நியூஸ் கிளிக் எஃப்.ஐ.ஆர் நகலை எரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே நியூஸ் கிளிக் செய்தது. நியூஸ்கிளிக் மூலம் பெறப்பட்ட பயங்கரவாத நிதியுதவி கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டது என்ற வதந்தியைப் பரப்பி, அதன்மூலம் விவசாயிகள் போராட்டம் மக்கள் விரோதமானது, தேச விரோதமானது என்று சித்தரிக்க பாஜக அரசு இந்த கேலிக்கூத்தான எஃப்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்துகிறது.

0

நியூஸ் கிளிக் மீதான எஃப்.ஐ.ஆர்-இல் விவசாயிகள் போராட்டத்தை அவமதித்துள்ள பாசிச மோடி அரசை எதிர்த்து மக்களிடம் முறையிடப் போவதாக சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) விவசாயிகள் கூட்டமைப்பு அக்டோபர் 20 அன்று அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் 5 வரை இது குறித்து கிராமங்களில் தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாகவும், நவம்பர் 6-ஆம் தேதியன்று நியூஸ் கிளிக்கிற்கு எதிரான எஃப்.ஐ.ஆர் நகல்களை நாடு முழுவதும் எரிக்கப் போவதாகவும் எஸ்.கே.எம் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் மனிதவளத் தலைவர் (HR Head) அமித் சக்ரவர்த்தி ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் எஃப்.ஐ.ஆர்‌ பதிவு செய்யப்பட்டது. குடிமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்துவதையும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்குவதையும் விவசாயிகள் போராட்டம் நோக்கமாகக் கொண்டிருந்ததாக அந்த எஃப்.ஐ.ஆர்‌-இல் கூறப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து டெல்லியில் உள்ள பிரஸ் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஸ்.கே.எம்-இன் உறுப்பு அமைப்புகள், நரேந்திர மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அரசாங்கம் வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக நியூஸ் கிளிக் எஃப்.ஐ.ஆர்-இல் ஆதாரமற்ற, நேர்மையற்ற, தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகக் கூறினர்.


படிக்க: நியூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!


மேலும், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பாஜகவை தோற்கடிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப் போவதாகவும் கூறியுள்ளனர். அதற்கு “கார்ப்பரேட்டை எதிர்ப்போம், பி.ஜே.பி-யை தண்டிப்போம், நாட்டைக் காப்போம்” (Oppose Corporate, Punish BJP, Save Country) என்ற முழக்கத்தை முன் வைக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.

வரும் அக்டோபர் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை மாநில தலைநகரங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகள் முன்பு 72-மணிநேர உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

டெல்லி பிரஸ் கிளப்பில் எஸ்.கே.எம் நடத்திய செய்தியாளர் சந்திப்பு

எஸ்.கே.எம்-இன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஹனன் மொல்லா (Hannan Mollah), “விவசாயிகள் இயக்கம் ஒரு அர்ப்பணிப்புமிக்க, தேசபக்தி இயக்கம். அது 1857 (சிப்பாய் கலகம்) மற்றும் அந்நிய நாட்டுக் கொள்ளைக்கு எதிரான சுதந்திர போராட்டத்துடன் ஒப்பிடத்தக்கது” என்று கூறினார்.

“அரசாங்கம் விவசாயத்திலிருந்து தனது தலையீட்டை விளக்கிக் கொண்டு, விவசாயம், மண்டிகள் மற்றும் உணவு விநியோகத்தை அதானி, அம்பானி, டாடாக்கள், கார்கில் (Cargill), பெப்சி, வால்மார்ட், பேயர், அமேசான் தலைமையிலான கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டது. அந்த கேடான திட்டத்தை நிறைவேற்றவே மூன்று வேளாண் சட்டங்கள் என்பதை விவசாயிகள் இயக்கம் சரியாகப் புரிந்து கொண்டது” என்று ஹனன் மொல்லா மேலும் கூறினார்.

மூத்த விவசாயத் தலைவர்களில் ஒருவரான பல்தேவ் சிங் நிஹால்கர் (Baldev Singh Nihalgarh), “தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு, பெரிய சாலைத் தடைகள், ஆழமான சாலை வெட்டுக்கள், தடியடிகள், குளிர் மற்றும் வெப்பம் ஆகியவற்றை தைரியமாக சமாளித்து விவசாயிகள் வெற்றியைப் பெற்றனர். 13 மாதங்களில், அவர்கள் 732 பேரை தியாகம் செய்தனர்” என்று கூறினார்.


படிக்க: “நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!


ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயத் தலைவரான ராஜாராம் சிங், “விவசாயிகள் இயக்கத்தை ஆதரித்து எழுதிய நியூஸ் கிளிக் மீது மோடி அரசாங்கம் ஊபா என்ற ஜனநாயக விரோத சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது குடிமக்களை பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்ட அரசாங்கத்தை அனுமதிக்கிறது. எனவே, பல தசாப்தங்களுக்கு அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. ஜாமீன் கூட மறுக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், “ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே நியூஸ் கிளிக் செய்தது. நியூஸ்கிளிக் மூலம் பெறப்பட்ட பயங்கரவாத நிதியுதவி கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டது என்ற வதந்தியைப் பரப்பி, அதன்மூலம் விவசாயிகள் போராட்டம் மக்கள் விரோதமானது, தேச விரோதமானது என்று சித்தரிக்க பாஜக அரசு இந்த கேலிக்கூத்தான எஃப்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்துகிறது. விவசாயிகள் இயக்கத்தின் முன் பாஜக பின்வாங்கியது என்ற உண்மையை பாஜக தலைவர்களால் இன்னும் சகித்துக் கொள்ள முடியவில்லை” என்று ராஜாராம் சிங் கூறினார்.

வலுவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டி கிராமப்புற பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிக்கவும், அந்நிய நாட்டுக் கொள்ளையைத் தடுக்கவும் உறுதிபூண்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் இப்போராட்டங்களை அறிவித்திருப்பதானது எதிர்க் கருத்துகளை – கருத்துச் சுதந்திரத்தை – நசுக்கி விடலாம் என்ற பாசிச மோடி அரசின் கனவைத் தகர்ப்பதாக அமைந்துள்ளது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க