டே காங்கிரஸ், சி.பி.ஐ(எம்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வெவ்வேறு அளவுகோள்களில் செயல்படுத்தி கொண்டுதான் இருக்கின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரும்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம், அனகாபுத்தூர் பகுதிகளின் உழைக்கும் மக்கள் விரட்டியடிக்கப்பட்டதே அதற்கு சான்று. எச்.எல்.ஆர்.என். நிறுவனத்தின் இவ்வறிக்கை அதனை தரவுகளோடு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கார்த்திக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க