“நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

இன்று (07-10-2023) நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான பாசிச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “நெட்வொர்க் ஆப் விமன் இன் மீடியா – இந்தியா” (Network of Women in Media – India -NWMI) சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

டந்த அக்டோபர் 3-ஆம் தேதி “நியூஸ்கிளிக்” (NewsClick) செய்தி நிறுவனத்தின் தலைமை பத்திரிகை ஆசிரியர் பிரபீர் புர்கய்ஸ்தா (Prabir Purkayastha) மற்றும் மனிதவளத் துறைத்தலைவர் அமித் சக்ரவர்த்தி (Amit Chakravarty) ஆகியோர் மீது ஊபா (UAPA) வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அந்நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான மோடி அரசின் இந்த பாசிச நடவடிக்கைக்கு, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஜனநாயக சக்திகளும் பத்திரிகையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (07-10-2023) நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் மீதான பாசிச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, “நெட்வொர்க் ஆப் விமன் இன் மீடியா – இந்தியா” (Network of Women in Media – India -NWMI) சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாற்றத்திற்கான பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சார்ந்த பத்திரிகையாளர் ஹசீப், பத்திரிகையாளர் கே.ஏ.குணசேகரன், பத்திரிகையாளர் ஏ.எஸ் பன்னீர்செல்வன், பத்திரிகையாளர் கவிதா முரளி, பத்திரிகையாளர் சசிக்குமார் மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது கண்டன குரலைப் பதிவுசெய்தனர்.


படிக்க: நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!


சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் பேசிய பத்திரிகையாளர் பாரதி, “இன்று நியூஸ்கிளிக்-கிற்கு ஆதரவான இந்த ஆர்ப்பாட்டம் முன்னுதாரணமான இருக்கிறது. நாம் கருத்து வேறுபாடுகளைக் களைந்துவிட்டு நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் ஊடக சுதந்திரத்தை உறுதியாக நிற்க வைக்கும்” என்றார்.

மேலும், சன் நியூஸ் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியரான குணசேகரன், “நியூஸ்கிளிக்-கின் ஆசிரியர் 1975 நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்து பதினைந்து ஆண்டுகள் சிறையில் இருந்தவர். இதற்கெல்லாம் அஞ்சாதவர். இன்று ஊபாவை எதிர்த்து நின்று மீண்டு வருவார். தொடர்ச்சியாக இணைய இதழ்கள், சுதந்திரமாக இயங்கக்கூடிய பத்திரிகைகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைதான் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கெதிராக நமது எதிர்ப்பை காட்ட வேண்டும். எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் அதனை எதிர்த்து இளந்தலைமுறை உறுதியுடன் போராடும்” என்று கூறினார்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கத்தைச் சார்ந்த ஹசீப் பேசுகையில், “2016 தொடங்கி 2021 வரை கிட்டத்தட்ட 16 முக்கிய செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் ஊபா வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அதன் பிறகும் பல்வேறு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியே நியூஸ்கிளிக் மீதான தாக்குதலும். இந்த நடவடிக்கைகள் இன்னும் தொடரும் என்பதற்கான உதாரணங்கள் தான் மேற்கண்டவை” என்றார்.

நியூஸ்கிளிக்-கிற்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


வினவு களச்செய்தியாளர்



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க