மக்களுக்கான களம் போராட்டமே!

உரிமைகளுக்கான மக்களது களம் போராட்டமாகும். இதனை உணர்ந்து ஹரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட போராட்டக் களத்தில் காத்திருக்கின்றனர்.

ருவழியாக, “இந்தியா” கூட்டணி கட்சிகளுக்குள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள், பல மாநிலங்களில் முடிவுக்கு வந்துள்ளது. காஷ்மீர், மேற்குவங்கம் ஆகிய இரண்டு முக்கிய மாநிலங்களிலும் விரைவில் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வரும் என இந்தியா கூட்டணி கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“தேர்தலில் பாசிச பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமென்றால் வலுவான கூட்டணி வேண்டும். மாநிலங்களில் அமையும் கூட்டணியைப் பொறுத்தே வெற்றி வாய்ப்புகளும் அமைகின்றன. எனவே, தற்போது இந்தியா கூட்டணிக் கட்சியினரிடையே தொகுதிப் பங்கீடு நிறைவடைந்திருப்பது வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்தும்” என எதிர்க்கட்சிகளாலும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள் பலராலும் பார்க்கப்படுகிறது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றுவிட்டால் இனி தேர்தலே நடக்காது; பாசிச இருள் சூழ்ந்துவிடும்; எனவே பாசிச பா.ஜ.க-வை தேர்தலில் தோற்கடிப்பது மிகவும் இன்றியமையாதது என்பதை பலரும் பேசி வருகின்றனர். அதிகாரத்திலும் சமூகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வேரூன்றியிருக்கும் சங்கப் பரிவார அமைப்புகளைக் களையெடுப்பதுடன், பாசிசத்தை வீழ்த்த கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; அதன் ஒரு அங்கமாக பா.ஜ.க-வை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

ஆனால், தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமெனில், இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று பல ஜனநாயகச் சக்திகள் மக்களைக் கோருகின்றனர். இந்தியா கூட்டணி உருவானதிலிருந்தே எதிர்க்கட்சிகளைக் கண்டு பாசிச மோடி கும்பல் அஞ்சி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றிணையாமல் தடுப்பதற்காக அமலாக்கத்துறை மூலம் வேட்டையாடுவது, குதிரைபேரம் நடத்தி விலைக்கு வாங்குவது போன்ற சதி வேலைகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. இச்சூழலில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்திருப்பது, முன்னேற்றகரமானதாகவும் கூட்டணி வலுவடைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது.


படிக்க: டெல்லி சலோ 2.0: பாசிசத்தை வீழ்த்தும் பாதை!


ஆனால், இந்தியா கூட்டணியானது, தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. கூட்டணியைப் போன்றதல்ல. தி.மு.க. கூட்டணி உறுதியாக உள்ளது, அதற்குள் தொகுதி பங்கீடு நடக்கிறது. ஆனால், இந்தியா கூட்டணியை உருவாக்கிய பின்னர் அதன் உறுதித்தன்மை தொடர்ந்து கேள்விக்குள்ளானது. நிதிஷ்குமார் இக்கூட்டணியில் இருந்து விலகிய சூழலில், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் நீடிக்குமா என்ற நிலைமை உருவானது. மூன்றாவது கூட்டத்தைக் கூட இந்தியா கூட்டணியால் கூட்ட இயலவில்லை. ஆகையால், இந்தக் கூட்டணியைப் பொறுத்தவரை சீட்டு பேரம் முடியவில்லை எனில் கூட்டணியே நீடிக்குமா என்ற ஐயத்தைத்தான் எழுப்பியது.

எனவே, இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது, அதனால், இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கருதுவது தவறு என நடந்துமுடிந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் நமக்குணர்த்திவிட்டன. இந்தியா கூட்டணி உருவாகி சந்தித்த முதல் தேர்தலான ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின்போதும் இதேபோன்று பா.ஜ.க. நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்றே கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வெற்றிபெறும் என அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட படுதோல்வியைத் தழுவியது.

உண்மையில், மக்களிடம் நிலவும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை அறுவடை செய்து கொள்வதில்தான் இந்தியா கூட்டணி கட்சியினர் கவனம் செலுத்துகின்றனர். அதனால், வலுவான கூட்டணி அமைப்பதைவிட தொகுதிப் பங்கீடுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

குறிப்பாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நிலைநாட்டுதல், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உரிமையாக்குதல், புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப்பெறுதல், ஜி.எஸ்.டி. வரி, நீட் தேர்வு முதலியவற்றை ரத்து செய்தல், அதானியின் எண்ணூர், விழிஞ்சம் போன்ற நாசகர துறைமுகத் திட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டத்திருத்தங்கள், கிரிமினல் சட்டத் திருத்தங்களைத் திரும்பப்பெறுதல், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளைத் தடை செய்தல் போன்ற எந்த மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்தும் இந்தியா கூட்டணி இன்னமும் ஒரு பொதுமுடிவுக்கு வரவில்லை.


படிக்க: WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!


கூட்டணி பேரம் முடிந்த பின்னர், ஓட்டு வாங்குவதற்கு மட்டுமே மக்களிடம் சில வாக்குறுதிகளைக் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என இந்தியா கூட்டணியினர் கருதினால், சத்தீஸ்கர் தேர்தலில் ஏற்பட்ட நிலைமை அவர்களுக்கு மீண்டும் ஏற்படுவதை தடுக்க முடியாது.

ஆகையால், உழைக்கும் மக்கள் தங்களது உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்று மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதுதான், பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது மட்டுமின்றி, இந்தியா கூட்டணியினரைக் கூட மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நிர்பந்திக்க முடியும். உரிமைகளுக்கான மக்களது களம் போராட்டமாகும். இதனை உணர்ந்து ஹரியானா விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட போராட்டக் களத்தில் காத்திருக்கின்றனர். டெல்லி விவசாயிகளைப் போல, இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய நேரமிது!


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க