தொடரும் விவசாயிகள் போராட்டம்: மார்ச் 10 நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்!

மார்ச் 14 அன்று 40 விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 13 அன்று தொடங்கிய டெல்லி சலோ 2.0 விவசாயிகளின் போராட்டம் மோடி அரசின் மூர்க்கத்தனமான பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு ஷம்பு மற்றும் கானெளரி எல்லையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திக்ரி, சிங்கு மற்றும் காஜிபூர் எல்லைகளில் விவசாயிகளை தடுக்க கடுமையான தடுப்பரண்களை ஏற்படுத்தியுள்ளது மோடி அரசு. ஆனாலும், விவசாயிகள் போராட்டம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினத்தையொட்டி ஏராளமான பெண் விவசாயிகள் ஷம்பு மற்றும் கானெளரி எல்லையில் திரளத் திட்டமிட்டிருந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்ற 130-க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இராஜஸ்தானில் சுமார் 100-க்கும் மேற்பட்ட முக்கிய விவசாய தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் விவசாயிகளை கைது செய்து வருகிறது பாசிச மோடி அரசு.

விவசாயிகளின் போர்குணமான போராட்டத்தை பார்த்து மைசூரிலிருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் விவசாய இயக்கத்தில் சேர்வதற்கு டெல்லி நோக்கி சென்றுள்ளனர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது மோடி கும்பல். கடந்த மார்ச் 5 ஆம் தேதி இரவு மட்டும் சுமார் 100 விவசாய தலைவர்களின் எக்ஸ் (டிவிட்டர்) பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக கிசான் மஸ்துர் சங்கர்ஷ் பொதுச்செயலாளர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 10 ஆம் தேதி நாடுமுழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய சங்க தலைவர்கள் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.


படிக்க: வெல்லட்டும் விவசாயி போராட்டம் | ம.க.இ.க ”சிவப்பு அலை” கலைக்குழு | புதிய பாடல்


மார்ச் 14 அன்று 40 விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி திட்டமிட்டியிருந்ததெயடுத்து அதனை ஒடுக்கும் வேலையை மோடி கும்பல் மேற்கொண்டு வருகிறது. இதைப்பற்றி பேசிய விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் “ரயிலில் டெல்லிக்கு தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகளை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம்” என கூறுகிறார்.

ஹரியானா காப் பஞ்சாயத்துகள் டெல்லி சலோ விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஹரியானாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் பல நாடுகளில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளுக்காக டிராக்டர் பேரணிகளை நடத்தி வருகின்றனர். நமது நாட்டிலும் பல வகைகளில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துவரும் சூழலில் டெல்லி சலோ 2.0 விவசாயிகள் போராட்டம் பாசிச மோடி கும்பலுக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்ட வடிவமே பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதையின் வடிவமாகும். விவசாயிகளின் போராட்டத்தை இந்திய அளவில் உழைக்கும் மக்கள் மத்தியில் விரிவுப்படுத்துவதும், மக்கள் எழுச்சியாக வளர்த்தெடுப்பதும் அவசியமான பணியாகும்.


குழலி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க