கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா

பீட் மாவட்ட கிராமப்புற ஏழைப்பெண்களின் துயர நிலைமையானது, கிராமப்புற ஏழ்மையின் கோரமுகத்தையும், அது ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் இரக்கமற்ற தாக்கத்தையும் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் மக்கள் வறுமை காரணமாக தங்களது ஒரு சிறுநீரகத்தை விற்றுப் பிழைக்கின்றனர் என்ற செய்தி கடந்தாண்டு வெளியாகி உலைகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் வறுமையின் கோரப்பிடியால் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது கருப்பை விற்றுள்ளனர் என்ற அவலம் தெரியவந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம் (IIED-International Institute for Environment and Development) வெளியிட்ட அறிக்கையின் மூலம் இந்த அதிர்ச்சிகர செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, பல ஆண்டுகளாக பொய்த்துப்போன பருவமழை, கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள பீட் மாவட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி கரும்புத் தோட்டங்களில் தினக்கூலிகளாக மாறியுள்ளனர். அவ்வாறு கரும்புத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் ரூ.500 முதல் 1000 வரை அபராதம் விதித்து சம்பளப் பிடித்தம் செய்வது என்ற அப்பட்டமான சுரண்டலில் கரும்புத்தோட்ட முதலாளிகள் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, மாதவிடாய் நாட்களிலும் குழந்தைபேறுக்கு பிறகான காலத்திலும் பெண்கள் வேலைக்கு செல்லாதபோது அநியாயமாக அவர்களின் சம்பளத்தை பிடிக்கின்றனர்.

இதனால் பல பெண்கள் குழந்தை பிறந்த ஐந்து நாட்களில் கைகுழந்தையோடு கரும்புத்தோட்டத்திற்கு வேலைக்கு வந்துவிடுகின்றனர். இதிலிருந்து தப்பிக்க பீட் மாவட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கருப்பையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்துள்ளனர் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐ.இ.இ.டி. (IIED) நிறுவனத்தின் ஆய்வு நிபுணரும் முதன்மை ஆசிரியருமான ரிது பரத்வாஜ், “ஒப்பந்ததாரர்கள் ஒன்று அல்லது இரண்டு நாள் ஊதியத்தை குறைப்பதால், தங்கள் வறுமையை சமாளிப்பதற்கு கருப்பையை அகற்றுவதைத் தவிர வேறுவழியில்லை என்று அந்தப் பெண்கள் நினைக்கிறார்கள். இதன்மூலம் அப்பெண்களின் மாதவிடாய் காலமோ அல்லது குழந்தைப்பேறு காலமோ அவர்கள் வேலைகளில் ஈடுபடுவதைத் தடுக்காது” என்று அப்பெண்களின் அவலநிலையை விவரிக்கிறார்.


படிக்க: இந்திய விவசாயிகளின் நெருக்கடி வாழ்வு: மேலும் துயரத்தை நோக்கி!


கருப்பையை அகற்றுவது என்பது அப்பிராந்தியத்தில் பொருளாதார நெருக்கடியின் அறிகுறி என்றும் காலநிலை நெருக்கடியால் இந்நிலை மேலும் மோசமடைகிறது என்றும் ரிது பரத்வாஜ் கூறுகிறார். மேலும், கருப்பையை அகற்றுவதால் இப்பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் மனநலப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகியிருப்பதாக கூறும் அவர் மாதவிடாயை நிறுத்த கருப்பை நீக்கம் செய்துகொண்ட 20 முதல் 25 வயது பெண்களையும் சந்தித்தோம் என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தியை கூறியுள்ளார்.

மேலும், சர்க்கரை ஆலைகளில் பணிப்புரிய தம்பதிகளை வேலைக்கு அமர்த்துவதை ஒப்பந்ததாரர்கள் விரும்புகிறார்கள். அங்கு கணவன்மார்கள் கரும்பு வெட்டுவதையும், மனைவிகள் கரும்புச் சோகை அகற்றி சுத்தப்படுத்துவதையும் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்வதற்கு வெறும் ரூ.250 மட்டுமே கூலி வழங்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பச்சூழல் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் இந்தியாவிலும் பிற இடங்களிலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடித்து நொறுக்குகின்றன. இது பயிர் செய்ய இயலாத நிலையை உருவாக்குவதால் மக்கள் வேலைத்தேடி வெளியூர்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்நிலையில், பீட் மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் நடத்திய ஆய்வில், மழையின்மை, கடன் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் அம்மாவட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்காக இடம்பெயர்வதாக தெரியவந்துள்ளது.

