WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!
சூழ்ந்து நிற்கும் பேராபத்து!
நம் நாட்டில் இன்று உலக வர்த்தகக் கழகம் (WTO) ஆனது குறைந்தபட்ச ஆதாரவிலை (MSP), பொது விநியோக அமைப்பு (PDS) ஆகிய இரண்டுக்கும் தடைக்கல்லாக மாறியுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு WTO-இல் இந்தியா நுழைந்ததன் விளைவை நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 2019-ஆம் ஆண்டில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தைச் சுரண்டி, பெரும் லாபத்தைப் பெறுவதற்கு உலகளாவிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சந்தைத் தளமாக WTO இருக்கிறது. இதன் காரணமாகத்தான் உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
உலக வர்த்தக கழகத்தில் இந்தியா இணைந்தபோது பெரிய வாக்குறுதிகள் நமக்கு அளிக்கப்பட்டன. தடையற்ற வர்த்தகத்தின் மூலம் நமது உற்பத்திப் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் கூடுதலான வருமானத்தை விவசாயிகள் பெற முடியும் என்றும் பொய்களைப் பரப்பினர்.
ஆனால் அதற்கு நேர்மாறாக, ஏழைநாடுகளின் விவசாயிகளைச் சுரண்டி, மேற்கத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே இதன் மூலம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. வளரும் நாடுகள் மேலும் தங்களுக்கான சந்தைகளைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. நீண்ட காலமாகவே தாராள வர்த்தகத்தின் அடிப்படையில் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான கெய்ர்ன்ஸில் (Cairns) உள்ள மேற்கத்திய நாடுகள் நெறிமுறையற்ற வர்த்தகத் தடைகளை நாடின. வளரும் நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் விலைகளைச் செயற்கையாகக் குறைத்தன.
மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் பெரிய அளவிலான மானியங்களை அவர்களது நாடுகளில் பெறுகின்றன. இந்த சலுகை நிலையில் இருந்து விவசாயப் பொருட்களை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது மூன்றாம் உலக நாடுகளைச் சார்ந்த கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை திவாலாக்குகிறது. உதாரணத்திற்கு நியூசிலாந்தில் இருந்து ஆப்பிள்களும், அமெரிக்காவில் இருந்து ஆரஞ்சுகளும் வருவதால், உள்நாட்டு விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதில்லை. மேலும் நமது விவசாய விளைபொருட்கள் கார்ப்பரேட் சந்தை தரகு கும்பல்களால்தான் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது விவசாயிகளுக்கு மேலும் துன்பத்தைக் கூட்டுகிறது.
WTO-வில் வர்த்தகத்தில் அளவு கட்டுப்பாடுகள் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகளில் இந்தியா தோல்வியையே தழுவியது. இப்போது வளர்ந்த பணக்கார நாடுகள் நமது நாட்டின் குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் இந்திய உணவுக் கழகத்திற்கான மானியங்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு நிர்ப்பந்திக்கின்றன. ஏற்கனவே அமேசான், வால்மார்ட் மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்கள் நமது உள்ளூர் உணவு சந்தைகளில் ஆன்லைன் மூலம் நுழைந்து விவசாயிகள், சிறு, நடுத்தர வணிகர்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கின்றன. அதனால்தான், போராடுகின்ற விவசாயிகள், குறைந்தபட்ச ஆதாரவிலையை (MSP) சட்டப்பூர்வமாக அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கான சட்டத்தைக் கோருகின்றனர்.
படிக்க: கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா
உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களை வெறும் வர்த்தகப் பொருளாக மட்டுமே WTO கருதுகிறது. வளரும் நாடுகளில் பட்டினியால் வாடும் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு அந்நாடுகள் உணவளிக்கும் பொறுப்பை புறக்கணிக்கக் கோருகிறது. WTO விதிமுறைகளின்படி சூடான் அல்லது ஜார்க்கண்டில் உள்ள சிறு விவசாயிக்கு வழங்கப்படும் எந்த மானியமும் வர்த்தகக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது.
பணக்கார நாடுகள் தங்கள் நாடுகளில் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் வளரும் நாடுகளில் உற்பத்திச் செலவில் 10 சதவீதத்திற்கு மேல் மானியம் வழங்கக் கூடாது என WTO நிர்ப்பந்திக்கிறது. நம் நாட்டின் மானியங்களோ (விதைகள், மின்சாரம், டீசல், MSP ஆகியவற்றின் விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது) 1986-ஆம் ஆண்டு விதிகளின்படிதான் இன்று வரை நடைமுறையில் இருக்கின்றன. உண்மையில் உற்பத்தி செலவு 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலைமையானது மானியங்கள் அதிகம் பெறும் மேற்கத்திய நாடுகளின் விளைபொருட்களோடு எந்த வகையிலும் ஈடுகொடுக்க முடியாத நிலைக்கு நமது நாட்டின் விவசாயிகளை மாற்றியுள்ளது. உண்மையில் கொடுக்கப்படும் மானியங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெருமளவில் பயனடைவது பெரும் விவசாய வணிக நிறுவனங்களே ஆகும். இது பல லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.