தங்களது உடல்நல அபாயங்களைப் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல், சொற்ப வருமானத்தை ஈடுகட்ட பல பெண்கள் தனியார் கிளினிக்குகளில் கருப்பைகளை நீக்கம் செய்து கொள்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய தனியார் மருத்துவமனைகள் ஈவிரக்கமற்ற இலாப நோக்கத்திற்காக கருப்பை நீக்கம் செய்யும் சிகிச்சைகளை மேற்கொள்கின்றன.

இத்தகைய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிராக இராஜஸ்தானைச் சேர்ந்த நரேந்திர குப்தா என்ற தன்னார்வலர் தொடர்ந்த வழக்கில், அத்தகைய மருத்துவர்கள், மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


படிக்க: அகதிகளாக்கப்படும் இந்திய உழைக்கும் மக்கள்: அதிர்ச்சியூட்டும் ஆய்வறிக்கை!


மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளை ஆய்வு மற்றும் கருப்பை நீக்கம் அதிகரிப்பு பற்றிய ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, கருப்பையை அகற்றும் சிகிச்சைக்கு அனுமதி வாங்க வேண்டும் என்று தனியார் மருத்துவனைகளுக்கு பீட் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

ஆனால், அதற்குப் பிறகும் பல பெண்கள் அருகாமை மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லத் தொடங்கியது தற்போதைய ஐ.இ.இ.டி. ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை அம்பலப்படுத்தும் ரிது பரத்வாஜ், “பீட் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கருப்பை அறுவை சிகிச்சையை நிறுத்தவில்லை, ஏனெனில் இது அறிகுறிக்கு மட்டுமே சிகிச்சையளிக்க முயற்சிக்கிறது. மூல காரணத்திற்கு அல்ல” என்கிறார்.

பீட் மாவட்ட கிராமப்புற ஏழைப்பெண்களின் துயர நிலைமையானது, கிராமப்புற ஏழ்மையின் கோரமுகத்தையும், அது ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் இரக்கமற்ற தாக்கத்தையும் பட்டவர்த்தனமாக காட்டுகிறது. வெவ்வேறு அளவுகளில் நாடு முழுக்க இத்தகைய துயர நிலைமைகள் மேலோங்கியே இருக்கும் என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை.

1990-களில் மறுகாலனியாக்க திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பிறகு இந்திய விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் சூரையாடப்பட்டு அவர்களின் நிலை மோசமடைந்தது. 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபிறகு இந்நிலை தீவிரமாகி மக்களின் வாழ்க்கை பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டு பெரும்பான்மையான மக்கள் அன்றாடங்காட்சியாகவும் ஏதுமற்றவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, நாட்டின் ஒட்டுமொத்த துறைகளையும் கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியும், அனைத்து வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்தும், அதற்கேற்ப கொள்கைகளை வகுத்தும், சர்வாதிகாரமான முறையில் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தியும் வருவதன் மூலம் நாட்டின் ஏழ்மையை மிகவேகமாக அதிகரித்தும், வர்க்க ஏற்றத்தாழ்வை கூர்மைப்படுத்தியும் வருகிறது, பாசிச மோடி அரசு. குறிப்பாக பாசிச பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்நிலை மேலும் தீவிரமாக உள்ளது.

எனவே, இந்நாட்டு உழைக்கும் மக்கள் அடிப்படை வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ வேண்டுமென்றால் கூட பாசிசக் கும்பலை அடித்து வீழ்த்த வேண்டியுள்ளது. அதற்கானதொரு மக்கள் எழுச்சியை அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து கட்டியமைக்க வேண்டியுள்ளது.


இனியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க