ஆனால் வளரும் நாடுகள் உலகச் சந்தைகளில் மிகவும் மலிவான உணவுப் பொருட்களைத் திணிப்பதாக மேற்கத்திய நாடுகள் வாடிக்கையாக குற்றம் சாட்டுகின்றன. இது அப்பட்டமான பொய்யாகும். சூடான் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவிவசாயி, உலகச் சந்தையில் பருத்தியைக் கொட்டி அதிக லாபம் ஈட்டி, அமெரிக்க பருத்தி விவசாயிக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறார் என்பது எவ்வளவு மோசமான கற்பனை. உலக வர்த்தகக் கழகத்தின் மானியம் தொடர்பான விதிகள் ஐரோப்பிய நாடுகளையோ அல்லது அமெரிக்காவையோ கட்டுப்படுத்துவதில்லை. அது அவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.
ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வர்த்தகக் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. விதைகள், உரங்கள், உணவு சந்தைப்படுத்துதல் ஆகிய எல்லா அம்சங்களிலும் பன்னாட்டு கார்ப்பரேட்டுளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. கார்கில், ADM, Zenoh போன்ற ஒரு சில விவசாய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே உலக தானிய வர்த்தகத்தில் 50 சதவீதத்தைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும் இவை செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி கொள்ளை லாபம் அடிக்கின்றன. 2009-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டதன் பின்னணியில் இந்நிறுவனங்களின் சதி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
படிக்க: இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!
இந்தியாவைப் பொறுத்தவரை 140 கோடி மக்களைக் கொண்ட மிகப்பெரிய உணவு தானிய சந்தையை மேற்கத்திய கார்டெல்கள் அம்பானி மற்றும் அதானி ஆகிய உள்நாட்டு கார்ப்பரேட் தரகு கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடிக்க விரும்புகின்றன. அதற்காக குறைந்தபட்ச ஆதாரவிலை, பொது விநியோக அமைப்பு, மானியங்கள் ஆகிய அனைத்தையும் நீக்கி சிதைக்கத் துடிக்கின்றன. கோடிக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்தையும் மதிக்காமல் பாசிச மோடி கும்பல் செயல்படுவதற்கு இதுவே காரணமாகும்.
அதாவது உலக விவசாயச் சந்தைகளுடன் இந்திய விவசாயத்தை இணைப்பதன் தொடர் நிகழ்வாக விவசாயத்துறையை முழுமையாக கார்ப்பரேட்மயமாக்கும் பாதையில் விரைந்து பயணிக்கிறது மோடி அரசு. கோடிக்கணக்கான சிறு மற்றும் குத்தகை விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கத் துடிக்கின்றது பாசிச மோடி கும்பல். மிக சமீபத்தில் கூட ஐஸ்லாந்து, லீச்சென்ஸ்டியன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளுடன் விவசாயத் துறை தொடர்பான தாராள வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது மோடி அரசு.
விவசாயம், சந்தை, உணவு வர்த்தகம் ஆகியவற்றை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கப்படுதல் என்பது நாட்டில் பசி, பஞ்சம், பட்டினி, தற்கொலைகள், வறுமை ஆகியவற்றை கற்பனைக்கெட்டாத வகையில் கொண்டு செல்வதோடு தொடர்புடையதாகும்.
உலக வர்த்தகக் கழகமானது ஒரு நடுநிலை நிறுவனம் அல்ல. உலகளாவிய அளவில் ஏழைநாடுகளின் அரசுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், அந்நாட்டு விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, கார்ப்பரேட்மயமாக்கலை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு பன்னாட்டு கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கு தரகு வேலை பார்க்கும் கைக்கூலி நிறுவனமாகும்.
பாசிச மோடி கும்பலோ உலகவர்த்தகக் கழகத்தின் ஆணைகளை அச்சுப் பிசகாமல் நிறைவேற்றும் அடிமை கும்பலாக உள்ளது.
இவற்றை போராடுகின்ற விவசாயிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். அதனால்தான் ”உலக வர்த்தகக் கழகத்தில் இருந்து வெளியேறு!” என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர். இது இந்தியாவின் 140 கோடி மக்களுக்குமான கோரிக்கையாகும்.
அய்யனார்
செய்தி ஆதாரம்: Countercurrents
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube